பேரா. கே.ஏ. குணசேகரன்: தயக்கமின்றித் தடங்கள் பதித்தவர்

பேரா. கே. ஏ. குணசேகரன் எனது நீண்ட நாள் நண்பர். நண்பர் என்று சொல்வதைவிட ஒருசாலை மாணாக்கர் எனவும் ஒருசாலை ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கிப் பாதியில் முறித்துக்கொண்டு பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு. இப்படியே போனால் சொதப்பிவிடுவோமே என்று மனம் சொல்லும்போதே முன்வைக்கக் கால்கள் தயங்கிவிடும். ஓரடி முன்னால் போய்விட்டுப் பின்னால் ஈரடி வைப்பதே வாடிக்கையாகிவிடும்.என்னுடைய இயல்பு இது என்றால், இதற்கு நேரெதிரானவர் நண்பர் கே.ஏ.ஜி. இந்தமாதிரியான கெட்ட பழக்கங்களெல்லாம் கே. ஏ. குணசேகரனிடம் எட்டிப் பார்த்ததே இல்லை. இதை நான் அவரருகில் இருந்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்த காலத்தில் மட்டுமல்லாமல், தூரமாகப் போனபின்பும் அதனைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ரசித்து ரசித்துச் சொன்ன அவரது வாழ்க்கையின் முடிவை எனக்குச் சொன்ன அந்த உள்ளுணர்வுத் தூண்டல் நம்பிக்கையின்மையின் மீது சம்மட்டியாய்த் தாக்கியது என்றுதான் சொல்லவேண்டும்.ஆம். நமது உள்ளுணர்வுத் தூண்டல்கள் எப்போதும் சோகத்தையே முன்னறிவிப்புச் செய்கின்றன. காவியங்களில் கூடச் சோகத்தை முன்னறிவிப்புச் செய்த காட்சிகளே கவித்துவம் நிரப்பியனவாகக் காட்டப்பட்டுள்ளன. கோவலன் படுகொலைப்பட்டு இறக்கப் போகிறான் என்பதைச் சொல்வன போலப் பூக்களில் கண்ணீர்த் துளிகளைச் சிந்தின என்றும், கோட்டை வாயிலில் அசைந்த கொடிகள் ‘வாரல்’ என்று வழிமறித்தன என்றும் பெருங்கவி இளங்கோ எழுதுகிறான். இத்தகைய முன்னுணர்வுகள் கவிகளின் கற்பனையல்ல என்பதை நானே எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நண்பர் பேராசிரியர் கே.ஏ.ஜியின் மரணச்செய்தியும் அப்படிப்பட்ட ஒரு அனுபவமாக ஆகிவிட்டது.

பொங்கலையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா வழங்கிய நேர்காணல் மீது பலவிதமான எதிர்வினைகளைச் சமூக ஊடகங்களில் இயங்குவோர் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் இளையராஜாவுக்கும் பேரா. குணசேகரனுக்குமிடையே நடந்த முரண் ஒன்றையும் குறிப்பிட்டு இளையராஜா “மக்கள் கலைஞரான கே.ஏ.குணசேகரன் மீது வழக்குப் போடுவதாக மிரட்டினார் ” என்றொரு பதிவை எழுதினார் தனது முகநூலில். அப்போது “இளையராஜா மிரட்ட மட்டும் செய்யவில்லை. அவரது சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது; கே ஏ ஜி. வழக்கைச் சந்தித்தார் என்பதை நானறிவேன்” என்று குறிப்பிட்டு அவரது பெயரைத் தட்டச்சு செய்தேன். அவரது பெயரைத் தட்டச்சுச் செய்து வரலாறு தவறாகி விடக்கூடாது என்ற நினைத்த அந்த நேரத்தில் அவரது வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வந்திருந்தது. நான் அந்தப் பெயரை எழுதிய நேரத்தில் வாழ்வின் இறுதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கணினித் திரையை மூடுவதற்குள் நண்பர் கே. ஏ. குணசேகரன் மறைந்துவிட்டார் என்ற தகவல் தொலைபேசி வழியாக வந்து சேர்ந்தது. அதிர்ச்சியில் நடுங்கிப் போய்விட்டேன்.

