பொறுப்பேற்புகள் கூட வேண்டும்


தனித்திருத்தல், துறவு பற்றிய சிந்தனைகள் எல்லாக்காலகட்டங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால், அவை எப்போதும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் பகுதியாக இருந்ததில்லை. அதற்கு மாறாகச் சேர்த்திருத்தல், பற்று என்பனவே பெருந்தொகை மனிதர்களின் வாழ்வியலாக இருக்கின்றது. நிகழ்கால நெருக்கடிகள் ஒவ்வொரு மனிதரையும், பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடிக்குள் திணித்திருக்கிறது. அந்தத் திணிப்புகள் உருவாக்கும் சிக்கலைத் தீர்க்கவே எல்லாவகை அமைப்புகளும் உருவாகியிருக்கின்றன. நிகழ்காலம் என்பது அந்தந்தக் காலகட்டத்துக்கும் உரியது.
சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லத் தொடர்புக்கருவிகளும் முறைகளும் தேவை. ஒருமனிதனிடம் இருக்கும் ஆதாரமான கருவி அவனது உடல். அந்த உடலின் பகுதிகள் - புலன்கள்- ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தொடர்பியல் கருவிகளாக இருக்கின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்புலன்களும் தனது தொடர்பியலை முழுமையாக்கப் போதாதெனத் தோன்றுகின்றபோது புறநிலைக்கருவிகளக் கண்டுபிடிக்கும் தேவைகல் உருவாகின்றன. கருவிகளைக் கையாளும் வழிகளே தொடர்பியல் முறைமைகளாகின்றன. தொடர்பியலுக்காக மனிதர்கள் கண்டுபிடித்த கருவிகளுள் ஆகச்சக்தி வாய்ந்த கருவி மொழி. அம்மொழிக்கு பேச்சு, எழுத்து என இருவடிவங்கள் உள்ளன. இவ்விரண்டில் எது கூடுதல் சக்திவாய்ந்த வடிவம்? என்ற விவாதம் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. முடிவுசெய்யமுடியாத விவாதங்களின் தொகுதிகள்தான் அறிவு அல்லது கல்வி. கல்விக்குப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும் என்பது நிகழ்காலக் கல்வியாளர்களின்- பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களென நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் கணிப்பு. அதற்குமாறான கருத்துக் கொண்டவர்களையும் இந்த அமைப்புகள் உள்வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன என்பது தனிக்கதை.
 
கல்வி: படிநிலைகள்
 
வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வியென ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் லட்சியங்களும் இலக்குகளும் முன்மொழியப் பட்டுள்ளன. அப்படியான முன்மொழிவுகளைச் சொல்லாவிட்டால் நமது அரசுகள் ஜனநாயக அரசுகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளமுடியாது. ஆகவே லட்சியங்களையும் திட்டங்களையும் முன்மொழிவதிலிருந்து அவை எப்போது பின்வாங்குவதில்லை. கற்றவர்களாக ஆக்கவேண்டும் எனத் திட்டமிடும்போதே என்ன வகையான கல்வியைத் தரவேண்டும் எனக் கொள்கை முடிவை எடுப்பது மிக முக்கியமானது. ஆனால் நமது அரசுகள் அதைச் செய்வதே இல்லை; தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே வந்துள்ளன.
 
