புத்தகங்கள் :மதுப்புட்டிகளாகவும் வெடிகுண்டுகளாகவும்

பாண்டிச்சேரியிலிருந்து இதுவரை நூறு தடவையாவது மதுரைக்குப் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஏழெட்டுத் தடவை போல¦ஸ் சோதனை போட்டிருக்கிறது. அந்தச் சோதனைக்கு யாருடைய பையும் தப்பாது. சூட்கேசாக இருந்தால் ஆட்டிப்பார்த்தே உள்ளே இருப்பது மதுப்புட்டிகள் என்று கண்டுபிடித்து விடுவார்கள். பையாக இருந்தாலும் ஒலியெழுப்பும் பாட்டில்கள் காட்டிக் கொடுத்து விடும்.ஒரு தடவை 20 கிலோ சர்க்கரைக்குள் இரண்டு அரை பாட்டில்கள் இருந்தன. திறந்து பார்த்த போல¦ஸ் கொஞ்சம் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டு விட்டு நகர்ந்து விட்டது. அல்வாவுக்குப் பதில் சர்க்கரை.


பாண்டிச்சேரியிலிருந்து மதுப்பாட்டில்கள் கொண்டுபோகும்போது பின்பற்ற வேண்டிய உத்திகள் எனச் சிலவற்றை அதில் தேர்ந்தவர்கள் வழங்குவதுண்டு. ஒரேயொரு மதுப்புட்டிதான் கொண்டு போகிறீர்கள் என்றால், மூடியைத் திறந்து ஒரு மிடக்கு விழுங்கிவிட்டுக் கொண்டு போகலாம்.நிறையக் கொண்டு போகிறீர்கள் என்றால் அவற்றை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது. கண்பார்வையில் வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். சோதனையில் பிடிபட்டால் பாட்டில்கள் தான் இறங்கும். நீங்கள் இறங்க வேண்டியதில்லை. பணம் போனால் போகிறது என்று விட்டுவிட்டுப் பயணத்தைத் தொடரலாம். விட்டுவிட முடியாதென்றால் நீங்கள் அடுத்த வாசலில் இறங்கிப் பேரம்பேசி லஞ்சம் கொடுத்துவிட்டு, அடுத்த பஸ்ஸில் பயணத்தைத் தொடரலாம். இந்த அனுபவங்கள் எல்லாம் எப்பொழுதாவதுதான் கிடைக்கும். மதுப்புட்டிகள் விலைக்குறைவு காரணமாகப் பாண்டிச்சேரியிலிருந்து அவை தமிழ்நாட்டிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பாண்டிச்சேரி போல¦ஸ் அதன் எல்லைக்குள் சோதனைகளை எப்பொழுதாவது நடத்திக் கொண்டு தான் இருக்கிறது. சமச்சீர் வரி வந்து விட்டால் இவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

28-10-1998, இரவு 9.50-க்குப் பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பிய என்னை அதன் எல்லைக்குள் சோதனைகள் நெருங்கவில்லை.பாண்டிச்சேரி போல¦ஸ் சோதனையிட்டிருந்தாலும் அவர்கள் எடுத்துக் கொள்ள எனது பையில் மதுப்பாட்டில்கள் எதுவும் வைத்திருக்கவும் இல்லை. எனது பையில் இருந்தவைகள் எல்லாம் புத்தகங்கள், பத்திரிகைகள், கைலி, பனியன், ஜட்டிகள் மட்டும் தான். கனமான பையோடு விழுப்புரத்தில் இறங்கிய என்னை தோளில் கைவைத்து நிறுத்தியது போல¦ஸ். பையில் என்ன இருக்கிறது ? குரல் அதட்டியது.

குரலுக்கு உரியவரிடம் பையைத் தந்தபோது அதன் பாரம் தாங்காமல் அவர் குனிந்துவிட்டார். குனியவைத்த பாரம் அவருக்குச் சந்தேகத்தைத் தந்திருக்க வேண்டும்.அவசரம் அவசரமாக ஜிப்பைத்திறந்து உள்ளே கையைவிட்டுத் தேடினார். அவர் ஏமாறுவதைப் பார்த்து ரசிக்க நான் காத்துக் கொண்டிருந்தேன். பையைத்தூக்கிக் கொண்டு வெளிச்சத்தை நோக்கிப் போனவரிடம் வெளிப்பட்டது ஏமாற்றமா.? எகத்தாளமா..? என்று சொல்ல முடியவில்லை. கலவையான ஒரு வெளிப்பாடு.உள்ளேயிருந்த புத்தகங்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து அடுக்கினார். பத்திரிகைகளைத் தனியாக அடுக்கினார். கைலியையும் பனியனையும் வெளியே எடுக்கவில்லை. விசாரணையைத் தொடங்கிய போது ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

