எளிமையின் அழகியல் : கண்டராதித்தனின் திருச்சாழல்

எனது கவிதை வாசிப்பு எளிமையானது. தேடிக்கண்டடைவது. தேடும்போது சலிப்பில் விலகிப்போவதுண்டு. நினைவுகளால் நிறுத்தித் தொடர்வதுண்டு. நிறுத்தப்பட்டது நினைவுக்கு வராமலே போவதுமுண்டு. கவிதை வாசிப்பில் பெரும்பாலானவர்களின் வாசிப்பு இப்படித்தான் என நினைக்கிறேன். ஒன்று நினைவிலாடும்போது திரும்பவும் தேடிப்போகத்தூண்டும். சிரிப்பும் நகைப்பும் சிந்தனைத் தெரிப்பும் கைகூடிவந்தால் நீண்ட பயணம் நிச்சயம்.

வாசிக்கும் கவிதைக்குள் இருக்கும் பாத்திரத்தை/கவிதைசொல்லியைத் தேடிக் கண்டுபிடிப்பதே எனது முதல்வேலை. அந்தத் தேடலில் கவிதைக்குள் அலைவது ஆண் தன்னிலையா? அல்லது பெண் தன்னிலையா? இரண்டுமற்ற பொதுத்தன்னிலையா? எளிமையாகக் கண்டுபிடித்துக் கொள்வேன்.  அதன்பிறகு அந்தச் சொல்லிகள் யாரோடு உரையாடுகிறார்கள் என்பதும், எதுபற்றிப் பேசுகிறார்கள் என்பதும் எனக்குப் பிடிபடத் தொடங்கிவிடும். ஆணென்றாலும் பெண்ணென்றாலும் உடல், சமூக அடையாளங்களால் அர்த்தப்படுத்திக் கொள்வேன். அவ்விரண்டும் சேர்ந்து தன்னிலைகளின் உளவியலைக் கட்டமைத்துக் கொடுக்கும் என்பது எனது வாசிப்பு சார்ந்த நம்பிக்கை. நவீனக் கவிதைகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு இந்த எளிய சூத்திரத்தைப் பரிந்துரை செய்கிறேன்

ஆண்கவிகள் ஆண் தன்னிலையாகவும் பெண்கவிகள் பெண் தன்னிலையாகவும் பேசுவதே தமிழ் நவீனக்கவிதையில் அதிகம் நடக்கிறது. மிகக்குறைவான கவிதைகளில் தான் கவிகள் பால்மாறிப்பேசுகிறார்கள். தமிழின் நீண்ட கவிதைப் பரப்பில் ஆண்கள் பல நேரங்களில் பால்மாறிப் பேசுவதன் மூலம் எதிர்ப்பாலினரைக் குற்றவுணர்வுக்குள் தள்ளப் பார்த்திருக்கிறார்கள். அதற்காகத்தானோ இவர்கள் பால் மாறுகிறார்கள் என்ற ஐயம் கூட எழுவதுண்டு. கண்டராதித்தனின் தொகுப்பில் அதிலிருந்து விலகிய நிலையை-  பால் மாறிப்பேசப்பட்ட ஒரு கவிதையில் வாசிக்கக் கிடைத்தது ”கிழமைகளைப் பரிசளிக்கும் பதுமைகள்” பற்றிய கவிதை. இக்கவிதையின் பால்நிலைமாற்றம் குற்றவுணர்வு உண்டாக்கும் நோக்கம் கொண்டதல்ல. எதிர்ப்பாலின் இயல்புகளுக்குள் நுழையும் நோக்கம். மதம், இனம்,வர்க்கம், சாதி முதலான அடையாளங்களால் உண்டாகும் தன்னிலைகளைப் போலியாகக் கடந்துசெல்வதாகக் கவிதை செய்துவிடலாம். ஆனால் பால் சார்ந்த உளவியல் தன்னிலையைப் போலிசெய்தல் எளிதானதல்ல. அப்படிச் செய்யும்போது இதுபோலிச் சொல்லாடல் எனப் பல்லிளிக்கும். ஆனால் கண்டராதித்தனின் பால்மாற்றம் போலித்தன்மையைக் கொன்றிருக்கிறது.

