கறுப்புத்தெய்வங்களும் வெள்ளைத்தேவதைகளும்


'தேர்தல் காலத்தில் அதைச் செய்வோம்; இதைச் செய்வோம்' என்று சொன்னீர்களே? அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன்? என்ற விவாதங்களுக்கு எந்த விடையும் கிடைக்கப்போவதில்லை. அந்த விவாதங்களுக்குள் செல்ல விரும்ப வில்லை;  செல்வது வெட்டிவேலை.
செய்யப்பட்டிருப்பது பொருளாதாரம் சார்ந்த நிகழ்வு. இதை விமரிசனம் செய்வதற்கான கலைச்சொற்களின் ஆழமான அர்த்தங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் பணத்தைக் கையாளும் எல்லா மனிதர்களும் இதில் கருத்துகள் சொல்லலாம் என்றே நினைக்கிறேன். கருத்துகள் சொந்த அனுபவங்கள் சார்ந்து இருந்தால் புலம்பல்களாக மட்டுமே அமையும். அதையும் சொல்லலாம். அதற்கு மேலும் நீட்டிக்கவேண்டும். அத்தோடு இந்த மாற்றத்தை வெறும் பொருளியல் மாற்றமாக நினைக்கவில்லை. இந்தியப் பண்பாட்டில் நடக்கவேண்டிய மாற்றமாகவும் மன அமைப்பில் ஏற்படவேண்டிய மாற்றமாகவும் நினைக்கிறேன்.
நேற்று காலை தொடங்கி இரவுவரை நான் சிக்கல்களைச் சந்தித்தேன். கையில் ஆயிரங்களில் பணம் இருந்தும் ஆட்டோவில் ஏறுவதைக் கைவிட்டேன். ஆட்டோக்காரர்கள் சில்லறை நோட்டுகள் இருக்கிறதா என்று கேட்டபின்பே சவாரிக்கு வந்தார்கள்.  வழக்கமாகச் செவ்வாய் மாலை வந்திறங்கிப் புதன்கிழமைக் காலையில் விற்பனைக்கு வரும் உவரிக்கடல் மீனை வாங்குவேன். வாங்குவதற்கான பணம் கையில் இருந்தது ஆனால் நேற்று வாங்கவில்லை. பல்கலைக்கழகத்திற்குப் போகும்போது - 09.30 மணியளவில் விற்றுத்தீர்ந்துவிடும் அந்த மீன்கடையில் மாலை 4 மணிக்கு நான் திரும்பி வரும்போதும் விற்கப்படாமல் - மீன்கள் வெட்டுப்படாமல் இருந்தன.  

திருநெல்வேலி நகரின் தெருக்களும் கடைகளும் வழக்கமான நிலையில் இல்லை என்பதைக் கவனித்தேன். சின்னச்சின்னப் பெட்டிக் கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. 500 ரூபாய் அளவுக்குப் பழம் வாங்கியவர் கொடுத்த தாளைக்கூட அந்தப் பழவியாபாரி வாங்க மறுத்ததைப் பார்த்தேன். பெரிய உணவுவிடுதிகளில் குடும்பமாக வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே  இருந்தது. பெட்ரோல் போடும் இடங்களில் வரிசைகள் நீண்டிருந்தன. அவைகளில் கார்கள் அதிகமாக இருந்தன.
சில இடங்களில் முணுமுணுப்புகளும் கோபங்களும் வெளிப்பட்டன. பேருந்துகளில் நடத்துநரோடு நடந்த சண்டைகளை மாணவர்கள் சொன்னார்கள்இவையெல்லாம் நடைமுறைச் சிக்கல்கள். இன்று நடந்த நடைமுறைச் சிக்கல்கள்.  இன்னும் சில நாட்கள் தொடரும்; பெரிதாகும். இதைவிடப் பெரிதான சச்சரவுகளை முதல் வங்கிகள் சந்திக்கப் போகின்றன. தன் வசம் இருந்த 500/ 1000/ ரூபாய்த்தாள்களைக் கள்ளப்பணம் என்று சொல்வதைச் சாமானியன் ஏற்றுக்கொள்ளாமல் விடப்போகும் கண்ணீர் சாபமாக மாறலாம்போடப்போகும் சண்டைகள் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருக்குமெனச் சொல்லமுடியாது. அரிவாள்கள் தூக்கப்படலாம். கல்லாப்பெட்டிகள் மட்டுமே வைத்திருந்த வியாபாரிகள் பெருங்கவலைப்படுகிறார்கள். மஞ்சள்பையில் வந்து அன்றாட வசூலில் சுற்றும் தவணைச் சீட்டுக்காரர்களும் வட்டிக்கடைக்காரர்களும் தவிக்கப்போகிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெரும்பாலும் நவீனத்துவ நடைமுறைக்குள் வராதவர்கள். நிரந்தர முதல்வர் காலங்களிலும் அவை நடந்தன. இப்போது பொறுப்பு முதல்வர் காலத்தில் நிறைய அரசாங்கப் பணிகள் வேகமாக நிரப்பப்படுகின்றன. அந்தந்தத் துறைகளின் அதிகாரிகளும் தொடர்புடைய அரசியல்வாதிகளும் கணக்கில் வராத பணங்களையே லஞ்சமாக வாங்கிக் கணக்கில் காட்டாமல் தான் வைத்திருக்கிறார்கள்அவர்கள் வாங்கும் லஞ்சப் பணமெல்லாம் கட்டுக்கட்டாகச் சில வீடுகளிலும் கண்டெய்னர்களும் நிற்கின்றன; நகர்ந்துகொண்டிருக்கின்றன. அவையெல்லாம் கறுப்புத்தெய்வங்கள். கறுப்புத்தெய்வங்கள் எப்படி வெள்ளைத் தேவதைகளாக மாறப்போகின்றனவோ தெரியவில்லை.