எழுதப் படிக்கத்தெரிந்துகொள்வதைத் தாண்டி ஒருவருக்குத் தரப்படும் கல்வியின் மூலம் அவர் அடையப்போகும் பலன் என்ன என்பதைக் கொண்டே கல்விக்கான கொள்கையை உருவாக்க முடியும். காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியர்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதில் எந்தவிதத் தெளிவும் இல்லாததால் கல்வியை வழங்குவதற்கான திட்டமிடலில் அவசரம் காட்டிய அதே வேகத்தைக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் காட்டவில்லை. நமது பாரம்பரியமான அறிதல் முறை எத்தகையது என்பதை அறிந்து கொள்ளாமலேயே நமது திட்டமிடல் வல்லுநர்கள் அவற்றைப் புறந்தள்ளி விட்டார்கள். பாரம்பரியமான அறிவையும், தொழில் நுட்பத்தையும் தக்கவைப்பதும் பயன்படுத்தத் தூண்டுவதும் நமது கல்வியின் நோக்கங்களாக இல்லை. அப்படியானதொரு நோக்கம் இல்லாமல் மேற்கின் அறிவையும் கண்டுபிடிப்புகளையும் அறிவதும் பயன்படுத்துவதும் மட்டுமே போதும் எனக் கருதியதால் நமது கல்விக்கொள்கைகள் தீர்மானவைகளாக இல்லை. அதேபோல் நமது வாழிடம், பண்பாடு,வாழ்க்கை முறை, இலக்கியம், ரசனை போன்ற அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டியவையா? உதறித்தள்ள வேண்டியவையா? என்ற கேள்விகள் கேட்கப்படாமலும், விடைகள் கண்டடையப்படாமலும் காலம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷாரின் நோக்கம் அவர்களது அரசுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தேவையான எழுத்தர்களையும் மேற்பார்வையாளர்களையும் உருவாக்குவது. அதை முன்வைத்து அதற்கான கல்வியை வழங்கினார்கள். அதே நிலைபாட்டை நாம் எப்படித் தொடர முடியும்? என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டால் கூடப் போதும் நமக்கான கல்விக் கொள்கையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.காலனி ஆதிக்கத்தினரின் வெளியேற்றத்திற்குப் பின் தேசிய இனங்கள் தங்களின் அடையாளத்தை வலியுறுத்திய போராட்டங்களை இந்தியா பலவிதமாகச் சந்தித்தது. ஜனநாயக அரசியல் மூலமாகவே பல தேசிய இனங்கள் மாற்றங்களைச் சாதித்தன. அவற்றுள் தமிழர்கள் முதன்மையானவர்கள். 1967 இல் தேசிய இன அடையாளத்தை முன் மொழிந்த கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால் அந்த மாற்றம் வெறும் அரசியல் அதிகார மாற்றமாக மட்டுமே ஆகி விட்டது. தமிழர்களின் தனித்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய திராவிட இயக்கங்கள் அந்தத்தனித்துவம் என்பதை விளக்காமலேயே அரை நூற்றாண்டைக் கழிக்கப்போகின்றன. தனித்துவம் என்ன என்று கண்டறிந்தால் தானே, அது நிகழ்காலத்திற்குப் பொருந்தக் கூடியதா? எனச் சிந்திக்க முடியும். அதற்கான முயற்சியே இங்கு மேற்கொள்ளப் படவில்லை.
 
