எழுதிக்கொள்ளவேண்டிய கதையின் முடிவு: துரோகங்களுக்கான பரிகாரம்


கதையை வாசிக்கத் தொடங்கிசிறிது நேரத்திலேயே அவரது புகழ்பெற்ற நாவலான 18- வது அட்சக்கோட்டை வாசிக்கும் நினைவுதோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கலவரம், கல்லூரி மூடல், மாணவர்கள் வீட்டில் முடங்கல் என அந்த நாவலின் நிகழ்வுகள் இந்தக் கதையிலும் இருந்தன. கதையின் காலமும் சிறுகதை யின் எல்லையைத் தாண்டி 50 வருட நிகழ்வுகளையும் நினைவுகளையும் தொட்டுத்தொட்டுத் தாவி்க் கொண்டிருந்ததால் சிறுகதையின் வடிவ எல்லையைத் தாண்டிக் குறுநாவலாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற  எண்ணமும் வலுவாகிக்கொண்டே இருந்தது. அதனால், அந்த நாவலில் எழுத நினைத்த ஒரு கிளைக்கதையை இப்போது எழுதியிருக்கிறார் என்ற நினைப்பிலேயே வாசித்தேன். அந்த நாவலை வாசித்தவர்கள், இந்தவார (23/11/16) ஆனந்த விகடனில் அச்சாகியிருக்கும் அசோகமித்திரனின் துரோகங்கள் கதையை இப்படி வாசிப்பதைத் தவிர்க்கமுடியாது.
அந்த நினைப்போடு வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கதையில் இடம்பெறும் “ஒப்புதல் வாக்குமூலங்கள்கதையைக் கச்சிதமாக்கி விட்டன. ஒப்புதல் வாக்குமூலங்கள் தருபவர்கள் இருவரும் ஆண்கள் என்பதும், அத்துரோகத்தால் பாதிக்கப்படுபவள் ஒரு பெண் என்பதும் உணரப்படும்போது கதை பெண்மையக் கதையாக - இந்தியப் பெண்களின் கதையாக மாறிவிடுகிறது. அதன்வழியாகச் சிறுகதையின் கச்சிதம் கூடிவிட்டதை என்று உணரமுடிந்தது.  தனது 19 வயதில் தன்னைவிட ஒருவருடம் வயதில் குறைந்தவன்மீது கொண்ட விருப்பத்தைக் கன்னத்தைக் கிள்ளிக் கள்ளங்கபடமில்லாமல் வெளிப்படுத்திய தன் மகளுக்குச் செய்த துரோகத்தை முதலில் ஒப்புக்கொள்பவர் அவளது சந்தை சதாசிவம்
நீலகண்டன் மீது ரஞ்சனியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஒருவாரத்தில் வருகிறேன் என்றவனை, ‘ஒருமாதங்கழித்து  வாவென்றுசொல்லிப் போக்குக்காட்டிவிட்டு, வேலையை மாற்றிக்கொண்டு ஹைதராபாத்தின் நகர்ப்புறமிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த அவளது தந்தை, மகளின் பிடிவாதமான காதலை உணர்ந்து துரோகம் பண்ணிட்டேண்டி ரஞ்சனி. உனக்கும் அந்தப் பையனுக்கும் துரோகம் பண்ணிட்டேன்னு புலம்பிண்டே உயிரை விட்டார் - எனச்சொல்லும் இடம் ஒரு துரோகத்தை வெளிப்படுத்திய இடம். இன்னொரு இடம் நீலகண்டன், ரஞ்சனியிடம் நான் உனக்குத் துரோகம் பண்ணிட்டேன். அப்போ தெரியலை. ரொம்பப் பெரியதுரோகம். எனக்கு உன் முன்னாடி நிக்கிறதுக்கு வெட்கமாயிருக்குஎனப் புலம்பும் இடம். 50 வருடம் தன்னுடைய நினைப்பில் ஒருத்திக் கல்யாணம் செய்துகொள்ளாமல் காத்துக்கொண்டும் தேடிக்கொண்டும், எதிர்பார்த்தும் இருந்ததைப்பார்த்துக் குற்றுணர்வுக்குள்ளாகித் தவிக்குமிடம் அது.

