சாகசக்காரர்கள் எப்போதும் விமரிசனங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்


கோமகன்
 



இன்றைய சமகாலத் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் திறனாய்வு, நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, சஞ்சிகைகளின் ஆசிரியர் என்று பன்முக அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் பேராசிரியர் அ .ராமசாமி. ஆரவாரங்கள் இன்றிச் செயலால் பலத்த அதிர்வலைகளை இவர் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதுவரையில் இவரின் படைப்புகளாக நாடகங்கள் விவாதங்கள், ஒத்திகை, வட்டங்களும் சிலுவைகளும், சங்கரதாஸ் சுவாமிகள், பிரஹலாதா, முன்மேடை, தொடரும் ஒத்திகைகள், அரங்கியல் மற்றும் நாடகவியல் என 8 நூல்கள் அச்சில் வந்துள்ளன. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் வெகுமக்கள் பண்பாடு மற்றும் பிம்பக்கூறுகள் பற்றிய விமரிசனக்கட்டுரைகள் கொண்ட தொகுதிகளாக - பிம்பங்கள் அடையாளங்கள், வேறு வேறு உலகங்கள், திசைகளும் வெளிகளும், மறதிகளும் நினைவுகளும் என நான்கு நூல்கள் வந்துள்ளன. திரைப்படங்களைப் பார்ப்பதற்கான பார்வைகளை முன்வைக்கக்கூடிய வகையில் அலையும் விழித்திரை, தமிழ் சினிமா: ஒளிநிழல் உலகம், ரஜினிகாந்த்: மாறும் காட்சிகள், தமிழ் சினிமா: அகவெளியும் புறவெளியும்,தமிழ் சினிமாள்\: காண்பதுவும் காட்டப்படுவதுவும் முதலான தொகுப்புகள் வந்துள்ளன. இலக்கியத்திறனாய்வுகளாக மையம் கலைந்த விளிம்புகள், திறனாய்வு: சில தேடல்கள், நாயக்கர் காலம்: இலக்கியமும் வரலாறும் முதலான நூல்கள் வந்துள்ளன. நாவலென்னும் பெருங்களம், கதைவெளி மனிதர்கள் என முறையே நாவல்,சிறுகதை பற்றிய திறனாய்வுக் கட்டுரை நூல்கள் இப்போது வரப்போகின்றன. 2000 -க்குப் பின்பான பெருந்தொகுப்புகளில் இவரது கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன. தமிழில் நவீன இலக்கிய விவாதங்களை முன்னெடுக்கும் உயிர்மை, அம்ருதா, தீராநதி, காலச்சுவடு, புதிய கோடாங்கி, தலித், மணற்கேணி போன்ற அச்சு இதழ்களிலும் எதுவரை, மலைகள், சொல்வனம் போன்ற இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதும் இவர் தனது கட்டுரைகளை “அ.ராமசாமி எழுத்துகள்” (http://ramasamywritings.blogspot.in/)என்னும் வலைப்பூவில் தொகுத்து அளித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு பல்வேறு கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனை மூலம் வாசகர்களுக்காக நான் கண்ட நேர்காணல் இது ..............

*


1

அ ராமசாமியை
நாங்கள் எப்படித்தெரிந்து கொள்ள முடியும் ?


திறனாய்வுக்கலையை மையப்படுத்தி எழுதும் எழுத்தாளன் என்றும் நவீனத் தமிழ் வாசிப்பைக் கல்விப்புலத்திற்குள் அதனதன் தோற்றக்காரணிகளோடு பரப்பிவிட வேண்டும் என நினைக்கும் கல்வியாளன் என்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன். பலரையும்போல கவிதை எழுதுவதில் தான் தொடங்கினேன். கதைகள் கூட எழுதியிருக்கிறேன். தேன்மழை, தாமரை, கணையாழி, தீபம், மனஓசையெனத் தொடங்கிய பயணத்தைத் தடுத்து நிறுத்தியது முனைவர் பட்ட ஆய்வு. புனைவு மனம் குறைந்து அறிவுவழிப்பட்ட தர்க்கம் மனத்தை ஆக்கிரமித்துவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் சேர்ந்தபோது மாணவர்களின் தேவைக்காக நாடகங்களை உருவாக்கத்தொடங்கினேன். கதைகளிலிருந்து - கவிதைகளிலிருந்து - மொழிபெயர்ப்பாக -தழுவலாகவெனக் குறுநாடகங்களையும், பெருநாடகங்களையும் உருவாக்கித்தந்தேன்.
மேடைக்கான நாடக எழுத்தென்பது ஒருவிதத்தில் உருவாக்குவதுதான். அது தொடங்கி நவீனத்துவ தர்க்கம் இடம்பெறும் நாடக எழுத்தாளனாகவும் தர்க்கத்தை முன்வைக்கும் கட்டுரை எழுத்தாளனாகவும் இப்போது அறியப்படுகிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்காக மார்க்சியத்தின் அடிப்படையிலான இலக்கியத் திறனாய்வுகளை வாசிப்பவனாக இருந்தேன். அங்கிருந்தே எனது இலக்கியப்பார்வை உருவாகியது. ஆய்வுக்காகக் கடந்தகால இலக்கியப் பிரதிகளுக்குள் சமூக நிறுவனங்களின் பதிவுகள், அவற்றின் இயக்கம், முரண்களின் வெளிப்பாடு ஆகியவற்றைப் பார்க்கும் பார்வையை உருவாக்கிக் கொண்டேன். அதிலிருந்து நகர்ந்து நிகழ்காலப் பண்பாட்டை உருவாக்கும் காரணிகளைப் பற்றிப் பேசும் விமரிசகனாக நானே என்னை நினைத்துகொள்கிறேன். குறிப்பாக 2000 -க்குப்பின்னான காலகட்டத்தில் வெகுமக்கள் ஊடகங்களின் வெளிப்பாட்டு வடிவங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தயாரிப்புகள், பேச்சுக்கச்சேரிகள் எனப் பலவற்றின் வழியாக உருவாக்கப்படும் சமூகக்கட்டமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் விமரிசனக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுகிறேன். அதற்கான விதிகளோடு உறவும்முரணும் கொண்ட இலக்கிய விதிகளிலிருந்தும்  - இலக்கிய விமரிசன அடிப்படைகளிலிருந்தும் உருவாக்கிக் கொண்ட பார்வைகளே இதற்குள் செயல்படுகின்றன. அதிலும் குறிப்பாகத் தமிழின் ஆதி இலக்கியக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியம் உருவாக்கித் தந்துள்ள விதிகளை நவீனத்துவப் பார்வையோடு இணைக்க விரும்பும் இலக்கிய விமரிசகனாகவும் பண்பாட்டு விமரிசகனாகவும் என்னைப் புரிந்துகொள்வதையே விரும்புகிறேன்.
 
"எழுத்து உன்னதம்; அதைச் செய்பவனைச் சமூகமே காப்பாற்ற வேண்டும் " என நம்பும் எழுத்தாளனாக என்னைக் கட்டமைத்துக்கொள்ள நினைப்பதில்லை. நாடோடியாகவும், பொது ஒழுங்கிலிருந்து விலகியும், எனது கஞ்சிக்காக எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு அலையும் எழுத்தாளர்களை நான் சாகசக்காரர்களாக மட்டுமே நினைக்கிறேன். சாகசக்காரர்கள் எப்போதும் விமரிசனங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்; மக்களாட்சி மனநிலைக்கெதிரானவர்களாகவே - அராஜகவாதிகளாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களும் ஜனநாயக சமூகத்திற்குத் தேவை. அவர்கள் ஒருவிதத்தில் ஜனநாயக சமூகத்தின் அடங்க மறுக்கும் மனச்சாட்சி. அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நான் அப்படி அறியப்பட விரும்பியதில்லை. அதே நேரத்தில் நிலவும் அமைப்புக்கும் அதிகாரத்துக்கும் முழுவதும் ஒத்தோடுதல் ஒரு எழுத்தாளனின் வேலையல்ல என்றும் புரிந்துவைத்திருக்கிறேன்.


இந்தியாவில் எவ்வளவோ துறைகள் இருக்கின்றன ஆனால் எழுத்து உங்களை வளைத்ததன் காரணம்தான் என்ன ?