தமிழர்களின் தனித்துவத்தைக் கண்டறிந்து அதனை வளர்த்தெடுத்து நிலை நிறுத்தும் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பு கல்வி அமைச்சர்களுக்குத் தோன்றியதில்லை; தோன்றும்படியான கருத்துகளை அவர்களின் ஆலோசனை வட்டத்தில் இருக்கும் கல்வியியல் அதிகாரிகளும் சொல்லவில்ல; அறிவுஜீவிகளும் உணர்த்தவில்லை. ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அதே கல்விமுறையை- பயிற்றுமொழி, பாடத்திட்டம், பயிற்றுமுறை என எல்லாவற்றையும் அப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதில் கொஞ்சமும் வெட்கம் நமக்கில்லை. கண்ணுக்குப்புலப்படாமல் சிதறிக் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வேலைகளுக்கும் தொழில்களுக்கும் ஓரளவு பொருத்தமான மனிதர்களாக யுவதிகளையும் இளைஞர்களையும் மாற்றி அனுப்பும் பயிற்சிக்கூடங்களாக நமது கல்வி நிறுவனங்கள் உலகமயத்தின் வரவுக்கு முன்புவரை - 1990 வரை கருதப்பட்டது. அதற்குப் பின் இந்திய மனிதர்களை-குறிப்பாக இளைஞர்களை உலகத் தொழில்நுட்ப அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றி, அவர்களையே விற்பனைப் பண்டமாகக் கருதி அனுப்பிக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்த ஏற்றுமதியில் தமிழ்நாடு போன்ற ஆங்கிலவழிக்கல்வியை முதன்மைப்படுத்திய மாநிலங்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இதனைப் பெருமையாகக் கருதுவதில் நமக்குக் குற்றவுணர்வே இல்லை. ‘எனது மகன் அமெரிக்காவில் பணியாற்றுகிறான்; கோடைவிடுமுறையை அங்கே கழிக்கப்போகிறேன்’ எனக் கருதியதில் ஒரு தந்தையாக நான் பெருமைப்பட்டேன்; ஆனால் ஒரு பல்கலைக்கழகப்பேராசிரியராக எனக்குள் ஓடுவது ஆகப்பெரும் குற்றவுணர்வு. இந்தப் பெருமை- குற்றவுணர்வு என இரண்டுக்குள்ளும் ஒரே நேரத்தில் பயணித்து என் காலம் கழிந்துவிடும். என் சந்ததியினர் நாடற்றவர்களாக - ஊரற்றவர்களாக ஆகப்போகிறார்கள் என்ற வருத்தம் எனக்கும், என்னைப் போன்ற நடுத்தரவர்க்கத்திற்கும் உண்டாகப் போவதில்லை. ஏனென்றால் அச்சந்ததியினரிடத்தில் காலத்திற்கேற்ப விற்பதற்கான அறிவும் தொழில்நுட்பமும் இருக்கப்போகிறது; பண்டங்களை வாங்கிச் சுகம்கொள்ளப் பயன்படும் பரிவர்த்தனை அட்டைகள் இருக்கும். ஒருவரின் அடையாளம் அட்டைகளின் பயன்பாட்டில் - பரிவர்த்தனைகளில் இருக்கின்றன என்ற நம்பிக்கையில் நகர்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
நடந்தவைகள் நல்லவைகளாக இல்லை
 
இந்திய அளவில் கல்விக் கொள்கைகளைத் திட்டமிடும் “கல்வி மற்றும் அதுசார்ந்த ஆராய்ச்சிகளைத் திட்டமிடும் குழுமம் (NCERT), பல்கலைக்கழக மானியக்குழு (UGC), தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்தியக் குழுமம்( AICTE) போன்றனவும் இந்தியா என்பதை ஒரு துணைக்கண்டமாகவும், அதற்குள் பல்வேறு மொழிக்குடும்பங்களைக் கொண்ட தேசிய இனங்களும், பலவிதமான தட்பவெப்பநிலைகளையும் நிலப்பரப்பையும் கொண்ட மாநிலங்களும், பாரதூரமான பொருளியல் வேறுபாடுகளையும் சமய, சாதி நம்பிக்கைகளையும் கொண்ட பெருங்குழுக்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கின்றன. புரிந்துகொண்டவர்கள் அவ்வகைக் குழுக்களில் இடம்பெற்றாலும் அரசதிகாரத்திலிருந்துவரும் கொள்கை நோக்கங்களால் திசைமாற்றம் நடப்பதையும் பார்க்க முடிகிறது. ஆட்சிக்குவரும் கட்சி அரசியலின் கொள்கைமுடிவுகளுக்கேற்ப வளைந்துகொண்டுக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேசத்திற்குத் தேவையான முன்வரைவுத்திட்டங்கள் உருவாக்கப்படாமல் தடுக்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை புதிய சம்பளவிகிதங்களை அறிமுகம் செய்வதுபோல, ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின்போதும் புதியகல்விக் கொள்கையொன்றை உருவாக்கி அறிமுகமும் செய்கிறார்கள்.
 
