எண்ணங்களால் இணையும் நிகழ்வுகள்: நேசமித்ரனின் பிரசவ வார்டு
பிரசவ வார்டு - இந்தமாத உயிர்மையில் வந்துள்ள சிறுகதையின் தலைப்பு.
நிகழ்வெளியைத் தலைப்பாக்கிக் கதையை எழுதியுள்ளவர் நேசமித்ரன்.
ஒரு மருத்துவ மனையின்
பிரசவவார்டு ஒவ்வொரு நாளும் பல தடவை உயிர்ப்பு கொள்ளும் இடம். ஒவ்வொரு பிரசவமும் ஒவ்வொரு
நாளின் உதயம். ஒரேநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட புதுமனித உயிரியின் வரவை உறுதிப்படுத்துவதன்
மூலம் ஒருநாளைக்குள் திரும்பத்திரும்பப் பிறக்கும் உதயங்கள் அதற்குண்டு. வலியோடு வரும்
கர்ப்பிணிப் பெண்ணிற்காகத் தயார்ப்படுத்தும் தாதியின் அசைவோடு பிரகாசமடையும் பிரசவவார்டு,
அதனைக்கழுவிச் சுத்தம் செய்துவிட்டுச் சாராயம் குடித்துச் சாயும் ஒரு துப்புரவுத் தொழிலாளியின்
பணியோடு வெளிச்சத்தைக் குறைத்துக் கொள்ளும் பிரசவவார்டு, அதேநாளில் இன்னும்சில தடவை
உயிர்பெறும். அதற்காக அந்தத் துப்புரவுத் தொழிலாளி திரும்பவும் உயிர்பெறுகிறான்.
வலியிலிருந்து மகிழ்ச்சியைக் கொண்டுவரும் வேலையைச் செய்யும் பணியில் ஈடுபடும் தாதிகளும்
நர்சுகளும் நிரம்பிய இடம். ஆயுதங்கள், பணத்தோடு தொடர்புடையன என்பதை எளிய மனிதர்களுக்கும்
புரியவைக்குமிடம். தயாராக இருக்கும் ஆயுதங்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே, ஆயுதங்களைக்
கைவிடும் பக்குவம் கொண்ட மருத்துவர்கள் குறைந்துகொண்டு வரும் காலமிது. ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்
பிரசவங்கள் பணமதிப்புமிக்கவை. அவற்றைப் பயன்படுத்தாத பிரசவங்கள் குறைந்த தொகைக்குரியவை
என்ற தர்க்கமே முரணானவை. உண்மையில் ஆயுதங்களைப் பயன்படுத்தாத மருத்துவர்களுக்கும் மருத்துவமனைக்கும்
கூடுதல் தொகை தரலாம். இயல்பான பிரசவத்தைக் கூட ஆயுதப்போராட்டமாய் மாற்றிக் கூடுதல்
தொகை வசூல் செய்யும் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் அனுபவம் அற்றவர்கள் அல்லது பணத்தாசை
பிடித்தவர்கள். இப்படியான எண்ணங்களைத் தரவல்ல நிகழ்வுவெளி பிரசவ வார்டு. இந்த எண்ணா
ஓட்டங்களால் உருவாகும் சிறுகதை மருத்துவமனைக்குச் செல்லும் வாடிக்கையாளர்களின் பார்வையிலிருந்து
எழுதப்படும் கதையாக இருக்கும். நேசமித்ரன் இந்தக் கதையை அப்படித்தான் தொடங்கியிருக்கிறார்;
ஆனால் அப்படித் தொடர்ந்து கதையை நிகழ்த்தவில்லை. மரபான கதையை எழுதவேண்டாமென நினைப்பவர்
அப்படி நிகழ்த்தவேண்டுமென எதிர்பார்க்கவேண்டியதுமில்லை.
பெண்ணொருத்தியின் பிரசவ வலியின் சித்திரிப்பில் தொடங்கியதை அங்கேயே நிறுத்திவிட்டுத்
துப்புரவுத் தொழிலாளியான சேவியரின் அந்திமக்கால வாழ்க்கைக்குள் கதையை நிகழ்த்துகிறார்.
ஆடுகளை வளர்த்துக் கிடாய்போட்டு முதன்மைத் தொழிலான வேளாண்மையின் இணைத் தொழில் செய்தவர்
கிருஷ்ணராஜ். தொழில்மயமும் நகர்மயமும் அறிவியல் பார்வையும் இணைந்து வேளாண்மையைச் சிதைத்தபோது முதலில் இல்லாமல் போவது வேளாண்மையில்
நேரடியாக ஈடுபட்ட விவசாயக்கூலிகள். அடுத்து வேளாண்மையிலிருந்து தூக்கியெறியப்படுபவர்கள்
கைவினைத் தொழிலில் இருப்பவர்களும் கால்நடைகளை வளர்த்து வேளாண்மையின் இணையர்களாக இருப்பவர்களும்
தான்.
கிராமப்புறத் தாதிப்பெண்களால் பார்க்கப்பட்ட பிரசவங்களை அறிவியல் மயமாக்கிய
இடம் மருத்துவமனையின் பிரசவவார்டுகள். இந்த
நகர்வுக்குப் பின்னே இந்திய சமூகம்/ தமிழ்ச் சமூகம் நகர்ந்ததைக் கேள்விக்குள்ளாக்க
விரும்புவதன் மூலம் தனது கதையை அரசியல் கதையாக்குகிறார் நேசமித்ரன். பயன்பாட்டு விலங்குகளான
ஆடுகளை வளர்த்துக் கிடாய்போட்டு வாழ்ந்த கிருஷ்ணராஜின் நேசம் சேவியராக மாறிய பின் பூனையின்
நேசனாக மாறுகிறான். பூனை அவனது வாழ்க்கைக்குப் பயன்படும் விலங்கல்ல. விலங்கோடு இணைந்து
வாழ்ந்த மனிதனின் நேசத்தைக் காட்டும் குறியீடு.
மரபான சிறுகதை தொடர்புடைய நிகழ்வுகளை அடுக்குவதன் மூலம் வடிவம் கொள்கிறது. ஆனால்
தொடர்ச்சியற்ற நிகழ்வுகளால் அடுக்கப்படும் சிறுகதை ஆசிரியர் முன்வைக்க விரும்பும் சிந்தனைத்
தொடர்ச்சியல் வடிவம் பெறுகிறது. நேசமித்ரனின் கதைகள் சிந்தனைத் தொடர்ச்சிகளால் வடிவம்
கொள்பவை. அதைக் கவனித்து வாசிக்கும்போது வாசிப்பவர்களும் சிந்தனைகளால் நிறைகிறார்கள்.
கருத்துகள்