தொலைக்காட்சித் தொடர்களில் திணறும் நவீனம்
ஊடகங்கள் உருவாக்கும் வெகுமக்கள் கருத்தியல் மற்றும் ரசனை குறித்த அக்கறை கொண்டவன் என்ற வகையில் திரைப்படங்களைப் பார்க்கும் அதே அக்கறையுடன் தொலைக்காட்சித் தொடர்களையும் கவனிப்பேன். ஆனால் எனது வேலை காரணமாக எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எல்லாத் தொடர்களையும் பார்க்கமுடிவதில்லை. முழுநேரமும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்திருக்கும் தமிழ்க்குடும்பத்தலைவிகளாலும் எல்லாத் தொடர்களையும் பார்த்துவிடவும் முடியாது. தேர்வுசெய்துதான் பார்க்கமுடியும். வாரநாட்களில் வேலைத்தளத்திலிருந்து வந்தவுடன் பார்க்கக்கூடிய தொலைக்காட்சித் தொடர்களாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சித் தொடர்கள் இருந்தன. குறிப்பாக அதில் வந்த மெட்டி ஒலி, நாதஸ்வரம் போன்றவற்றின் அநேகக்காட்சிகளை நான் பார்த்திருப்பேன்.
இப்போது அந்த இடத்தை விஜய் தொலைக்காட்சி பிடித்திருக்கிறது. திட்டமிட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைத் தயார்செய்வதாக அதன் தயாரிப்பாளர்கள் வெளிப்படுகிறார்கள்.பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் நகர வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட - நடுத்தரவர்க்கத்துப் பாத்திரங்களை உருவாக்கி அதேவகையான பார்வையாளர்களை இலக்குப்பார்வையாளர்களாகக் கருதித் தொடர்களைத் தயாரிக்கின்றன. அதிலிருந்து விஜய் தொலைக்காட்சி விலகி நிற்கிறது. மண் மனம் வீசும் தொடர்கள் என்ற பெயரில் அவை வட்டாரப்பின்னணியைத் தொடர்களுக்கு உருவாக்குகின்றன. குறிப்பாகத் திருநெல்வேலி, மதுரை போன்ற தென்மாவட்ட அடையாளங்கள் கொண்ட கதைகள் அதன் தேர்வாக இருக்கின்றன.
விஜய் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாவது சீதையின் இராமன். இராமாயணத்தை இன்னொரு பெயரில் ஒளிபரப்பும் தொடர். 06.30-07.00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் பகல்நிலவு. பகல் நிலவு தொடரின் முதல் பாகத்தின் பெயர் “ ஆண்டாள் அழகர்” மதுரை மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரத்தின் முதன்மைப் பெரும் சாதிகளான தேவர், நாயுடுகளின் பழக்கவழக்க அடையாளங்களோடு அந்த வட்டாரக் கதையென்ற பாவனையில் ஆரம்பிக்கப்பட்ட தொடர். சொந்தங்களுக்குள் நடக்கும் திருமணத்தைக் குறிக்க்க் “குண்டாமாத்துக் குளிமாத்து சம்பந்தம்” என்ற வட்டாரவழக்கு மரபுத்தொடர் வழக்கில் உள்ளது. ஆண்டாள் அழகராக இருந்தபோது, அதன் குரூரத்தைக் காட்டிக்கொண்டே பெருமைகளையும் பேசிக்கொண்டிருந்தது. நிகழ்கால அரசியல் ஆசைகொண்ட குடும்பங்களோடு கதாபாத்திரங்களை அடையாளப்படுத்திக்
கொண்டு நகர்ந்த கதை முடித்துவைக்கப்பட்டுப் புதிய தொடராகப் பகல்நிலவு வருகிறது. முடித்துவைக்கப்பட்டபோது இரண்டு உறவுக்காரக் குடும்பங்களிலும் புதிதாகப் பொருத்தமாக ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும் பிறந்தன என்று சொல்லி முடித்தார்கள்.
பகல் நிலவாக மாறியபின் பாத்திரங்கள் தொடர்கின்றன. அதில் இருந்த கதாபாத்திரங்களில் வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள். பிறந்த குழந்தைகளின் பதின்வயதுக் கதையாக - புதிய தலைமுறையின் கதையாக நகர்கிறது. ஆண்டாள் அழகரில் எப்போதும் தர்க்கப்பிழைகளும் இழுத்தடிப்புக்
காட்சிகளும் அலுப்பூட்டும். இப்போது அப்படியில்லை. ப்ரியாதம்பியின் வசனத்தில் தர்க்கப்பிழைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. காதலும் இளமையும் கவித்துவமாக நகர்கிறது. பகல் நிலவாக மாறியபின்னாவது உறவுகளுக்குள் பெண்கொடுத்து பெண் எடுத்துக் கொண்டு தொடரும் பழைய மரபுக்கு விடைகொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்புக்குக்காரணமும் வசனகர்த்தா ப்ரியாதம்பிதான். ஆனால் அவரும் ஏமாற்றிவிட்டார்.