எழுத்து என்னை வளைத்தது என்று சொல்வது சரியானது தான். வாசிப்பின் வழியாக எழுத்தால் வளைக்கப்பட்டேன். எனது எழுத்துகளுக்கு முழுமையான காரணம் வாசிப்புதான். எனது வாசிப்பின் தொடக்கம் பெரிய எழுத்துக் கதைகள். வைணவ மரபுசார்ந்த நம்பிக்கைகள் கொண்ட விவசாயக் குடும்பம் என்னுடையது. பாரதக் கதைகளையும் இராமாயணத்தையும் வாசிப்பதை ஒரு சடங்காகவும் வாழ்வின் பகுதியாகவும் கொண்ட குடும்பம். வயதான அவ்வா (பாட்டி) மற்றும் தாத்தாக்களின் அந்திமக் காலத்தேவைக்காகவே இவற்றையெல்லாம் தொடர்ந்து வாசித்துக் காட்டியிருக்கிறேன். பாண்டவர்களின் அஞ்ஞாதவாச வாழ்வை சொல்லும் விராட பர்வத்தை எல்லாம் ஒவ்வொரு வருடமும் வாசித்துக்காட்டியவன். எட்டாம் வகுப்புக்குப் பிறகு கிறிஸ்தவப் பாதிரிகளால் நடத்தப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடுதியில் தங்கிப் படித்தேன். எழுவதற்கும் உண்பதற்கும் தூங்குவதற்கும் ஏங்குவதற்குமென எல்லாவற்றிற்கும் பைபிளின் ஓரதிகாரத்தை வாசித்துவிட்டுப் பிரார்த்திக்கும் கட்டாயம். பைபிள் வாசிக்கப்படும் அழகும், அதற்குள் விரியும் கதைகளும் ஈர்த்தவைகளாக இருந்தன. பைபிளையும் ரசித்துப் படித்தவன். இரண்டு சமயங்களின் கதைகளை அறிந்த நான் இரண்டின் மீதும் நம்பிக்கையற்றவனாக ஆகிப்போனது முரண்தான்.
 
பள்ளிப்படிப்பில் வரலாற்றிலும் கணித அறிவியலிலும் விருப்பம் கொண்டவனாக இருந்தேன். வரலாற்றுப்பாடம் நடத்திய ஆசிரியைகளின் பிரியத்துக்குரிய மாணவன் . நபர்களின் சாகசக்கதைகளும், ஆண்டுகளும் போலவே கணிதச் சூத்திரங்களும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். ஐ.நா.சபையின் செயலாளர் யார்? என்ற கேள்விக்கு ‘ ஊதாண்ட்’ பெயரைச் சொன்னபோது அவர் பதவியேற்று 15 நாள் தான் ஆகியிருந்தது. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அதற்காகவே எனக்குச் சிறப்பு உதவித்தொகை கிடைத்தது. வரலாறும் கணிதமும் புனைவு குறைவான பாடங்கள். இரண்டிலுமிருந்து இலக்கியவாசிப்புக்கு நகர்ந்தவன். இலக்கிய வாசிப்பை வெளிகளின் வாசிப்பாக நினைப்பவன் என்பதை நான் எழுதும் கட்டுரைகளில் நீங்கள் பார்க்கமுடியும்.

இரண்டு சமயங்களின் கதைகளை அறிந்த நான் இரண்டின் மீதும் நம்பிக்கையற்றவனாக ஆகிப்போனது முரண் என்று சொல்கின்றீர்கள் அப்படியான முரண்கள் ஏற்படுவதற்கான பின்புலங்கள்தான் என்ன ?

பார்ப்பதையெல்லாம் கடவுளாக நினைத்தும் வழிபட்டும் வாழ்ந்தவர்கள் சுற்றி இருந்தார்கள்.ஒவ்வொரு நேரமும் கடவுளிடம் கேட்டுக்கேட்டுக் காரியங்கள் செய்யும் பழக்கமும் அவர்களிடம் இருந்தது. ஆனால் குடும்பத்திற்குள் ஏதாவது சொத்து மற்றும் பணப்பிரச்சினை என்றாலும் சரி, உறவினர் என்பதால் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவில்லையென்றாலும் சரி அவர்கள் காட்டும் வன்மமும் பகைமையும் வஞ்சினம் கொண்டதாக அமைவதையும் பார்த்துப் பயந்திருக்கிறேன். அப்போதெல்லாம் கடவுளை மறந்துவிட்டுப் பகை வளர்ப்பார்கள். தவறாமல் நல்ல நாட்களுக்கும் கெட்ட நாட்களுக்கும் கோயில், குளம் என்று அலைவார்கள் ஆனால் உறவுக்காரர்களையே கெடுக்க வேண்டுமென எப்போதும் திட்டமிடுவார்கள். இதன்மீதான கேள்விகள் எனக்குச் சின்ன வயதிலிருந்தே இருந்தன. அதனாலேயே குடும்பத்தினரிடம் பெரிய அளவு நெருக்கத்தைப் பேணியதில்லை. அதனை வளர்ப்பதுபோல எட்டாம் வகுப்புக்குப் பிறகு விடுதி வாழ்க்கைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.
 
விடுதியில் நுழைந்த நாள் முதல் போதனைகள், பிரார்த்தனைகள். எழுப்பியதும் பிரார்த்தனைக்கூட்டம், குளித்து முடித்து உணவுத்தட்டுக்கு முன் ஒரு ஜெபம், வகுப்பு தொடங்க ஒரு ஜெபம், முடிய ஒரு பிரார்த்தனை, திரும்பவும் விடுதியில் பிரார்த்தனைக்கூட்டம், ஜெபங்கள். தினசரி பைபிள் வாசிப்புகள், ஞாயிறு வகுப்புகள் எனப் பைபிளும் பிரார்த்தனைகளும் அன்றாட வாழ்வில் பகுதிகளாக மாறின. மணியடித்து அழைத்துக் கூடிப் பேசி, பாடி, இரங்கிக் கேட்டுக் கொண்டவைகளைக் காதுகொடுத்துக் கேட்கும் கடவுள் யாரென்றே தெரியவில்லை. பள்ளியில் நடக்கும் பதவிப்போட்டிகளும் ஆசிரிய - ஆசிரியைகளின் காதல்களும் கதைகளாக மாணவர்கள் வரை வந்து சேர்ந்துவிடும். கிறித்தவ சமய நடவடிக்கை சார்ந்த நிரலை உருவாக்குவதிலும் மனிதர்களை முன்னிலைப்படுத்துவதிலும் இருந்த சார்பும் அடையாளங்காணலும் கூட எனக்குள் கேள்விகளைத் தோற்றுவித்தன.

 எல்லாவற்றையும் ஈடுபாட்டோடு செய்தாலும் நான் அந்நியனாகவே நினைக்கப்பட்டேன். அந்த நினைப்பை விரிவாக்கியவர் ஒரு தமிழாசிரியர். பத்தாம் வகுப்பில் உரைநடைகளை நடத்துவதற்காக வந்த அவரின் பெயர் அந்தோனி. நாத்திகராக அறியப்பட்ட அவரைப் பற்றி என்னோடு படித்த அவரின் மகன் சொன்ன கதைகள் சுவாரசியமானவை. அந்தக் கதைகள் தான் பெரியாரின் பக்கம் திருப்பின. பெரியார் எழுதிய சின்னச் சின்னப் பிரசுரங்களைக் கொண்டுவருவான். அவன் வீட்டில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய இருப்பதாகச் சொல்வான். ராமாயண, பாரதக் கதைகளை வாசித்திருந்த எனக்குப் பெரியார் முன்வைத்த வாதங்களோடு திரும்பவும் அவற்றை நினைத்துக்கொள்ள முடிந்தது. விளைவு அவை வெறும் கதைகளாக ஆகிவிட்டன; பைபிளும் கதைகளின் திரட்டாகத் தோற்றம் தந்தன. எல்லாவற்றையும் கதைகளாகப் பார்த்துப் பழகியே நான் நாத்திகனானேன்.

உங்களால் இலக்கிய உலகில் சுதந்திரமாக இயங்க முடிகின்றதா ?

