ஒன்றியங்களால் ஆனது இவ்வுலகு

பெரும்பான்மை - மக்களாட்சிக் காலத்தின் புனிதச் சொல்.

எல்லாப் புனிதச்சொற்களின் பின்னால் தன்னலம் ஒளிரும்; அபத்தம் ஒழிந்துகொள்ளும். இது எனது நம்பிக்கை. வரலாறு பலதடவை இதை நிரூபித்திருக்கிறது. இன்று திரும்பவும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்’ அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 48.1சதவீதம்பேர் பிரியவேண்டாம் என்றுசொல்ல, 51.9 சதவீதம்பேர் பிரிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பான்மையென்பதைப் புனிதச் சொல்லாக ஆக்கிய சதவீதம் 3.8 சதவீதம் தான். புனிதத்தின் முதல் பலி. அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகிவிட்டார்.
'முடிவைப்பார்; பாதையைப் பார்க்காதே' என்பதைக் கடைப்பிடித்து உருவாக்கப்படும் புனிதச்சொற்கள் எப்போதும் தன்னலம்கொண்ட சிறுகூட்டத்தால் உருவாக்கப்படுகின்றன. பக்கத்தில் இருப்பவர்களை ஏதாவதொரு காரணம்சொல்லிப் பகைவர்களாகப் பார்க்கச்சொல்லும் கூட்டம் மனிதர்கள் கொள்ளும் ‘பகைமை’ இயல்பானது எனப் பேசிச் சமாளித்து வருகிறது. உலக அளவில் உண்டாக்கப்படும் பகைமைக்குப் பின்னால் மனிதர்கள் பின்பற்றும் சமயநடவடிக்கைகள், நிலவியல் அடிப்படையில் உருவாகும் நிறம் மற்றும் உடல்வாகு, அதன் வழியாக அடையாளப்படும் இனம், குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் இருப்பவர்களோடு தொடர்புகொள்ள உருவாக்கிக்கொள்ளும் தகவல் கருவியான மொழி, அதன்வழியாக உருவாகும் பண்பாடு போன்றனவெல்லாம் புனிதச்சொற்களின் அர்த்தத்தை உருவாக்குகின்றன. ஆனால் இவையனைத்தும் அதனதனளவில் தன்னலத்தை ஊட்டிவளர்க்கும் கருவிகள் என்பதை உணர்வதில்லை மனிதக்கூட்டம்.
வாய்க்கால் மற்றும் வரப்புத்தகராறில் தொடங்கிக் கொலைகளில் முடியும் பங்காளிச்சண்டைக்குப் பின்னால் இருக்கும் தன்னலம்தான் உலக அளவில் பெரும்போர்களாக மாறியிருக்கின்றன. குட்டிகுட்டி நாடுகளாகப் பிரிந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த பங்காளிச்சண்டைகள் தான் இரண்டு உலகப்போர்களையும் உருவாக்கிய உண்மையை வரலாற்றுப் புத்தகங்கள் வெளிப்படையாகச் சொன்னதில்லை. இரண்டு உலகப்போர்களிலும் வெற்றிபெற்ற அணியின் தலைமைப் பங்காளியான பிரிட்டனின் தன்னலம், இயல்பான புனிதச் சொல்லாடல்களால் மூடி மறைக்கப்பட்டன.
 
தேசங்களுக்கான அடையாளங்களைக் கொண்டிருந்தபோதும் ஒன்றியங்களாக இருப்பதன் பொருளாதார நலனும் அரசியல் அதிகாரமும் வல்லாண்மை மிக்கவைதான். என்றாலும் பங்காளிச் சண்டைகளைத் தவிர்க்கும் என்பது அதன் நேர்மறைப் பலன. சோவியத் ஒன்றியம் உடைந்ததின் பலன்களை அனுபவிக்கின்றன அவற்றின் உறுப்பு நாடுகள். சோவியத் ஒன்றியத்தின் நட்பு ஒன்றியமாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் உடுக்கை இழந்தவன் கைபோலத் தவித்துக்கொண்டிருந்த வரலாற்றை உலகம் கவனிக்கவில்லை. தன் கைகளே தங்களுக்கு உதவமுடியும் என்பதை உணர்ந்த கிழக்கு ஐரோப்பிய மக்கள் உழைத்தார்கள். ஓடி ஓடி உழைத்தார்கள். சோசலிசக் கட்டுமானத்திலேயே உழைப்பின் அவசியத்தை உணர்ந்திருந்த போலிஷ் நாட்டினரும் ருமேனியர்களும் ஹாலந்தினரும் கடும் உழைப்பாளிகள். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதைக் கைக்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டதைப் பயன்படுத்தித் தங்களது உழைப்பை ஜெர்மனி, நார்வே, சுவீடன், பிரிட்டன் என தொழிற்சாலைகள் நிரம்பிய நாடுகளுக்குச் சென்று வழங்கினார்கள். இழப்பதற்கு எதுவுமில்லை; உடல் உழைப்பைத் தவிர என்ற நிலையில் அவர்கள் தந்த உழைப்பின்வழியாக வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
 
