தொல்காப்பியம்- சங்க இலக்கியங்கள் திணைநிலைக் கூற்றுகள்
தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத்திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். ஆனால் அம்மரபுதான் இடையூறுகளின்றி இன்று வரை தொடர்கிறதா? எனக் கேட்பவருக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ உறுதியான பதில் ஒன்றைச் சொல்ல முடியாது.
தமிழ்க் கவிதை மரபைச் சமஸ்கிருத மரபு எந்த நூற்றாண்டில் தாக்கியது? அத்தாக்கத்தின் காரணமாகத் தோன்றிய இலக்கியவகைகள் எவை? என்பன போன்ற காத்திரமான ஆய்வுகள் செய்யப்படவில்லை. அதைப் போலவே மேற்கத்தியக் கல்வி முறையின் அறிமுகத்திற்குப் பின் தமிழ்க் கவிதை மரபை மேற்கத்தியக் கவிதை மரபும் தாக்கம் செய்துள்ளது. அதன் விளைவுகளும் காத்திரமான பங்களிப்புகளைச் செய்துள்ளன. இவ்விரு காத்திரமான தாக்கங்களுக்கும் இடையில் உருதுக் கவிதை மரபும் கூடத் தமிழ்க் கவிதை வரலாற்றுக்குள் அதனளவில் பங்களிப்பினைச் செய்துள்ளது. இத்தகைய தாக்கங்களுக்குப் பின்னரும் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் தோற்றுவித்த தொடக்கமரபு இன்னும் தீவிரமான போக்காகவே- தமிழ்க் கவிதைமரபின் தனித்துவ அடையாளமாகவே இருக்கிறது என்பதே அம்மொழியைச் செவ்வியல் மொழியாக ஆக்கியிருக்கிறது. இந்த மரபுத் தொடர்ச்சியே செவ்வியல் மொழியின் – அம்மொழியில் தோன்றும் இலக்கியங்களின் தனித்துவச் சிறப்புகள். இக்கட்டுரை தொல்காப்பியம்- சங்க இலக்கியங்களில் உருவாக்கிகிய திணைநிலைக் கூற்று மரபு எத்தகையது என்பதை விளக்க முயல்கிறது. அவ்விளக்கத்தின் வழியே அம்மரபு எங்ஙனம் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தூண்டுகிறது.
மொழிதல் என்னும் படைப்புக் கருவி.
வெளிப்படல் அல்லது வெளிப்படுத்துதல் என்பதன் மூலமாக உலகில் உள்ள பொருட்கள் – உயிருள்ளனவும் உயிர் இல்லாதனவும் தனது இருப்பை உணர்த்துகின்றன. அதே நேரத்தில் பொருட்களின் பரிமாணங்களுக்கேற்பவே இருப்பு உணர்த்தப்படுகின்றன. உணர்த்தப்படும் பரிமாணங்களை தன்னிடம் உள்ள புலன்களின் வழியாக உணர்தல் என்னும் வினையை ஆற்றுகின்றன பொருட்கள். தன்னிடம்- தனது புலன்களிடம்- வந்து சேரும் பொருட்களின் –பரிமாணங்களை ஏற்று வினையாற்றும் புலன்களைக் கொண்டன உயிருள்ளன எனக் கருதப்படுகின்றன. புலன்கள் வழியாக எதிர்வினையாற்றும் இயல்பில்லாதன உயிரற்றன எனக் கருதப்படுகின்றன. உலகிலுள்ள பொருட்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துப் பேசும் தொல்காப்பியம் உயர்திணைக்குள் மக்கள் கூட்டத்தை வைத்துப் பேசும் பின்னணியில் அவர்களே மொழியைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் என்ற புரிதல் இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தனது செய்தியை அல்லது தகவலைத் தனது கூட்டத்தின் இன்னொரு உறுப்பினருக்குத் தெரிவிக்க மொழியைப் பயன்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்துவது மனிதக் கூட்டம் மட்டுமே என்பதை நவீன அறிவியலும் மொழியியலும் ஒத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு உயிரினமும் தங்கள் கூட்டத்திற்குச் சொல்ல ஒலி மற்றும் அசைவு என்னும் குறிப்பான்கள் வழியாகக் குறியீடுகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மனித உயிரிகள், மற்ற உயிரினங்களிலிருந்து சில பல வேறுபாடுகளைக் கொண்டனவாக இருக்கின்றன. ‘மனித குல