கதைகளில் அலைந்துகொண்டிருக்கும் ஜி.நாகராஜனின் அந்திமக்காலம்
கபாடபுரம் இணைய இதழில் சி.மோகன் எழுதிய “விலகிய கால்கள்” என்ற கதையைப் படித்ததும் அக்கதையின்
மையமாக இருக்கும் ராஜன், எழுத்தாளர் ஜி.நாகராஜன் என்பது தெரிந்தது.
சிறுபத்திரிகை வாசித்து வளர்ந்த பலருக்கும் ஜி.நாகராஜன் பற்றிய செய்திகள்
மேகமூட்டம்போலத் தெரிந்த ஒன்றுதான். 50 வயதைத் தாண்டிய 20
வயதிலேயே இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு காட்டிய மதுரைக்காரர்கள்
அவரைச் சந்தித்திருக்கவும் கூடும். நான் அவரோடு நேரடியாகப் பேசியவனில்லை. ஆனால்
பார்த்திருக்கிறேன். இந்தக் கதையில் விவரிக்கப்படும் நிலையிலேயே அவரைப்
பார்த்திருக்கிறேன். விலகி நின்றிருக்கிறேன்.
எல்லா மனிதர்களையும்போலத் தன் குடும்பம்,
தன்மனைவி, தன் அடையாளம் என வாழ்க்கையை
நடத்தாமல்/ நடத்தவிரும்பாமல் விலகிய பயணத்தைத் தேர்ந்தெடுத்த ஜி.நாகராஜனின்
கடைசிக்கால வாழ்க்கை முறை பலருக்கும் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. கதையாக
ஆக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆக்கியிருக்கிறார்கள்.
சி.மோகனின் கதைக்கும் முன்பே நான்கைந்து கதைகளை வாசித்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும்
வெளியூர்வாசிகள். பாண்டிச்சேரிக்குப் போன ஜி.நாகராஜனைத் தற்செயலாகப் பார்த்துப் பிரபஞ்சன் தனது கதைக்குள் எழுதிக் காட்டியிருக்கிறார்.
தன்னைப் பார்ப்பதற்காகவே நாகர்கோவில் வந்தவரை சுந்தரராமசாமி தனது கதையில்
எழுதியிருக்கிறார். சென்னைக்கு வந்தவரை அசோகமித்திரனும் திலீப்குமாரும்
எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரனும்கூடக் கொஞ்சம் விலகலோடு தான் எழுதிக் காட்டுகிறார்.
ஆனால் திலீப்குமாரின் கதைக்குள் அவரை முழுமையாகப் புரிந்துகொண்ட ஓர் இளைஞனின் பார்வையில் நிறுத்தப்படுவார் ஜி. நாகராஜன். இவர்களெல்லோருமே கதைக்குள் தங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொண்டு கதையைச்
சொல்லியிருப்பார்கள். அவர்களெல்லாம் அவரது வாழ்க்கையைப் போன்றதொரு
வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைத்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள் என்று வாசகர்களுக்கும்
முன்வைக்கவில்லை.
ஜி. நாகராஜன் என்றொரு எழுத்தாளர் இருந்தார்; அவர்
மற்றவர்களைப் போன்ற எழுத்தாளர் அல்லர்; என்னைப்போலவும்கூட அல்ல என்ற தொனி அவற்றில்
உண்டு என்று கூறும் கதைகளையே எழுதிக்காட்டியிருக்கிறார்கள். ஆம் அவை
கதைகள் தான்; வரலாறல்ல. அக்கதைகளிலெல்லாம்
அவர் மட்டுமே உண்மைப்பாத்திரங்கள்.
அல்லது மையப்பாத்திரங்கள். கதைசொல்லிகளாக
வரும் எழுத்தாளர்கள் தங்களை அதிகம் காட்டிக் கொள்ளாத முன்னிலைப் பாத்திரங்கள் மட்டுமே.
அந்தக் கதைகளை
வாசிக்கும்போது ஏற்படுவது இரக்க உணர்வு. இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்பதான இரக்க உணர்வு.
சி.மோகனின் விலகிய கால்கள் கதையிலும் அந்த இரக்க உணர்வை
உண்டாக்க வேண்டுமென்ற விருப்பத்துடன் ஆரம்பிக்கிறது கதை. அதற்காகவே
கதைசொல்லி, தன்னை மூன்றாமிடத்தில் நிறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ராஜனைச் சந்தித்து
அவருக்கு உதவுவதற்கு இரண்டு பாத்திரங்கள் - சிவராமன், மோகன கிருஷ்ணன் வரும்போது அந்த
உணர்வு திசைமாறி விடுகிறது. வாழ்வதற்கான உடல் நலத்தோடு இல்லாத அவரைக் கவனிக்கவோ, உணவு வழங்கவோ பொறுப்பான நபர்கள்
இல்லை. மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் அவரது வாழும் நாட்களை நீட்டிக்க முயலும்
முயற்சியில் தோற்றுப்போகும் நிலையில் மரணம் நிகழ்கிறது. ராஜன் என்ற பெயரால் பாத்திரமாக்கப்பட்டுள்ள
ஜி.நாகராஜனின் மரணமும், அதற்குப் பிறகு அவரது மனைவி உள்படக் குடும்பத்தினர் இறப்புச்
சடங்கைச் சுடுகாட்டில் மட்டும் செய்ய ஒத்துக்கொண்ட செய்தியும் கூடுதல் தகவல்கள்.