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து உழைப்பாளிகள், பிரிட்டனின் வேலைவாய்ப்புகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற பொய்ப்பிரசாரத்தை முன்வைத்துப் பேசும் கூட்டம் நமது தேசம் நமக்கானதாக இருக்கவேண்டும் என்று பேசுகின்றது. இதன் மறுதலையாக பிரிட்டன், ஜெர்மனி, பிரெஞ்சு நாட்டுப் பெருமுதலாளிகளின் வியாபாரக்குழுமங்களும் தொழில் குழுமங்களும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் வியாபாரங்களையும் முதலீடுகளையும் அதன்வழியாக வரும் லாபத்தின் பங்கு தங்கள் நாட்டுக்கு வருவதைப் பற்றிப் பேசுவதில்லை. அமெரிக்க ஒன்றியத்திலும் அப்படியொரு குரல், புதிய அதிபர் வேட்பாளர் வடிவில் வந்துள்ளது. அவரது குரல் அண்டை நாட்டு உழைப்பாளிகளான மெக்சியர்களைக் கைகாட்டி ஓங்கி ஒலிக்கிறது. ஆஸ்திரேலியாவிற்குள் இனி ஆசியர்கள் வரவேண்டாம் என்ற குரல் எழும்பப்போகிறது. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கிவிடாமல் தடுப்பதில் இருப்பது யாருடைய நலன் என்பது புரியாத புதிர். வளைகுடா நாடுகளுக்குள் வரும் இந்தியர்கள், இலங்கையர்களுக்கெதிரான குமுறல்கள் பலகாலமாகக் கேட்டுக்கொடிருக்கின்றன. தென்னாசிய நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்க நினைத்தபோது எதிர்ப்புகள் உள்ளும்புறமும் எழுந்தன. எழுப்புபவர்கள் சொல்லும் ஒருவார்த்தை தேசப்பற்று எனும் புனிதச்சொல். தேசப்பற்றின் பின்னிருப்பதும் பங்காளிச்சண்டைதான். இந்தப் பின்னணிகளோடு ஒரு வாக்கியம் அர்த்தமுடையதாக இன்னும் இருக்கிறது.

உலகத்தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள். இது புனிதச்சொல்லோ வாக்கியமோ அல்ல. கேள்விகளற்று ஏற்றுக்கொள்வன மட்டுமே புனிதச்சொற்கள். ஒன்றிணைப்பிலிருந்து உருவாவது ஒன்றியம். ஒன்றியங்களாலானது இவ்வுலகு

**********************************

ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு மூலதனத்தின் தேவையும் கூட. அமெரிக்காவில் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்து கின்றன. கல்விக்கூடங்களை நடத்துகின்றன. ஆய்வுகளுக்கு நிதி வழங்குகின்றன. 2000 -க்குப் பின்னர் உலகமெங்கும் உருவாகிவரும் அடையாள அரசியல் சொல்லாடல்கள் கூடத் தன்னெழுச்சியாகத் தோன்றுகின்றனவா? பன்னாட்டுக் குழுமங்களின் மறைமுகத்தூண்டுதலால் உருவாக்கப்படுகின்றனவா? என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் அதிகார அமைப்புகளும் வலைப்பின்னல்களும் எப்போதும் அடையாள அரசியலை அனுமதிப்பதுபோலக் காட்டிக்கொண்டே, பொதுவெளியில் அதற்கெதிரான மனநிலையை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றன. இந்தியச் சூழலில் அணு உலை எதிர்ப்புக்கு ஆதரவு, சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கு ஆதரவு, மிருகவதைத் தடுப்புச் சட்ட ஆதரவு போன்றன சில உதாரணங்கள். இதற்குக் கல்வித்துறை சார்ந்த, சாராத அறிவுஜீவிகளும் ஆய்வாளர்களும் அறிந்தும் அறியாமலும் உதவுகிறார்கள்.

நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஆர்லண்டோவில் நடந்த கண்மூடித்தனமான கொலைச்சம்பவத்தில் 50 பேர் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். மேலும் 50 பேருக்கு மேல் காயம் அடைந்திருக்கிறார்கள் இந்த நிகழ்வும் இருவிதமான தையொட்டியும் பலவிதமான சொல்லாடல்களை அமெரிக்காவில் உருவாக்கியிருக்கிறது. ஒரு சொல்லாடல் கொலைச் சம்பவம் நடந்த தனித்துவமான வெளி அடையாளத்தோடு இணைத்து உருவாக்கப்படுகிறது. இன்னொன்று கொலையில் ஈடுபட்ட பாத்திர அடையாளத்தை இணைத்துக் கட்டமைக்கப்படுகிறது.
 
