அழகுகுட்டிச் செல்லம் என்னும் சோதனை முயற்சி
எல்லாக் கலைகளிலும் சோதனை முயற்சிகள் விதம்விதமானவை.பெரும்போக்குக்கு எதிரான மாற்று முயற்சிகளாக மட்டுமே இல்லாமல், பெரும்போக்கைத் திசை திருப்பி இன்னொரு பெரும்போக்கை உருவாக்க நினைப்பதுகூட சோதனை முயற்சிகள் தான். ஒற்றை இழையில் சொல்லப்படும் கதைப் பின்னலைக் கொண்ட பெரும்போக்குச் சினிமாவுக்குள் பல கதைகளை ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டுவதின் மூலம் பார்வையாளர்களைத் திளைப்புக்குள் ஆழ்த்த முடியும்; அவர்களின் ரசனைக்கான இன்னொரு வடிவத்தைத் தரமுடியும் என நினைப்பதும் சோதனை முயற்சிகள் தான். தெரிவுசெய்யப்பட்ட தலைப்பில் முன்னெடுக்கப்படும் விவாதங்களின் முன்னோடியான நீயா? நானா? நிகழ்ச்சியின் இயக்குநரான நெல்லை ஆண்டனி தயாரித்த அழகுகுட்டிச் செல்லம் என்னும் படம் அப்படியானதொரு சோதனைப் படம் என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கக் கூடிய ஒன்று.
செய்யப்படுவது திரைக்கதை:
ஒரு சினிமாவுக்கான திரைக்கதை என்பது செய்யப்படுவது. உயிரோட்டமான வாழ்க்கையைச் சொல்லும் நடப்பியல் சினிமாவும் சரி, உய்வித்துக் கரைசேர்க்கும் அறங்களைச் சொல்வதாக நம்பும் சினிமாவும்சரி செய்யப்பட்ட திரைக் கதைகளின் மேல் உருவாக்கப்படும் வேலையே. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பியில்லை. நீள, அகலங்கள் கொண்ட செவ்வகம் மாதிரியோ, நான்கு பக்கமும் சமமான சதுரம் மாதிரியோ, குறிப்பிட்ட தூரத்தை ஆரமாகக் கொண்டு உருவாக்கப்படும் வட்டப்பொருள் மாதிரியோ திரைக்கதையும் கூட எந்திரத்தனமாகச் செய்யப்படும் ஒன்றாகவே சினிமாவில் செயல் படுகிறவர்களால் நம்பப்படுகிறது.
சினிமா அதன் தோற்றக் காலத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறது. என்றாலும் திரைக்கதையை உருவாக்கத் தேவையான கதை செய்யப்பட்டதாக இருக்கவேண்டுமா? என்பது தொடர்ந்து கேள்வியாகவும் விவாதமாகவும் விமரிசனச் சொல்லாடலாகவும் இருக்கிறது. திரைக் கதையைச் செய்ய உதவும் ‘கதை’ செய்யப்பட்டதாக இருக்கும்போது அந்த சினிமா கலையின் பக்கத்திலிருந்து முழுமையாக வணிகத்தின் பக்கம் நகர்கிறது. ‘செய்யப்பட்ட கதையல்ல’ என்ற நம்பிக்கையைப் படத்தின் இயக்குநரால் உருவாக்க முடிந்தால் அந்த சினிமா கலையின் பக்கம் நெருங்கி வருகிறது. இந்த அடிப்படை வேறுபாடுதான் சினிமாவைப் பற்றிய சொல்லாடலாக மட்டுமல்ல; கலைகளைப் பற்றிய சொல்லாடலாகவே இருக்கின்றன.
ஒரு சினிமாவைப் பற்றிய இத்தகைய கருத்து எப்போது உருவாகுகிறது? அவர்கள் பார்க்கும் சினிமா, அவர்களின் வாழ்க்கையோடு எங்காவது பொருந்தும் நிலைக்குப் பக்கத்தில் இருக்கும்போதுதான் உருவாகுகிறது. திரையரங்கில் இருக்கும் பார்வையாளர்களின் பொதுவெளி இருப்பும் தனிமனித இருப்புமே திரைப்பட நிகழ்வோடு பொருந்தத் தூண்டுகிறது. அப்படியான தூண்டுதலால், தான் பார்க்கும் சினிமாவின் காட்சித் தொகுப்புகளை நிகழக்கூடியவை அல்லது எனக்கில்லையென்றாலும் இங்கே வாழும் என்னையொத்த மனிதருக்கேனும் நிகழக் கூடியவையே என்ற தர்க்கத்திற்குட்பட்டதாகப் புரிந்துகொள்கிறார்கள். அந்த மாற்றமே பார்க்கும் சினிமாவை, வாழ்க்கையைச் சொல்லும் சினிமா எனப் பார்வையாளர்களைக் கொண்டாடத்தூண்டுகிறது. அதற்கு மாறாக கதையும், திரைக்கதையும் தர்க்கங்கள் அற்ற தொடர்ச்சியோடு எடுக்கப்பட்ட நிகழ்வுத் தொகுப்புகளாக இருந்தால் பொழுதுபோக்கு சினிமா என்ற வகைக்குள் வைத்துப் பார்த்து ரசித்துவிட்டு மறக்கப்படுகிறது. இது பார்வையாளர்களுக்கு முன்னால் காட்டப்படும் படம்/ நாடகம்/ பனுவல் என அனைத்துக்கும் பொதுவானது.
அழகு குட்டி செல்லம் என்னும் முயற்சி

