பெயர்கள்; நமது பெயர்கள்
ஞாயிற்றுக்கிழமை தவிர வேலைநாட்கள் மதியம் 12.00 மணிக்கு எஸ்.டி.டி. எதுவும் வருவதில்லை. நாங்களும் யாருக்கும் பண்ணுவதில்லை. போன் இருக்கிறது என்று பண்ணினால் பில் வரும்பொழுது பட்ஜெட் உதைக்கும். அன்று வௌ¢ளிக் கிழமை மதியம் 12 மணிக்கு நீண்ட அழைப்பொலி கேட்டபோது நான் தான் ஏதோ அவசரமாகப் பேசுகிறேன் என நினைத்து என் மனைவி எடுத்திருக்கிறாள்.
நான் திருவனந்தபுரத்திற்குக் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கப் போயிருந்தேன். தொலை பேசியில் கேட்ட குரல் அவளுக்குப்புதியது:
‘அய்யா இருக்காங்களாம்மா..? ‘
‘அய்யா இல்ல ; நீங்க யாருங்க ..’
‘நான் ரைட்டருங்க அம்மா; நான் சென்னையிலயிருந்து பேசுறேன்; இங்க வர்ரதாச் சொன்னாங்க அய்யா. இங்கெ அவருக்காகக் காத்துக் கிட்டிருக்கேன்.’
‘அய்யா திருவனந்தபுரம் போனவங்க வரல; வந்ததும் சொல்றேன்; ஒங்க பெயரென்ன..?
‘ரைட்டர்ன்னு சொல்லுங்க அய்யாவுக்குத் தெரியும்’ சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
அடுத்த நாள் அதே நேரம். அதே குரல். அதே உரையாடல். ஆனால் எதிர்முனையில் கொஞ்சம் பதற்றம். இரவு நான் வந்தவுடன் மனைவியும் குழந்தைகளும் சொன்னபோது , ‘ ரைட்டர்’ என்று தம்பட்டமடிக்கும் ஆசாமி- எழுத்தாள நண்பர் - யாராயிருக்கும் என்று யோசித்துவிட்டு மறந்து விட்டேன்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அதேநேரம். தொலைபேசி அழைப்பு. எடுத்தது நான். எதிர்ப்புறம் பேசிய குரலில் எரிச்சலும் ஆத்திரமும் இருந்தது. ‘ என்னங்க சார்.. ஒங்க வீட்டம்மா. இப்படி பண்ணீட்டாங்க.. எங்க அய்யாகிட்டெ திட்டு வாங்கிக்கிட்டே இருக்கேன்.’நேற்றும் முந்தின நாளும் நடந்த தொலைபேசி உரையாடலின் முடிச்சுக்கள்
அவிழப்போகிற சந்தோசம் எனக்கு.
ஒங்க அய்யா யாரு.. அவரு பெயரென்ன?
எங்க அய்யா டி.எஸ். பி.ங்க; நான் ரைட்டருங்க.. இப்பொழுதும் அவர் பெயர்களைச் சொல்லவில்லை.
நான் அவருக்கு விளக்கினேன்.என் பெயர் ராமசாமி; நான் ஒரு புரொபசர்.எனக்கு சில எழுத்தாள- ரைட்டர்ஸ் - நண்பர்கள் உண்டு. என் மனைவி அவர்களில் யாராவது ஒருவர் போன் செய்வதாக நினைத்திருக்கலாம். அவரது குரலில் ஆத்திரம் விலகியது. ஓ. அப்படிங்களா.. நான் தான் நம்பரெ மாத்தி போன் பேசிட்டேங்க.. எங்க அய்யா என்னோட போனுக்கு மேலே சென்னைக்கு வர்றதா இருந்தாரு.. கடைசியிலே எல்லாமே கெட்டுப் போச்சு.ஒரே திட்டு.. சஸ்பென்சன் ஆர்டரக் கொடுத்தாலும் கொடுத்திடுவாரு. இந்த நம்பருக்குப் போன் செஞ்சு நடந்ததச் சொல்லிடுங்க சார்..’ சொல்லிவிட்டு எண்ணைக் கொடுத்தார். அப்பொழுதும் பெயர்களைச் சொல்லவில்லை.
‘அலோ ரைட்டர் சார்.. இப்பவாவது உங்க பெயரையும் உங்க அய்யா பெயரையும் சொல்லலாமா..’ என்று கேட்டபோது சிரித்துவிட்டு, அவர் பெயரை மட்டும் சொன்னார். ‘அய்யா’ வின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.எந்தப் பிரிவில் இருக்கிறார் என்பதை மட்டும் சொன்னார். நான் அந்த அதிகாரியின் பெயரைச் சொன்ன போது ஆமாங்க சார்.. அவரே தான் என்று வழிமொழிந்தார்.அதிகாரியின் பெயரைத் தவறியும் சொல்லிவிடக் கூடாது என்று விரதம் போலும்.