இயங்கித்தான் வந்துள்ளேன். இயங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். அதே நேரத்தில் எனது சுதந்திரத்தின் பரப்பும் எல்லைகளும் எனக்குத் தெரியும். ஒரு கல்விப்புலப் பேராசிரியரின் எல்லைக்குள்ளிருந்து அதிகப்படியான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பயன்படுத்துகிறேன். நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் என்னை எப்போதும் தாக்கிவிடாதவாறு பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அண்மைக் காலத்தில் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களின் வரவுக்குப் பின் அடிப்படைவாதிகளும் அறியாமையில் உழலும் ஒற்றை நோக்கம் கொண்ட மனிதர்களும் கருத்துலகில் செயல்படும் பலரைத் தொல்லை செய்யத் தொடங்கியுள்ளனர். எனக்கும் அதுப்போன்ற தொல்லைகளும் எச்சரிக்கைகளும் வருவதுண்டு. குறிப்பாகத் தமிழ்த்தேசியம் பேசுவதாக நம்பிக்கொண்டிருக்கும் அடிப்படைவாதிகளே அச்சுறுத்தலை அளிக்கின்றனர். அவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் இதுவரையிலான பாசிஸ்டுகளைத் தோற்கடித்துத் தாண்டிச் செல்வது நிச்சயம் என்று தோன்றுகிறது. மாற்றுக்கருத்தாளர்களை இயங்கவிடாமல் செய்வதில் அடிப்படைவாதம் வெற்றியடையப்பார்க்கிறது
இன்னும் சொல்லப்போனால் கருத்துச் சுதந்திரம் அரசு போன்ற நிறுவனங்களால் கேள்விக்குள்ளாக்கப்படுவதைவிடச் சமூகக்குழுக்களால் தான் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன. திரைப்படங்களைத் தடுப்பது, பெண்ணியக் கருத்துகளைப் பேசும்விதமாகப் பெண்ணுறுப்புகளைக் கவிதையில் உச்சரிக்கச் செய்யும்போது அச்சுறுத்துவது, சாதிய முரண்பாடுகளை -சாதிய மேலாண்மைகளைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளைத் தடுப்பது போன்ற வினைகளைச் செய்யும் குழுக்கள் தமிழகப்பரப்பில் மிதக்கத்தொடங்கியிருக்கின்றன. அதன் உறுப்பினர்கள் தனிநபர்களைச் சமூக ஊடகங்களில் நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர். இந்த நெருக்கடிக்காக லீனா மணிமேகலை, பெருமாள் முருகன் போன்றோர் வெளிப்படையாக அறியப்பட்டவர்கள்;அச்சுறுத்தப்பட்டார்கள்.
 
இலக்கிய வளர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் இன்றியமையாதவை என்று சொல்கின்றீர்கள் அதேவேளையில் அடிப்படைவாதக்குழுக்களும் அதன் உறுப்பினர்களும் சமூகவலைத்தளங்களில் படைப்பாளிகளை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர் என்று சொல்கின்றீர்கள் . இது முரண்நகையாக இல்லையா ?

அந்த முரண்நகையில் இயங்கியல் இருக்கிறது. நெருக்கடி இயக்கத்தைத் தடுத்துவிட முடியாது. தனிமனிதர்கள் தங்கள் செயல்பாடுகள் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கிற்கும் மனிதகுல நலனுக்கும் நன்மை பயக்கும் என நினைக்கும்போது நெருக்கடிகளைக் கண்டு பின்வாங்கிவிட மாட்டார்கள். எழுதுவார்கள். எழுதுவதைப் பார்வையில் வைக்கச் சமூக வலைத்தளங்களில் தடையற்ற வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து எழுதுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். இருந்துகொண்டே இல்லாமல் போகமுடியுமா? தனது கருத்தை முன்வைக்கும் வாய்ப்பிருக்கும்போது சொல்லாமல் விடுவதென்பது இருந்துகொண்டே இல்லாமல் போவதுதானே?


இலக்கியத்தரம் என்பதற்கான வரையறைதான் என்ன ?

இலக்கியத்திற்கு என்று மட்டுமே தரம் இருப்பதாக நினைக்கவில்லை. பொருட்களின் வடிவம், உள்ளடக்கம், பயன்பாடு சார்ந்த தரமே அதன் முதன்மை. பருப்பொருட்கள் முழுமையும் எந்திரவியல் கூறுகளால் ஆனது. ஆனால் இலக்கியம் உள்ளிட்ட கலைகள் அப்படியானவையல்ல. எந்திரவியல் கூறுகளோடு அழகியல் கூறுகளைச் சார்ந்தே அவை அறியப்படுகின்றன. ஏனென்றால் அவை பருண்மையான பொருட்கள் அல்ல. அதேபோல் கலை, இலக்கியங்கள் உடனடிப் பயன்பாட்டை முக்கியமாக நினைப்பன அல்ல. உடனடிப் பயன்பாட்டை விடவும் நீண்டகாலப் பலனை முதன்மையாக நினைப்பவை. அந்த மையத்திலிருந்தே இலக்கியத்தரம் பற்றிய பேச்சு உருவாகிறது. அதனால் ஒருபடித்தான தரம் என்று ஒன்று இருப்பதாக நம்புவதில்லை

இலக்கியமானது தனியே கலையுடன் நின்றால் போதுமா?இல்லை அது மனித வாழ்வியலில் பெரும் சமூக மாற்றங்களை உருவாக்கவேண்டுமா ?
 
இலக்கியம் தனியொரு கலை அல்ல. அது ஓவியம், சிற்பம் போன்ற காண்பியக் கலைகளின் கூறுகளை தன்னகத்தே கொண்டது. பேச்சு, பாட்டு போன்ற கேட்புக் கலையின் ஆதாரம் இலக்கியம் தான். நடனம், நாடகம், சினிமா போன்ற இருநிலைக்கலைகளின் தொடக்கமும் இலக்கியம் தான். ஆக, இலக்கியம் நுண்கலை, நிகழ்த்துக்கலை, அசைவுறுக்கலை என எல்லாவற்றோடும் இணைந்து நிற்கும் கலை. இவை எல்லாமே உருவாக்கும் கலைஞரோடும், அவரது வாழிடப்பரப்பு, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்நிலைகளோடும் தொடர்புடையன. எல்லாவற்றின் தொடர்புகளால் உருவாகும் கலைகள் மற்றும் இலக்கியங்கள் சமூகத்தின் ஆன்மாவாகவும் இயக்கமாகவும் இருக்கின்றன; இருக்கவேண்டும்.

2
 
ஈழத்து வாசகர்களிடையே அல்லது படைப்பாளிகளிடையே ஜெயமோகன் சாருநிவேதா, மனுஷ்ய புத்திரன் ஆகியோரது எழுத்துக்களைப் படிப்பது அல்லது அவர்களையிட்டுப் பேசுவது ஓர் அந்தஸ்த்துக் குறியீடாக (status of sympol) இருக்கின்றது. உண்மையில் இவர்கள் எழுத்துக்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தினவா?

நிகழ்காலத்தில் அதிகம் எழுதுபவர்களாக இவர்கள் அறியப்படுகிறார்கள். அதிகம் எழுதுபவர்கள் என்று வரிசைப்படுத்தினால் முதலில் இருப்பவர் ஜெயமோகன். இவரது எழுத்துகள் இணையவெளியில் அதிகம் கிடைக்கின்றன. சாருநிவேதிதாவும் இணையத்தில் கிடைக்கக்கூ டிய எழுத்தாளர் தான். ஆனால் மனுஷ்ய புத்திரன் அதிகமும் அச்சு ஊடகங்களில் எழுதுபவர். என்றாலும் அவரது இணையப் பக்கத்திலும் முக்கியமான பதிவுகள், தகவல்கள் கிடைக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து வாசகர்களுக்கு இணையவெளி எழுத்துகள் உடனடியாக அடையக்கூடியன. அதன் காரணமாகவே இவர்களின் பெயரும் எழுத்துகளும் தமிழ் பேசும் -வாசிக்கும் மனிதர்களிடம் விரைவாகப் போய்ச் சேர்ந்துள்ளன. இவர்களை விடவும் இன்னும் அதிகம் எழுதிய/ எழுதுகிற எழுத்தாளர்களும் தமிழில் உண்டு. ஆனால் அவர்களின் எழுத்துகள் இணையவெளியில் படிக்கக் கிடைப்பதில்லை.