அன்று சென்னையில் நடக்கும் ‘வாழ்க்கைக்கான இலக்கியம்’ என்னும் கலை இலக்கிய விழாவில் தலித் அரங்கியல் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியவர். ஒவ்வோராண்டும் ஆங்கில இந்துப் பத்திரிகைப் பொங்கலையொட்டி ஏற்பாடு செய்யும் பெருவிழா அது. இந்திய அளவிலான ஆளுமைகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான இலக்கிய ஆளுமைகளும் பங்கேற்று உரையாடும் அந்த விழாவில் பங்கேற்காமலேயே தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டார் என்பது வருத்தமான ஒன்று. பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் நிரம்பிய மைதானங்களையும் சில ஆயிரம் பேர்கள் நிரம்பிய அரங்குகளையும் தனது வெங்கலக் குரலாலும், குரலை இசைக்கக் காரணமான பாடல் வரிகளில் வழியும் உண்மையாலும் கட்டிப்போட்டுவிடும் பாடகர் அவர். நாட்டார் நாடகங்கள், ஆடல்கள், வாழ்வியல் மதிப்பீடுகள், மாற்றங்களின் பதிவுகள் என ஒவ்வொன்றையும் தனது பாடல் ஆதாரத்தின் மூலம் ஏற்கச்செய்த ஆற்றல் கொண்ட அவரின் நட்பு மூன்று பத்தாண்டுகளைத் தாண்டியது.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் முதுகலைத் தமிழ் படித்துக்கொண்டிருந்தபோது முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பல்கலைக் கழகத்திற்கு வந்தார் கே.ஏ.ஜி., புதுக்கவிதையில் அதிகம் ஈடுபாடுகொண்ட பேராசிரியர் சி.கனகசபாபதியின் மேசைக்கு முன்புதான் அவர் அதிகம் அமர்ந்திருப்பார். மதுரை, தியாகராசர் கல்லூரியில் படித்தவரைப் பல்கலைக்கழகத்தில் சேரும்படி ஏற்பாடு செய்தவர் கவி மீரா; கவி மீராவிடம் சிவகங்கை மன்னர் கல்லூரியில் படித்தவர். அவர் வழியாகவே இடதுசாரி மேடைகளில் பாடும் வாய்ப்புகளைப் பெற்றவர். அவர் பல்கலைக்கழகத்திற்கு வரும் முன்பே அவரது குரலோடு சேர்த்து மதுரையின் தெருவொன்றின் முனையில் பாடகராக நான் பார்த்திருக்கிறேன்.

நாட்டுப்புறப் பாடல்களில் முனைவர் பட்டம் செய்யவந்தவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் முனைவர் நவநீதகிருஷ்ணன். பின்னாளில் தமிழகம் முழுவதும் நாட்டுப்புறப் பாடகப் புகழோடு விளங்கிய திருமதி விசயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் கணவர். அந்தத் தம்பதியருக்கு முன்பே தமிழகம் அறிந்த பாடகர் கே ஏ ஜி. ஆனால் அவரது பாடல்களெல்லாம் சமூக மாற்றத்தையும் சமூக விமரிசனத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தையும் முன்வைத்தவை. அதனால் கோயில் கொடைகள், கொண்டாட்டங்கள் போன்றவற்றில் இடம்பெறாமல் மக்கள் இயக்கங்களின் மேடைகளில் மட்டுமே இசைக்கும் வாய்ப்பைப் பெற்றவை. ஆனால் அவரது நெறியாளரும் அவரது துணைவியாரும் நேரெதிராகக் கோயில்கொடைகள், சமயவிழாக்கள், அரசாங்க நிகழ்வுகள் எனப் பாடல்களை மேடையேற்றினர். இதனாலேயே முரண்பாடுகளும் ஏற்பட்டன.

கே.ஏ. குணசேகரன், ஆய்வாளர் விடுதியில்; நான் மாணவர் விடுதியில். என்றாலும் அங்கு போய்ப் பேசிக்கொண்டிருப்போம். எப்போதும் அவரது விடுதி அறையில் கட்சிக்காரர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பாடகர்கள் என ஒன்றிரண்டுபேர் விருந்தினர்களாக இருப்பார்கள். அவரது விடுதிக்கட்டணம் மற்றவர்களின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்குக்கும் மேல் அதிகமாக வரும். வருபவர்களையெல்லாம் விருந்தினர் பட்டியலில் இணைத்துச் சாப்பிடச்சொல்லி அனுப்புவார். பாடகராகவும் ஆய்வு உதவித்தொகையாகவும் கிடைத்த பணத்தைச் செலவழிப்பதில் தயக்கமே காட்ட மாட்டார். வெளியில் போய்வரும்போதெல்லாம் தொங்கும் பையில் புத்தகங்களோடு வருவார். அவற்றில் பல அவருக்குக் கொடுக்கப்பட்ட புத்தகங்களாகவே இருக்கும். ஆய்வாளராக இருந்த காலத்தில் அவ்வளவு புகழோடு இருந்த ஒருவரைப் பல்கலைக்கழகம் பார்த்திருக்காது