 நவீன கவிகள் பொதுநிலையில் பேசும் கவிதைகளையும் மிகக்குறைவாகவே எழுதுகிறார்கள். காதல், இயலாமை, ஏக்கம், காமம், சுயநிலை, குற்றவுணர்வு, ஏமாற்றம், எனத்தனக்குள் எழும் சிக்கல்களை வெளிப்படையாகவும் திருகலாகவும் எழுதுகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளும் பொறுப்பு முக்கியமான ஒன்று. கண்டராதித்தனும் விலக்கில்லை. எண்ணிட்டு எழுதப்பட்டுள்ள கவிதைகள் பொறுப்பேற்றுக்கொண்ட வெளிப்பாடுகள். யோக்கியதை -சிலகுறிப்புகள் 1-7,உதிரி 1-3 திருச்சாழல் 1-3, சிறு துக்கம் 1-4. போன்றனவற்றை வாசிக்கும்போது வெளிப்படை - திருகல் என இரட்டைநிலைகளை வாசகர்களுக்கு கடத்துகின்றன.
யோக்கியனாகவே கழித்துவிடும்
வாழ்க்கையைப் போலொரு
துயருண்டா? இல்லையா? 
என்று கேட்கும் கேள்வி (யோக்கியதை- 5)வெளிப்படையானது. ஆனால் அதே நேரத்தில் திருகல்தனமும் கொண்டது. கவிதையில் இடப்பட்ட வினாக்குறிகளே இதனை உண்டாக்குகின்றன..  சிறுதுக்கத்தில் உள்ள 2 வது கவிதை
துக்கத்தை யாரோ
சாவுடன் பொருத்திச்
சொன்னார்கள்.
பாடையைத்
தூக்கும்வரை
எனக்குப் புரியவில்லை.
என்றொரு விளக்கத்தைச் சொல்கிறது. வினாவாக, விளக்கமாக, புரிதலாக, எள்ளலாக விழும் வரிகளில் வெளிப்படைத்தன்மைக்குள் இருக்கும் அரூபத்தைக் கணிக்கமுடிந்தால் யோசிக்கவும் முடியும். இரண்டு கவிதைகளில் வார்த்தை விளையாட்டின் வழியாகவே ஆழமான கேள்விகளை உருவாக்கியுள்ளார் கண்டராதித்தன். ஒன்று பந்துகள் - பந்துக்கள்.  பந்துகளைப் பற்றிய கவிதைக்கு, ”பந்துக்கள்” எனத் தலைப்பிடுவதன் மூலம் எழுப்பும் கேள்விகள் மனித உறவுகள் பற்றியதாக மாறுகிறது. இன்னொன்று ஏகாந்தம்- ஏகாம்பரம். வாசிக்கும்போது உண்டாகும் நகைச்சுவைக்குப் பின்னால் மனித மனநிலை விசாரிக்கப்படுகின்றது. எப்போதும் வார்த்தை விளையாட்டுகள் எள்ளலோடு நின்றுவிடும்; ஆனால் அதனைத் தாண்டிய உணர்வை இவற்றில் உருவாக்குகிறார்