இம்மூவரும் அதிகம் எழுதுபவர்கள் என்று சொல்வதைவிடவும் எதை எழுதவேண்டும்/ எப்படி எழுதவேண்டும் என்பதைத் தாங்கள் கண்டடைந்த சில கலை மற்றும் சிந்தனைத் தளத்திலிருந்து எழுதுகிறார்கள். அவை சரியானவையா? சிக்கலானவையா? நிகழ்கால வாழ்வின் மீது தாக்கம் கொண்டவையா? வாசிப்பவர்கள் ஏதோ ஒன்று கிடைப்பதாக நம்புகிறார்கள். அதனால் வாசிக்கிறார்கள். இந்தியத் தமிழ் வாழ்வு சார்ந்தே அதிகம் யோசிக்கும் -விவாதிக்கும் இவர்களின் எழுத்துகள் ஈழத்தமிழ் வாசகர்களால் ரசிக்கப்படுவதன் காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை இன்னும் ஆழமாக யோசிக்கவேண்டும். ஈழத்தமிழர்களுக்குள் ஓடும் இந்துமத நம்பிக்கை மற்றும் தத்துவப் பிடிப்புகளால் கூட ஜெயமோகன் விரும்பப்படலாம். அதேபோல் புலம்பெயர்ந்த ஐரோப்பிய வாழ்வின் சுதந்திரம் தரும் - குறிப்பாகப் பாலியல் சுதந்திரம் பற்றிய சொல்லாடல்களை முன்வைப்பவர் என்பதால் சாருநிவேதிதா கவர்பவராக இருக்கலாம்.
மனுஷ்யபுத்திரனின் மொழியும் கவிதையாக ஒன்றை வடிவமைக்கும் முறையும் யாரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று. ஒருவேளை ஈழத்தமிழர்களின் வலியும் வேதனையுமான வாழ்நிலையிலிருந்து தப்பிக்கும் மனநிலையை அவை உருவாக்குகின்றன என்பதுகூடக் காரணமாக இருக்கலாம். போரையும் சொந்த வெளியற்ற அகதிவாழ்வையும் மறப்பதற்கான மறதிக்குளிகைகளாக அவை தோன்றலாம்


ஈழத்தின் போரியல் இலக்கியம் பற்றிய உங்கள் பார்வைதான் என்ன ?


போரின் ஏற்பும் இருப்பும் ஏற்படுத்திய காரணங்களும் வலிகளும் விரிவாகப் பதிவாகியுள்ளன. ஈழம் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம். அந்தக் கனவும் முயற்சிகளும் தமிழ் மொழிக்குத் தந்த இலக்கியங்கள், பழைய புறநானூற்றுப் பதிவுகளை விடவும் காத்திரமான பதிவுகளாக இருக்கின்றன. 1980-களின் பிற்பாதியிலேயே போரியல் இலக்கியப் பதிவுகள் தொடங்கிவிட்டன. தொடக்க நிலையில் விடுதலைப் புலிகளின் நேரடி ஆதரவு இலக்கியங்கள் நவீனத்தன்மையை மறுதலித்த வடிவங்களில் - குறிப்பாக விழிப்புணர்வூட்டும் பாடல் வடிவங்களையும் மேடைக்கவிதைகளிலும் - கவனம் கொண்டிருந்தன. 1990 களுக்குப் பிறகு ஈழ இலக்கியம் என்பதே போரியல் இலக்கியம் என்பதாகவே ஆகிவிட்டது. இந்த இடத்தில் குறிப்பாக மூன்று கவிதைத் தொகுப்புகளைச் சொல்ல விரும்புகிறேன்.
 
பதினொரு ஈழத்துக்கவிஞர்கள், " மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி " என்ற வரிசையில் வந்த தொகுப்புக் கவிதைகள் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு மெல்லமெல்ல போரியல் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியவை என்பது எனது கணிப்பு. அதே நேரத்தில் இன்னொரு தொகுப்பான "சொல்லாத சேதிகளும் " இங்கு குறிப்பிட வேண்டிய தொகுப்பு. தமிழ்ப் பெண்களின் புதிய அடையாளத்தை முன் வைத்த கவிதைகள் கொண்ட தொகுப்பு. தொடர்ந்து சேரன், ஜெயபாலன், வில்வரத்தினம் என முக்கியமான கவிகளின் தொகுப்புகளோடு, கட்டுரை, கதை, புகைப்படம் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய தொகுப்புகளாக லண்டனிலிருந்தும் பாரிஸிலிருந்தும் கனடாவிலிருந்தும் வந்த தொகுப்புகளின் வழியாகப் புலம்பெயர் வாழ்க்கையை வாசித்திருக்கிறேன். பத்மநாப ஐயர், சுகன், சோபா சக்தி, தர்மினி ஆகியோரின் ஒருங்கிணைப்பு முயற்சிகளும் இலக்கியச் சந்திப்புகளும் உண்டாக்கிய பணிகள். இப்போது 2009-க்குப் பிறகான வெளியீடுகள் புனைகதைகளாக இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து வாசிக்கிறேன்

இவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கும்போது தமிழின் இருப்பை இந்த உலகம் என்றும் மறக்காது; மறுக்காது. போர்க்கால வாழ்வையும் போரின் நினைவுகள் உண்டாக்கிய பதிவுகளையும் குறித்து வெளியிலிருந்து வாசிப்பவனாக ஒரு நூல் எழுத வேண்டும் என்ற நினைப்பை இவை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. விரைவில் முடிக்க வேண்டும்

ழத்திலும் சரி இந்தியாவிலும் சரி சுதந்திரத்துக்கான போராட்டங்கள் வடிவ வேறுபாட்டில் நடைபெற்றன. ஆனால் இந்தியாவில் போரியல் இலக்கியம் அதிகமாக உள்வாங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று எண்ணுகின்றீர்கள் ?


இந்திய சுதந்திரப் போராட்டம் போரியல் அம்சங்கள் கொண்டதல்ல. காந்தியின் வருகைக்கு முன்பேகூடத் திட்டமிட்ட போர்முறைகளைச் சுதந்திரப்போராட்டத்தின் வடிவமாக நினைக்கவில்லை. ஆங்காங்கே கலவரங்களும் தனிநபர் அழிப்பும் நடந்தன என்றாலும் கருத்தியல் ரீதியாகவும் நடைமுறைக்காரணமாகவும் போரை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நேதாஜி போன்ற தலைவர்கள், வெளியிலிருந்து கிடைக்கும் உதவியை நம்பியே ராணுவ அமைப்பை உருவாக்கினார்கள். அதுவும்கூட இந்தியாவுக்குள் கட்டப்பட்ட ராணுவ அணிகள் கிடையாது. பிரிட்டானியர்களின் ஐரோப்பிய எதிரிகளோடு இணைந்து நடத்த நினைத்த போர்தான்.
 

விடுதலைக்குப் பிந்திய இந்தியாவிலும்கூட போரியல் என்பது ஒரு கருத்தியல் வடிவமாக ஒன்றிணைக்கப்படவில்லை. வெவ்வேறு மொழிசார் இனங்களாகப் பிளவுபட்ட ஒரு பெரும்பரப்பை ஒற்றைநாடாக ஆக்கியதும், அதனை ஒரே அரசால் ஆளமுடியும் என்ற நம்பிக்கையையும் பிரிட்டானியர்கள் உருவாக்கிவிட்டுப் போய்விட்டார்கள். போகும்போது சிக்கலான நிலப்பரப்புகளைத் தனித் தேசங்களாகப் பிரித்துவிட்டுப் போனார்கள். என்றாலும் இனப்பிரச்சினைகள் இந்தியாவில் இல்லாமல் இல்லை. அதனை முன்னெடுக்கும் சக்திகள் போர்வடிவங்களைக் கருவியாக நினைப்பதில்லை. அப்படி நினைப்பது நிகழ்காலத்தின் தேவையாக இருக்க முடியுமா? என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டின் கடைசிக் காலகட்டங்கள் போரியலின் தன்மையையும் மையத்தையும் அர்த்தமிழக்கச் செய்துவிட்டன. இன்றைய போர்கள் ஆயுதங்களால் மட்டுமே நடப்பதில்லை என்பது உறுதியாகிவிட்டன. உலகநாடுகளின் சதிப்பின்னணிகளின் கண்ணிகளால் ஒவ்வொரு நாட்டின் விடுதலைப்போராட்டங்களும் திசைதிருப்பப்படுகின்றன. ஆயுத உற்பத்தி நாடுகளின் வியாபாரத்திற்காகவே தேசிய இனப்போர்களும், வட்டாரப் போர்களும் நடக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் இந்தியமொழிகளில் போரியல் இலக்கியப் பதிவுகள் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.



தமிழகத்தின் நதிக்கரையோர எழுத்துக்களே ( வைகை நதிக்கரை , தாமிரபரணி நதிக்கரை மற்றும் காவிரி ஆற்று நதிக்கரையோர எழுத்துக்கள் ) அதிகம் தமிழ் இலக்கியப்பரப்பில் உலா வந்தன என்று அண்மையில் படித்திருக்கின்றேன். இது பற்றிய உங்கள் பார்வைதான் என்ன ?

