பல்லக்குத் தூக்கிகள்
காட்சி: 1.
[நான்குபேர் தங்கள் காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தடித்தடியான மரங்கள் அங்குமிங்கும்
கிடக்கின்றன. கிடத்தலில் எதுவும் ஒழுங்கில் இல்லை. நான்கு நபர்களும்கூட ஒழுங்கில் இல்லை. வேலை
செய்தபடியே பேசுகின்றனர். பொருட்கள் இல்லாமல் இருப்பதாகப் பாவனையும் செய்யலாம்.
பின்னணியில்
ரகுபதி ராகவ ராஜாராம் ஒலிக்கிறது.]
இரண்டாமவர் : பல்லக்கு எப்போ தயாராகணுமாம்
முதலாமவர் : மூன்றே நாளில் சப்பரம்போல
பல்லக்கு
நிக்கணும். பவனி கிளம்பணும்
இரண்டாமாவர் : அப்படியென்ன அவசரம் இப்போ
உலாக்காலம்
அருகில் இல்லையே!
வெளிநாட்டுப்
பயணம் முடிந்தபின் தானே
உள்நாட்டுப் பயணம்.
மக்களைப்
பார்க்க அவசியம் என்ன?
மூன்றாமவர் :உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களா? உற்சவமூர்த்தியின் ஊர்வலம் இல்லையா? நபர்களைச் சுமக்கவா பல்லக்கு வேண்டும்?
நான்காமவர் : உற்சவமூர்த்திகள் ஓய்ந்தது தெரியாதா? புதியபல்லக்கு.. புதியபாதை.. புதியகொள்கை .. புதிய
மக்கள்.. புதிய..புதிய... எல்லாம் புதிய.. பவனிகள் புதிய..
பார்வைகள் புதிய.. உற்சவமூர்த்திகள்
ஓய்ந்தது தெரியாதா?
இரண்டாமவர் : எல்லாம் புதிதா.. எப்படி முடியும்..
பல்லக்கின் கால்கள் பழைய மரங்கள்.. செதுக்கும் உழிகள் பழைய உளிகள்.. சேர்க்கும் கரங்கள்.. பழைய கரங்கள்.. நாமும் புதிதா.. அதே வேட்டி..
அதே துண்டு.. அதே வாழ்க்கை.. அதே
நிலைமை.. அப்புறம் எப்படிப் புதிதாய் வளரும்.. புதிதாய் மலரும்?
நான்காமவர் : பொறுப்பில்லாத கேள்விகள் வேண்டாம்
புரியாமல்
நீ குழப்ப வேண்டாம்.
புதிய பல்லக்கு
.. புதிய மனிதர்.. புதிய பாதை..
வேலையைப்
பார்..
இரண்டாமவர் : புதியமனிதரா..யாராம் அவர்.. மகாராஜாவா..
முதலாமவர் : இல்லை.. பெரியவர்.. அதுதான்
சரி..
நான்காமவர் : அதுதான் சரி.. பெரீஇயவர்.
முதலாமவர் : மாத்திமாத்தியும் சொல்வாங்க.
ராஜான்னு
சொல்றாங்க..
திவாண்டோய் ம்பாங்க
தொரைம்பாங்க..
முதல்வர்ன்னு விளிப்பாங்க
மாண்புமிகுன்னும்
சொல்வாங்க...
தலைவான்னும் விழுவாங்க..
கொழப்புறாங்க..
பொதுவாச் சொல்லலாம்..
பெரியவர்ன்னு..
பெரீஇயவர்..
மூன்றாமவர் : பெரியவர் பவனிக்கு நாள் குறிச்சாச்சோ...
நான்காமவர் : வருகின்ற நாட்கள் தூர இருக்கு.
ஒத்திகை பார்க்கப் பல்லக்கு வேண்டுமாம்..
மூன்றாமவர் : பல்லக்கு என்றால் தனித்தனியாகவா?
பெரியவர் மனைவியுடன் சேர்ந்த பவனியா?