தமிழக அளவில் செயல்படும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி வாரியம் (TNSCHE ) தொழிற்கல்விக்கான இயக்குநரகம் (DOTE) போன்றன பல நேரங்களில் மைய அமைப்புகள் உருவாக்கும் புதிய கல்விக்கொள்கைகளை ஏற்றுச் செயல்படுத்துகின்றன. மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திராவிட இயக்கங்கள் அப்படிச் செயல்படுவது ஆச்சரியம் தரும் ஒன்று. துணைவேந்தர் நியமனம், தேர்வுகள் நடத்தும் முறை, ஆசிரியர்கள் தேர்வுவாரியம் போன்றவற்றில் தங்களின் உரிமையை நிலைநாட்டும் அரசுகள் தமிழ்நாட்டுக்கான கல்விக்கொள்கையைத் திட்டமிடுதலிலும், நடைமுறைப்படுத்துவதிலும் தனக்கான உரிமையை நிலைநாட்டாமல் போவதன் காரணங்கள் புரிவதில்லை. திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது புகுமுக வகுப்புகள் நீக்கப்பட்டு, +2 முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பலனாகக் கல்லூரிக்கல்விக்குள் நுழையும் தமிழ்நாட்டுக் கிராமப்புறத்தினரின் எண்ணிக்கை அதிகமாகியது. இது நேர்மறை விளைவு. அதன் எதிர்மறை விளைவு, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கைப் பெருக்கம். தரமான கல்விக்குப் பதிலாகப் பட்டம் வழங்கும் பெட்டிக்கடைகளாக மாற்றிவிட்டன தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள். போட்டித்தேர்வுகளை உருவாக்கியபோதும், போட்டித்தேர்வுகளுக்குப் பதிலாகப் பள்ளியிறுதிவகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்லூரிகளில் நுழைவு அனுமதி என்ற உத்தரவுகளை வழங்கியபோதும் லாபம் அடைந்தவர்கள் தனியார் பள்ளிகள்தான். ஓட்டப்பந்தயத்தையொத்த போட்டிகளால் கல்விவளாகங்கள் கோழிவளர்ப்புக்கூடாரங்களாக மாறிவிட்டன.
 
தமிழக அரசின் பள்ளிக் கல்வி வாரியம் , மைய அரசின் பள்ளிக் கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் பள்ளிக் கல்வி முறை, மாதிரிப் பள்ளிகளுக்கான பாடமுறை, ஓரியண்டல் கல்வி முறை, மாண்டிசோரி கல்வி முறை எனச் சில கல்வி முறைகள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. இப்பெயர் வேறுபாடுகள் வெறும் பெயர் வேறுபாடுகளாக மட்டும் இல்லை. கற்கை முறையிலும் கற்பிக்கும் நெறியிலும் வேறுபாடுகள் கொண்டவை. கற்பிக்கும் பாடங்களிலும் கூட பாரதூரமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படையான மாற்றங்களும் பலதரமானவை. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அந்த மாற்றம் பாடத்திட்டங்களில் மட்டுமாக இருந்துவிடக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சமச்சீர்க் கல்வியை அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட முனைவர் முத்துக்குமரன் தலைமையிலான குழு, பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரை செய்வதில் தான் அதிகக் கவனம் செலுத்தியது. வசதியற்ற வகுப்பறைகளில்,எப்போதாவது வரும் ஆசிரியர்களிடம் கல்வியறிவு கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணாக்கர்களையும், எல்லா வாய்ப்புக்களும் வசதிகளும் கொண்ட மெட்ரிக் பள்ளி மாணவர்களையும் ஒரே மாதிரியான பாடத் திட்டங்களுக்குள் நுழைப்பது என்பதே ஆபத்தான ஒன்றாகும்.
 
பெருந்திரளான கிராமப்புற மாணாக்கர்களுக்கும், நகர்ப்புறத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணாக்கர்களுக்கும் சிறப்பான கல்வியை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டம் நமது அரசுகளுக்கு இருந்தால் அவை செய்ய வேண்டிய முதல் வேலை பள்ளி வளாகங்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.மேம்படுத்துவது என்றவுடன் நவீன கருவிகளால் வகுப்பு அறைகள் என்பதாகப் புரிந்து கொள்ளப் பட்டுவிடும் அபாயமும் உண்டு. நவீன கருவிகள் வேண்டும் தான்; ஆனால் அதற்கு முன்னதாக அவற்றைப் பராமரிக்கவும் பயன்படுத்தவும் தெரிந்த ஆசிரியர்கள் வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் கருவிகளின் வழியாகப் போய்ச்சேர வேண்டிய அறிவும் தகவல்களும் எப்படிச் சென்று சேரும்? பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், வகுப்பறைகளை உயிரூட்டம் கொண்டதாக ஆக்கும் ஆசிரியர்கள், அவர்களுக்கான பயிற்சிகள் என ஒன்றோடொன்று தொடர்புடைய சங்கிலித் தொடர் மாற்றங்களைத் திட்டமிடாமல் அறிவிக்கப்பட்ட சமச்சீர்க் கல்வி முறை, சமத்துவப் பூங்காக்கள், சமத்துவபுரங்கள் போன்ற தேன் தடவிய வார்த்தைகளில் ஒன்றாக ஆகிக்கொண்டிருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. அதையும்கூட அடுத்து வந்த ஆட்சியாளர்கள் தொடரவிரும்புவதில்லை என்பது இன்னொரு சிக்கல்.
 