இந்தியாவில் இருக்கும் பொருளியல் நடைமுறைகள் -பணப்பரிவர்த்தனைக்குப் பின்னாலிருக்கும் நடைமுறைகள் நவீனமாக்கப்படவேண்டுமா? என்றுகேட்டால், கட்டாயம் செய்யவேண்டுமென்றே நான் சொல்வேன். நவீனமாக்குவது என்பது என்பது வேறொன்றுமில்லை. நாட்டிலிருக்கும் மொத்தப்பணமும் கணக்கில் இருக்கவேண்டும். அது உருளும் பாதைகள்/ போகுமிடங்கள் தெரியவேண்டும். இதற்குச் செய்யவேண்டியது எல்லாம் வங்கிக் கணக்கிற்குள் வரவேண்டும். அந்த வங்கிக்கணக்கு - நடப்புக்கணக்காக இருக்கவேண்டும். அதில் செலுத்தப்படும் பணம் முறையான ரசீதுகள் வழியாக நடத்தப்படும் வணிகமாக இருக்கவேண்டும். இரண்டாண்டுகள் வார்சாவில் இருந்தபோது கண்கூடாகப் பார்த்தேன். ஒரு ஜுலாட்டிகூட ரசீதுபோடப்படாத ஒன்றுக்குச் செலுத்தியதில்லை. அந்த ரசீதில் பொருளின் விலையோடு விற்பனை வரி, வாட்வரி எவ்வளவு என்பதும் இடம்பெற்றிருக்கும். பணம்கொடுத்துப் பொருள் வாங்கும் பயனாளிக்கு அந்தப் பணம் செல்லும் இடங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அங்குமட்டுமல்ல; ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற முதலாளித்துவ நாடுகளில் இதுதான் நிலைமை. ஆனால் இந்தியாவில், மலேசியாவில், இலங்கையில் அப்படி இல்லை. நாம் தரும் பணத்தைக் கையில் இருக்கும் சிற்றேட்டில் குறித்துக்கொண்டு மீதிச்சில்லறை தரும் வியாபாரிகளிடமே நான் பொருட்கள் வாங்கினேன். இந்த அடிப்படையான வேறுபாடுதான் கீழ்த்திசைப் பொருளாதாரத்திற்கும் மேற்குலகப்பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாடு. மேற்குலகப்பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாத முதலாளிகள் நடத்தும் வியாபாரம். அவர்களை முதலாளிகள் என்று சொல்வதைவிட வணிகக்கூட்டின் பங்குதாரர்கள் என்பதே சரி.  ஆனால் கீழ்த்திசை நாடுகளின் முதலாளிகள் முதலாளிகளாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களே பணியாளர்கள்; அவர்களை நாம் சந்திக்க முடியும்; நலம் விசாரிக்கலாம்; கோபப்படலாம்.  இந்த நடைமுறை வேண்டுமா? என்றால் நான் வேண்டாம் என்பேன். காரணம் இந்த முதலாளியம் - இந்தியாவில் நிலவும் சுதேசிய முதலாளியம் அதன் வன்முறை அமைப்பான சாதியத்தைத் தனக்கான பாதுகாப்புக்கருவியாக வைத்திருக்கிறது. சாதியத்தை நிலைநாட்டப்பார்க்கிறது. தங்கள் சாதி முதலாளிகளுக்காக ஏழைகள் சுரண்டப்படுவதை நியாயப்படுத்துகிறது.