நான்காமவர் : சேர்ந்தும் போகலாம்.. தனித்தும் போகலாம்.. ஒருவர்மேல்
ஒருவர் படுத்தும்கொள்ளலாம். கொடுத்த அளவில் செய்து முடிப்பது நமது காரியம்.. அதுவே
கடமை.. அதுவே கண்ணியம்..
முதலாமவர் : விரைந்துசெல்ல ஊர்திகள் உண்டே..
பல்லக்கு எதற்கு பழங்காலச்
சரக்கு.
இரண்டாமவர் : சாமிதரிசனங்கள் என்றால் சம்பிரதாயங்கள்
வேண்டாமா? பழைய மரபை மக்களும் விரும்புவர்.. மக்களைக் கவர மரபைப் பிடிப்பது மரபுதானே..?
மூன்றாமவர் : சாமி தரிசனமா..? எந்தச்சாமி? மீசைமுறுக்கிய அய்யனார் சாமியா..? ரத்தங்குடிக்கும் பத்திரகாளியா.. மழையைப்பொழியும்
மாரியாத்தாளா.. வள்ளியை மணந்த அறுமுகக்கடவுளா.. அம்மாவைத்தேடும் கஜமுக தேவனா.. கால்மாறி
ஆடும் தில்லைநாதனா.. பள்ளிகொண்ட தேவனின் பைங்கிளிப்பாவையா..?
மந்தைகளை
மேய்க்கும் நல்ல மேய்ப்பனா.. சந்தனக்கூட்டின்
நித்திய தெய்வமா.. சாமியென்றால்
எந்தச் சாமி?
சிறுதெய்வமுண்டு பெருந்தெய்வமுண்டு ...
துளசிநீர்
அருந்தும் உயர்ந்தோர் தெய்வமா.. பட்டையடிக்கும்
கீழோர் தெய்வமா.... சாமி என்றால் எந்தச் சாமி?
நான்காமவர் : பெரியவருக்கென்று சாமியுமில்லை
சடங்குமில்லை.. அய்யனார் அரிவாளும்
கையில் தூக்குவார்.. காளிக்குப்
பதிலாய் ரத்தமும் குடிப்பார்.. சிலுவையைக் கண்டால் நெஞ்சில்
குறிப்பார்.. அல்லாக்கோயிலில்
‘ஆமெனு’ம் சொல்லுவார்.. பெரியவர்
இல்லையா..? அவர் பெரீஇயவர்.. இல்லையா...?
==================================
காட்சி:2
[புதிதாக ஒருவர் வருகிறார். தோற்றம், உடையலங்காரம்
ஆகியவற்றில் அதிகாரத்துவ அடையாளங்கள் இருக்கவேண்டும். அந்த நான்கு நபர்கள் செய்து நிறுத்திய
பல்லக்கு அவரால் சரிபார்க்கப்படுகின்றது. திரும்பிச் செல்ல நினைத்தவர் பல்லக்கின் நான்குபுறமும்
சென்று வணங்குகிறார். திரும்பிச் செல்கிறார்.
பல்லக்கு நிற்கிறது]
காட்சி:3
[இரண்டாம் காட்சியில் வந்தவர் முதலில் வர
அவருடன் நான்குபேர் நுழைகின்றனர். சம உயரம் உடையவர்களாக இல்லை. பல்லக்கைத் தூக்கிப்
பார்க்கின்றனர். சமநிலையில் இல்லை. பல நிலைகளில் மாறிமாறி நின்று தூக்கிப் பார்க்கின்றனர்.
பிறகு உயரம் குறைந்த இருவர் முன்புறத்திலும் அதிக உயரம் உடையவர்கள் பின்புறத்திலும்
நின்று தூக்கிப் பார்க்கின்றனர். தூக்கிய பின்..]
முதலாமவர் : சரி. கிளம்பலாமா..
இரண்டாமவர்
: கிளம்பலாமா..
மூன்றாமவர் : கிளம்பலாமா..
நான்காமவர் : கிளம்பலாமா..
மூன்றாமவர் : கிளம்பலாம்..