என்ன சொல்ல கவிதை எழுதப்படுகிறது என்பதைப் பார்ப்பதைப்போல என்ன விதமாகக் கவிதை வடிவம் கொள்கிறது? அதற்குள் கவிகள் வைக்கும் மொழியின் சிறப்புக்கூறுகள் உருவாக்கும் ரசனைக்கான அம்சங்கள் எவை என்பதையும் வாசிப்பது கவிதை வாசிப்பின் வேலையாக நான் நினைத்துக்கொள்வதுண்டு. எந்த வாசிப்பையும் ஒருவேலையாகவே செய்யும் நான் அதனைப் பதிந்துவைத்துக்கொள்ளாமல் தள்ளிவிடுவதுமில்லை. கண்டராதித்தன் கவிதைகள் பற்றிய இந்தப்பதிவும் அத்தகையதே.  இயலாமை, நட்பு அல்லது அன்புக்கான ஏக்கமனம், நினைவுகளுக்குள் நுழையும் தேடல், ஆண்-பெண் உறவுபற்றிய சமூகமனம் போன்றனவற்றைத் திரும்பத்திரும்பச் சொல்லும் கண்டராதித்தனின் திருச்சாழல் தொகுப்பிலுள்ள கவிதைகள் எளிமையான சொற்களால் வடிவம் கொண்டிருக்கின்றன. அதற்காக கதைசொல்லும் உத்தியைக் கைக்கொண்டிருக்கின்றன (உதிரி, நோய்ப்பிண்டம், மகளின் கண்ணீர்). சிலவற்றில் தமிழின் மொழி மற்றும் சமயவரலாறுகளை முன்வைத்துப் பயணிக்கின்றன.  இந்தியத் தொல்மனத்திலிருந்து விலகித் தமிழ்த் தொல்மனம் மற்றும் வரலாற்றுக்குறியீடுகளுக்குள் நுழையும் மாற்றம் நவீனத்தமிழ்க் கவிகளிடம் தன்னுணர்வோடு நடந்துகொண்டிருக்கிறது. அதன்வழியாக நவீனத் தமிழ்க்கவிதை ஒருவித வட்டாரத்தன்மையை உருவாக்குகின்றன. இந்த வட்டாரத்தன்மை நேரடியாக உலகத்தன்மைக்குள் நுழையும் பாய்ச்சல் கொண்டவை. பெயர்கள் வழியாக நமது நினைவுப்பரப்பைக் கிளறும் வேலையைச் செய்யும் இந்தக் கவிதைகள்  சோமன் சாதாரணம், திருக்கோலம், காலமாற்றத்தின் காதல், சஞ்சாரம் சீபத்த போன்றன அத்தகையவை.
நான் சொன்ன எளிமைக்கும் கதைத் தன்மைக்கும் உதாரணமாக இந்தக் கவிதையை நீங்கள் வாசித்துப் பார்க்கலாம்.
ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது
==================================
நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் 
யாரைப்போல இருப்பேனோ
நேற்று அவளை நான் பார்த்தேன்.
பேருந்தின் கடைசியில் நின்றிருந்த/அந்தப் பெண்ணிற்கு என் வயதிருக்கும்
அந்த நாசி,
அந்தக் கண்கள்,/கருங்கூந்தல்,
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை,
வடிவான தோற்றமென
நான் பெண்ணாய்ப் பிறந்தால்
வடிவெடுக்கும் தோற்றம் தான் அது
இரண்டொருமுறை யதேச்சையாய் இருவரும்
பார்த்துக்கொண்டோம்.
இரண்டொருமுறை யதேச்சையாய் இருவரும்/பார்ப்பதைத் தவிர்த்தோம்.
இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்.
ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்.
கவிதையின் நிகழிடமாகப் பேருந்தைக் கட்டியெழுப்பியதின் வழியாகக் கவிதைக்குக் கதைத் தன்மையை உண்டாக்குகிறார். இந்தக் கவிதையும் எளிய சொற்கூட்டங்களால் ஆனதுதான். தலைப்பில் இருக்கும் கொடும்பாவி சங்கமரபின் கைக்கிளையாக மாறிப் பழைய நினைவுகளுக்குள் நுழைக்கின்றது அடுக்கப்படும் வரிகளில்
எங்காவது கொடும்பாவி கட்டியிழுத்தால் கண்டிப்பாக உங்களை நினைப்பேன்
