அற்றைத்திங்கள் வலியின் துயரம் சுமந்த கருவறை வாசனை முகர்ந்து சொல்ல முடிந்தது. புன்னகை கசியும் எளிமையும் தோற்றம் இவளெனச் சொன்ன முன்னோன் நாவை ரசிக்க முடிந்தது. மாற்றுக் கருத்தின் களம் ஒன்று கண்டு விரித்துப் பரப்பி விசும்ப முடிந்தது. விலக்கி வைக்கப்பட்ட கனிகள் ருசிக்கும் நாவின் ருசியை உணர முடிந்தது. இற்றைத்திங்கள் ரகசியக்குறிகள் விரைக்கும் வேகம் அறிய முடிகிறது. அதிகாரத்தின் வேர்கள் பரவும் வழிகள் சொல்லத்தெரிகிறது பணத்தின் மதிப்பும் உறையும் வெளியும் ஆழ்கடல் எனினும் துடுப்புகள் உண்டு. துரத்திச் செல்லும் வலிமையும் உண்டு. எதிரிகள் கூட்டம் எழுந்து வந்தால் வலிமை காட்டிட இனமென்னும் துருப்பு என் வசம் உண்டு, அவ்வெண்ணிலவில் கவியுணர் கனவும் கலைக்கும் ஆற்றலும் இருந்தன அறிவேன். இவ்வெண்ணிலவில் உருவேற்றிய பிம்பம் இனியுமெதற்கு? உதிர்வது உத்தமம்.