இருப்பைக் கலையாக்குதல்: கருணா வின்செண்டின் காமிரா.
கலைகளைப்பற்றிய பேச்சுகளில் ஓவியத்தையும் சிற்பத்தையும் நுண்கலை என்ற வகைப்பாட்டில் வைத்துப் பேசுவதையே கேட்டிருக்கிறேன். அப்படிப் பேசுபவர்கள் நுண்கலைப்பொருட்களை ஒரு விரிவான தளத்திற்கு அறிமுகப்படுத்தும்போது “காண்பியக்கலை(VISUAL ART)” என்ற விரித்துப் பேசுவதை விரும்புகிறார்கள். ஒரு புகைப்படம் அல்லது நிழல்படம் அதன் தயாரிப்பு சார்ந்து எப்போதும் ஒரு தொழிலாகவே இருக்கிறது; இருந்தது என்பது எனது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணத்தை எப்போதாவது ஓரிருவர் அசைத்துப் பார்ப்பார்கள். அப்படி அசைத்துப் பார்த்ததின் பின்னணியில் இருந்தது என்ன என்று நினைத்துப்பார்த்தால், அவர்கள் தேடிப் பிடித்துக் காட்டிய பொருளாக அல்லது இயற்கைக்காட்சியாக, அல்லது அலையும் கூந்தலோடு சிரிப்பை மறைக்க முயலும் ஒரு பெண்ணாக இருக்கும்.
காட்சிகளையும் பொருட்களையும் நபர்களையும் பதிவு செய்யும் காமிரா என்னும் கருவியைக் கையாள்வதில் பெரிதும் இருப்பது தொழில்நுட்பம் சார்ந்த அறிவு மட்டுமே என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. அந்தக் காமிராவே நகரும் ஒன்றாக - சலனப்படக்கருவியாக மாறும்போது அதற்கெனத் தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொள்கிறது. அந்த மொழிக்கு இயற்கை மொழியையொத்த அலகுகளும், வரையறைகளும், நேரடி அர்த்தங்களும், மறைமுக அர்த்தங்களும் உண்டாகிவிடும். சலனைப்படக் கருவிக்கான மொழியைப் போன்றே படைப்பாக்க மொழிக்கூறுகளை நிலைப்படக்கருவியைக் கையாள்பவர்களும் உருவாக்குவதுண்டு என்பதை அண்மையில் சந்தித்த ஒருவர் உண்டாக்கினார். அந்த எண்ணத்தை உண்டாக்கிய இடம் கனடாவின் டொரண்டோ நகரம்.
புகைப்படம் எடுப்பது:அது ஒரு தொழில் பலபேருக்கு. சிலபேருக்கு அது ஒரு பொழுது போக்கு. ஆனால் மிகச்சிலபேருக்குக் கலையாகவும் இருக்கிறது என்ற நம்பிக்கை இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. காரணம் அண்மையில் சந்தித்த காமிராக்காரர் கருணா வின்செண்ட். அவரைச் சந்தித்த இடம் கனடாவின் டொரண்டோ நகரம். முதல் சந்திப்பு மே முதல் வாரத்தில் நடந்தது. அறிமுகப்படுத்திய நண்பர் கவி சேரன் அவரது பெயரைச் சொன்னார். அது மனதில் நிற்கவில்லை. காரணம் அவரது கையிலிருந்த காமிரா. அதிகப்படியான எடையுடன் பிறந்த குழந்தையைக் கையாள்வதுபோல் அதைக் கவனமாக்க் கையாண்டபடி இருந்தார். அப்போது அவர் எடுத்த படங்களை உடனடியாகப் பார்க்கவில்லை. இரண்டாவது தடவையாகத் திரும்பவும் ஜூலை இரண்டாவது வாரத்தில் டொரண்டோவுக்குப் போனபோது ஒருநாள் முழுவதும் நான் அவரோடுதான்
இருந்தேன். அப்போதெல்லாம் அவரது படங்களைப்பற்றியோ, அவர் காமிராவைக் கையாள்வதின் நுட்பங்கள் பற்றியோ அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
பேசிக்கொண்ட்தெல்லாம் சாப்பாடு, மது, நட்பு, ஊர் சுற்றல். அவரோடு இன்னொரு நண்பரும் இருந்தார். தாய்வீடு பத்திரிகையின் ஆசிரியர் திலீப்குமார். அவரது பேச்சுகள் டொரண்டோவில் அகதியாக இருப்பதன் பாடுகள் பற்றியதாக இருந்தன. அன்று மாலையில் தமிழ்நதியின் புத்தகவெளியீட்டு விழாவிற்கு மூவரும் போனோம். கருணா தனது எடைகூடிய குழந்தையை விளையாட அனுமதித்தார். விளையாடிய பிள்ளை பிடித்து வைத்த பொம்மைப்படங்கள் எதனையும் இரண்டு நாட்களுக்குக் கண்ணில் காட்டவில்லை. நான் அமெரிக்கா திரும்பியபின் அனுப்பிவைத்தார். அவை உண்டாக்கிய உணர்வில் உடனடியாக ஒருவேண்டுகோளை அனுப்பினேன். கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என உள்ளரங்கப் படங்கள் தவிர