பல ஊர்களுக்கும் பாடப்போகும் அவரது குழுவினரோடு வெறும் கேட்பவனாகவே பயணம் செய்திருக்கிறேன். போகும்போது மார்க்சியம், கலையின் சமூகப்பாத்திரம், விழிப்புணர்வூட்டுவதில் கலைஞர்களின் பங்களிப்பு எனப் பேசிக்கொண்டே போவோம். ஒருமுறை அவர் உடன் வரமுடியாத நிலையில் சத்தியமங்கலத்திற்குக் குழுவினரோடு போய்வரும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு கச்சேரி தொடங்கி இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. வருவாரா வரமாட்டாரா? என்று எனக்குக் கலக்கம். நான் பொறுப்பேற்றுப் போனதால் அமைப்பாளர்கள் என்னிடம் தான் கடிந்து கொண்டே இருந்தனர். ஆனால் வந்துவிட்டார். மதுரையிலிருந்து தஞ்சாவூர் போய்விட்டுப் பேருந்து, லாரி, இருசக்கர வாகனம் என ஒவ்வொன்றாய்த் தாவித்தாவிப் பயணம்செய்து வந்துவிட்டார். அதன்பிறகு இரண்டு மணி நேரம் பாட்டுக்கச்சேரியை நடத்தினார்.

அவரது திருமணத்திற்காகச் சிவகங்கை போய்க் கலந்துகொண்ட நாள் மறக்கமுடியாத நாள். மணமகனாகவும் பாடகராகவும் மாறிமாறித் தோன்றினார் மேடையில். மரபான திருமணச்சடங்குகள் எதுவுமில்லாமல், மேடைநிகழ்வாகவே அந்தத்திருமணம் நடந்தது. அவரது துணைவியாரும் மதுரைப்பல்கலைக்கழக மாணவிதான்.  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இரண்டுபேரும் ஒரேநாளில் நாடகத்துறைக்கு நேர்காணலுக்குப் போனோம். அவர் வந்தது இணைப்பேராசிரியர் பதவிக்கு. நான் போனது விரிவுரையாளர் பதவிக்கு. இருவரின் தேர்வும் எதிர்பாராத திருப்பத்தால் நிகழ்ந்தது. அதற்குமுன்பு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த திரு ராஜு, திரு ஆறுமுகம் ஆகிய இருவரையும் மனதில் வைத்து நடத்தப்பெற்ற நேர்காணலில் நாங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டோம். அடிப்படைத்தகுதியோடு நாடகப் பங்கேற்புகளே எங்களைத் தேர்வுசெய்யவைத்தது. அவர் இணைப்பேராசிரியராகவும் நாள் விரிவுரையாளராகவும் ஒரேநாளில் பணியில் சேர்ந்தோம்.


பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் நாடகம் பற்றிப் பெரிதும் கருத்து வேறுபாடுகள் இருந்ததில்லை. நாடகத்துறை நிர்வாகம் பற்றிய முரண்பாடுகள் இருவருக்கும் உண்டு. சண்டை போடுவேன். சிரித்துக்கொண்டே எதிர்கொள்வார். எட்டாண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு நான் வெளியேறியபோது வாழ்த்தி அனுப்பியவர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகும் பலதடவை துறையின் செயல்பாடுகளில் பங்கெடுக்க அழைத்தவர் அவர் தான். நாடகத்துறையிலிருந்து சென்னையில் இயங்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோதும் என்னை அழைப்பார்; பேசுவோம். கருத்தரங்குகளைத் திட்டமிடும்போது கலந்துரையாடுவார். எப்போதும் உள்வாங்கும் குணத்தை வெளிப்படுத்துவார். மற்றவர்கள் பொறுப்புக்கு வரும்போது நிராகரிப்பார்கள்; அவரிடம் மட்டுமே எல்லாத் தரப்பையும் உள்வாங்கும் தன்மை இருந்தது. அதைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பைத் தந்ததற்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன்.