வளர்ச்சி’ அல்லது ‘வளர்ச்சி அடைந்த மனிதக்கூட்டம்’ என்பதன் அர்த்தமே மொழியைக் கண்டு பிடித்ததையும் அதனை நுட்பமாகப் பயன் படுத்துவதிலுமே இருக்கிறது. சைகை மொழி அல்லது உடல்மொழியாகப் பயன்படுத்துவது தொடங்கிப் பின்னர் பேசுவதற்கான கருவியாக மொழியைப் பயன்படுத்துதல் என்பதற்குள் ஒவ்வொரு சமூகக் கூட்டமும் நகர்ந்தன. பின்னர் தொடர்ந்து எழுத்து மொழிக்குள் அக்கூட்டம் நுழைகிற போதே அம்மொழியைப் பேசும் கூட்டம் வளர்ச்சியடைந்ததாக மாறுகிறது. இன்றளவும் தங்களுக்கான எழுத்து மொழியை உருவாக்கிக் கொள்ளாத கூட்டங்கள்– வளர்ச்சியடையாத கூட்டங்கள்- உலகில் இருக்கவே செய்கின்றன என்பதை மானுடவியலும் மொழியியலும் ஆய்வு செய்து காட்டியுள்ளன.
‘மொழியே எல்லாம்; மொழியே அனைத்தையும் உருவாக்குகிறது’ என்று உறுதி செய்துவிட்ட பின் அமைப்பியல், மொழியின் நுட்பங்களையும் அவற்றின் சாத்தியங்களையும் விரிவாகவே விளக்கியுள்ளது. மொழியின் அடிப்படை அலகான சொல்லிற்கு எப்போதும் ஒற்றை அர்த்தம் மட்டுமே இல்லை. அகராதி அர்த்தத்தைத் தாண்டி, பயன்பாட்டு அர்த்தமே அதன் மேன்மை. ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு அர்த்தங்களில் சொல்லையும், சொற்கள் இடம் பெறும் தொடர்களையும் உருவாக்க முடிகிற மனிதனே படைப்பாளியாகக் கருதப்படுகின்றான். அதற்கான வாய்ப்பை வழங்கும் மொழியே இலக்கிய வளம் நிரம்பிய மொழி எனக் கருதப்படுகிறது. தமிழ் அத்தகைய வளத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே- இன்று வளர்ச்சியடைந்த மொழிகள் எனக் கருதப்படும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பே - பெற்றிருந்தது என்பதனால் தான் செம்மொழி எனக் கருதப்படுகிறது.
மொழியை நுட்பமாகப் பயன்படுத்துவது; அதன் வழியாக இலக்கியத்தை உருவாக்குவது என்பது பற்றிச் சிந்தித்த உலகின் மூத்த சிந்தனையாளர்களில் தொல்காப்பியரும் ஒருவர். அவரையொத்த சிந்தனையாளராக விளங்கும் கிரேக்கத்தின் அரிஸ்டாடில், உலக இலக்கியத்தின் முன்னோடிக் கோட்பாட்டாளராகக் கருதப்படுகிறார். ஆனால் தொல்காப்பியரின் இடம் அவ்வாறு உறுதி செய்யப் படவில்லை. தமிழர்களின் எல்லைக் குறுக்கச் சிந்தனைகளும், அறிவு மறுத்த உணர்வுநிலைப் பார்வைகளுமே இதன் பின்னணிக் காரணங்கள் எனத் தோன்றுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் இடையே நடக்கும் பேச்சின் வழியே உருவாகும் முரண்பாட்டின் மூலம் பாத்திர வார்ப்பை உருவாக்கி, அவற்றின் வழியே மனிதர்களின் இருப்புநிலையைப் பேச வாய்ப்பளிக்கும் இலக்கிய வடிவம் நாடகம். அதன் ஆதாரமான வெளிப்பாட்டு வடிவம் உரையாடல். தனது முன்னோடியான சாக்ரடீஸ் போன்றவர்களின் முச்சந்தி விவாதங்களைக் கவனித்திருந்த அரிஸ்டாடில் உரையாடலை முக்கியமான வெளிப்பாட்டு வடிவமாகக் கருதியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அந்த அனுபவங்கள் சார்ந்தே உரையாடல் வடிவத்தின் நுட்பங்களைப் பற்றி அதிகம் விளக்கியுள்ளார் எனக் கொள்ளலாம். ஆனால் தொல்காப்பியர் தனிமனித உணர்வுகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்த அதிக வாய்ப்பான கவிதை வடிவத்தின் நுட்பங்களை விரிவாகப் பேச நினைத்துள்ளார். அதற்காகக் கூற்று என்னும் வெளிப்பாட்டு வடிவத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். கவிதைக்குள்ளும் ஓர் உரையாடல் கூறு இருக்கிறது என்றாலும் பருண்மையான வெளிப்பாடு அதில் கிடையாது.
