கரிசல் இலக்கியத்தில் கோணங்கியின் வரவு

தமிழ்மொழியின் புனைகதை வரலாறு எழுதப்படும் நிலையில் கரிசல் எழுத்தாளர்களின் இடம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக மாறிவிட்டது. குறிப்பாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளுக்குப் பின் இவர்கள் ஓர் இயக்கமாகவே கரிசல் இலக்கியத்தை வளர்த்து வருகிறார்கள். கரிசல் எழுத்தாளர் என்று அறியப்படாத -ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுகதைகளை எழுதிவிட்டு மறைந்த கு.அழகிரிசாமியைத் தனது குருவாகக் கொண்டு கரிசல் காட்டில் முன்னத்தி ஏர் ஓட்டியவர் கி.ராஜநாராயணன்.