ஆகவே இந்திய முதலாளியம், நவீன முதலாளியமாக - பின் நவீன நடைமுறைகளைப் பின்பற்றும் - பணியாளர்களுக்கும் பயனாளிகளுக்கும் உரிய உரிமைகளை வழங்கவேண்டிய முதலாளியமாக மாறவேண்டும் என்றே சொல்வேன்.
இதே காரணங்களுக்காகவே இந்திய விவசாயமும் மறுசீரமைப்புக்குள்ளாக்கப் படவேண்டும். சிறு, குறு, பெரு விவசாயிகள் தங்களின் வருமானங்களால் மதிப்பிடப்படவேண்டும். இழப்புகளாலும் கணக்கிடப்படலாம். அவர்களும் வங்கிகளுக்குப்போகவேண்டும். அல்லது அவர்களை நோக்கி வங்கிகள் போகவேண்டும். அவர்களுக்காக இரவுகளில் வங்கிகள் நடத்தப்படலாம். கைவசம் இவ்வளவு நிலம் இருக்கிறது; பணம் இருக்கிறது; நகை, நட்டுகள் இருக்கின்றன; சொத்துபத்துகள் இருக்கின்றன என்ற கணக்கு இருக்கவேண்டும். அவற்றை நாட்டின் சட்டப்படி பிள்ளைகளுக்கு - ஆணுக்கும் பெண்ணுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துக்கொள்ளவேண்டும். இதற்கான திசையை இந்தப் பொருளியல் மாற்றம் செய்யும் என்றே நம்புகிறேன்.
1000 ரூபாய், 500 ரூபாய் செல்லாது எனச் சொன்னதாக நான் நினைக்கவில்லை. இன்று ஒருநாள் மட்டும் சின்னத் தடைபோட்டதாகவே நினைக்கிறேன். நாளை முதல் இந்தத்தடைகள் மெல்லமெல்ல விலகலாம்.நவீன வியாபாரத்தின் நடைமுறையைப் பின்பற்றி வியாபாரம் செய்திருந்தால் சாலையோர மீன்காரர்கள்கூட இந்தப் பணத்தாள்களை வாங்கிக்கொள்வதில் சிக்கல் இல்லை. நவீன வியாபார நடைமுறை என்பது அதற்கான வங்கிக்கணக்கோடு, ரசீதுகள் கொடுத்து, அன்றாடக் கணக்கை முடித்து உரிய ரசீதுகளோடு வியாபாரம் செய்வதுதான். அதை நோக்கி நமது பெட்டிக்கடைக்காரர்களும் நகர்ந்தாகவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் வரிகட்டவேண்டிய அளவைத்தொடும்போது வரிகட்டவேண்டும். 
பெட்டிக்கடைக்காரர் பணம் வாங்கிக் கல்லாப்பெட்டியில் போடுவதுபோலப் பணம் வாங்கும் மருத்துவர்கள் ரசீதோடு மருத்துவம் பார்க்கவேண்டும். ரசீதோடு வாங்கிய பொருட்கள் நுகர்வியச் சட்டங்களுக்குள் வரவேண்டும். அதன் நடைமுறைப்படி தண்டிக்கப்படவேண்டும். மொய்க்கணக்குகள் வழியாகத் தொடரும் திருமணப்பந்தங்களில் மாற்றம் வரவேண்டும். அதன்வழியாகக் கட்டுப்படுத்தப்படும் பெண்களின் சுதந்திரம்  திருப்பி அளிக்கப்படவேண்டும்.  சமையல்காரர்களின் பேரில் வாங்கும் பணத்தைக் கணக்கில் காட்டாமல் மறைக்கும் கல்யாண மண்டபங்கள் தப்பிக்கமுடியாதபடி கிடுக்கிப்பிடி வேண்டும். அறக்கட்டளைகளின் பெயரில் பெறப்படும், கோயில் திருவிழாக்களின் பெயரில், சமூகப்பணிகளின் பெயரில் வாங்கப்படும் நன்கொடைகள் வங்கிக்குச் சென்று வரிக்குரியனவாக மாற்றப்படவேண்டும். வரிசெலுத்தும் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். நல்ல சாலைகள் அமைக்கவும், கல்விச்சாலைகள் கட்டவும் இந்தப் பணம் பயன்படவேண்டும்.

நடைமுறைகளைப் பற்றிய அதில் உருவாகும் சிக்கல்களைப் பற்றிய  
விமர்சனங்களுக்கு அப்பால் விளைவுகளைப் பற்றிய பேச்சுகளைத் தொடங்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்