கணவன் பெயரைத்தான் மனைவிமார் சொல்லமாட்டார்கள் என்பது தெரியும். அதுவும் கிராமத்தில்தான். அதிகாரிகளின் பெயரைச் சொல்லத் தயங்கும் ஊழியர்கள் எல்லாம் அந்த அதிகாரிகளின் மனைவிமார்கள் தானோ..! தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிமார்கள் இருந்ததாகப் புராணம் சொல்லும். நம்முடைய அதிகாரிகள் இந்த வகையில் தசரதனோடு போட்டி போடக்கூடும்.
குடும்பம் தான் அதிகாரம் நிலைபெற உதவும் அமைப்பு; அதில் உடைப்பு இல்லாமல் அதிகார அமைப்புகளில் மாற்றங்கள் சாத்தியமில்லை. குடும்ப அமைப்பும் உறவுகளும் மாற வேண்டும் என்று படித்தது நினைவுக்கு வந்தது.
ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவரை ஒரு விழாவிற்குத் தலைமை தாங்க அழைக்கச் சென்றோம். அவருக்கு இலக்கியம், கவிதை என்று ஈடுபாடுகள் உண்டு. மகிழ்ச்சியோடு உள்ளே அழைத்துச் சென்ற அவரது உதவியாளர் வெளியில் வந்தவுடன் கோபமாகிவிட்டார். கோபம்னா கோபம் . அப்படியொரு கோபம். ஆட்சித்தலைவரை மரியாதையில்லாமல் பேசிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எனக்கோ மரியாதை இல்லாமல் ஒரு வார்த்தையும் சொன்னதாக நினைவில் இல்லை.
‘ நீங்கள் விழாவிற்கு வரவேண்டும்’ என்று சொல்லக் கூடாதாம். ‘கலைக்டர் அவர்கள்’ வரவேண்டும் என்றுதான் சொல்ல வேண்டுமாம். எதிரில் இருப்பவரை முன்னிலையில் குறிப்பிடாமல் படர்க்கையில் குறிப்பிட வேண்டும் என்று எந்த இலக்கணம் சொல்கிறது என்று கேட்டிருக்கலாம்.
நான் படித்த இலக்கணங்கள்,எதிரில் இருப்பவரை ‘ நீ ’ என்று சொல்வதற்குப் பதில் ‘ நீங்கள் ’ என்று சொல்வது ‘ மரியாதை காரணம்’ என்று சொல்லியுள்ளன. ஆனால் அதிகாரத்துவ இலக்கணமோ ‘ மரியாதைக் குறைவு’ என்று புதிய பாடத்தைச் சொல்கிறது.
அதிகாரி- ஊழியர் உறவு நிலை என்றில்லை; ஆசிரியர்கள்- மாணவர்கள் உறவு நிலையே அதிகாரஞ் சார்ந்ததாகவே இருக்கின்றன இங்கு. தன்னுடைய பெயரைச் சொன்ன மாணவனிடம் முகஞ்சிவந்து போகும் ஆசிரியர்கள் உண்டு. இவர்களையும் தனது மனைவிகளாகவே நினைக்கிறார்களோ என்னவோ..?
ஒரு முறை, நான் மாணவனாக இருந்த போது எனது பேராசிரியர் ஒருவரின் உண்மையான பெயரைச் சொல்லி அவர்களே! என்று அழைத்து வரவேற்புரை சொன்னேன். அவருக்கு வந்ததே ஆத்திரம். அவர்தமிழ் மீது கொண்ட காதலால் வைத்துக் கொண்ட பெயரைச் சொன்னால் கோபப்பட மாட்டாராம். அப்பா அம்மா வைத்த பெயரைச் சொன்னதால்தான் அந்தக் கோபமாம்.
இன்னொரு பேராசிரியர் என்னிடம் சொன்னபோது ‘ எந்தப் பெயரை’க் கையெழுத்தாகப் போட்டுச் சம்பளம் வாங்குவார்’ என்று கேட்டேன். அவரது குல தெய்வத்தின் ஞாபமாக அம்மா அப்பா வைத்த பெயரில் தான் என்றார் அந்த ஆசிரியர்.
சரி அதெல்லாம் போகட்டும் தமிழர்களே! கலைஞர், நாவலர், பேராசிரியர், நாஞ்சிலார், சேடபட்டியார், தீப்பொறியார், காடுவெட்டியார்… இப்படியான ‘ஆர’¢களெல்லாம் அடையாளக் குறியீடுகளா..? அல்லது அதிகாரத்துவ மொழிகளா..?
திருவாளர் பொதுமக்கள் சிந்திப்பார்களாக.
கருத்துகள்