இந்த ஐந்து கதைகளுமே உருக்கமான, நம்பும்படியான, சமகாலத் தமிழ்வாழ்வுப் பரப்பில் மிதக்கும் குமிழிகளே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்த ஐந்துமே படத்தின் கதை அல்ல. தனித்தனியான கதைத்துண்டுகள். படத்தில் அவை திரைக்கதையின் பகுதிகளாகவே இருக்கின்றன. அடியோட்டமான கதையாக அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்ட இணைப்பு அல்லது கண்ணி வேறொன்றாகப் படத்தில் இருக்கிறது. அந்தக் கண்ணி நம்பும்படியாக - வாழ்க்கையின் அனுபவமாக இல்லாமல் விளையாட்டுத் தனமான கதையாக இருக்கிறது என்பதே இந்தப் படத்தின் பெரும் பலவீனம். உள்வாங்கும் சமூக மனப்பான்மையோடு அனாதைப் பிள்ளைகளுக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கும் உயர்வகுப்புப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியைத் தரும் பள்ளியொன்றைப் படத்தில் காட்டுகிறார் சார்லஸ். இத்தகைய பள்ளிகள் தமிழ்நாட்டில் அருகிவரும் காலம் இது. அந்தப் பள்ளிக்கான நிதியைத் தரும் அமைப்பிடமிருந்து நிதியைப் பெறுவதற்காகப் போடப்போகும் நாடகமே படத்தின் கதையை நகர்த்தும் முடிச்சுகள் கொண்ட பின்னல்.

தீமையைக் கண்டு பொங்கியெழும் நாயகன் அல்லது குடும்பத்தை நாசம் செய்தவர்களை அழிக்கக் கிளம்பும் ரோசக்கார இளைஞன் என்னும் நம்பகமான ஒருவரிக்கதை மீது நம்பமுடியாத காட்சிகளைத் திரைக்கதையாக அமைப்பது ரஜினி,விஜய், அஜித் வகையறாக்களின் திரைக்கதைக் கட்டமைப்பு. ஆனால் சார்லஸ் அந்தக் கட்டமைப்பை மாற்றிப் போட்டிருக்கிறார். அதுதான் அவர் செய்த திரைக்கதைப் புதுமை. தர்க்கமற்ற அந்த ஒருவரிக்கதையோடு ஒட்டவைக்கப்பட்ட ‘சமகால இந்திய வாழ்வில் குழந்தை ; அதனால் குடும்பங்கள் சந்திக்கும் நெருக்கடி’ என்னும் முக்கியமான சொல்லாடலின் கண்ணிகள் தனித்தனியாகவே ஒட்டாமல் நின்றுவிட்டன.
தொடர்ச்சியை உருவாக்காத திரைக்கதையை ஒட்டவைக்கத் திரைப்படத்தின் இசையும் திரும்பத் திரும்பவரும் பாடலின் லயமும் முயன்றுள்ளன. ஆனால் ஓசையைப் போலவே மௌனங்களும் அர்த்தம் உண்டாக்கக்கூடியவை என்பதை உணர்ந்தவராக இசையமைப்பாளர் வெளிப்படவில்லை. அவரது இசைக்கோர்ப்பே படத்திற்கு ஒருபடித்தான தன்மையை உண்டாக்கிவிட்டது.

கருத்துகள்