மூடுதல் அல்ல; திறப்பு

கனடாவின் அரசியல் தலைநகர் ஒட்டாவா. அங்கே பார்க்கவேண்டியன என்று பட்டியல் ஒன்றைத் தயாரித்தபோது பட்டியலில் நாடாளுமன்றம் முதலில் இருந்தது. பிறகு நதியோரத்துப் பூங்காவும் ராணுவத்தின்காட்சிக்கூடமும் விலங்குப் பண்ணையும் இருந்தன. அப்புறம் வழக்கம்போல கடைகள் நிரம்பிய நகர்மையம். விலங்குகளையும்,  ஆயுதங்களையும்  பார்ப்பதற்குப் பதிலாகப் பக்கத்திலிருக்கும் கிராமங்களைப் பார்க்கும் விதமாக நகரத்தைவிட்டு விலகி எனது கருத்தைச் சொன்னேன். அதன்படி ஒட்டாவா சுற்றல் திட்டம் உருவானது. முதல் இடம் நாடாளுமன்றம். அடுத்து பூங்கா, பிறகு ஆற்றோர நடைப் பயணம். அதன் பிறகு 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலையருவியும் அதன் வழியான கிராமங்களும் இதுதான் வரிசை.

முதலில் நாடாளுமன்றம் . அமைதிக் கோபுரத்தோடு கூடிய பாராளுமன்ற வளாகம் - ப- வடிவில் கட்டடங்களால் நிற்கிறது. நடுவில் கிடைக்கோடுபோல இருப்பது பாராளுமன்றம். இரண்டு பக்கத்திலும் இருப்பவை அரசுச் செயலகங்களும் காட்சியகங்களும். நாடாளு மன்றத்தையே காட்சியகமாக ஆக்கியிருப்பதுதான் கனடாவின் சிறப்பு. நம் நாட்டில் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லித் தூரப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை திறந்த வெளிபோல ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் கடும் பாதுகாப்பும் இருக்கிறது. அயல்நாட்டிலிருந்து வரும் பயணியைச் சுமந்துசெல்லும் விமானத்தில் நுழையும்போதும் வெளியேறும்போது இரண்டு சோதனைகளையும் அந்தக் கட்டடத்திற்குள் செல்வதற்கு முன் செய்கிறார்கள். அனுமதிக்கும் இடத்தில் ஒரு தண்ணீர் புட்டியைத் தவிர வேறு எதையும் உள்ளே கொண்டுபோகமுடியாது.  பிறகு ராணுவத்தினரின் சோதனை. தாண்டிவிட்டால் பிறகு ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் மூடிவைப்பதில் நிர்வாகம் நடப்பதாக நம்பவைக்கமுடியாது. திறந்து காட்டும்போது நம்புதல் கூடுதல். நம் நாட்டில் திறந்த பொருளாதாரமும் அரசியலும் வந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் மூடுண்ட திறப்பாகவே இன்னும் இருக்கிறது.
20 பேர் கொண்ட குழுவிற்கு ஒரு வழிகாட்டி என்று பிரித்து ஆங்கிலத்தில் விவரிக்கிறார்கள். பிரெஞ்சிலும் விவரிக்க ஏற்பாடு உண்டு. ஆங்கிலமும் பிரெஞ்சும் கனடாவின் அலுவல் மொழிகள் என்பது கவனிக்கவேண்டியன. திரைச்சீலையில் கட்டடத்தின் உள்ளமைப்புகளைக் காட்டிப் பேசும் பெண்கள் இடைவெளிவிட்டுச் சிரிக்கவும் தெரிந்துவைத்திருப்பது ரசிக்கத் தக்கன. சிரித்துவிட்டு, ஏதாவது கேள்விகள், சந்தேகம் என ஆசிரியர்கள் போலக் கேள்விகேட்கிறார்கள். கேள்விகள் கேட்கும் நபர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டே அடுத்த இடத்திற்கு குழுவை நகர்த்துகிறார்கள். சுற்றுலாப்பயணிகளின் வரிசைக்குப் பக்கத்திலேயே அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசிக்கொண்டே போகிறார்கள். அரசின் உயரதிகாரிகளும் அவர்களோடு உரையாடியபடியே கடந்துபோகிறார்கள். நமக்குப் பொறுமையும் ஆர்வமும் இருந்தால் நாடாளுமன்ற விவாதங்களைக் கேட்கலாம். நாடாளுமன்ற நூலகத்திற்குள் சென்று பார்த்துவிட்டு அமைதிக்கோபுரத்தின் பக்கம் வரை வழிகாட்டி வருவார். கோபுரத்தின் உச்சிக்குப் போகும் தூக்கிக்குள் நுழைத்துவிட்டுப் போய்விடுகிறார். திரும்பும்போது கட்டடத்தின் வெளியே தான் வர முடியும்.