இரண்டு ஆண்களும் தங்கள் ஒப்புதல்களைச் சொல்லி ரஞ்சனிக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைக் கூட்டுவதால், அவளது தியாகத்தையும் காதலின் ஆழத்தையும் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இந்த இழப்பும் தியாகமும் இந்தியப்பெண்களின் பொது அடையாளம்.  தனது வாழ்க்கையை ஆண்களிடம் ஒப்புக்கொடுக்கப் பெண்கள் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனால் ஆண்கள் விசாரணைகளின்றி அல்லது சின்னச் சின்ன விசாரணைகளுக்குப் பின் பெண்களுக்குத் துரோக மிழைக்கிறார்கள் என்பதை எளிமையான நகர்த்தலின்வழியாகக் கதையாக்குகிறார் அசோகமித்திரன்.

ஐரோப்பிய வாழ்முறையிலிருக்கும் தனிமனித இருப்பும் சுதந்திரமும் போலன்றிப் பெருஞ்சமூகமாக நகர்வது இந்திய வாழ்க்கைமுறை. இங்கே தனிமனிதர்கள் மட்டுமே குற்றவுணர்வுகளோடும் அறத்தோடும் வாழ்கிறார்கள். ஒரு தனிமனிதன், பெருஞ்சமூகத்தின் அங்கமாக, பிரதிநிதியாக அறியப்படும்போது அறம் வழுவுகிறவர்களாகவே அறியப்படுகிறார்கள். அறம் தவறுதல்-குற்றவுணர்வு தொலைத்தல் என்பது சமூகவாழ்வின் வெற்றிக்கான காரணங்களாகவும் அறியப்படுகிறது.
இந்தக் கதையில் இடம்பெறும் இரண்டு ஆண்களுமே தங்களின் குற்றமனத்தை வாழ்வின் கடைசிக்கட்டத்திலேயே வெளிப்படுத்து கிறார்கள். ரஞ்சனியின் தந்தை ‘துரோகமிழைத்துவிட்டேண்டி’ என்று சொல்லிக்கொண்டே இறக்கிறார். ரஞ்சனியின் காதலனான நீலகண்டன், “ தன்னையே அவள் 50 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதை உணர்ந்தபின் தனது துரோகத்தை மறைக்கத் தனிமையைத்தேடுகிறான்.  இது தவிர்க்கமுடியாத ஒன்று. தனது  நியாயத்தை மனம் யோசித்துக்கொண்டிருக்கும்போதுஅவன் தனிமைக்காகப் போனானா? தன்னையே இன்மையாக்கப்போனானா? என்று ஐயமும் கதையில் எழுப்பப்படுகிறது. தனிமனிதனின் அறமனத்தின் தூண்டுதல் தனிமையை நாடும்போது இன்னொரு முடிவுக்கும் நகரும் என யோசிக்கவே வைப்பது தேர்ந்த கதைக்காரர்களின் கைவண்ணம். அசோகமித்திரன் கதை இப்படி முடிகிறது.

இடதுபுறம் எல்லா துரோகங்களையும் கழுவக்கூடிய நீலக்கடல். எவ்வளவு பொருத்தம்.. நீலகண்டன்.. நீலக்கடல்.. நீலகண்டன் கடற்பக்கம் போனான்.
கதையின் முடிவு கவித்துவமான வரிகளோடு முடிகிறதுஏன் போனான். கடலில் இறங்கிக்காலைக்கழுவவா? கடலுக்குள் இறங்கித் தன்னையே இல்லாமல் ஆக்கிக்கொள்ளவா? இந்தக் கேள்விக்கான பதிலை அந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் மனம் போல எழுதிக்கொள்ளலாம். அசோகமித்திரன் எழுதவில்லை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்