இரண்டாமவர் : கிளம்பலாம்..
முதலாமவர் : கிளம்பலாம்..
நான்காமவர் : சரி.. கிளம்பலாம்..
ஐந்தாமவர் :[பல்லக்கைப் பார்வையிட்டவர்.
திடீரென்று யோசனையிலிருந்து விடுபட்டவராய்..] கிளம்பவேண்டாம்.. தவறொன்று நடந்துவிட்டது.
பல்லக்கை இறக்குங்கள். [ பட்டென்று கீழே வைத்துவிட்டுப் பல்லக்கை இடவலமாக ஒருசுற்றும்,
வலமிடமாக ஒரு சுற்றும் சுற்றுகின்றனர். நின்று பார்க்கின்றனர். பின்னர் ஐந்தாம் நபரைச்
சுற்றி வட்டமடித்து நிற்கின்றனர்]
ஐந்தாமவர் : ஒத்திகை என்றால் வெறும் பல்லக்கு
மட்டுமா.. நபர் வேண்டாமா..? பெரியவர் எடையைச் சுமந்து பார்க்கவேண்டாமா?
முதலாமவர் : ஆமாம்.. ஆமாம்.. சுமந்து பார்த்தால், சுமை குறையும்.
இரண்டாமவர் : சுமந்து பார்த்தால் சுமை எப்படிக்குறையும்?
மூன்றாமவர் : ஆமாம்.. சுமை எப்படிக்குறையும்?
நான்காமவர் : இல்லை.. இல்லை.. சுமை குறையும்..
ஐந்தாமவர் : குறையுமா... ? குறையாதா..?
முதலாமவரும்
நான்காமவரும் : குறையும்.. குறையும்..
இரண்டாமவரும்
மூன்றாமவரும் : எப்படிக் குறையும்..? எப்படிக் குறையும்..?
ஐந்தாமவர் : இரண்டும் சமம்.. குறையுமென்பதற்கு
இரண்டு ஓட்டு
எப்படிக்குறையுமென்பதற்கு
இரண்டு ஓட்டு.
என்னுடைய
தீர்ப்பே இறுதியானது.
வானளாவிய
என் அதிகாரத்தால் சொல்கிறேன். என்னுடைய ஓட்டு
குறையுமென்பதற்கே..
நால்வரும் : அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். சுமையைச் சுமந்தால்
சுமை குறையும்
முதலாமவர் : யாரைச் சுமக்கலாம்.. பெரியவருக்கீடாய்
யாரைச் சுமக்கலாம்.
இரண்டாமவர் : காலணிகள்.. பெரியவரின் காலணிகள்...
பெரியவருக்கீடாய் அவரின் செருப்புகளைச் சுமப்போம்..
மூன்றாமவர் :மேலத்தெரு மூலவீட்டு ராமாயண சாஸ்திரிகள்..
முதலாமவர்
: நோஞ்சான் சாஸ்திரியா..
பெரியவரின் எடையில் பாதி இருப்பார்.. வேண்டாம்.. வேண்டாம்..
மூன்றாமவர் : எடைதான் குறைவு.. தலைக்கணம் அதிகம்..
நான்காமவர் : இருந்தாலும் வேண்டாம்.. கனத்த
உடம்பு.. பெருத்த சரீரம். மு.பெ.பு.சி.
இரண்டாமவர் : சுருக்கிச் சொன்னால் யாருக்குத் தெரியும்?
விளக்க்கிச் சொல்லு..
நான்காமவர் : மு.பெ.பு.சி., முந்திரி, பெருங்காயம்,
புளிவியாபாரம், சின்னச்சாமி, பெருத்த உடம்பு.. கனத்த சரீரம்..
மூன்றாமவர் : உடம்பு உண்டு; மூளை கிடையாது.
முதலாமவர் : ஓய்வுபெற்ற தாசில்தாரு.. நீண்ட
கைகள்.. கட்டை கால்கள்.
இரண்டாமவர் : வேண்டாம்.. வேண்டாம்..
