எப்போதும் நின்றாடும் கள்வன்
2016 சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜனவரியிலேயே பயணத்தை உறுதிசெய்து பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டதால் மாற்ற முடியாது. ஒரு வாக்காளனாக வேட்பாளர்களையோ அவர்களது பிரதிநிதிகளாக உள்ளூர் பிரமுகர்களையோ சந்தித்திருக்க முடியாமல் போய்விட்டது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்; எப்படி வாங்கினார்கள் என்பதும் தெரிந்திருக்கும். இந்தத்தேர்தலில் அந்த அனுபவம் கிடைக்கவில்லையென்றாலும் முந்திய அனுபவங்கள் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் பணம் விளையாண்டதைப் பார்த்திருக்கிறேன். பணத்திற்கும் வாக்களிப்பிற்குமிடையேயுள்ள உறவு அறச்சிக்கலும் தனிமனித விருப்பங்களும் இணைந்தவை. திருநெல்வேலி-11, கட்டபொம்மன் நகர் என அஞ்சல் முகவரி இருந்தாலும், வீடிருப்பது கிராமப்புறத்தில். கட்டபொம்மன் நகரில் முக்கால்வாசி கீழநத்தம் பஞ்சாயத்துக்குள் இருக்கிறது. அந்தப் பஞ்சாயத்து நாங்குனேரி தொகுதிக்குள் வருகிறது. இடைவெளி 100 மீட்டர் தான். பாளையங்கோட்டை தொகுதிக்காரனாக மாறி நகரவாசி ஆகிவிடலாம். கீழநத்தம் பஞ்சா...