தாமிரபரணிக் கரையும் காவிரிக்கரையும் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் எழுதிப் போட்டிபோட்டுப் பதிவுசெய்தன. வைகைக் கரையின் பதிவுகள் அந்த அளவுக்கு அதிகமாக உள்ளன என்று சொல்லமுடியாது. வேளாண்மை சார்ந்த வாழ்க்கைக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளும் மதிப்பீடுகளின் சரிவும் பதிவுசெய்யப்பட்டன. அதிகம் பதிவுசெய்யப்பட்ட வாழ்க்கை பிராமணர்களின் வாழ்வு தான். தொடர்ச்சியாக நதிக்கரை வாழ்வைத் தொடரமுடியாத நிலையையும் படிப்பு, வேலை காரணமாக நதிக்கரையோரங்களிலிருந்து அவர்களின் நகரங்களை நோக்கிய நகர்வுகள் எழுத்துக்களாகப் பதிவுசெய்யப்பட்டன. அப்பதிவுகளின் காலம் 1970-களோடு முடிந்துவிட்டது. ஆனால் எழுபதுகளுக்குப்பின் இந்தியாவில் நிகழ்ந்த நகர்மயமாதலும் கனரக தொழில் துறை மாற்றங்களும் வட்டாரத்தன்மையோடு பதிவாகத் தொடங்கின. அதனைத் தொடங்கி வைத்தவர்களாக நான் நினைப்பது ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, சா. கந்தசாமி. பூமணி, சிவகாமி போன்றவர்கள். தமிழகத்தின் புஞ்சைக்காடுகளும் தீப்பெட்டிவாசனையும் வடமாவட்டங்களின் வறுமைக்கிராமங்களும் அதிகமாக பதிவுசெய்யப்பட்டன. கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் சாதிய முரண்களும், நகரவாழ்வின் சிக்கல்களும், பெண்களின் இருப்பும் தொடர்ச்சியாகப் பதிவுகளாகத் தொடங்கியபோது நதிக்கரைகளெல்லாம் காணாமல் போய்விட்டன.


ஆனால், கடந்த 10 ஆண்டுகளின் இலக்கியங்கள் என்பது முழுமையாகத் தனிமனிதச் சிக்கலையும் அடையாளத்தையும் இருப்பையும் பற்றிய எழுத்துகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. முந்திய தலைமுறை சமூகத்தின் இருப்பையும் இயக்கத்தையும் உணர்ந்த, அரசியல் தளத்தில் பொருத்திக் காட்டிய எழுத்துக்களைத் தந்தவர்களாக இருந்தார்கள். இப்போது எழுதுபவர்கள் இந்தத் தளத்திற்கு நுழைய நினைத்தால் உலகமயமாக்கலுக்குப் பிந்திய வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதல் இப்போது குறைவாகவே இருக்கிறது என்றுதான் சொல்வேன்.


ஓர் இலக்கியத்துக்கு கோட்பாடுகள் அல்லது சித்தாந்தங்கள் முக்கியமானவை என்று எண்ணுகின்றீர்களா இல்லை அது எடுத்துக்கொண்ட கதைக்களமும் கதைமாந்தர்களும் போதுமானவை என்று எண்ணுகின்றீர்களா ?


இலக்கியத்திற்கு முதலில் தேவை இலக்கியத்தின் அடிப்படைகள் தான். அந்த அடிப்படைகளில் முக்கியமானது கதைக்களமும் கதைமாந்தர்களும் மட்டுமல்ல. காலப்பின்னணியும் தான். இந்த அடிப்படைகள் அந்தரத்தில் தனியாக அலைவன அல்ல. இம்மூன்றையும் தக்க சொல்முறையில் எழுதும் போது எழுதுபவரின் நோக்கமும் சார்பும் மனிதத்தன்னிலையின் அடையாளங்களும் வாழ்க்கை பற்றிய நிலைபாடும் இயைந்து உருவாவதுதான் எழுத்து. அந்த எழுத்து அதற்கான கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே இருக்கும். அந்தக் கோட்பாடு வெளியில் இருக்கும் அரசியல் கோட்பாடல்ல. படைப்புக்கான கோட்பாடு, படைப்புக்குள்ளேயே உருவாக்கப்படுவதுதான்.


பொதுவாகவே பெரிய பிரபல படைப்பாளிகள் எல்லோரும் எழுத்து என்பது ஓர் தியானம் என்றும், அகமனம் ஓர் மையப்புள்ளியில் ஒன்றி இருந்தாலே எழுத்து வசப்படும் என்று சொல்கின்றார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் ?



தியானம், அகமனம் என்ற சொற்களைச் சமய நம்பிக்கையோடும் ஆன்மீகமான சொல்லாடல்களாகவும் நான் புரிந்துகொள்ளவில்லை. எழுதத் தேவையான தரவுகளைக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளாமல் மனப்பதிவுகளாக வரிசைப்படுத்திக் கொள்வதும் முன்வைப்பதும் தான் எழுத்துக்கான தியானம்; அகமனக்கோர்வை என்பதெல்லாம். அதே நேரத்தில் இன்று கையால் எழுதும் முறையைக் கைவிட்டுவிட்டுக் கணினித்திரையில் எழுதும் நிலைக்கு நகர்ந்துவிட்ட பின்பு இந்தத்தியானம், அகமனம் போன்ற சொற்கள் கூட அர்த்தமிழந்துவிட்டன. தட்டச்சுச் செய்வதும், பின் தள்ளி வைத்துக்கொள்வதும், இடையீட்டு முறையில் மாற்றுவதுமென எழுதும் முறைப் பலவாறாக மாறிவிட்டது.

ஆனால் மனித மூளையென்பது நீங்கள் சொல்கின்ற நவீன முறைகளில் இயங்குவதில்லையே ? அதற்கு சிந்தனை என்ற ஒன்று தேவைப்படுகின்றது அல்லவா ?

சிந்தனை தேவைதான். சிந்தனை என்பதே மாற்றத்தை ஏற்பதுதான். நவீன மூளையாக மாறும்போது நவீனமுறைகளோடு இயைந்துவிடும். மூளைமட்டும் மாறாது என்று சொல்லமுடியுமா?..



ரோப்பாவில் இருக்கும் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை ஆசிய சமூகம் குறிப்பாக தமிழக மக்கள் எப்படிப் பார்க்கின்றார்கள் ?

எல்லாவகையான சுதந்திரமும் நமக்குக் கிடைக்காதவரை விரும்பத்தக்கதான தோற்றத்தை உண்டாக்கும். ஆனால் நாம் அதற்குள் இருக்கும்போது அதன் எதிர்மறைத் தன்மை தூக்கலாகிவிடும். ஒருவரையொருவர் சார்ந்து வாழும் வாழ்க்கையை முன்னிறுத்தும் ஆசியச் சமூகம்/ இந்தியச் சமூகம் உருவாக்கி வைத்துள்ள குடும்ப அமைப்பின் இறுக்கமும், தனியடையாளங்களை மறுதலிக்கும் போக்கும் தேவையற்றவை என்று தோற்றம் கொண்டன. சடங்கு, நம்பிக்கை, வழிபாடு எனச் சமய நடவடிக்கை சார்ந்து பெண்களைக் கட்டுப்படுத்தும் ஆசியச் சமூகங்களின் வாழ்க்கைக்கு எதிராகப் பெண்கள் குரல் கொடுக்க ஐரோப்பாவையே நாடவேண்டும். அதே நேரத்தில் ஐரோப்பாவில் பெருகும் மணவிலக்குகளும் தனித்து உலவும் முதியோர் பிரச்சினையும் ஆசியச் சமூகங்களின் பால் ஒரு ஈர்ப்பையும் உண்டாக்குவதை மறுப்பதற்கில்லை.

கலப்புத்திருமணம், சாதிமறுப்புத்திருமணம் என அரசியல் சொல்லாடலோடு முன்வைக்கப்பட்ட புதுவகைத் திருமணமுறையை அவ்வளவாக நாடிச்செல்வதில் அதிகம் நாட்டம் காட்டாத தமிழர்கள்/ இந்தியர்கள் தன்னெழுச்சியான மாற்றக்காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. குறிப்பாக உலகமயப்பொருளாதார உறவுகளால் பணவரவு பெற்றுள்ள குடும்பங்கள் அகமண முறையையும் குலக்குறி அடையாளத்தை வைத்துத் திருமணங்களைக் கட்டியெழுப்பும் உறவுகளையும் தளர்த்தத் தொடங்கிவிட்டன. சாதிக்குள்ளிருக்கும் பிரதேச அடையாளத்தைத் தாண்டிய- குலக்குறிகளை உதறிய- திருமணங்கள் தானாகவே நடக்கின்றன. இதன் மறுதலையாக மணவிலக்கு வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கின்றன.


