உப்பு வண்டிக்காரன் : சமகாலத்தை எழுதுவதின் வகை மாதிரி.
உப்பு வண்டிக்காரன் இமையத்தின் புதிய நாவல் (அக்டோபர், 2024). அவரது முதல் நாவல் கோவேறு கழுதைகள்(1994) வெளிவந்தபோது அவருக்கு வயது 30. வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்புமான விமரிசனங்களைப் பெற்றுக் கவனிக்கத்தக்க எழுத்தாளராக அவரை முன்வைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணொருத்தியின் துயரார்ந்த வாழ்க்கையைத் துன்பியல் உணர்வெழுச்சியோடு எழுதிக்காட்டியது. அதன் வடிவம், மொழிப்பயன்பாடு, மனிதாபிமானம் சார்ந்த உரிப்பொருள் நோக்கம் என பலவிதமான இலக்கியவியல் சிறப்புகள் கொண்டது என்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர். முதல் விமரிசனத்தை எழுதிய எழுத்தாளர் சுந்தரராமசாமி படைப்புக்கு விருதென்றால், இந்த ஆண்டின் சாகித்திய அகாடெமி விருதைக் கோவேறு கழுதைகளுக்கே தரவேண்டும் என எழுதினார்.
கோவேறு கழுதைகளைத் தொடர்ந்து ஆறுமுகம்(1999),செடல்(2005), எங்கதெ(2015), செல்லாத பணம்(2018), வாழ்க வாழ்க (2020),இப்போது உயிரோடிருக்கிறேன் (2022),நெஞ்சறுப்பு(2024) எனச் சீரான இடைவெளியில் நாவல்களை எழுதி வெளியிட்ட இமையத்தின் ஒன்பதாவது நாவல் உப்புவண்டிக்காரன். இந்த ஆண்டிலேயே வந்துள்ள இரண்டாவது நாவல். அவரது ஐந்தாவது நாவலான செல்லாத பணம் இந்திய அரசின் உயர் இலக்கிய விருதான சாகித்திய அகாடெமி விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது. நாவல் என்னும் புனைகதை வடிவத்தில் மட்டுமல்லாது, சிறுகதை வடிவத்திலும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர். மண்பாரம் (2005), வீடியோ மாரியம்மன் (2008), கொலைச்சேவல் (2013), சாவுச்சோறு(2005), நறுமணம்(2016), நன்மாறன் கோட்டைக்கதை (2019), தாலிமேல சத்தியம் (2022), திருநீறுசாமி (2023) என எட்டுத் தொகுதிகள் இதுவரை அச்சில் வந்துள்ளன.பெத்தவன் என ஒரேயொரு குறுநாவல் அவரால் எழுதப்பெற்றுள்ளது.
உயிர்மை இதழில் (செப்டம்பர், 2012)அச்சாகி வந்த பெத்தவனை வாசித்தவுடன், ‘காலத்தின் எழுத்தாளன்’ எனத் தலைப்பிட்டு உயிர்மைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினேன். (அப்போது நான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியராக இருந்தேன்). “இமையத்தின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் பெத்தவன் என்ற இந்தக் கதையை இமையத்தின் மிக முக்கியமான- சமகாலக் கதையாக நினைக்கிறேன். நமது காலத்தின் –சமூகத்தின்- பெருநெருப்பு ஒன்றின் ஜ்வாலையைத் திறந்து காட்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டேன். தமிழின் குறுநாவல் வரலாற்றில் பெத்தவன் ஒருமைல் கல். அக்குறுநாவலில் இடம்பெற்ற நிகழ்வுகளின் சாயலோடு வெவ்வேறு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்தன என்றாலும் இளவரசன் என்னும் இளைஞனைச் சாதி ஆணவக்கும்பல் கொலை செய்து ரயில் பாதை ஓரத்தில் வீசியது கதை எழுதப்பெற்ற ஆறுமாதத்திற்குப் பின் நிகழ்ந்தது. அந்நிகழ்வை முன் உணர்த்திய பெத்தவன் பல ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பெற்றுத் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தினரால் தமிழகமெங்கும் விநியோகிக்கப்பட்டது.
பெத்தவன் குறுநாவலைக் குறிப்பிட்ட அதே சொற்களால் உப்பு வண்டிக்காரன் நாவலையும் குறிப்பிட விரும்புகிறேன். உப்பு வண்டிக்காரன் காலத்தின் -சமகாலத்தின் எழுத்து. இந்நாவலின் வடிவம், உரிப்பொருள், விவாதிக்கும் முறை, வாசகர்களிடம் எழுப்பும் கருத்தோட்டம், உணர்வெழுச்சித் தூண்டல் ஆகியவற்றோடு காலப்பின்னணி காரணமாகவும், சமகாலத்தை எழுதுவதின் வகைமாதிரியாக இருக்கிறது.