அவரது குரலே அவரது சொத்து. இடதுசாரி இயக்கங்களுக்காக அவரது குரல் மேடைதோறும் முழங்கியிருக்கிறது. தலித் இயக்கங்களின் ஆரம்ப வளர்ச்சியில் அவரது குரலாற்றிய பங்களிப்பு முக்கியமானது. நாட்டார்கலைகள் அனைத்தையும் பற்றி அனுபவ பூர்வமாக உரையாற்றக்கூடிய ஆளுமை. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார்; கட்டுரைகள் வாசித்துள்ளார். ஊடகம் இதழில் கத்தாரோடு நிகர்நிலைப்படுத்தி எழுதப்பற்ற கட்டுரையால் மனம் மகிழ்ந்தார். சமூக நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாடக ஆக்கங்களை எழுதியவர். வட்டார வரலாறு, நாட்டார் நம்பிக்கைகள், கதைகள் எப்போதும் அவரது கவனத்தில் இருந்துகொண்டே இருந்தன. நாடக எழுத்திலிருந்து தன் வரலாற்றுக்குள்ளும் தனது பங்களிப்பைச் செய்தவர். வடு அவரது தன்வரலாற்றுப் புதினம். அவரது எழுத்து மற்றும் இயக்கத்தால் பலி ஆடுகள் முக்கியமான நாடகமாக உருவானது. 

தலித் அரங்கியலுக்கு அது ஒரு மைல்கல். அந்தப் பிரதியில் பணியாற்றப் பலரை அனுமதித்ததின் வழியாகப் பல தளங்கள் கொண்ட பிரதியாகவும் புதுவகை உத்திகளைப் பயிற்சி செய்யும் வாய்ப்புடைய பிரதியாகவும் மாற்றினார். தமிழ் நவீன நாடக முயற்சிகளுக்கு அடித்தளமிட்ட காந்திகிராம நாடகப் பயிலரங்கில் கிடைத்த தகவலின் அடிப்படையில் முதன்முதலில் நூலொன்றை எழுதியவர் அவர் தான். கிடைத்த தகவலைப் பலருக்கும் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று தயங்காமல் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். நாட்டுப்புறப் பாடல்களை மண்ணின் பாடல்கள் எனப் பேச வைத்தவர் அவர். நாட்டார் புறவியல் என்பது கிராமம் சார்ந்த ஒன்று எனக் கருதப்பட்ட சூழலில் நகர்சார் நாட்டுப்புறக்கதைகளையும் கதைப்பாடல்களையும் தொகுத்து நகர்சார் நாட்டுப்புறம் என்ற சொல்லாட்சியைப் பயன்பாட்டிற்குள் வரவைத்தார். அதற்குள் தலித்துகளின் குரலைத் தனித்துக் காட்டும் பிரிவினைச் சேரிப்புறவியல் என அழைக்கவேண்டுமெனக் காரணங்களோடு முன் மொழிந்தவரும் அவர்தான். இதையெல்லாம் சொல்லும்போது ஆய்வாளர்களும் அறிஞர்களும் ஏற்பார்களா? நிராகரிப்பார்களா? என்றெல்லாம் தயங்கியதே இல்லை. அதேபோல் கடந்த ஐந்தாண்டுகளில் செவ்வியல் இலக்கியங்களுக்கு உரையெழுதும் முயற்சிகளிலும் தயங்காது இறங்கினார். பதிற்றுப்பத்திற்கும் பட்டினப்பாலைக்கும் உரைகளை வெளியிட்டார். எல்லாம் நமது அறிவின் எல்லைக்குட்பட்டதே என நினைக்கும் அவரது மனம் எனக்கெல்லாம் வருவதே இல்லை.

அண்மையில் புதுச்சேரி போனபோது நேரில் பார்க்கவில்லை. சென்னையில் மருத்துவமனையில் இருந்தார். லண்டனிலிருந்து அவரது மாணவரும் நண்பருமான பால.சுகுமார் வந்து பார்த்துவிட்டுப் பயமா இருக்கு ராமசாமி! என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு நடுங்கினார். அந்த நடுக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. நண்பரே இப்போது நான் நடுங்கியபடி இருக்கிறேன். பாண்டிச்சேரியே தூரம் தூரமாக விலகிக் கொண்டிருக்கிறது.நீங்கள் இல்லாத நாடகத்துறை வளாகத்தின் வெறுமையைத் தாங்கும் மனம் இன்னும் வரவில்லை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்