ஐரோப்பாவில் பெருகும் மணவிலக்குகளும் தனித்து உலவும் முதியோர் பிரச்சினையும் ஆசியச் சமூகங்களின் பால் ஒரு ஈர்ப்பையும் உண்டாக்குவதாக சொல்கின்றீர்கள் ஆனால் ஆசிய சமூகங்களிலும் இதே பிரச்சனைகள் சமகாலத்தில் மலிந்து காணப்படுகின்றனவே ?

ஆசிய சமூகங்கள், ஐரோப்பியர்கள் கடந்து வந்துவிட்ட காலகட்டத்திற்குள் இப்போதுதான் நுழைகிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்ததுபோல அவ்வளவு நீண்ட காலம் அங்கேயே தங்கியிருக்கமுடியாது. எல்லாவகையான தகவல் தொடர்புகளும் ஏற்படுத்தும் உடனடித் தாக்கத்தினால் விரைவாக உருட்டிச் செல்லப்படும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன.
 
மேற்குலக நாடுகளில் ஓரின சேர்கையாளர்களது திருமண உறவு மற்றும் சமூக அந்தஸ்த்துகள் சட்டவாக்கம் பெற்று இருக்கின்றன ஆனால் இந்தியாவில் இது பற்றிய பார்வை எப்படி இருக்கின்றது ?

இப்போதுதான் பேச்சளவில் இருக்கின்றன. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலைகளை ஏற்றுக் கொண்டுவிட்ட இந்திய அரசியல் கட்சிகள் தங்களின் அடிப்படையான கருத்துநிலையோடு இவை முரண்பட்டவை என்றாலும் அவற்றைச் சட்டமாக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன. அரசதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.விற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் இவையெல்லாம் உவப்பானவையல்ல என்பது வெளிப்படையானது. ஆனால் சர்வதேச சமூகத்தின் நெருக்கடியால் இவற்றைச் சட்டமாக்குவதிலிருந்து பின்வாங்க முடியாது என்பதும் உண்மை.
வக்கிரமான பாலியல் புனைவுகளாலும் ஓரினச்சேர்க்கையினாலும் உருவாக்கப்பட்ட இந்துத்துவாவின் புராணக்கதைகள் இருக்கும்பொழுது எப்படி சமகால அரசு இதனை மறுதலிக்கும் ?

இந்துத்துவம் அன்றாட வாழ்நிலையிலிருந்து கலை, இலக்கியங்கள், கதைகள் போன்றவற்றை விலக்கிவைத்துப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தக் கூடியது. உருவாக்கப்பட்ட பாலியல் புனைவுகளும், ஓரினச்சேர்க்கைச் சித்திரிப்புகளும் பின்பற்றுவதற்கானவையல்ல; விலக்கவேண்டிய எச்சரிக்கைக்கானவையென வியாக்யானங்களைத் தரும்.

இப்பொழுது உள்ள தீவிர இந்துத்துவா சிந்தனைகளை கொண்ட அரசையும், பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும் இன்றுவரை சாதீயக்கொடுமைகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களையும் ஓர் இலக்கியவாதி என்ற வகையில் எவ்வாறு நோக்குகின்றீர்கள் ?

இருப்பதை மாற்றவேண்டுமென நினைப்பவர்கள் நடப்புவாழ்க்கையில் தங்களுக்கும், தன்னையொத்த சமூகக் குழுக்களுக்கும் பல உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களே நடைமுறை வாழ்க்கையைப் புரிந்துகொண்டவர்கள். அந்த மாற்றம் சில குழுக்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் தடுக்கவும் கூடும். அப்போது அவர்கள் அதை எதிர்ப்பார்கள். அம்பேத்கரால் வரையறை செய்து எழுதப்பெற்ற அரசியலமைப்புச் சட்டமும் அதன் நடைமுறைப்பயன்பாடும் இருந்த சாதியமைப்பைத் தளர்ச்சியடையச் செய்து இல்லாமலாக்கும் நோக்கம் கொண்டது. அதன் தொடக்க நிலையிலேயே அதனை எதிர்த்தவர்களின் குரல்களும் இருந்தன. பண்டித நேரு போன்றவர்களின் பிடிவாதத்தால் எதிர்ப்புக்குரல்கள் பின் வாங்கியிருந்தன. ஆனால் இப்போது பின் வாங்கிய சக்திகளின் வாரிசுகளிடம் அரசதிகாரம் சென்று சேர்ந்துள்ளது. விளைவுகள் கடுமையாகவே இருக்கும். சாதியவாதமும் முரண்களும் கொலைகளும் தலைதூக்குவதைத் தடுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தச் சிக்கல்கள் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையானவை என்பதை உணர்ந்து மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புகளுமுண்டு. சாதீயவாதம் ஒழியாமல், சாதியப்படிநிலைகளால் கிடைக்காமல் போன உரிமைகளையும் சலுகைகளையும் இனியும் கிடைக்காமல் தள்ளிப்போட முடியாது. வியர்வை சிந்தி உழைக்காத மனிதர்கள் இந்தியாவில் இருக்க முடியும். அதேநேரத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்பதற்காக அவர்களுக்கு வியர்வை வழிவதிலிருந்து விலக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் நீண்டகாலத்திற்கு நிற்காது.

தொடர்பாடலின் அதீத வளர்ச்சியால் பல சமூக வலைத்தளங்களும் கருத்துக்களங்களும் இன்று எம்மிடையே வந்திருக்கின்றன .இந்த ஊடகங்களின் அதீத வளர்ச்சியினால் தமிழ் இலக்கியப்பரப்பு பாதிப்படைந்து இருக்கின்றதா ?


சமூக வலைத்தளங்கள், புதுவகை ஊடகங்கள் எல்லாம் காலத்தின் தேவையாக வெவ்வேறு காரணங்களுக்காக உருவாகின்றன. அவற்றால் இலக்கியப்பரப்பு பாதிப்படையும் என்று நினைக்கவில்லை. அவற்றின் வரவால் புதுவகை இலக்கிய வடிவங்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு என்பதால் அவற்றை வரவேற்கவும் பயன்படுத்திக்கொள்ளவும் தயாராக வேண்டும்.

தமிழ் இலக்கிய பரப்பில் சிற்றிதழ்களின் பங்களிப்பு ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக கருதுகின்றீர்களா ?

ஆரோக்கியமான நிலை என்பதற்கான வரையறைகள் எதுவும் இல்லை. தமிழில் ஆரம்பிக்கப்பட்ட சிற்றிதழ்கள் ஒவ்வொன்றிற்கும் ஆரம்ப நோக்கம் ஒன்று இருக்கும். அதனை நிறைவேற்றத்தக்க குழுவொன்று உருவாகும். அக்குழு தனது நோக்கத்திலிருந்து பெருமளவு விலகாமல் நடத்துவார்கள். விலக நேரிடும்போது நிறுத்திவிடுவார்கள். இன்னொரு நோக்கம் தோன்றும்போது திரும்பவும் ஆரம்பிப்பார்கள். அதற்குப் புதிய குழுக்கள் உருவாகும். இதுதான் இதுவரையிலான சிற்றிதழ்களின் வரலாறு. ஆனால் கட்சி, இயக்கம் சார்பில் ஆரம்பிக்கப்படும் சிற்றிதழ்களுக்கு இது பொருந்தாது. ஆனால் 2000-க்குப் பின்னர் தோன்றிய இடைநிலை இதழ்கள் முழுமையான கட்டமைப்போடும் விளம்பரத்தொகைகளைக் கொண்டும் பதிப்பக நலனுக்காகவும் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்துவது குற்றச்செயலல்ல; காலம் அப்படியான நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.

ஆனால் இந்த இடைநிலை இதழ்கள் அல்லது வணிக சிற்றிதழ்கள்தானே அதிகளவிலான வீச்சுக்களைப்பெறுகின்றன ?



வாசிப்பவர்களை அடைவதும் வாசிப்பதும் விவாதிப்பதும் தான் அதிக வீச்சுகளை எட்டுபவை. இத்தொடர் நிகழ்வுகளுக்கு உதவும் வகையில் வணிகக் கட்டமைப்பும் தேவை. அதனை முற்றிலும் எதிர்மனநிலையில் பார்த்தால் வீச்சையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. அதனால் கால் நூற்றாண்டுக்கு முந்திய சிற்றிதழ் மனோபாவத்தோடு எல்லாவற்றையும் வரையறுக்கும் நிலைபாடு எனக்கு உடன்பாடில்லை.