*******
நாவலின் நிகழ்வுகள்
“உப்பு உப்பே” எனத் தலைச்சுமையாகத் தூக்கிக்கொண்டு ஊர்ஊராய் உப்பு விற்பதைத் தொழிலாகக் கொண்ட தம்பதியின் நீண்ட வாழ்க்கையைப் பேசும் நாவலே உப்பு வண்டிக்காரன். அத்தம்பதியினர் வாழ்ந்த இடம், தமிழ்நாட்டின் விருத்தாசலம் பகுதியிலிருக்கும் வேப்பூர் என்னும் சிறுநகருக்குப் பக்கத்தில் உள்ள விளாம்பூர் கிராமம். அக்கிராமத்தில் உப்பு வியாபாரம் செய்து வாழ்ந்த சண்முகம் -முத்துக்கருப்பாயி தம்பதியினரும் அவர்களது ஒரே மகனும் அவனது மனைவி கலாவும் நாவலின் முதன்மைப் பாத்திரங்கள். இவர்களோடு அந்த ஊரில் இருந்த வடமலை, சந்திரன், ஆனந்தவள்ளி, செல்லமுத்து எனப் பெயரிடப்பட்ட பாத்திரங்களும் பெயரிடப்படாத பல பாத்திரங்களும் நாவலில் இடம்பெற்றுள்ளன. விளாம்பூரில் தொடங்கும் நாவலின் முதல் நிகழ்வைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்வுகளுக்காக விருத்தாசலம், சிதம்பரம் அண்ணாமலை நகர் என இன்னும் சில இடங்களையும் நாவலின் களமாக -இடப்பின்னணியாகக் கொண்டிருக்கிறது.
தலைச்சுமை விற்பனைக்காலத்திலிருந்து தள்ளுவண்டிக் காலத்திற்கு நகர்ந்து, உப்பு விற்பதோடு காய்கறிகளையும் விற்றுப் பிழைத்த சண்முகம்-முத்துக்கருப்பாயி தம்பதியின் தொழில்கள் மீது விருப்பமே இல்லாதவன் அவர்களின் மகன். நாடோடித்தன்மையிலான தொழில் செய்யும் பெற்றோர்களின் பிள்ளை என்பதால் கிடைத்த அவமானத்தால் அவர்கள் மீது வெறுப்போடு இருக்கும் மகனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘கவர்னர்’. அந்தப் பெயர் அவனுக்குப் பொருந்தும் விதமாக இதுதான் வேலை என்று சொல்லிக்கொள்ளும் விதமாகத் தொழில் எதுவும் இல்லை. கல்லூரி வரை சென்று படித்தவன் என்ற மிதப்பும், அரசியல் ஆர்வத்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் நின்று தோற்றவன் என்ற அடையாளமும் உண்டு. அந்த மிதப்பைக் காரணமாக்கியே தான் விரும்பிய பெண்ணான ‘கலாவைத் திருமணமும் செய்துகொண்டவன். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும்-ஆனந்தி ஆனந்தன்- இருக்கிறார்கள். அவனது தந்தை சண்முகம் தனது தொழில் மூலம் சம்பாதித்து வாங்கிய கொஞ்சம் நிலமும் வீடும் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொள்வது கவர்னரின் வேலைகளில் ஒன்று. அத்தோடு ஊரின் பொதுக்காரியங்களில் ஈடுபாடு காட்டும் இளைஞன்.
இத்தகைய குடும்பங்களைக் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ் நாட்டில் பார்ப்பது அரிது. சரியாகச் சொல்வதானால் உலகமயத்திற்குப் பின்னால் தோன்றிய புதுவகைச் சந்தையின் வரவால் உப்பை வண்டியில் எடுத்துச் சென்று விற்கும் தொழிலெல்லாம் காணாமல் போய்விட்டது. ஆகவே இத்தகைய தொழிலைச் செய்யும் தொழிலாளர்களைச் சமகாலத்தவர் எனச் சொல்வது சரியானது அல்ல. ஆனால் இமையம் தனது நாவலுக்கான காலத்தையும் குறிப்பான பின்னணி நிகழ்வுவொன்றையும் தேர்வு செய்து அடுக்கியிருப்பதின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட உப்பு வண்டித் தொழிலுக்கு ‘சமகாலத்தன்மை’யை உருவாக்கியிருக்கிறார். இந்தக் காலத்தெரிவின் காரணமாக நாவலில் விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் விளாம்பூர் கிராமத்து நிகழ்விலிருந்து ஒட்டுமொத்த உலகத்தின் நிகழ்வாக மாறி விரிந்து பரவி நிற்கிறது. அதுவே இந்த நாவல் ஆக்கத்தின் சிறப்பு.