மொழிக்கல்வி - பயிற்றுமொழி
 
இந்தியக் கல்வி முறையில் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகவே தாய்மொழி வழிக் கல்விமுறை முடியப் போகிறது. இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தும் தைரியம் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவருக்குக் கிடைக்கக் கூடிய பட்டங்கள் பிற்போக்குவாதி ; மொழி வெறியன்; கிணற்றுத் தவளை என்பதாக இருக்கும். ஆனால் பள்ளிக் கல்விக்குப் பிறகு கற்பிக்கப்படும் உயர்கல்வியின் நிலையைக் கவனிக்கின்ற எவரும் மொழிக்கல்வியில் மாற்றங்கள் வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற உயர்பட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிப் பாடங்களாகவே உள்ளன. அரசுக் கல்லூரிகளில் மட்டும் தமிழ் வழிக்கல்வியாக கலையியல் பட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களுக்குத் தரப்படும் சான்றிதழ்களில் படிப்பு மொழி என்ற இடத்தில் ஆங்கில வழி எனக் குறிக்கப்படுகிறது; ஆனால் அவர்கள் தேர்வு எழுதும் முறை தமிழாக இருக்கிறது.
 
தமிழகப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் பட்ட வகுப்பு பயிலும் மாணவர்களில் பாதிப்பேர் தமிழில் தான் தேர்வுகளை எழுதுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு கலைப்பிரிவு மாணவர்கள் தமிழில் எழுதினார்கள்; இப்போது அறிவியல் பிரிவு பாடங்களும் தமிழில் தான் எழுதப்படுகின்றன. முதுநிலைப்பட்டங்களும் விலக்கல்ல. தங்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் ஆங்கிலவழிக் கல்வி எனக் குறிக்கப்படுவதை விரும்பும் மாணாக்கர்கள் தேர்வுகளைத் தமிழில் எழுதும் நிலை தான் இருக்கிறது என்பது ஒருவித நகைமுரண் தான் என்றாலும் உண்மை நிலை அதுதான். ஒட்டு மொத்த வினாக்களுக்கும் முழுமையாகத் தமிழில் எழுதினால் கூடப் பரவாயில்லை. ஒரே கேள்வியில் பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்த மொழி நடையில் இருக்கிறது. ஒரே வாக்கியத்திலேயே கூடப் பாதித் தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து எழுதும் நிலையும் இருக்கிறது. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பேச்சு நடை உயர்கல்வி கற்கும் மாணவர்களின் தேர்வுத்தாள்களின் மொழி நடையாக இருப்பது தொடங்கிப் பத்தாண்டுகள் ஆகி விட்டன. என்றாலும் எந்தப் பல்கலைக் கழகமும் அதன் எதிர் மறை விளைவுகளைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பயிற்றுமொழியும் தேர்வுமொழியும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நடைமுறையை எந்தப் பல்கலைக்கழகமு பின்பற்றுவதில்லை. கறாராகப் பின்பற்றினால் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும்.
 
தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும்;படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்ற அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதே. அந்த எண்ணிக்கைப் பெருக்கம் சமூகத்தில் பிணக்குகளை உருவாக்கும் என்பதும் கூட உண்மை. ஆனால் தேர்ச்சி பெற்று வாங்கிய படிப்பின் சாரத்தை எந்த ஒரு மொழியிலும் வெளிப்படுத்த இயலாத மாணாக்கர்களாக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதும் உண்மை. அவர்களாலும் சமூகப் பிணக்குகள் உருவாகும் என்பதும் தொடர்ச்சியான உண்மை. நிகழ்கால இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் இது தலையான பிரச்சினை.
 
ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களைத் தமிழில் சொல்லவோ அல்லது எழுதவோ இயலாதவராகவே வெளியேறுகிறார்கள். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் உயர்கல்வியின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மொழிக் கல்வியில் ஆங்கிலேயர்கள் முன் வைத்த நோக்கங்களே இன்னும் நோக்கங்களாக உள்ளன. ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் இந்தியன், ஆங்கில மொழியைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பதோடு ஆங்கில இலக்கியத்தின் சிறப்பான பகுதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதன் வழியாக ஆங்கிலேயர்களின் மேலான பண்பாட்டை அறிந்து கொள்வான். அறிந்து கொண்ட நிலையில் இந்தியர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்வார்கள் ; எதிர் மனநிலைக்குச் செல்ல மாட்டார்கள் என்பது மறைமுக நோக்கமாக இருந்தது. ஆங்கில வழியாகவோ, தமிழ் வழியாகவோ தான் கற்ற கருத்துகளை- செய்திகளை- அந்தந்த மொழிகள் வழியாகப் பேசவும், எழுதவும் கூடியவராக மாற்றும் விதத்தில் மொழிக்கல்வி அமைய வேண்டும். மொழிக் கல்வியை முழுமையாகக் கற்பிக்கும் நிலையில் - மாணாக்கர்களின் முதன்மைப் பாடங்களோடு தொடர்புடைய மொழிப் பாடங்களாகக் கற்பிக்கும் போது தான் இவற்றின் முழுப் பயனும் மாணாக்கர்களுக்குப் போய்ச் சேரும். அப்படியில்லாத மொழிப்பாடக் கல்வி தொடர்ந்து விழலுக்கு இறைக்கும் நீர்தான்.
 
செய்யவேண்டிய மாற்றங்கள்

ஒரு மனிதன் மாறிவிட்டான் என்பது உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வாழும் இடம் ஆகிய அடிப்படைத் தேவைகளில் நடக்கும் மாற்றங்களை மட்டும் குறிப்பதில்லை; அவற்றிற்கும் மேலாக அவனது தன்னிலையில் ஏற்படுத்தும் பண்பு மாற்றமே அடிப்படை மாற்றமாகும். தன்னை உணர்தலும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உணர்தலும் அவனது பண்பு மாற்றத்தின் காரணங்களாலேயே உண்டாகும். இதுவரை கல்வித்துறையில் நடந்த மாற்றங்கள் வடிவ மாற்றங்களையே முன்மொழிந்துள்ளன. அதனோடு சேர்ந்து பண்பு மாற்றங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் கல்வி, கற்பித்தல், கற்றல் என அனைத்திலும் மாற்றங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். முறைசார் கல்விமுறைகளான வகுப்பறைக் கல்வி மூலம் மட்டுமல்ல, முறைசாராக் கல்வி முறைகளான அறிவொளித் திட்டம் போன்றவற்றின் வழியாகவும் சொல்லித்தர வேண்டிய முதல் பாடம் கையெழுத்துப் போடுவதற்கான கல்வியோ , எழுத்துக் கூட்டி வாசிப்பதற்கான படிப்போ அல்ல. ‘இந்த தேசம் ஒரு ஜனநாயகக் குடியரசாக மாறி இருக்கிறது; அதன் மக்கள் அனைவரும் சமமானவர்களாக மதிக்கப்பட வேண்டும். அதற்குப் பாதகம் ஏற்படுத்தும் ஒவ்வொருவரும் கடுந் தண்டனைக்கு ஆளாவார்கள்’என்கிற பாடத்தை அடிப்படை பாடமாகக் கற்றுத் தர வேண்டும்.
 