====================================
சுமைதாங்கிக் கற்களை ஆலமரங்களை
குளக்கரைகளைக்
கண்டால் என்னை நினைப்பீர்களா?
கள்ளிச்செடிகளை ஏரிமதகுகளை ஓடைவாய்க்கால்களை
கண்டால் என்னை நினைப்பீர்களா?
தவிட்டுக்கருவிகளை காடை கௌதாரிகளை
கட்டுவிரியனைக
கண்டால் என்னை நினைப்பீர்களா?
ஒற்றையடிபாதைகளை கூரைவீடுகளை
வேலிப்படலைகளைக்
கண்டால் என்னை நினைப்பீர்களா?
ஆமெனில் 
மந்தாரையிலையில் மரவள்ளிக்கிழங்கை வைத்து
உபசரிக்கும் ஊர்க்கோடி இல்லத்தில்
உங்களுக்கு மணம் முடிக்கவேண்டி
மன்றாடிக்கிடப்பேன்.
ஒற்றைத்தன்னிலைக் கூற்றுக்குப் பதிலாக பொதுவியல் தன்மையோடு அமையும் கூற்றுநிலைக் கவிதைகள் பொதுவெளிக்கான கேள்விகளாக மாறிச் சமூகம் மற்றும் அரசியல் விமரிசனங்களாக ஆகிவிடும் வாய்ப்புகள் அதிகம் கொண்டவை. அவைகளை நான் விருப்பத்தோடு வாசிப்பேன்; கொண்டாடத்தக்க கவிதைகள் என்றும் சொல்வேன். தமிழில் கொண்டாடப்படும் ஆத்மநாமும், ஞானக்கூத்தனும், மனுஷ்யபுத்திரனும் இத்தகைய கவிதைகளை அதிகம் எழுதியவர்கள். அவர்களோடு இந்த ஒரு கவிதை மூலம் கண்டராதித்தனையும் சேர்த்துக்கொள்கிறேன். அந்தத்தலைப்பே ஒரு முழுக்கவிதையாக இருக்கிறது:
பிழையான விலங்கை நாம் ஏற்பதும், ஏற்காமலிருப்பதும் சட்டப்படி                    தண்டனைக்குரியது அல்ல
=====================================================================
நீண்ட காலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்
வித்தைகள் வாங்கி விற்கும் யாத்ரீகன்
தற்செயலாக நாங்கள் கேட்டோம்
ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்
கொண்ட
மக்களைக் கண்டதுண்டோ வென்று
பதிலுக்கு யாம் வெட்கும்படி
காற்றைப் பிளந்து கூறிட்டான்
நீரை அளவிட்டு முடிந்தான்
கற்பாறைகளை விலை காட்டினான்
நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல
உறுமினோம்.
பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்.
அது சமயம் அவன் கேட்டான்
இவ்வாறு அண்டிக்குழைத்தீர்
மதிகெட்டீர் மானமிழந்தீர்
எப்படி இதுவெல்லாம் 
இன்ன விலை
இன்ன பொருள்
பார் முழுதும்
விற்க
இது வேண்டும்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து.

கண்டராதித்தனின் இந்தக் கவிதையைத் தமிழகத்தின் நிகழ்காலஅரசியலைப் பேசும் காத்திரமான கவிதையென்று பரிந்துரைக்க விரும்புகிறேன் . நீங்கள் அந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம் ஒரு கவியின் உலகத்தில் சுலபமாகச் சென்றுவரலாம். ஏராளமான திறப்புகள் கொண்ட எளிய கவிதைகளோடு காத்திருக்கிறது தொகுப்பு.
====================================================
திருச்சாழல் / கண்டராதித்தன் / செப்டம்பர், 2015/ புது எழுத்து, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, 635112
============================================================

 நன்றி: அம்ருதா, பிப்ரவரி, 2016

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்