நாவலுக்கான காலம் உலகமெங்கும் கோவிட் நோய் பரவிய காலம். இந்தியாவில் கோவிட், நான்கு அலைகளாகச் சொல்லப்பட்டது. இந்நான்கு அலைகளில் நாவல் இரண்டாம் அலையின் காலத்தைத் தெரிவு செய்திருக்கிறது என்று ஊகிக்க இடமிருக்கிறது. கோவிட் நோய் உண்டாக்கிய அச்சத்தின் பரபரப்பு, அதற்கு அரசமைப்புகள் ஏற்படுத்திய போக்குவரத்து தடைகள், மக்களை வீட்டுக்குள் முடக்கிப்போட்ட கட்டுப்பாடுகள், காவல்துறை, வருவாய்த் துறை முகாம்கள், தனிமைப்படுத்தும் சிறப்புமுகாம்கள், மருத்துவ உதவிகள் போன்றன விவரிக்கப்படும் முறையைக் கொண்டு இதனைச் சொல்லலாம். அந்த அலைக்காலத்தில் அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் இடம் புலம்பெயர்ந்தார்கள். மனிதர்கள் ஒவ்வொரு நாட்டிலும் பல ஆயிரக்கணக்கில் இறந்த அலை இரண்டாம் அலைதான். அந்தக் காலகட்டத்தில் தான் அரசுகளும் அமைப்புகளும் செய்வதறியாது திகைத்து நின்றன. கூட்டம் கூட்டமாகக் கூலித் தொழிலாளர்கள் அலையலையாய்ப் புலம்பெயர்ந்தார்கள். ஒன்றிய அரசாங்கம் ஏமாற்றமளிக்கும் சடங்குகளின் பக்கம் திருப்பிவிட்டது. அந்த இரண்டாம் அலையின் காலம் 2020 மார்ச் – ஜூலை. இவை எல்லாவற்றையும் தனது பார்வைக்குள் – பேச்சுக்குள் -விவாதத்திற்குள் – விமரிசனத்திற்குள் கொண்டுவந்துள்ளது இமையத்தின் நாவல்.
நாவலின் நேரடிக்காலம் மிகக்குறைவானவை. அதிகபட்சமாக இரண்டு வாரத்திற்கும் குறைவானதே அந்தக் காலம். செல்லமுத்துவின் மரணத்தில் தொடங்கிக் கொரானோ தாக்குதலில் சிக்கிய கவர்னர், கட்டுப்பாட்டு முகாம்களிலும் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பிலும் தங்கியிருந்து வீடு திரும்பும் காலம் தான் நாவலின் காலம். ஆனால் அந்தக் காலத்திற்குள் மொத்த வாழ்க்கையும் நினைவுகளாக விரிக்கப்பட்டுள்ளன. சண்முகத்தின் இளமைக்காலம், குடும்ப வாழ்க்கை, மகன் பிறப்பு, வியாபார வளர்ச்சி, நிலங்கள் வாங்கிச் சொந்தவீடு கட்டியது, அவரது மகன் கவர்னரின் படிப்பு, திருமணம், பொதுவாழ்க்கை ஈடுபாடு, தேர்தலில் நின்று தோற்றது என அனைத்தும் நினைவுகளின் வழியாகவே வாசகர்களுக்கு வந்து சேர்கிறது.
நாவலின் நிகழ்வுகளும் பாத்திரங்களும் இருப்புநிலையும் மனவோட்டங்களும் என அனைத்துமே ‘கவர்னர்’ என்ற பாத்திரத்தின் வழியாகவே சொல்லப்படுகிறது.
“கவர்னரின் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் செல்லமுத்துவினுடையது. வயது ஐம்பதைத் தாண்டியிருக்காது. திடகாத்திரமான ஆள்தான். கவர்னருக்குத் தெரிந்து நோய்நொடி என்று படுத்த ஆளில்லை.கடுமையான உழைப்பாளி. முகம் முறித்து யாரிடமும் பேசமாட்டார். கவர்னருக்கு அப்பா முறை”
எனத்தொடங்கும் நாவல்,
கவர்னரும் கலாவும் வாய்விட்டு அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து ஆனந்தியும் ஆனந்தனும் அழ ஆரம்பித்தனர். அப்போது லேசாக இடி இடிக்க ஆரம்பித்தது. மழை பெய்ய ஆரம்பித்தது.