ரத்தசொந்தங்களுக்குள் திருமணம் செய்தால் அடுத்த தலைமுறை உடல் மற்றும் மூளைக்குறையோடு பிறக்கும் என்ற விவாதமெல்லாம் செய்துவிட்டு திரும்பவும் பழைய மரபுக்கே திரும்பிவிட்டார்கள். ஆணின் விரும்பத்தைத் தட்டமுடியாமல் பெண் - தாய் மாமா மகனைத் திருமணம் செய்துகொள்ள இணங்கிவிட்டாள். இன்னும் இரண்டு குண்டாமாத்துத் திருமணங்கள் நடக்கும்வரை காதல் கனிரசம் சொட்டும் ப்ரியாதம்பியின் வசனத்தோடு பகல் நிலவு தொடரலாம். நவீனத்துவம் தெரிந்த பெண்ணிய வாதம் பேசுபவர்களும் தொலைக்காட்சித்தொடர்களை மாற்றிவிட முடியாது; ஏனென்றால் அது வெகுமக்களின் ரசனைக்கானது மட்டுமல்ல; அவர்களைக் கட்டமைத்துத் தொடரச் செய்யும் நோக்கம் கொண்டது.
கொள்ளுவன கொள்ளுவதும் தள்ளுவன தள்ளுவதும் மாற்றத்தின் அடிப்படை விதி. பழையன என்பதற்காகவும், எம்முடையன என்பதற்காகவும் எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்கமுடியாது. எல்லாவற்றையும் தங்களின் இளமைப்பருவக் கோணத்திலேயே பார்க்கும் உறவினர்களை விட்டுவிலகும் மனநிலையைக்கூட அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். கலை, இலக்கியங்களில் வட்டார அடையாளம் அல்லது மண்வாசனை என்பதும் அப்படித்தான். முழுமையும் நேர்மறைத்தன்மையுடையன அல்ல. நவீனத்துவ வாழ்க்கையின் மீதான புரிதலும், மாற்றங்களின் ஊடாகத் தன்னடையாளத்தைத் தக்கவைத்தலும் தேவையென்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் இந்தப்புரிதலோடு நுழைந்த வட்டார எழுத்துப் பின்னர் தடுமாறிக் குலப்பெருமை பேசும் கதைகளாக மாறிவிட்டன. திரைப்படத்திலும் அதுதான் நடந்தது. பாரதிராஜாவே நல்ல உதாரணம். 16 வயதினிலே, புதிய வார்ப்புகள், கிழக்கே போகும் ரயில், என் உயிர்த்தோழன் எனச் சாதிவரையறைகளை உடைத்த சினிமாவைத்தந்தவர் பசும்பொன், கிழக்குச் சீமையிலே எனச் சாதியின் இறுக்கத்திற்குள் நுழைந்து சிதைந்துபோனார்.
வியாபாரவெற்றி, அதற்காக மரபையும் பழைமையையும் கேள்விகேட்காமல் தொடர்வது மரபெழுத்தின் நிலைபாடென்றால், கேள்விகள் எழுப்பிக்கொண்டு பதிலையும் சொல்லிவிட்டுப் பழைமையைத் தொடர்வதும் மரபுதான். ஒரு நவீன எழுத்தாளராகவும், பெண்ணியம் போன்ற நவீனத்துவ நிலைபாட்டோடு தொடர்புகொண்ட ஒருவரால் எழுதப்படும் கதையாக இருந்தபோதும் அது மரபான தொடர் தான். நவீனத்துவம் மாற்றத்தை முன்வைக்கும். மரபைச் சிதைத்துக்காட்டும். மீறும். தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதும் பாஸ்கர் சக்தி, ப்ரியாதம்பி போன்றவர்கள் வெறும் வசன எழுத்தோடு நின்றுவிடாமல் கதையின் நிகழ்வுகளை உருவாக்குபவர்களாகவும் பாத்திரங்களை உருவாக்குபவர்களாகவும் மாறவேண்டும். அதற்குத் தொடரின் தயாரிப்பாளர்களைப் புரியவைக்கவேண்டும். அதில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதில் இருக்கிறது தொடர்களில் நடக்கப்போகும் மாற்றங்கள்.
கருத்துகள்