கூற்று என்னும் கலைச்சொல் மொழியின் அடிப்படைக்கூறு. மொழிதல் என்னும் மனிதனின் அடிப்படையான தொழிலைச் சுட்டும் சொல். அந்த வகையில் அக்கலைச்சொல் மொழியியலின் பாற்பட்டது. உரையாடலுக்கும் முந்திய வடிவமும் கூட. அதனைக் கவிதைக்கான கலைச்சொல்லாகத் தனது பனுவலில் மாற்றிக் கட்டமைத்திருக்கிறார் தொல்காப்பியர். மொழியின் இயல்புகளைப் பேசும் இலக்கணமாக மட்டும் எழுதாமல், மொழியை நுட்பமாகப் பயன்படுத்துவது பற்றிய இலக்கணமாக தொல்காப்பியம் எழுதப் பட்டிருப்பதே அதன் மீதான கவன ஈர்ப்புக்குக் காரணங்களாக இருக்கின்றன.
தொல்காப்பியத்தில் கூற்று
மொழிசார்ந்த தொடர்பியல் கட்டமைப்பில் சொல்பவன் என்ற கூறும், கேட்பவன் என்ற கூறும் பிரிக்க முடியாதவை. இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பது சொல்லப்படுவது என்ற கூறு. இதனை உள்ளடக்கி நிற்கும் போது தான் தொடர்பியல் வினை முழுமை அடைகிறது. எழுத்துமொழி சார்ந்த வரிவடிவத் தொடர்பியலானாலும் சரி, ஒலிவடிவத் தொடர்பியலானாலும் சரி இந்த மூன்று கூறுகளும் அவசியம். எழுத்து மொழி சாராது குறியீடுகளின் வழி செயல்படும் தொடர்பியலிலும் இந்த மூன்று கூறுகளும் இருக்கின்றன.
தமிழ் இலக்கணங்கள் கற்று, அதன் வழியாகக் கூற்று பற்றிச் சிந்திக்கும் போது தொடர்பியல் கட்டமைப்பின் நிலையைக் கூற்றுநிலை என்ற சொல்லால் குறிப்பிடத் தோன்றுகிறது. கூற்றுநிலை என்பதை விளக்க இரண்டு இடங்களை மையப் படுத்திப் பேச வேண்டியுள்ளது. முதல் புள்ளி தொல்காப்பியம், பெயரியலில் வரும் ‘இடம்’ என்ற கலைச்சொல் பற்றியது. இரண்டாவது பாவியலின் ஒரு கூறான கூற்று என்பதன் விரிவாக அமைவது. பெயரியலில் திணை, பால், பற்றிப் பேசும் தொல்காப்பியர் அடுத்து இடம் என்பதைக் குறிப்பிடுகின்றார். பெயர்களின் அடையாளமாக இரண்டு திணைகள், ஐந்து பால்கள் பற்றிக் கூறிவிட்டு இடத்தைக் குறிப்பிடும் போது தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்றையும் கூறுகின்றார். இவற்றிற்கு உதாரணங்களையும் சுட்டியுள்ளனர் தமிழ் இலக்கணிகள்.