நான்குபேரும் அழுது கொண்டிருந்த சத்தம் ஊருக்கும் கேட்கவில்லை.சுடுகாட்டிற்கும் கேட்கவில்லை. அவர்களின் அழுகுரல் இடிச்சத்தத்திலும் , மழை பெய்கிற சத்தத்திலும் கரைந்து போயிற்று.இருட்டில் நால்வரும் உருவமுமற்றுப் போயிருந்தனர்.”
என முடிகிறது. இந்தத்தொடக்கத்திற்கு முடிவுக்கும் இடையில் திரும்பத்திரும்பக் கேட்கப்படும் கேள்வியாகக் கவர்னர் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளும் கேள்வி “ செல்லமுத்துவின் சாவுக்குப் போனது தவறா? பக்கத்துவீட்டுக்காரரின் சாவுக்கு எப்படிப் போகாமல் இருக்கமுடியுமா?” என்பதுதான். சாதாரணக்காய்ச்சலுக்கு மருத்துவமனைக்குப் போன செல்லமுத்துவின் வழியாகக் கொரானா விளாம்பூர் கிராமத்திற்குள் நுழைந்தது என்பதில் தொடங்கி, அவரது சாவுக்குப் போனவர்களுக்குத் தொற்றுகிறது. கவர்னரும் அதில் ஒருவன். அவன் வழியாக அவனது அப்பா சண்முகம், அம்மா முத்துக்கருப்பாயி எனப் பற்றிக் கொள்கிறது. இதன் பின்னர் நாவலின் காட்சிகளும் நகர்வுகளும் எண்ணவோட்டங்களும் உரையாடல்களும் முழுவதும் கோவிட்-19 என்று பெயரிடப்பட்ட கொரானாவைச் சுற்றிச்சுற்றியே நிகழ்கின்றன.
******
நாவலின் கட்டமைப்பு
நாவல் ஆக்கத்தின் தன்மையைக் கூடுதல் சிறப்பாக ஆக்கும் பொருட்டும், எளிய சொல்முறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் நாவலின் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார் இமையம். 248 பக்கங்களில் அச்சிடப்பெற்றுள்ள நாவல், ஐந்து பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளன. தமிழ்க் காப்பியங்களின் காண்டங்கள் இடத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவுகளால் ஆனவை என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்ட நிகழ்வுகள் அனைத்தும் சோழநாட்டில் நிகழ்வன; மதுரைக்காண்டம் பாண்டிய நாட்டு நிகழ்வுகளைக் கொண்டவை. வஞ்சிக்காண்டம் சேரநாட்டுப் பகுதிக்குள் நிகழ்வன. இமையத்தின் உப்பு வண்டிக்காரன் நாவலில் இப்படியான பெயரோடு கூடிய பிரிப்புகள் இல்லை. ஆனால் ஐந்து பிரிப்புகளும் ஒவ்வொரு இடத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரிக்கப்பட்டுள்ளன. விளாம்பூர், விருத்தாசலம், சிதம்பரம் மருத்துவக்கல்லூரி விடுதி, ராஜா மருத்துவமனை, விளாம்பூர் சுடுகாடு என்பன அந்த ஐந்து வெளிகள். ஒவ்வொரு பகுதியையும் இடப்பின்னணியால் அடையாளப்படுத்திக் கொண்டு ஒற்றைக் காட்சியையும் அங்கு நடக்கும் உரையாடல்களையும் ஒரு இயல்போல அமைத்துள்ளார். அவை பின்வருமாறு உள்ளது.
வேப்பூர் பக்கம் விளாம்பூரில் நடப்பன. இம்முதல் பகுதியில் 13 பிரிவுகளில் செல்லமுத்துவின் சாவு தொடங்கி, அரசு இயந்திரத்தின் ஆட்கள் வந்து கொரானா நோயாளிகளைக் கண்டறிந்து அடையாளப்படுத்திச் சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கவர்னரோடு சேர்த்துப் பத்துக்கும் அதிகமானோர் வரிசைப்படுத்தப்படுகிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் அதிகமாகிறது. கவர்னர் குடும்பத்தில் அவனது பெற்றோரோடு சேர்த்து மூவர் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்
இரண்டாவது பகுதியில் 16 இயல்கள். அது பக்கத்தில் உள்ள நகரமான விருத்தாசலத்தில் ஏற்படுத்தப்பட்ட கொரானா சிறப்பு முகாம் நிகழ்வுகள். அரசினர் மாணவர் விடுதியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் அந்த வட்டாரத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து நோய் அறிகுறியாளர்கள் கொண்டுவரப்பட்டு அடைக்கப்படுகின்றனர். அவர்களைக் காவல் துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை போன்றன கட்டுப்படுத்தும் நடைமுறைகள் விவரிக்கப்படுகின்றன.