கோபுரங்கள் வழிக்காட்சி என்பது மேற்கத்தியப் பெருநகரங்களில் இருக்கும் பொது அமைப்பு. கோபுரத்தின் உச்சியில் இருக்கும் பிரமாண்டமான கடிகைகள் அந்நகரத்திற்கே நேரஞ்சொல்வதைப் போலப் பெரும் ஒலியில் அடித்துக் கூவும். சுற்றுலாப் பொருளாதாரத்தின் முக்கியக் கருவி அது.  உயரக்கட்டடங்களின் பின்னணியில் அப்படியொரு நோக்கம் இருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் உருவாக்குவதில் தான் மேற்கத்தியர்களின் திறமை இருக்கிறது. இயல்பாகவே உயரமான மலைப்பிரதேசங்களில் இருக்கும் நகரங்களில் அவ்வளவு உயரமான கோபுரங்கள் தேவைப்படுவதில்லை. தரைப்பகுதி நகரங்களில் புதிதாக உருவாக்குகிறார்கள். நகரின் மையமான பகுதியில் இருக்கும் உயர்ந்த கோபுரங்களின் உச்சிக்குத் தூக்கிகளின்வழிப் பார்வையாளர்களை உச்சிக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஒரு பரவசம் உண்டாகும். உச்சியிலிருந்து  நகரையும் நகரத்தைச்சுற்றியுள்ள பகுதிகளையும் கண்ணுக்கெட்டிய தூரக் காட்சிகளாகக் காட்டுவதன்மூலம் பிரமிப்பைக் கூட்டமுடியும். மேலே இருந்து பார்க்கும்போது சின்னச் சின்னப்புள்ளிகளாகவும் கோடுகளாகவும் தெரியும் இடங்களை அண்மைக்காட்சியில் பார்க்கும் ஆசையும் விருப்பமும் தூண்டப்படும்.
வார்சாவின் மையத்தில் இருந்த பண்பாட்டு அரண்மனை நான் பார்த்து வியந்த முதல் கோபுரம். சுற்றிலும் பூங்காவோடு, நாட்டியசாலைகள், நாடக அரங்குகள், பலவகையான காட்சிக்கூடங்கள், திரையரங்குகள், அரசு அலுவலகங்கள் கொண்ட அப்பெருங்கட்டடம் போலந்தின் ஆகப்பெரும் சொத்து. செவ்வக வடிவில் 36 தளங்களைக் கொண்ட அப்பெருங்கட்டடம் இன்றைய மதிப்பில் பல ஆயிரம்கோடி மதிப்புக்கொண்டது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவின் நேசநாடாக இருந்து இரண்டாம் உலகப்போரில் பேரிழைப்பைச் சந்தித்த போலந்திற்கு ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் கட்டித் தந்த மாபெரும் கட்டடம். சோசலிசத்தைக் கைவிட்ட நிலையில் மாறிய பொருளாதார வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட போலந்தியர்கள், அக்கட்டடத்தை அடிமைத்தனத்தின் சின்னமாக நினைக்கிறார்கள். நான் அங்கு  இருந்த காலத்திலேயே (2013) அதனை இடித்துவிட்டுப் புதிதாக ஒன்றைக்கட்டிக்கொள்ள வேண்டுமென்ற குரல்கள் எழுந்திருந்தன. தமிழ்நாட்டில் பெருங்கோபுரங்களைக் கொண்ட கோயில்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஏறிநின்று நகரைப்பார்த்து பிரமிக்கும் வாய்ப்புகள் இல்லை. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தெற்குக்கோபுர வாசலில் மேலே ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உண்டு. மூச்சிரைக்க ஏறவேண்டும். சிறப்பு அனுமதியோடு 1981 இல் அக்கோபுரத்தில் ஏறிப் படம் எடுத்திருக்கிறேன்.  ஒட்டாவாவின் அமைதிக்கோபுரத்தில் ஏறி நாலாபுறமும் சுற்றிக் கொண்டிருக்கும்போது நினைவுகள் கடந்தகாலத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தன.