இரண்டாவதாக, கூற்று பற்றிய விரிவான பகுதிகள் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூற்றைக் குறிப்பிடுவதோடு, அகத்திணை யியலிலும், களவியலிலும், கற்பியலிலும் கூற்று நிகழிடங்களையும் நிகழ் முறைகளையும் விரிவாகப் பேசுகின்றார் தொல்காப்பியர். நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் புறத்திணையியலும் கவிதையின் கூற்று பற்றியே பேசுகிறது.
சங்கக் கவிதைகளைத் தொகுத்தவர்களும் ஓர் உறுப்பு என்ற அளவிலேயே கூற்றைக் கருதினார்கள் என்று சொல்வதற்கில்லை. பாவியலின் ஆதாரமான கூறுகளுள் ஒன்றாகக் கூற்று கருதப் பட்டது என்பதைப் பிந்திய வளர்ச்சிகளும் காட்டுகின்றன. அவருக்கு முன்பு எழுதப் பட்ட கவிதைகளைப் பாடுபொருள் அடிப்படையில் அகக்கவிதையாகவும் புறக்கவிதையாகவும் பிரித்துக் காட்டும் தொல்காப்பியர், கவிதையில் எவற்றையெல்லாம் பேசலாம் என விளக்க முயலும் போதே கூற்று பற்றிச் சிந்திக்கிறார். அகக்கவிதையிலும் புறக்கவிதையிலும் பேசப் பட வேண்டிய பொருண்மைகள் எவை எனக் கூறவந்த தொல்காப்பியர் அதனை முதலில் விளக்காமல், ஒவ்வொரு நிலையிலும் தலா ஏழு பொருண்மைகளைப் பேசலாம் என்கிறார். அத்தோடு அவற்றைப் பேச வேண்டியவர்கள் யார் யார் என்பதையும் விரிவாகச் சொல்ல முயன்றுள்ளார். அகப்பொருள், புறப்பொருள் எனப் பிரித்துக் காட்டப்படும் இவ்விரு பொருண்மைகளுள் செயல்பட வேண்டிய- மொழிய வேண்டிய- உட்கிடைப் பொருண்மைகளே ஏழு+ஏழு திணைகள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப் பெயர்களாக அறியப்படும் அன்பின் ஐந்திணைகளோடு, கைக்கிளையும் பெருந்திணையும் அகக்கவிதையின் பொருண்மைகள். அதே போல் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை,காஞ்சி, பாடாண் என இவற்றின் புறனாகச் சொல்லப்படும் ஏழும் புறக்கவிதையின் பொருண்மைகளாகும். இந்த ஏழுக்கும் கூட வெளி சார்ந்த அடையாளத்தையே தொல்காப்பியர் தந்துள்ளார். ஆனால், புறப்பொருள் வெண்பா மாலையின் வழியாகப் புறத்திணைகளைப் புரிந்து கொண்டுள்ள கல்வியுலகம் பூக்களோடு அவற்றைத் தொடர்படுத்தி தொல்காப்பியரின் வெளிசார் அடிப்படைகளை விட்டு விலகிச் சென்றது இடையில் நேர்ந்துள்ள பெருந்தவறு என்பதையும் இங்கே சுட்டிக் காட்டிவிட்டுக் கூற்று பற்றித் தொடரலாம்.
திணைநிலை
அகத்திணைகள் ஏழு எனத் தொல்காப்பியர் அகத்திணையியலில் சொல்லவில்லை. ஆனால் புறத்திணையியலில் அகத்திணை ஏழு, புறத்திணை ஏழு என்பதைச் சுட்டிக் காட்டவே செய்துள்ளார். அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் ஒவ்வொரு அகத்திணைக்கும் புறனாக ஒரு புறத்திணையும் அமைந்துள்ளதையும் காணலாம் எனச் சொல்கிறார். சொல்லி விட்டு, வெட்சிதானே குறிஞ்சியது புறனே, வஞ்சிதானே முல்லையது புறனே, உழிஞைதானே மருதத்துப் புறனே, தும்பைதானே நெய்தலது புறனே, வாகைதானே பாலையது புறனே, காஞ்சிதானே பெருந்திணைப் புறனே, பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே என்று சொல்லி ஒவ்வொரு புறத்திணைக்கும் உரிய துறைகளையும் வரிசைப் படுத்துகின்றார். இவ்வாறு புறன் கூறுவதிலிருந்து அகத்திணை ஏழு, புறத்திணை ஏழு எனத் தொல்காப்பியர் கருதினார் என உணர்கிறோம்.