கைகள் உள்ளே அடங்க மறுக்கும்.. பல்லக்கைச் சுரண்டி
நாசம் செய்யும்... உட்கார்ந்துபோக
வாடகை கேட்பார்..
மூன்றாமவர் : சரி.. சரி.. பெரியவர் உடம்பு என்ன
இருக்கும்.. மூளை எடையையும் சேர்த்துச் சொல்லு
நான்காமவர் : யாருக்குத் தெரியும்.. தங்கபஸ்பம்
சாப்பிட்ட உடம்பு. அயல்நாட்டுச் சரக்கு அருந்திய
உடம்பு... கெட்டியான திட்ப உடம்பு.. பெரியவர் எடை யாருக்குத் தெரியும். மூளையை அளவிட
யாரால் முடியும்?
முதலாமவர் : ஆமாம்.. ஆமாம்.. பெரீஇயவர் இல்லையா..? அவர் பெரியவர்
இல்லையா...?
மூன்றாமவர் : (ஐந்தாம் நபரைப் பார்த்து) நீயே
ஏறு.. பெரியவரின் எடைக்கு நீயும் இருப்பாய்.. ஒத்திகைக்காக நீயே ஏறு..
ஐந்தாமவர் : ஐயோ வேண்டாம்.. அவரின் இடத்தில்
நானா.. ஆபத்தினை விலைகொடுத்து வாங்க வேண்டுமா..?
இரண்டாமவர் : அப்படியானால் யோசனை சொல்லு..
ஐந்தாமவர் : யோசனை.. யோசனை.. யோசிப்பதெல்லாம்
பெரியவர் வேலையே..
நான்காமவர் : நபர்கள் வேண்டாம். பொருள்களைச்
சுமப்போம்..
முதலாமவர் : ஆமாம். பொருள்களைச் சுமப்போம்..
இரண்டாமவர் :கிணற்றடிப் பிள்ளையார்.. கல்லுப்பிள்ளையார்..
ஐந்தாமவர் : தெய்வநிந்தனைப் பெரியவரைச்
சேரும். வேறு ஏதாவது தேடிவாருங்கள். கிடைத்த பொருளை எடுத்துவாருங்கள்.. [நால்வரும்
நான்கு திசைகளில் செல்கின்றனர். தேடுகின்றனர். வரும்போது ஆளுக்கொரு பொருள் கையில் இருக்கிறது.
பொருள்கள் பாவனைதான்]
முதலாமவர் : (அம்மிக்கல்லுடன்) விலகுங்க..
விலகுங்க..
இரண்டாமவர் : (ஆட்டுக்கல்லுடன்) வழிவிடுங்க.. வழிவிடுங்க..
மூன்றாமவர் :(மைல் கல்லுடன்) தள்ளிக்கோ.. தள்ளிக்கோ..
நான்காமவர் :( இரும்புக்கலப்பையுடன்) ஒதுங்குங்க..
ஒதுங்குங்க... [நால்வரும் பல்லக்கின்
அருகில் சென்று தொப்பென்று போட்டுவிட்டு ஆசுவாசத்துடன் அமர்கிறார்கள்.. திரும்ப எழுந்து
பல்லக்கில் ஏற்றுகின்றனர் ] (புதிதாக ஒருவர்-
ஆறாமவர் வந்து பல்லக்கையும் பல்லக்குக்குள் இருக்கும் பொருட்களையும் பார்க்கிறார்.)
ஆறாமவர் : எதுக்குங்க.. பல்லக்கு எதுக்குங்க..
பல்லக்கு உள்ளாற அம்மிக்கல்லு.. ஆட்டுக்கல்லு.. மைல்கல்லு.. கலப்பை.. இதெல்லாம் எதுக்குங்க..
ஐந்தாமவர் : (மிடுக்குடன் வந்தவுடன் ஆறாமவர்
போய்விடுகிறார்) சரி.. கிளம்பலாமா..?
நால்வரும் : கிளம்பலாம்.. கிளம்பலாம்..
