உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்
1992- டிசம்பர், 6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள். பாண்டிச்சேரியிலிருந்து அன்று நான் ஏறிய வண்டி கிளம்பிய போது பிற்பகல் மணி ஒன்று. அதிகபட்சம் சென்னை செல்ல நாலுமணி நேரம் ஆகலாம் . பாரிமுனையில் இறங்கி நடந்தே போனாலும் அரை மணி நேரம் தான் ஆகும். ஐந்து மணிக்குப் போய் இறங்கி ஆறு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாம். எனது திட்டம் நிறைவேறவில்லை.அப்போது சென்னையின் முதன்மைப் பேருந்து நிலையம் பாரிமுனைதான். வெளியூர்களிலிருந்து வரும் எல்லாப் பேருந்துகளும் அங்கிருந்துதான் கிளம்பும். திருவள்ளுவர் பேருந்துகளுக்கு மட்டும் தனியாக ஒரு பகுதி உண்டு. அதற்குப் பக்கத்தில் வெளிமாநிலப் பேருந்துகள் நிற்கும்.