கோட்பாட்டுத் திறனாய்வுகளும் தமிழ் இலக்கியமும்
பதிவு -1
ஒரு தத்துவம் எந்த நோக்கத்திற்காக உருவாகிறது? அந்தத் தத்துவம் சமூக, அரசியல், பொருளாதார, கலை, இலக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது? தத்துவம் எப்பொழுது கோட்பாடாக உருமாறுகிறது? இலக்கியத் தளத்தில் அந்தக் கோட்பாடு நிகழ்த்திய வீச்சு பற்றி அறிய வேண்டிய அவசியம் இன்றைய தமிழ் ஆய்வுலகிற்குத் தேவைப்படுகிறது. கோட்பாடு அடிப்படையில் இலக்கியத்தைப் படைப்பதும், படைப்பிலக்கியத்தில் கோட்பாட்டு ஆய்வைச் செய்வதும் அரைநூற்றாண்டுகளாக நடந்து வருபவை.
இன்றைய நிலையில் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கோட்பாடுகளைச் சரியாக விளக்க, தகுதியான நபர்கள் இல்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு கோட்பாடுகள் அதன் உண்மையான நோக்கத்தோடும், தரத்தோடும் விவாதிக்கப்படுமா எனில் ஐயமே. அதனைக் களையும்பொருட்டு, புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறை இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கை நவம்பர் 24, 25 ஆகிய நாட்களில் நடத்தியுள்ளது.
இலங்கையிலிருந்தும், டெல்லியிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும், திருவாரூரிலிருந்தும் உரையாளர்களும், ஆய்வாளர்களும் கலந்துகொண்டு விவாதிக்கும் வகையில் கருத்தரங்க நிகழ்வு அமைக்கப்பட்டிருந்தது. உரையாளர்களின் கட்டுரை மீதான கருத்துரையை வழங்குவதற்கும், விவாதங்களை முன்னெடுப்பதற்கும் கருத்துரையாளர்களையும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர் அ.ராமசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அவரே, கருத்தரங்க நோக்கத்தை முன்வைத்து, உரையாற்றி, கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார். மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. முனைவர் பாஸ்கர் அவர்கள் தலைமைதாங்கி, வாழ்த்துரை வழங்கினார்.
முதல் அமர்வாக, ‘இந்திய இலக்கியம் என்னும் கருத்தியலாக்கம்: எங்கே தொடங்கி, எப்போது முடிப்பது?’ என்பது குறித்து டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கோ.பிரேமானந்தன் (பிரேம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். ‘இந்திய இலக்கியம் என்னும் கருத்தாக்கம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மேலை இலக்கியக் கோட்பாடுகளின் இறக்குமதியில் நுண்ணரசியல் இருக்கிறது. அறிமுகம் செய்தவர்களுக்கு அது தேவையாக இருந்தது. கோட்பாடுகள் வலிந்து பேசப்பட்டன; திணிக்கப்பட்டன. தமிழின் தொன்மைத் திறனாய்வு முறையையும், தத்துவத்தையும் அழிக்கும் முயற்சி நடைபெற்றது. சைவ, வைணவ, சமண, பௌத்தத் தத்துவங்கள் தமிழ்த் தத்துவ அழிப்பு வேலையைச் செய்தன’ என்ற கருத்துக்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன. சைவ, வைணவ, சமண, பௌத்தத் தத்துவங்களுக்கு முன்பே தமிழ்ச் சூழலில் தத்துவம் இருந்தது எனில், அந்தத் தத்துவம் எது? என்று இளங்கோமணி என்பவர் வாதத்தைத் தொடர்ந்தார்.
இரண்டாவது அமர்வாக, புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பக்தவச்சல பாரதி அவர்கள் மானிடவியல் குறித்து உரையாற்றினார். அகத்தார் எழுதும் இனவரைவியல், புறத்தார் எழுதும் இனவரைவியல் தன்மைகளை எடுத்துரைத்தார். இனவரைவியல் கோட்பாட்டு ஆய்வில் ஒவ்வொரு தகவலுக்கும் 3 உறுதிப்படுத்தும் தகவலாளிகள் வேண்டும் என்றும், தகவலாளிகளின் பெயரை இடையிடையே சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். அப்பொழுதுதான் ‘ஒற்றை ஆசிரியர்’ தன்மையிலிருந்து ‘இணை ஆசிரியர்கள்’ தன்மைக்கு மாற வேண்டிய அவசியத்தையும் முன்வைத்தார். பிரதிபலிப்பு இனவரைவியல், பின்நவீனத்துவ இனவரைவியல், காட்சி சார்ந்த இனவரைவியல் என்பவை குறித்து விளக்கினார். படைப்பில் புகைப்படங்களைச் சேர்க்க வேண்டியதன் முறையை விளக்கினார். இதற்கு மறுப்புரைத்து, ‘புனைவு’ பற்றிய வாதங்கள் தொடர்ந்தன. பேரா. செந்தீ அவர்களும், முனைவர் முத்துராஜ் அவர்களும் கருத்துரை வழங்கினர்.
