நான் வாழுகின்ற நகரம்


(உணரப்படாதவரை எதுவுமே சிக்கல் இல்லை )

திருநெல்வேலிக்கு நான் முதன் முதலில் போனது 1982 -இல் என்பது எனது நினைவு.மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பியூசிஎல்) தொடுத்திருந்த ஒரு வழக்கு நிதிக்காக ஞாநி எழுதிய பலூன் நாடகம் போட , மதுரை நிஜநாடக இயக்க நடிகனாக அங்கு போயிருந்தேன். திருநெல்வேலிக்குப் போகிறோம் என்று நினைத்தவுடன் அப்பொழுது பேச்சிலும் நினைப்பிலும் வந்த வார்த்தைகள் நான்கு. திருநெல்வேலி அல்வா, தாமிரபரணி ஆறு, பாளையங்கோட்டை ஜெயில், நெல்லையப்பர் கோவில்.

நெல்லையப்பர் மீது அவ்வளவு விருப்பம் இல்லை. பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் பின்னொரு நாளில் போக வேண்டியதிருக்கலாம் என்று அதையும் தவிர்த்து விட்டேன். தாமிரபரணி தந்ததோ பெருத்த ஏமாற்றம்.ஓடாத நதியாகத் தேங்கிக் கிடந்தது ஆறு. அல்வாவைக் கட்டாயம் சாப்பிட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன். அதிலும் சிக்கல். திருநெல்வேலி ‘அல்வா’வில் ஒரிஜினல் அல்வா என்பதில் அங்கே பலத்த போட்டி. உள்ளூர்க்காரர்களை விசாரித்த போது இருட்டுக் கடை அல்வா தான் திருநெல்வேலி அல்வா என்று சொல்லிவிட்டார்கள். இருட்டுக்கடை இருட்டான பின்பு தான் திறந்திருக்கும் என்பது கூடுதலான தகவலாகக் கிடைத்தது.ஆக அந்தமுறை திருநெல்வேலியை உணரமுடியாமலும் ருசிக்க முடியாமலும் போய்விட்டது பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அந்த நகரத்தில் வாழ வேண்டியவனாக வந்தேன்.வரும்போது கூடுதலாக இன்னொரு வார்த்தையும் திருநெல்வேலியின் அடையாளமாக சேர்ந்து கொண்டிருந்தது கலவரம் என்னும் வார்த்தை தான் அது. மதுரையைத் தாண்டி விருதுநகர் வந்து, பஸ் கிளம்பியது முதலே எனது கண்கள் கலவரத்தைத் தேடின. கரிசல் மண்ணும் கருவேல மரங்களும் கடும் வெப்பமும்தான் கண்ணைக் கூச வைத்தன. கலவரம் கண்ணில் படவில்லை என்பது எனது அதிர்ஷடம்.ஆனால் செய்தித்தாள்களில் எப்பொழுதும் ரத்தவாடை அடித்துக் கொண்டே இருக்கிறது.

பழைமையையும், நவீனத்துவத்தையும் -திருநெல்வேலியாகவும் பாளையங்கோட்டையாகவும்- பிரித்துக் கோடு போடும் தாமிரபரணியில் நீர் நகர்ந்து கொண்டிருந்தது. என் கண்ணில் படாமல் தப்பிய கலவரம் நான் நகரத்தெருக்களில் நடக்க நினைத்த போது என்னுடன் நகர்வதை உணர்ந்தேன். பகல்களைவிடவும் இரவில் நடப்பதை விரும்பும் எனது விருப்பங்கள் தடைகளுக்குள்ளாயின. இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்குச் செல்வது சிரமமாகப் பட்டது. ராத்திரிகளில் நகரத்தெருவில் தனியனாய் நடப்பது ஆபத்துக்குரியதாகவும், தண்டனைக்குரியதாகவும்
. எனக்கான வீட்டை -குடியிருப்பைத் தேடியபோது கலவரம் என் உடம்பில் குடியேறிவிட்டதை முதலில் உணரவில்லை. புதுவீடுகள், பழைய வீடுகள், காலனி வீடுகள், மாடிப்பகுதி என நான் அலைந்தபோது கலவரமும் கூடவே வந்தது.ஒவ்வொரு வீட்டுச் சொந்தக்காரரும் நான் மறக்க நினைத்த ஒன்றை - விட்டுவிட விரும்பிய ஒன்றை - திரும்பக் கொண்டு வரச்சொன்னார்கள். எனக்கல்ல வீடு; எனது சாதிக்குத்தான் என்பது எனக்கு உணர்த்தப்பட்ட பாடம்.

இன்று நான் வாழும் நகரத்திற்கு - திருநெல்வேலிக்கு - வருகின்ற தமிழர்களே ! அல்வா, ஆறு , கோயில்,கலவரம் என்ற ஐந்து வார்த்தைகளோடு இன்னொரு வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். மாநாடு என்பது அந்த வார்த்தை. மிகப் பிரமாண்ட பேரணிகளோடு கூடிய மாநாடுகள் எங்கள் நகரத்தின் இன்னொரு குறியீடாக மாறிக் கொண்டுவருவதில், மற்ற நகரவாசிகளுக்குப் பொறாமை இருந்தால், நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும். திருநெல்வேலிக்கு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். இந்த நகரம் மாநாடு ஒன்றிற்குத் தயாராகிக் கொண்டிருப்பதையோ நடந்து கொண்டிருப்பதையோ நிச்சயம் காண்பிக்கத் தயாராக உள்ளோம்.

ஏமாந்து விடுவோம் என்று நினைக்க வேண்டாம். அழைக்கும் அரசியலில் பாவமன்னிப்புக் கூட்டங்களான மாநாடுகள் எனும் களியாட்டங்களைக் காணத் திருநெல்வேலிக்கு ஒரு முறை வந்து போங்களேன். கொஞ்சம் அல்வா கொடுத்து அனுப்புகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்