( பல்லக்கு நகர்கிறது.. பல இடங்களைக் கடப்பதாகக் காட்டவேண்டும்)
முதலாமவர் ; பாதை ஒன்னும் மோசமில்ல.. பாரம்
மட்டும் கனமாயிருக்கு..
இரண்டாமவர் : பாரம்கூடத் தாங்கிக்கொள்ளலாம்.. பாதை
தெளிவா இருந்தால் போதும்..
மூன்றாமவர் : ஆமாம்.. ஆமாம்.. எத்தனை மேடு..
எத்தனை பள்ளம்.. பொசுக்கும் வெயிலில் கால்கள் வெடிக்கும்.. உறையும் பனியில் தோல்கள்
விரியும்.. எத்தனைமேடு.. எத்தனை பள்ளம்..
முதலாமவர் : பெரியவர் பல்லக்கு.. பெரியவர் பவனி.. பெரியவர் சேவகம்.. பெரிய தியாகம்.. நாட்டின் தலைவர்..நமது பெரியவர்.. நமது சேவை.. நாட்டுக்குத்
தேவை...
இரண்டாமவர் : இருந்தாலும்.. பாதையா.. இது .. பாதையா.. கல்லுங்கரடும் முள்ளும் புதரும்... காட்டாற்று
வெள்ளம் கழுத்தில் புரளும். ... பாதையா.. இது .. பாதையா..
மூன்றாமவர் : ஆமாம்.. பாதையா.. இது .. பாதையா..
முதலாமவர் : கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை முள்ளும் புதரும் மேனிக்கு
மருந்து பெரியவர்
சரணம்.. பெரியவர் சரணம்... [பல்லக்குத்தூக்குகள் ஒருகோயிலைச் சென்று
அடைகின்றனர்]
முதலாமவர் : தெய்வமே.. சோதிக்காதே அய்யா..
இரண்டாமவர் : வந்தாச்சு.. வந்தாச்சு.. ( பட்டென்று
இறக்கிவிட்டு மூத்திரம் பெய்யச்செல்லும் அவசரத்தில் போய்த்திரும்புகின்றனர். திரும்பிவந்து
பல்லக்குப் பக்கத்தில் நால்வரும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி..)
நால்வரும் : சோதிக்காதே ராஜா.. (எழுகின்றனர்)
ஐந்தாமவர் : சரி இங்கே கவனியுங்க.. என்னைக்கும்
சொல்றதெ இன்னைக்கும் சொல்றேன்.. அழுக்குத் துணியெக் குடுத்திட்டுச் சலவைத் துணியா வாங்கிக்கீங்க..
முதலாமவர் : அப்புறம்..
ஐந்தாமவர் : முகத்தை வளிச்சிட்டு வாங்க.. எச்சிலைத் துப்பாம
இருங்க...
புட்டத்தெச் சொறியாதீங்க...
இரண்டாமவர் : அன்னைக்கு மட்டும்தானா.. ஒத்திகையிலுமா..
ஐந்தாமவர் : மகராஜா வந்து போறவரைக்கும்..
மூன்றாமவர் : மகாராஜாவா..
ஐந்தாமவர் : இல்லை.. ஆமா..
மூன்றாமவர் : ஆமாவா.. இல்லையா..
ஐந்தாமவர் : இரண்டுமுண்டு.. இரண்டுமில்லை.. பெரியவர்.. அதுதான் சரி..
பெரீஇஈயவர்..
மூன்றாமவர் : பெரியவரை நாங்க எப்படி வரவேற்கணும்..
ஐந்தாமவர் : கும்பிடுங்க.. கால்ல விழுந்து
கும்பிடுங்க.. பௌவியமா.. பௌவியம்
ரொம்ப முக்கியம்.. முதுகைவளைச்சு..
வாயைப் பொத்தி..
முதலாமவர் : சரி.. சரி.. வாயைப் பொத்தி.. முதுகை வளைச்சு
இரண்டாமவர் : இல்லை.. இல்லை.. முதுகை வளைச்சு..
வாயைப்பொத்தி.
மூன்றாமவர் : ஆமா.. ஆமா..