வெளியில் எடுத்த படங்களை அனுப்ப முடியுமா எனக்கேட்டேன். ஒரு தொகையாக அனுப்பிவைத்தார். அந்தப் படங்களைப் பார்த்தபின்பு பெரிய தவறொன்றைச் செய்துவிட்டதாகத் தோன்றியது. அவரோடு இருந்த நேரங்களில் புகைப்படம் எப்படிக் கலையாக மாறுகிறது என்பதைப் பற்றியே பேசியிருக்கவேண்டும். அதன் மூலம் கலையின் பரிமாணங்களை விவாதித்திருக்க முடியும் என்று தோன்றியது.
கலைகளைப் பற்றிய சொல்லாடல்களைத் தொடங்குவதற்கு அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டியன நாம் பேசவிரும்பும் கலையின் எந்திரவியல் கூறுகள். அவை எவ்வாறு இணைகின்றன; இணைந்து பொருளாக (matter) மாறுகின்றது என்று தெரிந்துகொண்டால், அந்தப் பொருள் உருவாக்கத்தின் எந்திரவியல் கூறுகளோடு இணையும் படைப்பாக்கக் கூறுகள் எப்படிக்கலையை உருவாக்குகின்றன என்று பேசத் தொடங்கிவிடலாம். இந்தச் சொல்லாடல் முறைமை தெரியாமல், நேரடியாகப் படைப்பாக்கக் கூறுகளைக் கூடச் சொல்லாமல், கலையின் விளைவுகளைப் பேசுவதே தமிழில் கலை பற்றிய பேச்சாக - திறனாய்வாக இருக்கிறது.
கலையின் அடிப்படையான வேலை உருவாக்குவது. புதிதாக உருவாக்குவது. ஒன்றுபோல இல்லாமல், ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாக உருவாக்குவது. மனிதர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவராகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்படைத்தவர் யார் என்ற ரகசியம் தெரியாததால் இறை அல்லது கடவுள் என நம்புகிறது உலகம்.
புகைப்படத்தைக் கலையாக நினைப்பவர்கள் எதையும் உருவாக்குவதில்லை. இருப்பதைப் பிடிக்கிறார்கள். இருப்பதைப் பிடிப்பதில் என்ன படைப்பாக்கம் இருக்கமுடியும்? உருவாக்கத்திற்குத் தேவை தேர்வு. கலைப்படைப்பை உருவாக்கத் தேவையான அடிப்படைப்பொருட்களை எந்திரத்தனமாக இணைத்தாலும், தேர்வு(selection) செய்வதன் மூலமும், நுட்பங்களை உருவாக்குவதன் மூலமும் கலையாக மாறுகிறது. புகைப்படத்திலும் ஒரு தேர்வு இருக்கிறது. இருப்பதைப் பிடிப்பதில் - எப்படி இருக்கும்போது பிடிப்பது என்பதில் -
அந்தத்தேர்வு வெளிப்படுகிறது. பிடிப்பதற்கான கணப்பொழுதைக் கவனமாகக் கண்டுபிடிப்பதில் தான் கலையின் நிகழ்வினையைக் காட்ட முடியும். இயற்கைப் பொருளொன்று இருப்பதில் வெளிப்படும் உணர்வைப் பிடிக்கிறபோது அது கவிதையின் வெளிப்பாடாக மாறிவிடும். இருப்பது அசைந்துகொண்டிருந்தது என நம்பச்செய்யும்போது நடனத்தின் வெளிப்பாட்டைக் காட்டிவிட முடியும்; இருப்பது உரையாடுகிறது என உணர்த்தும்போது நாடகத்தின் பகுதியாக ஆகிவிடும். இருக்கும் பொருளுக்குள் என்னென்னவோ ரகசியங்கள் பொதிந்துகிடக்கின்றன என்று ஆச்சரியத்தை உண்டாக்குகிற நிலையில் கலையின் கலவைத்தன்மையைக் காட்டிவிட முடியும். இப்படியெல்லாம் கருணா வின்செண்டோடு பேச நினைத்தேன். ஆனால் அவரது முகநூல் பக்கத்தைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன்.முதலில் இந்தப் படங்களைப் பாருங்கள்.