குடும்ப
அமைப்பை விட்டு விலகிய கால்களைப் பிணமாகக் கூட வீட்டிற்குள் அனுமதிக்காத அந்தக் குடும்பம் மரணத்தின்
பின்னான சடங்குகளால் அவரோடு பிணைத்துக்கொள்கிறது. இந்த நிகழ்வுகளை வாசிக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து
வரலாற்றுத்தன்மைக்குள் நுழைகிறது சி.மோகனின் எழுத்து. கதையை வரலாற்றுத்தகவல்களோடு இணைத்தாலும், முக்கியமான விவாதமொன்றை முன்வைத்ததன்மூலம்
முக்கியமான எழுத்தாக ஆக்கியிருக்கிறார் சி.மோகன். இதே தன்மையை அவரது நாவலான விந்தைக் கலைஞனின்
உருவச்சித்திரத்திலும் பார்க்கமுடியும். வாழ்ந்து
மறைந்த ஒரு ஓவியக்கலைஞனின் வரலாற்றைப் புனைவாக்கிய அந்தப் புனைகதையின் மையக்கேள்வி
மனித வாழ்வின் இருப்பும் மரணமும் தான். அதிலும் இந்தியச் சூழலில் இந்தக்கேள்விகளுக்கான
விடைகளைச் சொல்லிப் பார்ப்பது நாவலின் விரிவாக இருந்தது. விலகிய கால்கள் கதை அதே கேள்வியை
இன்னொருவிதமாக எழுப்பியிருக்கிறது.
இந்திய மரபிலிருந்து விலகிச் செல்லும் மனிதர்கள் மரணமென்னும் ஆகப்பெரும்
நிகழ்வின் வழியாகத் திரும்பவும் மரபோடு பிணைக்கப்படும் தர்க்கம் இதன் மைய விவாதம்.
ஒருவிதத்தில் அபத்தமாகத் தோன்றக் கூடியது. நவீன இந்திய மனிதனின் வாழ்தல் அல்லது இருப்பு
என்பது அவனது சிந்தனை சார்ந்தது. ஆனால் மரணத்திற்குப் பின்னான அவனது இருப்பு எதனால்
தீர்மானமாகிறது? எப்போதும் சாவு அவனது விருப்பம் சார்ந்த்தாக இருப்பதில்லை. பலரது மரணத்தில் அதைப் பார்க்கமுடியும். தங்கள் சுற்றத்தினரோடு,
உறவினரோடு அவர்கள் கொண்ட உறவு நவீனத்துவ மனம் சார்ந்ததாக இல்லாமல் மரபிற்குள் இருந்து
முடிந்துபோயிருப்பார்கள். எழுத்தில் நவீனமனிதனாகவும்,
வாழ்தலில் மரபின் பிடிமானத்தோடும் முடிந்தவர்களின் கதைகள், அவர்களின் மரணத்திற்குப்பின்
அவர்களிடமிருந்து விலகி நின்று மிதந்துகொண்டிருக்கும். ஜி.நாகராஜன் அப்படி இருக்கவிரும்பாமல்
இருந்து சாவைத் தழுவியவர். ஆனால் அவரது நண்பர்களோ, அவரது விருப்பத்திற்கு மாறாகத் திரும்பவும்
அவரை அவரது குடும்பத்திற்குள் பிணைக்கிறார்கள் என்கிறது கதை.
வாழ்ந்துகொண்டிருந்தபோது
ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினர், ஜி.நாகராஜனுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய ஒத்துக்கொண்டதன்
மூலம் இணைத்துக்கொள்கிறார்கள். ஒருவரின் இறுதிச் சடங்கை எப்படிச் செய்வது என்ற தீர்மானத்தை
ஒருவரைப் புரிந்துகொண்ட நண்பர்களால் எடுக்க முடியாது; அவரை விலக்கிவைத்த - விலகிச்செல்லும்படி
நிர்ப்பந்தம் தந்த குடும்ப உறுப்பினர்கள் தான் எடுக்க முடியும் என்பதும் இந்தியப்பாரம்பரியத்தின்
அழுத்தமான பிடிமானம் எனச் சொல்ல்லாம்
http://www.kapaadapuram.com/?sirukathaigal_velagiya_kaalgal
கருத்துகள்