மூன்றாவது அமர்வாக, திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. ஜெயராமன் அவர்கள் அமைப்பியல் பற்றிய கட்டுரை வழங்கினார். அமைப்பியலின் வழக்கமான கலைச் சொற்களுக்குப் பதிலாக, இலக்கியத்தில் சூழல், இலக்கியத்தின் சூழல், சொன்மை, அடுக்கியல், தொடரியல், கூற்றுச் செயல் சூழல், கூறப்படும் செயல் சூழல் என்பன போன்ற புதிய தமிழ்க் கலைச்சொற்களைக் கொண்டு அமைப்பியலை விளக்கினார். இலக்கணத்தை அடிப்படையாக வைத்து தன்னுடைய உரையை நிகழ்த்தினார். மேலும் சிவசு அவர்கள் இவ்வுரைக்குக் கருத்துரை வழங்கினார்.
நான்காவது அமர்வாக, இரண்டாம் நாள் உளவியல் குறித்து, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. அழகரசன் அவர்கள் கட்டுரை வழங்கினார். மொழி கட்டமைக்கக்கூடிய அல்லது கட்டமைக்கிற உளவியலைப் பற்றி விவரித்தார். ஃப்ராய்டையும், லக்கானையும் முன்வைத்து உளப்பகுப்பாய்வியலை விளக்கி, இன்றைய நிலையில் தமிழில் முறையான உளப்பகுப்பாய்வியல் ஆய்வுகள் செய்யப்படவில்லை என்று பேசினார். பண்பாட்டு உளவியல் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்பதற்கு இணையாக, தமிழில் மணிமேகலையில் ‘காருக மடந்தை’ காம்ப்ளக்ஸ் இருக்கிறது என்பதை முனைவர் ஜிதேந்திரன் கருத்துரையாகப் பதிவுசெய்தார். பேரா. பூவிளங்கோதை அவர்களும் கருத்துரை வழங்கினார்.
ஐந்தாவது அமர்வாக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நதிரா மரியசந்தானம் அவர்கள் பெண்ணியம் குறித்து உரையாற்றினார். ஐரோப்பிய, அமெரிக்க, இந்தியப் பெண்ணியக் கோட்பாடுகளை விரிவாக விளக்கினார். ஆங்கில, அமெரிக்க, பெண்ணியவாதிகளின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். மொழியின் அமைப்பையும், பெண்களை இழிவுபடுத்துகிற பழமொழிகளையும் மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். மாலதி மைத்ரி, சுல்பிகா, கனிமொழி, அனார், ஆழியாள் முதலியோரின் படைப்புகள்வழி சான்றுகளைத் தந்து பேசினார். இந்நிகழ்வுக்கு முனைவர் அஸ்வினி கிருத்திகா அவர்கள் கருத்துரை வழங்கினார்.
ஏழாம் அமர்வாக, அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் தலித்தியம் குறித்து உரையாற்றினார். ‘சாதி என்பது பொய் என்று தெரிந்திருந்தும் அதிகார, அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளிலிருந்து பின்வாங்க முடியவில்லை. கதைகள், பாடல்கள், சடங்குகள், மொழி வழியாக, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, அது ஏற்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டார். அயோத்திதாஸர், ராஜ்கௌதமன் ஆகியோரது தலித்தியத் திறனாய்வு அணுகுமுறையைப் பற்றி மேலும் விளக்கினார். இவ்வமர்வுக்கு முனைவர் அலீஸ்ராணி அவர்கள் கருத்துரை வழங்கினார்.
இறுதியாக, ம.சு. பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஞா.ஸ்டீபன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.
பொதுவாக, கருத்தியல் ரீதியாக அனைத்துக் கோட்பாடுகளும் மிக விரிவாக விளக்கப்பட்டன. தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கான சான்றுகள் குறித்து இன்னும் கூடுதலாக விவாதித்திருக்கலாம். எனினும், ஆய்வாளர்கள் பலர் விவாதத்தில் கலந்துகொண்டு விவாதித்தது, கருத்தரங்கின் நோக்கத்தை நிறைவேற்றியது. அனைத்துப் பாராட்டும், ம.சு. பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களுக்கும் உரியது.
கருத்துகள்