கோபுரம் விட்டிறங்கி அதன் முன்னே நடந்த இசைக்கோல நிகழ்வுகளைப் பார்த்துவிட்டுத் துலிப் மலர்க்காட்சி விழா ஏற்பாடுகளைப் பார்க்க அந்த கால்வாய்க்கரையோரப் பூங்காவிற்குப் போனோம். அந்த விழாவை நேரடியாகக் காணும் வாய்ப்புக் கொஞ்சம் பிசகிவிட்டது.  ஒட்டாவிற்கு இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் அந்தப் பெருவிழாவைக் கண்டு களித்திருக்கலாம். ஒவ்வோராண்டும் 5 லட்சம் பேருக்கும் அதிகமாக வந்து களித்துக் கொண்டாடிப் போகும் துலிப் மலர்க்காட்சி விழாவிற்காக ஒட்டாவா நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த ஆண்டுக்கான (2016) துலிப் மலர் விழா மே, 12 முதல் 23 வரை நடக்கப்போகும் அந்த விழா இடமான பூங்கா, டோவ்ஸ் ஏரியிலிருந்து ரிடுயு கால்வாயாக ஓடும் நீர்ப்பரப்பின் ஓரத்தில் நீள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான துலிப் மலர்களை நட்டுவைத்து நிரப்பிக் கொண்டாடும் ஆண்டுநிகழ்வுகளுள் ஒன்றானதின் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.  இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்திருந்தால், அந்த விழாவையும் அதன் பின்னால் இருக்கும் இந்தக் கதையையும் ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ விரிந்து சுருங்கும் கண்களோடும் முகபாவங்களோடும் பெண்ணொருத்தி சொல்வதைக் கேட்டிருக்கலாம். அதுவும் தவறிப்போய்விட்டது
அதைக் கதையென்று சொல்லக்கூடாது;  வரலாறு.
ஒவ்வொரு ஆண்டின் வசந்தகாலத்தின் தொடக்கமாக அமையும் அந்த விழா உலகப்போர்க்கால நினைவாகவும் அமைந்துவிட்டது.  இப்போது ஒவ்வோராண்டும் 5 லட்சம் பார்வையாளர்கள் வந்து மலர்களைப் பார்த்துச் செல்கின்றனர். 1967 இல், நெதர்லாந்தின்(ஹாலந்து) அரசி ஜூலியானா வந்து மலர்க்காட்சியில் கலந்துகொண்டதும்,  2002 இல் 50 ஆம் ஆண்டுவிழாவிற்காக அப்போதைய நெதர்லாந்து அரசியாக இருந்த மார்க்கிரியெட்டும் கலந்துகொண்டார்கள் என்பதற்குப் பின்னால் அந்த வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன.  
1940 இல நாஜிகளின் படையெடுப்பால் நெதர்லாந்து நெருக்கடியைச் சந்தித்தது. ராணி வில்ஹெமினா உள்பட அரசகுடும்பம் இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட நாடொன்றுக்குத் தப்பிப்போய்த் தலைமறைவாக இருப்பது என முடிவு செய்தது. தொடர்ந்து அரச குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் கனடாவின் ஒட்டாவா நகருக்குக் கப்பல் மூலம் வந்து சேர்ந்துள்ளனர். வந்தவர்களில் இளவரசி ஜுலியானாவும் அவரது மகள்களான பியட்ரிக்ஸ், ஐரினெ ஆகியோரும் உண்டு. ஒட்டாவாவிற்கு வருவதற்கு முன்பு துறைமுக நகரமான ஹாலிபாக்ஸில் இருந்த  ஒரு மாளிகையில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். ஸ்டோர்னொவே என்றழைக்கப்பட்ட அந்த மாளிகை இப்போது எதிர்க்கட்சித்தலைவரின் மாளிகையாக இருக்கிறது.
கனடாவில் தஞ்சம் புகுந்திருந்த இளவரசி ஜூலியானா,  ஒட்டாவிலிருக்கும் மார்க்ரியட் பொதுமருத்துவமனையில் 1943, ஜனவரி, 19 இல் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள். நெதர்லாந்தின் அரசபரம்பரை வழக்கப்படி, தங்கள் நாட்டுக்கு வெளியே பிறந்த ஒருவருக்கு அரச உரிமை கிடையாது.  கனடாவில் பிறந்ததால் அந்தக் குழந்தை அரசுரிமையைப் பெறாமல் போய்விடக்கூடாது என்பதற்காகக் கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் இருக்கும் அமைதிக் கோபுரத்தின் மீது டச்சுக் கொடியை ஏற்றி அந்தப் பகுதியை ஹாலந்து நாட்டின் பகுதியாக ஒட்டாவா அரசாங்கம் அப்போது  அறிவித்துள்ளது. தங்கள் அரச குடும்பத்தின் வாரிசு சொந்தநாட்டில் பிறந்ததாக நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதற்கான நன்றியறிவிப்புதான் இந்த விழாவின் பின்னணியிலிருக்கும் மனவோட்டம்.
அரச குடும்பத்தினர் 1945, மே 2 அன்று சுதந்திரமடைந்த ஹாலந்து நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களோடு பாதுகாப்பிற்காக ராணுவவீரர்களும் வந்துள்ளனர். அந்த 5 ஆண்டுகள் தங்கள் நாட்டு அரசகுடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்ததோடு, பாதுகாப்பு வீரர்களையும் அனுப்பிவைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் படைவீரர்களுக்குப் பரிசுப்பொருள்களை ஏராளமாகக் கொடுத்துள்ளனர். அத்தோடு கனடாவிற்கு 100000 துலிப் மலர்க் கன்றுகளையும் அனுப்பிவைத்துள்ளனர். அடுத்தாண்டு இன்னும் கூடுதலாக 20,500 துலிப் செடிகளை அனுப்பி ஒட்டாவா பொதுமருத்துவமனையின் தோட்டவளாகத்தில் நட்டு வளர்க்கச் செய்திருக்கிறார்கள்.