நவீன தமிழ் இலக்கியத்தில் இன்றுவரைக்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய படைப்பாளி என்று யாரை உங்களால் இனம்காட்ட முடிகின்றது ?
ஒருவரை மட்டுமே சொல்ல வேண்டுமென்றால் சி.சுப்பிரமண்ய பாரதிதான். கவிதையில் சி.சுப்பிரமணிய பாரதி என்றால் சிறுகதைகளில் புதுமைப்பித்தன். சிறுகதை நாவல் என்ற இரண்டிலும் தன்னை இருத்திவிட்டுப் போயிருப்பவர் ஜெயகாந்தன் என்றே சொல்ல விரும்புகிறேன்.

3

தமிழ்த்தேசியம் மற்றும் ஈழத்தமிழரது தாயக விடுதலைப்போராட்டம் தொர்பாக உங்கள் புரிதல்கள் எப்படி இருக்கின்றன ?

1983 முதல் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கவனித்து வருகிறேன். அப்போது நான் மாணவன். தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டுக் கிளர்ந்தெழுந்த தமிழகம் தழுவிய போராட்டங்களில் கலந்துகொண்டவன். பெரிய அரசியலறிவு அற்ற காலத்திற்குப் பிறகு பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்திடமிருந்து விடுதலைபெற விரும்பும் தமிழ்ச் சிறுபான்மையின் தனி நாடு கோரிக்கை நியாயமற்றதல்ல என்று புரிந்துகொண்டும் ஆதரவு மனநிலையைக் கொண்டிருந்தேன்.

ஈழத்தமிழர்களை அப்படியொரு நெருக்கடிக்குள் தள்ளிய வரலாறுகளை நானறிவேன். ஈழப் போராட்டம் பண்பாட்டு அடையாளங்களின் காரணமாக உருவான போராட்டம். அதன் பின்னணியில் பொருளாதார நலன்கள் இல்லையென்று சொல்ல முடியாது. பொருளாதார நலன்கள் தான் முதன்மையென்றால் சிங்கள உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து வர்க்கப்போராட்டமாக நடத்தியிருக்கவேண்டும். இது மொழியை அடையாளமாக முதன்மைப்படுத்தி நடந்த போராட்டம். அப்போராட்டமுறையாக, ஆயுதப் போராட்டத்தைத் தேர்வுசெய்வதற்கான நெருக்கடிகளை அரசுதான் உருவாக்கியது. பின்னர், மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட விடுதலைப் போராட்டமாக இல்லாமல் மதம் மற்றும் பிரதேச அடிப்படைகளைக் கொண்ட போராட்டமாக மாறியதை - மாற்றியதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பல்வேறு குழுக்கள் உருவானதற்கும், யார் விடுதலையை அடையும் முக்கியக்குழு என்ற முனைப்பில் நடந்த அழித்தொழிப்புகளுக்கும் காரணங்களை வெளியிலிருந்து சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இவைதான் ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பற்றிய பார்வையைப் பலருக்கும் மாற்றியது. எனக்குள்ளும் மாறுபட்ட கருத்துகள் உருவானது. தமிழ்நாட்டின் இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்காத - பேசவே தயாரில்லாத பலர் தனி ஈழக்கோரிக்கையை ஆதரித்துப் பேசியபோது சந்தேகங்கள் பல உருவாகின.

ஒரு நாட்டிற்கான விடுதலையை இன்னொரு நாட்டின் உதவியுடன் அடைய முடியும் என்ற நம்பிக்கை சிக்கலானது. தேசிய இனங்களின் உரிமை, தனித்துவம், மொழிசார் பண்பாடு என்பதை ஏற்காத இந்திய/ மத்திய அரசுகளின் துணையுடன் தனிநாடும் விடுதலையும் பெற முடியும் என்று நம்பியதை நான் விமரிசனப் பார்வையோடுதான் கவனித்து வந்துள்ளேன். இந்தியப்பிரதமராயிருந்த ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகள் மீது எனக்குக் கடும் விமரிசனங்கள் இருந்தன. அத்தோடு தமிழ் மொழி பேசிய இஸ்லாமியர்களும், மலையகத்தமிழர்களும் இந்த விடுதலைப் போராட்டத்தைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தார்கள் என்பதும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தன. அவர்களிடம் நம்பிக்கையை ஊட்டவேண்டும் என்ற முயற்சிகள் இருந்ததாகத் தெரியவில்லை. நான் படித்துத் தெரிந்துகொண்டதோடு அங்கிருந்து வருபவர்களோடு நடத்திய உரையாடல்கள் எல்லாம் திருப்தி அளித்தவை அல்ல. எப்போதும் சந்தேகத்தை எழுப்புவனவாக இருந்தன. 2000 -க்குப் பிறகான ஈழப்போராட்டங்கள் மீது எதிர்மறைக் கருத்துகளே உருவாகி வளர்ந்தன. ஒரு தேசத்தை இவ்வளவு காலம் போருக்குள் தள்ளிய இயக்கத்தின் மீது எரிச்சல் கூடத்தோன்றியதுண்டு. என்றாலும் நாம் இன்னொரு நாட்டின் மனிதன். அதில் நுழைந்து கருத்து சொல்லும்-எதிர்ப்பைக் காட்டும்- தேவை நமக்கில்லை என்ற விலகல் மனப்பான்மை தான் என்னுடையதாக இருந்தது.


எமது விடுதலைப்போராட்டமானது இனவழிப்பும் அதன்தொடராக வந்த பேரினவாத சித்தாந்தங்களின் அழுத்தங்களினால் உருவாகியதாக வரலாறு பதியப்பட்டிருக்க, மதம் மற்றும் பிரதேச அடிப்படைகளைக் கொண்ட போராட்டமாக மாறியது என்று எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள் ?

தமிழ் மொழி பேசும் இஸ்லாமியர்களும், மலையகத்தமிழர்களும் இந்த விடுதலைப் போராட்டத்தைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தார்கள்; இப்போதும் பார்க்கிறார்கள் என்பதை மறுத்துவிடவும் மறந்துவிடவும் முடியுமா? போராட்டக் களத்தில் இணைந்து நின்றவர்களிடம் கூட வடக்கு - கிழக்கு மாவட்ட உணர்வுகள் தலை தூக்கியதை இல்லையென்று சொல்ல முடியுமா?

உங்களுடைய எழுத்துத்துறையில் ஆதர்சங்கள் என்று யாராவது இருந்திருக்கின்றார்களா ?


ஜெயகாந்தனின் புனைவெழுத்துகளும் அ- புனைவுகளும் எப்போதும் ஈர்ப்பவை. அவருடைய அ- புனைவுகளைப் போலப் பலவற்றை எழுதவேண்டுமென்ற ஆசை எனக்குண்டு.

புலம்பெயர் இலக்கியம் பற்றய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது ?

தமிழின் இருப்பைச் சர்வதேசப் பரப்பிற்குள் அதன் அடையாளத்தோடு கொண்டு சேர்த்துள்ளன. போரின் வழி தமிழர்களின் இழப்பின் அளவு சொல்லத்தக்கதல்ல. அதன் மறுதலையாக இலக்கியமாக - போரிலக்கியமாகவும் புலம்பெயர் இலக்கியமாகவும் தமிழ் பெற்றுக்கொண்டதும் பெரிய அளவினது. அவை சர்வதேசத்துக்கான மொழியில் பெயர்க்கப்படும்போது இலக்கியமாக அவை ஆற்றும் பங்களிப்பு பல பரிமாணங்களைக் கொண்டதாக அமையும். உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி, ஆயுதப்போராட்டங்கள் சாதிக்காத - பெற்றுத்தராத விடுதலையைக் கூடச் சாத்தியமாக்கக் கூடும்.
 
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழ் இலக்கியம் ஏற்படுத்திய அதிர்வுகள் உங்கள் பார்வையில் எப்படி இருக்கின்றது ?

முதுகலை படிக்கும்போது இலங்கையை ஒரு திறனாய்வின் பிரதேசமாக நினைத்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர்களான க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ. நுஃமான், சிவசேகரம், தளையசிங்கம், டொமினிக் ஜீவா எனப்பலரும் உருவாக்கிய சித்திரம் அது. செங்கை ஆழியான், டேனியல் போன்றவர்களின் புனைகதைகள வாசித்திருக்கிறேன். அவை தமிழ்நாட்டின் இன்னொரு பிரதேசப் புனைவுகளாகவே எனக்குள் பதிந்தன. பின்னர் போர்க்கால இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கம் முற்றிலும் வேறானவை. அதைப்பற்றி முன்பே சொல்லிவிட்டேன். தமிழ் இலக்கியப்போக்கையும் வரலாற்றையும் எழுதும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பெற்றால், கடந்த கால் நூற்றாண்டு வரலாற்றில் செம்பாதி இடத்தை ஈழத்தமிழ் இலக்கியத்திற்கே வழங்குவேன்.