நடந்த இடம் இருந்த இரவுக்கேளிக்கைவிடுதி. இரவுகேளிக்கை விடுதி பொதுவெளிதான். ஆனால் ஒருபால் புணர்ச்சியை ஆதரிப்பவர்கள் சந்திக்கும் கொண்டாட்ட விடுதி, பொதுவெளி அல்ல. அடையாள அரசியலோடு இணைந்த சிறப்புவெளி. இதன் வழியாக உருவாக்கப்படும் சொல்லாடல் தனிமனித உளவியல்X மாற்றம்கோரும் புதிய அடையாளம் என்ற எதிர்வால் கட்டமைக்கப்படுகிறது. ஒருபால் புணர்ச்சியைச் சட்டங்களும் அரசு நிர்வாகமும் ஏற்றுக்கொண்டாலும் தனிமனித உளவியல் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நிகழ்ந்தது இந்தப் பெருங்குற்ற நிகழ்வு. எனவே இத்தகைய தனி அடையாள உரிமைகள் மறுபரிசீலனைக்குரியவை என்ற முடிவை நோக்கி பொதுப்புத்தி உருவாக்கப்படும். தனிநபர் ஒருவரின் வெளிப்பாட்டை முன்வைத்து பேச்சை உருவாக்கிவிட்டன ஊடகங்கள். கொலையாளி நிகழ்வு நடந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதால், சுட்டுக்கொண்டவனின் தந்தை அளித்த பேட்டி பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது அடையாளம் கொலையாளியின் இசுலாமிய அடையாளம். ஒரு தனிமனிதனின் கண்மூடித்தனமான கொலைவெறி என்றவுடன் உலகு தழுவிய இசுலாமிய தீவிரவாதத்தோடு இணைத்துப் பேச்சு கிளம்பியிருக்கிறது. ஜிகாதி, ஐஎஸ்ஐ போன்றனவற்றை அந்நபரோடு இணைக்கும் சான்றுகள் தேடப்படுகின்றன. இதுவும் ஒருவிதத்தில் அடையாள அரசியலை மறுக்கும் பொதுப்புத்தி உருவாக்கம் தான்.அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இதற்கான கருத்தியல் உருவாக்கம் நடக்கிறது.
 
எல்லோரையும் அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதின் வழியாகத் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வாதத்தை எப்போதும் ஆதரித்து வந்த அமெரிக்காவில் இப்போது அதற்கெதிரான கருத்துகள் உருவாகி வருகின்றன. சொந்த நாட்டு மக்களுக்கு முன்னுரிமை என்ற கருத்தியல் - ஒருவிதத்தில் பாசிசம் என்று வரையறுக்கத்தக்க கருத்தியல் இது. அமெரிக்காவில் உருவாவதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. கொஞ்சம்கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் பரவிவருகிறது. போன நூற்றாண்டில் உலகம் முழுக்கப் பயணம் செய்து, வணிகத்தில் ஈடுபட்டு, அரசதிகாரத்தைக் கைப்பற்றி அந்நாட்டு வளங்களைச் சுரண்டிக் கொளுத்த இந்நாடுகளின் சிறுகும்பல்கள் அந்நியர்களுக்கெதிரான பேச்சு மூலம் மாற்றிப் பேசுகின்றன.
 
ஜனநாயகக் கட்சி, குடியரசுக்கட்சி என்ற இருகட்சி ஜனநாயகத்தில் திளைக்கும் அமெரிக்க மக்கள் எட்டாண்டுக்கொருமுறை/ இருமுறைக்கொரு தடவை ஆளும் கட்சியை மாற்றிப் பார்க்கிறார்கள். இப்போது ஜனநாயகக்கட்சி எட்டாண்டுகள் முடிந்துவிட்டது. அதனால் அடுத்த வாய்ப்பு குடியரசுக்கட்சிக்குப் போகலாம். குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். அந்நியர்களுக்கெதிரான குரலை வலுவாக உயர்த்திவரும் நபர். அத்தோடு அடையாள அரசியல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் பழைமைவாதத்தின் ஆதரவாளரும்கூட. நேற்றைய நிகழ்வு ட்ரம்பிற்கு ஆதரவை வலுப்புப்படுத்தும் நிகழ்வு எனப் பார்க்கப்படுகிறது. வன்முறை, கலவரம், கொலைகள் என எவையும் தேர்தல் அரசியலில் தற்செயல் நிகழ்வுகளாக இருப்பதில்லை. இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் அதுதான் நிலை. தனிமனிதர்கள் ஒருநிகழ்வின் வழியே அரசியல் விலங்காக ஆகிவிடுகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்