1948 இல் ஜூலியானா நெதர்லாந்தின் அரசியானார். அதுமுதல் ஒவ்வோராண்டும் துலிப் மலர்கள் அனுப்புவது தொடர்ந்துள்ளது. அவள் அரசியாக இருந்த  1980 வரை தொடர்ந்த அந்த வழக்கம் அவளையடுத்து அரசியான பியட்ரிக்ஸ் ஆட்சி தொடங்கியபோது முடிவுக்கு வந்துள்ளது.இந்த மலர்க்காட்சி விழாவாக மாறியதற்குக் காரணம் உலக அளவில் புகழ்பெற்ற மலக்கர்ஷ் புகைப்படக்காரர் தான். நெதர்லாந்திலிருந்து வந்து பரப்பி வைக்கப்பட்ட மலர்களை விதம்விதமாகப் படம்பிடித்து பத்திரிகைகளில் அவரது வேண்டுகோளை ஏற்று, கனடா நாட்டின் தேசியத் தலைநகரின் வணிகக்கழகம் மே மாதத்தில் துலிப் மலர்க்காட்சித் திருவிழாவைக் கொண்டாட முடிவு செய்தது.
தலைநகரமாகவும் தொழிற்சாலை நகரமாகவும்  விளங்கும் ஒட்டாவா நகரத்தின் மூலச்சொல்லுக்கே வணிகம் என்றுதான் பெயர். அதன் மேற்குப்புறம் ஒட்டாவா நதி ஓடுகிறது. பனிக்காலத்தில் ஆறு கட்டியாக மாறிப் பனிச்சறுக்கு நிலமாக மாறிவிடும். அதன் கரையோர நடைபாதைகளும் வாகனச்சாலைகளும் பனியால் நிரம்பிக்கிடக்கும் காட்சியைக் கற்பனையால் நினைத்துக்கொள்ள முடிந்தது. அந்நதியின் குறுக்காகப் பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு பாலத்தின் வழியாக மேற்கு நோக்கிக் கார்கள் பறந்தன. நகரத்தைத் தாண்டிச் செல்லும்போது விரைந்துசெல்ல அனுமதி உண்டு. இடைவெளிவிட்டு வீடுகளாகவும் ஒரேமாதிரியான வீடுகள் கொண்ட பேட்டைகளையும் தாண்டி அந்த மலையடிவாரத்திற்குச் செல்லும் முன்பு விவசாயப்பரப்புகளையும் அடர்ந்த வனங்களையும் தாண்டிச் செல்ல நேர்ந்தபோது காற்றின் குளிர்மை கூடியது. பெருஞ்சாலையிலிருந்து ஒற்றைச்சாலையொன்றிற்குள் நுழைந்து 5 கிலோமீட்டர் பயண தூரத்திலிருந்தது அந்த மலையருவி. கொஞ்ச தூரம் வரை படிக்கட்டுகளும் பிறகு பாறைகளில் தாவித்தாவிச் செல்லும் நடைபாதையும் அவ்வருவியை அடையும் வழியாக இருந்தது, குற்றாலத்தில் தேனருவிக்குச் செல்லும் பாதையைப்போல.

அருவிக்குப் போனபோது மாலை ஏழுமணி. சூரியன் மஞ்சள் வெயிலோடு தகதகத்துக் கொண்டிருந்தது. இது பகல் கூடிய காலம். எட்டுமணிக்கு மேல் தான் கண்ணயரும். அதுவரை ஒளிச்சிதறல்கள் கிடைக்கும்.  போனபோது ஓட்டிய வேகத்தைவிடக் கூடுதல் வேகத்தில் கார்கள் ஓடின. நகர்மையத்தில் இரவு உணவகங்கள் 10 மணிக்கு மூடத்தொடங்கிவிடுவார்கள். அதற்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். உணவகங்களுக்குப் பக்கத்தில் வாகன நிறுத்தங்கள் கிடைப்பதும் அரிதாகும். எங்கோ நிறுத்திவிட்டு உணவகத்தை நாடிச் செல்லவேண்டும். இல்லையென்றால் நடனங்களும் மதுவும் மிஞ்சிய கூடங்களில் தான் கொஞ்சம் உணவையும் அதிகம் களிப்பையும் பெறமுடியும். களியாட்டங்கள் மட்டும் போதுமென்றால் நள்ளிரவு வரை திறந்திருக்கும் இடங்களுக்குச் செல்லவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்