அண்மைக்காலத்து ஈழத்து இலக்கியங்கள் அரசியல் நெடிகள் அதிகம் நிறைந்து இருப்பதால் அவை பன்முகப்படுத்தப்பட்ட இலக்கியத்தரத்தை காணுவதற்கு தவறிவிட்டன என்ற காட்டமான விமர்சனம் உண்டு. இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

ஒரு மொழியின் இலக்கியப்பரப்பில் பன்முகத்தையின் தேவை பற்றிக் கேட்டால் அதன் தேவையை வலியுறுத்தவே செய்வேன். ஆனால் பெருந்தொகையான மக்களைப் பலிகொடுத்துவிட்டுப் பெரும் யுத்தத்தில் நிர்க்கதியாக நிற்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது உள்ளுக்குள்ளிருந்து வரும் விமரிசனமாகவே இருக்க முடியும். என்னைப் போல வெளியிலிருந்து விடுதலைப்போராட்டத்தைப் பார்த்தவர்கள் இப்படியெல்லாம் கருத்துச்சொல்ல அருகதையற்றவர்கள்.

ஈழத்தமிழராகிய எங்கள் போராட்ட வலிகளிலும் வாழ்வியலிலும் எதுவித சம்பந்தமுமே இல்லாத தென் இந்திய சினிமா இயக்குனர்களால், எமது வாழ்வும் வலிகளும் திரைப்படமாக்கப்படும் பொழுது அதன் சுயம் அல்லது உண்மைத்தன்மை காயடிப்பது பற்றி எங்களுடையே காட்டமான விமர்சனம் ஒன்று உண்டு. இந்த விமர்சனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?


நியாயமானது என்றே ஏற்பேன். பக்கத்துவீட்டுக்காரனின் பார்வையோடு எடுக்கப்படுகிறது. பக்கத்துவீட்டுக்காரர்களின் இரக்கப்பார்வைகூட இல்லை அதில். ஒன்று கிளர்ச்சியடைந்து கைதட்டும் மனோபாவமாக இருக்கிறது. இல்லையென்றால் ஆலோசனை சொல்லும் மேதைமைத்தனமாக இருக்கிறது.


மில்லேனியத்தின் பின்னரான உலமயமாக்கலின் அசுர வேகம் மனித வாழ்வியலை அடியோடு மாற்றியிருக்கின்றது. இதை நீங்கள் எப்படிப்பார்க்கின்றீர்கள் ?


அடியோடு மாறச்சொல்கிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் ஆசிய சமூகங்களின் கீழ்த்திசை வாழ்வும், மன அமைப்பும் அவ்வளவு சுலபமாக மாறிவிடக்கூடியன அல்ல. நின்று நிதானமாகத் திரும்பித்திரும்பிப் பார்த்துவிட்டு நகரும் பூனைக்குட்டியைப் போன்றது இந்திய வாழ்க்கைமுறை. இந்துமதத்தின் சமூக அடித்தளத்தின் மேல் தனது தன்னிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களும் இலங்கையர்களும் அவ்வளவு சுலபமாக உலகமயத்தோடு ஒட்ட ஒழுகிவிடுபவர்களல்ல.


அண்மையில் இந்தியாவில் இருந்த பெரும் படைப்பாளிகள் தங்களுக்கு கிடைத்த அதி உயர் விருதுகளை எல்லாம் திருப்பி ஒப்படைத்து இருக்கின்றார்கள் இதைப்பற்றிய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது ?

விருது திருப்பியளித்தல் என்பது எதிர்ப்புணர்வின் அடையாளம். சாகித்திய/ ஞானபீட/ பத்ம விருதுகளைத் திரும்பக் கொடுத்தல் இப்போதிருக்கும் அரசை ஆட்சியதிகாரத்திலிருந்து நீக்கும் நோக்கம் கொண்டதல்ல. கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் எப்போதும் பண்பாட்டரசியலில் கவனம் செலுத்துபவர்கள். இப்போதுள்ள அரசின் பண்பாட்டு நடவடிக்கைகளும் கொள்கைகளும் தங்களுக்கு உவப்பானவையல்ல என நினைக்கிறார்கள். இந்துமதத்தின் தோற்றம் இந்த நிலப்பரப்பில் உருவானது என்றாலும் அதன் பகுதியாகவே மாற்றுக்கருத்துகளையும் சிந்தனைப்போக்குகளையும் உள்வாங்கிய - உடன் வாழ அனுமதித்த வரலாறு இந்தியாவிற்கு உண்டு என்ற எனது நம்பிக்கை தவறானது என்று சொல்ல முடியாது.
 
மதச்சார்பின்மை அல்லது சகிப்புத்தன்மை என்பது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கம் உருவாக்கித் தந்த கருத்தல்ல. வைதீக இந்துமத உருவாக்கத்தின் சமகாலத்திலேயே சமணம், பௌத்தம் போன்றன வைதீகத்தைக் கேள்விக்குள்ளாக்கிய கருத்தோட்டங்கள் கொண்டவை. தென்னிந்தியாவில் வைதீகத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களின் வாழ்நிலையைக் காட்டும் திணைவழி வாழ்க்கை முறை இருந்துள்ளது என்பதைத் தமிழின் திணைக்கவிதைகள் சொல்கின்றன. அதிலிருந்து உருவான வாழ்க்கை முறையே திராவிட மொழிகளின் செல்வாக்குப்பெற்ற தென்னிந்தியாவின் சமயவாழ்வு. 

வைதீக இந்து சமயத்தின் பிரிவுகளாகச் சொல்லப்படும் அறுசமயங்களும் வெவ்வேறு கருத்தியலையும் சடங்குகளையும் கொண்டாட்டங்களையும் கொண்டவை. சார்வாகம், நியாயவைசேடிகம், ஆசிவகம் போன்ற வைதீக சமயத்தை நிராகரிக்க முயன்றவை. சைவத்தின் பிரிவாகத்தோன்ற வீரசைவம் தனித்த வாழ்முறையைக் கன்னட தேசத்தில் உண்டாக்கிய வரலாறு உண்டு. வைணவத்தைச் சூழலோடு பொருத்தி வேறுபாடுகளைக் களைய முற்பட்ட இராமானுசர் போன்றவர்கள் இங்கு தோன்றியவர்கள். எனவே இசுலாமியமும் கிறித்துவமும் இங்கு வருவதற்கு முன்பே பன்மைத்துவப் பண்பாடு இந்தியாவின் அடையாளம். அதனைத் தொலைப்பது சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் எனக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் நினைக்கிறார்கள். அந்த நினைப்பைச் சொல்ல தங்களிடம் இருக்கும் வழியாக/ கருவியாகவே விருதுகளைத் திருப்பித்தரும் நிகழ்வைக் கையிலெடுத்தார்கள். விருதுகளை மறுதளித்தல் அல்லது திருப்பித் தருதல் உலகம் முழுவதும் எதிர்ப்பின் அடையாளமாக இருந்துள்ளது. இதனோடு உடன்படுகிறவன் நான். ஆனால் இதில் உடன்பாடில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தித் திருப்பித் தரும்படி வலியுறுத்துவதையும் நான் கண்டிப்பேன்.

இறுதியாக இன்றைய பல எழுத்தாளர்களும் சரி திறனாய்வாளர்களும் சரி தங்கள் சொற்களை பொதுவெளியில் கூறியதற்கு விசுவாசமாக இல்லது பின்னர் அவற்றை தங்கள் சொந்தவாழ்வில் அநாதரவாக கைவிட்டுள்ளார்கள் என்ற ஓர் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது இதை எப்படி நீங்கள் பார்க்கின்றீர்கள் ?

பொதுவெளி அடையாளமும் தனிமனித அந்தரங்கமும் எப்போதும் எதிரெதிர்ப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியன. இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பவர்கள் மகான்கள். எழுத்தாளர்கள் மகான்களா ? தெரியவில்லை. மகான்களாக அறியப்பட்டவர்களின் அந்தரங்க வாழ்வுகளே, அவர்களின் மறைவுக்குப் பின்னர் விமரிசனங்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எழுத்தாளர்களும் மனிதர்கள் தானே? மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று ஜி.நாகராஜன் சொன்னதைத் திரும்பச் சொல்ல வேண்டும்


நன்றி. முகடு/பிரான்ஸ் நாட்டில்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்