தமிழகத் தேர்தலை ஊடகங்கள் தான் முன் தொடங்கி வைத்தன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக் கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம். சொம்பில் நீரை வைத்து இலை போடுவதில் தொடங்கி உப்பு, ஊறுகாய், அவியல், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் எனப் பரிமாறியபின் சோற்றைப் பரிமாறும் விருந்துச் சாப்பாடுபோல. கடந்த இரண்டுமாதங்களாகப் பரிமாறிக் கொண்டிருக்கும் செய்தி அலைவரிசைகளுக்குத் தீனிபோட முடியாமல் தவிப்பவை அரசியல் கட்சிகள். கூட்டணிக்குக் கட்சிகளைத்தேடும் பின்னணி வேலையைப் பார்த்துக் கொண்டே எல்லாத் தொகுதிகளுக்கும் விருப்பமனு விற்கும் வியாபாரத்தையும் செய்கின்றன. அதையும் வரிசையில் நின்று வாங்கும் பணியைச் செவ்வனே செய்யும் தொண்டர்களும் பிரமுகர்களும், தங்கள் தலைமையின் குரூரத்தை ரசித்தபடியே கட்சி உண்டியலில் காணிக்கையைச் செலுத்தித் தங்கள் பெயரெழுதிய சீட்டையும் இணைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கட்சிகள் தான் ஆட்சிக்குவந்து இணையவழி...