திணை என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே பல விதமான பயன்பாட்டு அர்த்தங்கள் இருக்கின்றன; நிலம், பொருள், வகைப்பாடு போன்றன சில. ஆனால் நமது பொதுநிலைப் பட்ட பார்வைகளும் புரிதல்களும் திணைகளை, கருப்பொருளோடு அதிலும் குறிப்பாக நிலத்தோடு சேர்த்தே புரிந்து கொண்டுள்ளன. தொல்காப்பியர் அவ்வாறு கருதவில்லை என்றே தோன்றுகிறது. அவ்வாறு கருதியிருந்தால்- நிலமே திணையின் அடையாளம் என்று அவர் நினைத்திருந்தால் -
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. (அகத்.5) என முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு திணைகளுக்கும் நிலம் எது எனக் கூறியவர் பாலை, கைக்கிளை, பெருந்திணை என்ற மூன்று திணைகளுக்கும் நிலம் பற்றிக் கூறாமல் விட்டிருக்க மாட்டார். அவரைப் பொருத்தவரையில் திணைநிலை என்பதில் தெளிவான கொள்கையைக் கொண்டிருந்தார் என்பதை விளக்கும் விதமாக ஒரு நூற்பாவையும் தந்துள்ளார்.
ஒரு திணையின் அடையாளம் என்பது திணையின் உரிப் பொருள் தான் என்பதைச் சொல்லும் அந்தச் சூத்திரம் அகத்திணையியலில் தொடக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.
‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை’ (அகத்.3 ) என்பது அந்நூற்பா. இதன் வழி ஒரு கவிதையை அடையாளப் படுத்த முதன்மையான தேவை அதில் வெளிப்படும் உரிப்பொருள் தானேயொழிய, கவிதையின் பின்னணியைத் தரும் கருப்பொருள் குறிப்புகளோ, வெளியையும் காலத்தையும் தரும் முதல்பொருளோ அல்ல என உரைக்கிறார். உரிப்பொருளே சிறந்தது எனச் சொன்ன தொல்காப்பியர் ,அன்பின் ஐந்திணைகளின் உரிப்பொருள்கள் எவையெனச் சொல்லும் நூற்பாவை
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. (அகத். 16) எனத் தொடக்கத்தில் எழுதியதோடு, அன்பின் காரணமாகத் தோன்றாத பெருந்திணை, கைக்கிளையின் உரிப் பொருள்களையும் கூடச் சுட்டிக் காட்டும் நூற்பாக்களை அவ்வியலின் இறுதியில் அடுத்தடுத்துத் தருகிறார்.
காமம் சாலா இளமையோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. 53
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. 54
இவ்வாறு வரிசைப்படுத்தித் தருவது தொல்காப்பியரே செய்ததா? பின்னர் தொகுத்தவர்கள் செய்ததா? என்ற கேள்விக்கான பதில்கள் நம்மிடம் இல்லை.
அகத்திணைகளை உரிப்பொருள் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லும் தொல்காப்பியர் புறத்திணைகளின் உரிப்பொருள், கருப்பொருள், முதல் பொருள் இவை எனச் சுட்டவில்லை. என்றாலும் ஏழு புறத்திணைகளின் உரிப்பொருள் எவையெனக் கூறும் நோக்கம் அவருக்கு இருந்துள்ளது என்பதை பின்வரும் வரிகள் காட்டுகின்றன.
வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும். (புறத்.2)
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே. (புறத். 6)
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனை நெறி மரபிற்று ஆகும் என்ப. (புறத். 8)
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. (புறத். 12)
தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. (புறத்.15.)
பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (புறத்.18)
இவ்வரிகள் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை,தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் முதலான ஆறு புறத்திணைகள் இவை என விளக்கும் வரிகள். இவற்றைத் திணை பற்றிய விளக்கம் எனக் கொள்வதை விட அத்திணைகளின் உரிப்பொருள் எனக் கொள்வதே சரியானது.
ஆ (பசு) காரணமாக நடக்கும் போரின் நிலைகளை வெட்சித் திணைக்கும், நிலம் காரணமாக நடக்கும் போரின் நிலைகளை வஞ்சித் திணைக்கும், மதிலால் சூழப் பட்ட கோட்டை காரணமாக நடக்கும் போரின் நிலைகளை உழிஞைத் திணைக்கும், தன்னிடம் உள்ள செல்வம் போதாது என்ற பேராசையால் மேலும் பொருளையும் நாடுகளையும் கைப்பற்ற நினைத்து நடக்கும் போரின் நிலைகளை தும்பைத் திணைக்கும் , வெற்றி களைப் பல படக் கொண்டாடும் நிலைகளை வாகைத் திணைக்கும், போருக்குப் பிந்திய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோர்வு மற்றும் விரக்தி நிலையை- நிலையாமையைக் காஞ்சித் திணைக்குமான உரிப்பொருளாகக் கூறுகிறார் தொல்காப்பியர். இவ்வுரிப் பொருட்கள் நிகழும் சூழல்களே- முதல் மற்றும் கருப்பொருள்களே துறைகளாகத் தொல்காப்பியரால் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
புறத்திணை ஏழில் முதல் ஆறு திணைகளுக்கும் விளக்கம் அல்லது உரிப்பொருள் இது எனச் சொல்லித் துறைகளின் பட்டியலைச் சொன்ன தொல்காப்பியம் பாடாண் திணைக் குரிய விளக்கத்தை அதாவது உரிப்பொருளைக் கூறவில்லை. துறைகளையும் பட்டியலிட வில்லை. அதற்குமாறாகக் கைக்கிளையின் புறன் பாடாண் எனவும் அது எட்டு வகையானது எனக் கூறிப் பின்வரும் நூற்பாவை அமைக்கிறார்.
அமரர்கண் முடியும் அறு வகையானும்
புரை தீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. (புறத். 21)
இந்நூற்பாவின் வழியாக -பாடாண் திணையின் மூலம் - அகத்தையும் புறத்தையும் இணைக்கும் தன்மையைத் தொல்காப்பியர் பேசுகிறார் எனக் கூறலாம். பாடாண் திணையில் பாராட்டப்படுபவன் போரில் வெற்றி பெற்ற ஆண் மகன் மட்டுமல்ல. சிறப்பாகக் குடும்பம் நடத்தும் நிலையும், கொடையில் சிறந்து விளங்கும் தன்மையும் கூடப் பாடப்படுவதற்குரிய உரிப் பொருளே என்பதைப் பாடாண் திணையின் பாற்படும் எனக் கூறும் கூற்றுகளிலிருந்து அறிய முடிகிறது. காதல் மற்றும் காமம் சார்ந்து உருவாகி வளர்ந்து குடும்ப அமைப்பாக மாறும் நிலையை அகத்தில் பேசும் தொல்காப்பியர் அரசுருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த போரின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களை உரிப்பொருளாகப் புறத்திணையில் சுட்டியுள்ளார் எனக் கூறலாம்.
அகத்திணையியலிலும் புறத்திணையியலிலும் கூறப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் திணைநிலை என்பதனைத் தொல்காப்பியர் உரிப்பொருள் என்றே கொண்டார் என உறுதியாகக் கூற முடிகிறது. தொடர்ந்து வரும் களவியல், கற்பியல், பொருளியல் முதலான இயல்களில் உரிப்பொருள் என்னும் திணைநிலையை எவ்வாறெல்லாம் மொழியலாம் எனக் கூற முயன்றுள்ளார். மொழியும் போது இருக்கும் தடைகள் எவை? இந்தத் தடைகளிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு உண்டு; யாருக்கெல்லாம் விலக்கில்லை என விரிவாகச் சொல்லும் அந்த இயல்களில் சில இடங்களில் முறையான வரிசைகள் உள்ளன. பல இடங்களில் துண்டு துண்டாகப் பேசியுள்ளார் என்பதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றே.