நான்காமவர் : இல்லை.. இல்லை..
முதலாமவர் : பெரியவர் ஏறியவுடனே என்ன செய்யணும்..
இரண்டாமவர் : பல்லக்கத் தூக்க வேண்டியதுதான்..
ஐந்தாமவர் : இல்லை.. பல்லக்கைத் தூக்கக்
கூடாது. விதானத்தெ உயர்த்தணும்..
மூன்றாமவர் : விதானத்தெ உயர்த்தணுமா..
ஐந்தாமவர் : ஆமா.. உட்கார்ந்தபடியே திரும்பமுடியுமான்னு
பாக்கணும்.. சுத்தியும் மக்கள் கூட்டத்தெப்
பாக்கணும்.. பெரியவர் கையெ
அசைக்கணும்.. சரி..இப்போதைக்கு
இதுபோதும். பல்லக்கத்தூக்குங்க.. (நால்வரும் குனிந்து தூக்க முனைகின்றனர்)
முதலாமவர் : என்னப்பனே.. முருகா.. பழனியாண்டவா..
ஐந்தாமவர் : முருகான்னு கூப்பிடக்கூடாது.
‘சுப்பிரஹ்மண்யா’.. ‘சுப்பிரஹ்மண்யா’.. அப்டீன்னு சொல்லுங்க.
இரண்டாமவர் : ரொம்பக்கஷ்டம் சொல்றது.. சோதிக்காதீங்க..
ஐந்தாமவர் :கஷ்டமில்லை.. பழகணும்.. பழகினா
நாக்கு வளையும்.. உடம்பும் அப்படித்தான்.. மனசும் அப்படித்தான்.. புத்தியும் அப்படித்தான்..
மூன்றாமவர் : சரி.. அப்புறம்..
ஐந்தாமவர் : சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லச் சொல்றீங்க,,
நான்காமவர் : கேட்டதையே திரும்பத்திரும்பக் கேட்கிறதுல ஒரு சொகமிருக்கு.
ஐந்தாமவர் : பல்லக்கு தோளை அழுத்துச்சுன்னா
வழக்கம்போல் ஆ..ஊன்னு கத்தப்படாது... பெரியவருக்கு சத்தம் ஆகாது.
இரண்டாமவர் : வலி தாங்காமெ இறக்கி வைக்கணும்னா..
ஐந்தாமவர் : இறக்கணும்னா.. ‘வள்ளி வந்தாச்சுன்னு
சொல்லுங்க’. மறுபக்கத்துக்காரங்க, ‘அதுக்கென்ன தெய்வானையும் வந்தாச்சுன்னு’ சொல்லுங்க.
தோள் ஆத்திக்கிடலாம். எறக்கினெ பல்லக்கு உள்ளே எட்டிப்பார்க்கப் படாது... வியர்வையைக்
கட்டைவிரலாலெ வழிக்கப்படாது.
மூன்றாமவர் : அன்னக்கி மட்டும்தானா..?
ஐந்தாமவர் : அவரு என்னக்கி வாரார்னு தெரியலையே..
இரண்டாமவர் :அப்படின்னா.. ஆயுசு முழுவது இதே வேலையா.?
ஐந்தாமவர் : ஆயுசு முழுவதும் செய்யணும்னா
செய்யவேண்டியதுதான்.. இது இல்லைன்னாலும் இதுமாதிரி வேறொன்னத்தானே செய்யவேண்டியிருக்கு.
பழகிக்கிட்டா எல்லாம் சுலபமாத்தெரியும். பழக்கம் விட்டுப்போனா உடம்புவலி எடுக்கும். (ஆறாமவர் செய்தித்தாளை வாசித்தபடியே/
அலைபேசியில் பேசியபடியே)
ஆறாமவர் : இப்ப என்ன செய்யப்போறீங்க..
இரண்டாமவர் : ஏன்
என்ன செய்தி?
ஆறாமவர் : ஒன்னுமில்ல.. பெரியவர் யாத்திரை ரத்துன்னு செய்தி
வந்திருக்கு..