இவை அவரது முகநூல் பக்கத்தில் ஏற்றப்பட்ட படங்கள். இந்தப் படத்தின் ஒளி அளவும், உருவாக்கப்படும் நிழலின் பரவலும் அதனால் உண்டாகும் வண்ணக்கலவையும் தரும் காட்சி இன்பம் சொல்லிப்புரிய வைக்க இயலாதவை; பார்த்து ரசிக்கவேண்டியவை. அடுத்து வருபவை பார்த்தீனியம் நாவலின் வெளியீட்டுவிழா கனடாவில் நடந்தபோது எடுக்கப்பட்ட படங்கள். அந்தப் படங்களில் இருக்கும் மனிதர்கள் நேரில் பார்த்தபோது இப்படியானதொரு அழகிலும், உணர்வு வெளிப்பாட்டிலும் இருந்தார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் கருணா இருந்த்தைத் தான் பிடித்திருக்கிறார். ஒரு நூல் வெளியீடு மற்றும் விமரிசன அரங்கு என்னும் சுவாரசியமில்லாத - ஒரு புகைப்படக்காரருக்குச் சுவாரசியம் தராத வெளியில் எடுக்கப்பட்ட படங்கள்.
https://www.facebook.com/TamilStudiesYork/photos/?tab=album&album_id=1592926254333469&__mref=message_bubble&pnref=story
https://www.facebook.com/digi.karuna/media_set?set=a.100859199936209.1681.100000363874965&type=3&__mref=message_bubble
இந்தப் படங்களுக்குள் மனிதர்களின் சுவாரசியமான கணத்தைக் கச்சிதமாகப் பிடித்துக்காட்டும் எத்தணிப்பு வெளிப்படுவதைக் கவனிக்கலாம். அதற்குப் பின் அவர் அனுப்பிய அந்தத் தொகையான படங்களைப் பாருங்கள். அதன் வினைப்பாடுகளை உங்கள் ரசனைக்கே விட்டுவிடுகிறேன்.
காமிராவில் கலையின் அர்த்தத்தை உருவாக்கும் வித்தகம் உருவாவதை அவரோடு இருந்த நேரத்தில் கவனிக்கவே செய்தேன். நான் பார்த்தவரை கருணா வின்செண்ட் ஒரு சோம்பல் பூனை. சோம்பல் பூனை உடலை முறித்து முன் கால்களை நீட்டி எழுவதுபோலக் கைகள் உயரும்போது
அந்த கருணாவின் வட்ட முகத்தை முற்றிலும் மறைத்துவிடக்கூடிய அளவுக்கட்டுப்பாட்டுக் கண்ணாடிகள் - லென்சுகள்- பொருத்திக்கொண்ட காமிரா அவருடையது. எப்போதும் எடுப்பார்; எப்போது தவிர்ப்பார் என்பதெல்லாம் அவர் விருப்பம். தனது காமிராக் கண்கொண்டு ஒருவரை அல்லது ஒருபொருளைக் கவ்விக் கொள்ள அந்தப் பூனை எப்போது வாயைத் திறக்கும் என்று தீர்மானமாகச் சொல்லமுடியாது. வாயைத் திறந்து கவ்வித் தந்த படங்களை அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவை புகைப்படக்காரர்கள் பற்றிய எனது நம்பிக்கையைக் கலைத்துப் போட்டுவிட்டன.
https://www.facebook.com/thamizhnathy/posts/10153447069800834
கருத்துகள்