இந்தப் புரிதலோடு- உரிப்பொருளே திணைநிலை என்ற புரிதலோடு- சங்க இலக்கியங்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள அகக் கவிதைகளுக்கும், புறக்கவிதை களுக்குமான உரிப்பொருள்களைப் பட்டியல் இட்டிக் காட்டினால் இந்த முடிவு மேலும் உறுதியாகக் கூடும். அப்படியான பட்டியலில் குறிஞ்சிக் கவிதைகள், முல்லைக் கவிதைகள், மருதக் கவிதைகள், நெய்தல் கவிதைகள், பாலைக் கவிதைகள் என்ற வகைப் பாடல்கள் தவிர்க்கப் பட்டு, புணர்ச்சிக் கவிதைகள், பிரிவுக் கவிதைகள், இருத்தல் கவிதைகள் , ஊடல் கவிதைகள், இரங்கல் கவிதைகள், சொல் எதிர் பெறாஅன் சொல்லிய கவிதைகள், மிக்க காமநிலைக் கவிதைகள், என்ற வகைப்பாடு முதன்மை பெறும். இத்தகைய வகைப்பாட்டையே அரிஸ்டாடிலின் கவிதையியலின் காணமுடிகிறது என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அந்த முயற்சி இப்போது செய்யப் படவில்லை. விரைவில் செய்யப் பட வேண்டும் என்பதை மட்டும் கூறிக் கொள்வதோடு நிறைவாக ஒன்றைக் கூறிக் கட்டுரையை முடிக்கலாம்:
இன்று வளர்ச்சி அடைந்த நிலையில் கோட்பாளர்கள், தங்கள் கோட்பாடுகளை விளக்கும் பொருட்டுப் பின்வரும் முறையியலைப் பின்பற்றுகின்றனர். கலைச்சொல், அதனை வரையறையாக்குதல், பின்னர் விளக்கம், தொடர்ந்து வகைகள் அல்லது உட்பிரிவுகள், கடைசியில் புறனடை என அமைத்து ஒவ்வொன்றிற்கான எடுத்துக் காட்டுகளையும் தந்து கோட்பாடுகளை விளக்குகின்றனர். தொல்காப்பியத்தை ஒரு கோட்பாட்டு நூலாக முன் நிறுத்தும் போது அத்தகைய முறையியலும் இருக்கிறது என நாம் கூற இயலாது. இத்தகைய வளர்ச்சி அடைந்த முறையியலை அதில் தேடுவது அதிக பட்ச எதிர்பார்ப்பு என்பதை ஒத்துக் கொள்வதில் தயக்கம் தேவை இல்லை. ஆனால் இத்தகைய முறையியல் தொல்காப்பியருக்கு முழுதும் தெரியாத ஒன்று என்றும் கூறிவிட முடியவில்லை. அகத்திணையியல், களவியல்,கற்பியல், பொருளியல், உவமயியல், மரபியல், போன்றனவற்றில் முறையியலற்ற தன்மைகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் நான், புறத்திணையியல், செய்யுளியல், மெய்ப்பாட்டியல் போன்றனவற்றில் தெளிவான முறையியலைப் பின்பற்றியுள்ளார் என்றும் வாதிடவே விரும்புகிறேன். பல இயல்களில் வெளிப்படும் தொடர்ச்சி யின்மையையும் அவற்றில் வெளிப்படும் மொழிப் பயன்பாடு போன்றனவற்றைக் கருத்தில் கொண்டே அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றவர்கள் கிடைக்கின்ற தொல்காப்பியம் ஒருவரால் எழுதப் பட்டதல்ல என்று கூற முயன்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை 2010, பிப்ரவரி 1,2,3 தேதிகளில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தொல்காப்பியம்- சங்க இலக்கியம்: பல்நோக்குப் பார்வை என்னும் தேசியக் கருத்தரங்கில் வாசிப்பதற்காக எழுதப் பட்ட கட்டுரை
கருத்துகள்