முதலாமவர் : அப்பாடா..
இரண்டாமவர் : விடிஞ்சுச்சுடா,,
மூன்றாமவர் : வேலை போச்சே..
நான்காமவர் : முருகா.. என் அய்யனே..
ஐந்தாமவர் : அமைதி.. எல்லாரும் இங்கெ கவனிங்க..
நமக்கு அதிகாரபூர்வமா எதுவும் தெரியாது. அதனாலெ தூக்குங்க. பல்லக்கு நகரட்டும்.. ஒத்திகை
நடக்கட்டும்.. (நால்வரும் ஒருவரையொருவர்
பார்க்கின்றனர்)
ஐந்தாமவர் : பழக்கம் விட்டுப் போச்சுன்னா,உங்களுக்குத்
தான் கஷ்டம்..
நாளைக்கே பெரியவர் வரார்னு மாத்திச்சொல்வாங்க.. வருவதாச்சொன்ன பெரியவர் காணாமலும் போகலாம்..
பெரியவர்... பெரியவருக்குப் பெரியவர்.. அதிபெரியவர், அவருக்குப் பெரியவர்; பெரியவருக்குப் பெரியவர்; பெரியவருக்குப்
பெரியவருக்குப் பெரியவர் வரலாம்; வராமலும் போகலாம்.. அதனாலெ நாமெ நம்மெ வேலையெச் செய்துகிட்டெ
இருக்கணும்..
இரண்டாமவர் : அந்தக் கலப்பையெ மட்டும் இறக்கி வெளியிலே
வச்சுடலாமா..? ரொம்ப அழுத்துது..
ஐந்தாமவர் : இருந்துட்டுப் போவுது; ஜாஸ்திதூக்கிப்
பழகிறது பின்னால நல்லது.
மூன்றாமவர் : வழக்கம்போல முருகான்னு கூப்பிடுறோம்..
ஐந்தாமவர் : சரி.. உங்க இஷ்டம்.. (பல்லக்கு நகர்கிறது. பின்னணியில் ரகுபதி
ராகவ ‘இசை’ ரூபத்தில் கேட்கிறது. முடியும்போது அனைவரும் சிலைபோல் நிற்க இசையும் குறைந்து
மங்குகிறது)
============================================================
மதுரை நிஜநாடக இயக்கம் தொடங்கி(1978) முனைப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வீதிநாடகங்களிலிருந்து மேடை நாடகங்களுக்குள் நகர்ந்ததைத் தொடர்ந்து மதுரையில் நவீன நாடகங்களுக்கான விழாக்களையும் நடத்தியது. 1989 ஆம் ஆண்டுப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒரு நாள் நாடகவிழாவை நடத்தியபோது
· சுதேசிகள் என்றொரு நாடகக்குழுவும் அதில் பங்கேற்றது. அக்குழுவின் பயிற்சிக்காகவும், மேடையேற்றத்திற்காகவும் எழுதப்பட்ட நாடகம் இது. சுந்தரராமசாமி புகழ்பெற்ற கதையிலிருந்து உருவாக்கப்பெற்ற இந்நாடகத்தைத் தமிழகத்தில் பரிக்ஷா, முத்ரா, தீட்சண்யா, கூட்டுக்குரல் போன்ற குழுக்களோடு சிங்கப்பூர், இலங்கை ஆகியவற்றிலும் மேடையேற்றியுள்ளனர். ஞாநி தனது தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் உச்சநிலை நிகழ்வாக இந்நாடகத்தை வைத்திருந்தார்.
· அப்பாவிகளைச் சுரண்டுதல், மேலாதிக்கத்தின் தந்திரங்கள் இந்த உலகத்தில் தொடரும் வரை இதனை மேடையேற்றலாம். அதனை விமரிசிக்கும் குறியீட்டுத்தளங்கள் உள்ளே இருக்கின்றன.
நன்றி: படங்களுக்காக மட்டக்களப்பு பல்கலைக்கழக நாடகத்துறை
கருத்துகள்