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கக் குடியரசின் மாநிலங்கள், கனடாவின் சுதந்திரமான மாநிலக்கூட்டமைப்புகள் போன்றவற்றின் தொடக்கப்பள்ளிகள் முழுமையும் இந்த நோக்கத்திலேயே நடைபெறுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையை வாழத்தொடங்கும் வீடுகளிலும், பொது இடங்களிலும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற நடைமுறை உண்மைகள் - அரசியல் சட்டத்தின் விதிக்குட்பட்ட நடைமுறை உண்மைகள் செய்முறைப்பயிற்சியாக மாற்றப்பட்டுள்ளன. அப்பயிற்சிகள் அந்தந்த வெளிகளில் நடைமுறையில் இருப்பவை. ஆனால் இந்தியாவில் பள்ளிவாழ்க்கையும் குடும்பவாழ்க்கையும், சமூக வாழ்க்கையும் வேறாக இருப்பதால் இத்தகைய செய்முறையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுகின்றன. காரணம் இங்கே தனிநபரின் தன்னிலையைத் தீர்மானிப்பதில் அரசியல் அமைப்பு மையமாக இல்லை; அவரவரின் சாதியும் சமயநம்பிக்கையுமே காரணிகளாக இருக்கின்றன. சமயநீக்கமும், சாதி நீக்கமும் செய்யப்பட்ட பள்ளிக்கல்வியைத் தருவதில்தான் இந்தியாவின் சவால்கள் தோற்றுக்கொண்டிருக்கின்றன.

உயர்கல்வியில் இப்போதிருக்கும் தனித்தனி இழைகள் ஒழிக்கப்படவேண்டும். தொழிற்கல்வி தரும் தொழில் நுட்பக் கல்வியகங்களான பல்தொழில் நுட்பக் கல்வியகங்கள் தனி இழையாகவும், கலை, அறிவியல் பாடங்களைத் தரும் பல்கலைக்கழகங்கள் இன்னொரு இழையாகவும்,

 தொழிற்துறைப்பட்டங்களைத் தரும் தொழில் நுட்பப்பல்கலைக்கழகங்களும் பட்டங்களும் தனியிழையாகவும் தொடரக்கூடாது. அனைத்தும் ஒவ்வொரு கல்வி வளாகத்திற்குள்ளும் இயங்கவேண்டும். அவ்வளாகத்திற்குள் நுழையும் ஒருவருக்கு, அவர் கற்றுக்கொள்ளும் அளவுக்கேற்பச் சான்றிதழ்கள் வழங்கவேண்டும். பட்டயச் சான்று, பட்டச்சான்று, முதுகலைப்பட்டச்சான்று தொழில் கல்வி, வணிகக்கல்வி, மருத்துவக்கல்வி போன்றவற்றிற்கு அடிப்படையாகப் படித்திருக்கவேண்டிய பாடங்களையும், பாடங்களின் மதிப்புப்புள்ளிகளையும் மட்டும் வரையறை செய்தால் போதுமானது. நான் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய வார்சா பல்கலைக்கழகத்தில் வேலைநேரம் என்று ஒன்று இல்லை. ஆசிரியர்கள் இருக்கும் காலம் என்பதுமட்டுமே இருக்கின்றன. அவர்களின் இருப்புக்கேற்ப மாணாக்கர்கள் பாடங்களைத் தேர்வுசெய்து கற்றுத் தேர்வெழுதி, மதிப்புப்புள்ளிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். என்ன பட்டம் கையில் இருக்கிறது? என்பதை வைத்து வேலை தரும் முறைமைகள் பலநாடுகளில் இல்லை. அந்தப் பட்டக்காலத்தில் என்னென்ன கற்றுக்கொண்டார்; என்னென்ன அனுபவங்களைப் பெற்றுக்கொண்டார் என்பதை அடிப்படையாகக் கொண்டே வேலைகள் கிடைக்கின்றன.