‘என்ன பத்திரிகை இது? ‘
‘தலித்’
‘அப்படியின்னா தாழ்த்தப்பட்டவங்கள்லாம் ஒன்னாச் சேர்ந்து போராடணும்னு எழுதியிருக்குமில்லே’
‘ இந்த இதழ்ல அப்படியெல்லாம் எழுதி இருக்கல; ஆனா அப்படி எழுதறது ஒன்னும் தப்பில்லயே.’
‘தப்பில்லன்னு எப்படி சொல்றீங்க’
‘உரிமைதானே அது; போராடனும்னு சொல்றது எப்படித் தப்பாகும்’
சரி அதவிடுங்க. தலித்தில பத்து வைச்சிருக்கீங்க. இதென்ன புத்தகம் இவ்வளவு தடியா இருக்கு. அதிலே வேற அஞ்சு புத்தகம் வச்சிருக்கீங்க. புத்தகத்தை எடுத்து தலைப்பை வாசித்தார்.
‘ தீண்டாத மக்களுக்கு,காங்கிரசும்,காந்தியும் செய்தது என்ன ?
‘ இதுவும் போராட்டத்த தூண்டுறதுதானோ..’
‘ இல்ல , இந்திய அரசியல் சட்டத்தை எழுதின அரசியல் மேதை அம்பேத்கர் எழுதிய நூல்’
‘ அம்பேத்கர் பேரச் சொல்றதுனாலதானே இவ்வளவு பிரச்சினைகளும். நாங்க தலையெழுத்தேன்னு ஒவ்வொருத்தன் பையையும் தோண்டி துருவி வெடிமருந்து வைச்சிருக்கானா.. வீச்சரிவா வைச்சிருக்கானான்னு சோதனை போட வேண்டியிருக்கு’
அப்பொழுதுதான் எனக்கு விவரம் புரிந்தது. இவர் மதுக்கடத்தல் தடுப்புப் போல¦ஸ் அல்ல; சட்டம் ஒழுங்கு காக்கும் போல¦ஸ் என்று. திரும்பவும் தொடர்ந்தார் கேள்விகளை.
‘ நீங்க எங்க போறீங்க.. ராமநாதபுரத்துக்கா.?’
இல்லை .. திருநெல்வேலிக்கு..
‘இதெல்லாம் போயி இலவசமா கொடுப்பீங்க..அவங்களப் போராடத் தூண்டுவீங்க. அப்படித்தானே..? நீங்க
திருநெல்வேலிக்குத் தான் போறீங்கங்கிறதுக்கு என்ன அத்தாட்சி..?
‘இது என்னோட முகவரி.. நான் ஒரு புரபசர்..இதெல்லாம் நான் படிக்கிறதுக்கும், அங்க வாங்கிப்
படிக்கிறவங்களுக்கும் விக்கி¢றதுக்கும் தான்.’
Ó¢ராமநாதபுரத்துக்குப் போக மாட்டீங்கள்ல.. அப்பப் போங்க.. இந்த ஜெயந்தி முடிஞ்சாச்சரி.. அதுக்குப் பிறகு இதுதானா .. எங்க வேலை…’
கொஞ்சம் அலுப்புடன் போக எத்தணித்தார். அந்தக்கணமான புத்தகம் தொப்பென்று விழுந்தபோது வெடித்துவிடுமோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.

[ராமநாதபுரம் பசும்பொன்னில் வருடாந்திர நிகழ்வாகிவிட்ட
தேவரின் பிறந்த நாள் (ஜெயந்தி) அக்டோபர், 30]
-இந்தக் கட்டுரையை எழுதியது தொடங்கி நான் ஒரு பத்தி எழுத்தாளனாகலாம் என்ற ஊக்கத்தைத் தந்தவர் எழுத்தாளர் ஜெயந்தன். 1998 இல் இக்கட்டுரை அவரது கோடு இதழில் எழுதினேன். மறைந்து விட்ட அவரது நினைவின் அஞ்சலியாக இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்