இப்போதுள்ள இந்தியக் கல்விமுறையில் கல்வி நிறுவனங்களின் பொறுப்பேற்பு குறைவாகவும் அரசின் பொறுப்பு கூடுதலாகவும் இருக்கிறது. இதனை மாற்றுவதற்காக, இப்போதிருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்ற எல்லைகளைக் கூட மறுவரையறை செய்யலாம். எல்லா நிறுவனங்களையும் தன்னாட்சித் தன்மைகொண்ட கல்வி நிறுவனங்களாக மாற்றலாம். ஆனால் தன்னாட்சி என்பதைக் கட்டுப்பாடற்ற தன்னாட்சி என்பதாக விட்டுவிடக்கூடாது. தரத்தைப் பேணும் பார்வை கொண்ட அரசின் பார்வையை வலியுறுத்தும் கண்காணிப்பு இல்லாமல் போய்விடக்கூடாது. ஒவ்வொரு நிறுவனத்திலிருந்து வெளியேறும் மாணாக்கர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அந்தந்த நிறுவனங்கள் பொறுப்பாகும்விதமான போட்டித் தன்மை உருவாக்கப்படவேண்டும். அத்தகைய போட்டித் தன்மைகள், கல்விநிறுவனங்களின் பொறுப்பைக்கூட்டிவிடும்; தரத்தைப் பேணும் நெருக்கடியை உருவாக்கிவிடும்.

 
உலக நாடுகள் பலவற்றிலும் பட்டப்படிப்புக்குப் பின்னான பட்டமேற்படிப்பும், தொழில் கல்வியும் நேரடியாகப் படிக்கும் விதத்தில் பெரும்பாலும் இல்லை. பட்டப்படிப்பில் பெற்ற சான்றிதழ் மற்றும் அனுபவங்களைக் கொண்டு சில ஆண்டுகள் பணியாற்றிப் பணம் சேர்த்துக்கொண்டு, அவரவர் சம்பாதித்த சொந்தப் பணத்தில் தான் மேற்படிப்பைத் தொடர்கிறார்கள். அல்லது ஒருவர் பணியாற்றும் நிறுவனங்கள், அவரை வல்லமையுள்ளவராக மாற்ற விரும்பி, நிதியுதவியளித்து மேற்படிப்புக்கு அனுப்பிவைக்கின்றன. இப்படி வருபவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வமும் நெருக்கடியும் தவிர்க்கமுடியாதவை. ஆகச் சிறந்த வல்லுநர்களின் தேவை உலகெங்கும் இருக்கின்றன. அப்படியொரு வல்லுநராக ஆகவேண்டுமென்ற ஆசையும் ஒருவருக்கு வேண்டும். அதற்காக அவர் கடுமையாக உழைத்துத்தான் ஆகவேண்டும். கடுமையான உழைப்பு என்பது பாடத்திட்டத்திலிருக்கும் புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதல்ல.
 
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தேர்வுமுறைகளை மாற்றாமல் வல்லுநர்களை உருவாக்க முடியாது. பாடம் நடத்துவதற்குச் செலவிடும் நேரத்திற்கும் அவரை மதிப்பீடு செய்வதற்குச் செலவிடும் நேரத்திற்கும் இடையேயுள்ள இடைவெளி பாரதூரமான மட்டுமல்ல. வாரத்திற்கு 4 மணிநேர நேரம் வீதம் 16 வாரம் நடத்திய பாடத்தை மதிப்பீடு செய்வதற்குச் செலவிடும் நேரம் அதிகம் போனால் 6 மணிநேரம் தான். பருவத்தேர்வு மூன்றுமணிநேரம்; உள்மதிப்பீட்டுத்தேர்வு 3 மணிநேரம். அந்த நேரத்தில் விடையெழுதுவதற்கான வினாத்தாள்களை யாரோ தயாரிப்பார்கள்; விடையெழுதியபின் அத்தாள்களை யாரோ திருத்துவார்கள். பாடம் நடத்திய ஆசிரியருக்கு எந்தப் பொறுப்பும் இருக்காது. இவையெல்லாம் மாற்றப்படவேண்டும். ஒரு மாணாக்கரின் வாழ்க்கையை உருவாக்குவதில் பெற்றோரின் பங்கைவிடக்கூடுதலான பங்களிப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிசெய்யவேண்டும். ஒரு கல்வி நிறுவனம் தன்னிடம் பணம்கட்டிப் படிக்கவரும் மாணாக்கரின் எதிர்காலத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்பதில் ஆசிரியரின் பொறுப்பேற்பும் இணைந்திருக்கிற முறையை உருவாக்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்