மூன்றாவது பகுதியில் கொரானா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான முகாம். 17 பகுதிகள் கொண்ட அது சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி விடுதியில் அமைக்கப்பட்ட சிகிச்சை முகாம். தனிமை, உணவு வழங்கல், அதிகாரிகளின் கெடுபிடிகள், ஒவ்வொருவரும் அச்சத்தின் பிடியில் இருத்தல், மரணத்தின் ஓலங்கள் என ஒவ்வொன்றும் நிகழ்கின்றன. உலகெங்கும் நடக்கும் கொரோனா அவலங்களைத் தொலைக்காட்சிகள் வழியாகவும் யூ ட்யூப் வரிசைகள் மூலமாகவும் அறிந்து கொள்வதாக விரிக்கப்பட்டுள்ளது.
நான்காவது பகுதி ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடப்பன. 13 பகுதிகளால் ஆன அந்தப் பகுதியில் நோய் முற்றிய நிலையில் கவர்னரின் அப்பாவும் அம்மாவும் போகும் இடம். அவர்களைச் சந்திக்க முடியாமல் கவர்னரும் அவனது நண்பர்களும் தவிக்கும் தவிப்பு. அப்பாவின் மரணம். அந்தப் பிணத்தைப் பெறமுடியாமல் போனதின் கழிவிரக்கமும் பெருந்துயரமும். அம்மாவின் நிலை என்னவென்று அறியமுடியாத நிலை ஆகியன விரிக்கப்பட்டுள்ளன.
கடைசி, ஐந்தாவது பகுதி 4 பகுதிகளைக் கொண்டது. விளாம்பூர் சுடுகாட்டில் நிகழ்வன. உறவுகளற்று, சடங்குகள் இல்லாமல் சண்முகமும் முத்துக்கருப்பாயியும் புதைக்கப்பட்ட அவலம். புதைத்தபோது செய்யவேண்டிய சடங்குகளையும் செலுத்தவேண்டிய கருமங்களையும் அடுத்த நாட்களில் தனியாகக் குடும்ப உறுப்பினர்களோடு பெருமழையில் செய்து முடிக்கும் அவலத்தின் உச்சம் என விரிக்கப்படுகின்றன
ஐரோப்பிய நல்திற/ ஐந்தங்க நாடகங்களின் பிரிப்புகள் கூட பெரும் இடத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிப்புகளே. அவற்றின் காட்சிகள் தனிநிகழ்வுகளின் அளவுகளால் ஆன அலகுகள். இடத்தை அடிப்படையாகக் கொண்ட எளிய சொல்முறையை முதல் மூன்று பகுதிகளில் வரிசையாக நடத்திக்கொண்டு போகும் இமையம் நான்காவது பகுதியில் சண்முகம்–முத்துக்கருப்பாயி குடும்ப வாழ்க்கையையும், மருத்துவமனைக்குள் அவர்கள் நோயின் பிடியில் இருப்பதையும் இணைநிலையாக வைத்து நகர்த்துகிறார். அதனால் காலத் தொடர்ச்சி உடைக்கப்படுகிறது. நேர்வரிசைக் கதைசொல்லல் குலைக்கப்பட்டு முன்னும்பின்னுமாக மாறிக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கவர்னரின் நினைவோட்டங்கள் முன்னும்பின்னுமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
பாத்திரமாக்கலும் வளர்ச்சியும்
கொரோனாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்குள் அடைக்கப்பட்ட தந்தையைப் பார்க்க முடியாதபோதும், அவரது மரணத்திற்குப் பின் ஏற்பட்ட விரக்தி நிலையிலும் கவர்னரின் தவிப்பு மேலோங்கி வரும்போது அவனது கடந்த காலம் நினைவுக்கு வந்து அலைக்கழிக்கிறது. அவனது பொறுப்பற்ற கடந்த காலத்தின் மீது சுயவெறுப்பையும் குற்றமனத்தையும் மோதவிடுகிறான். இந்தப் பகுதிகளை எழுதும் இமையத்தின் உரையாடல்களும், உள்ளோட்டங்களும் வலுவான பகுதிகளாக உள்ளன. பொதுவாகத் தமிழ் எழுத்துகளில் அம்மா -மகன் உறவு, கணவன் -மனைவி உறவு, சகோதரப்பாசம் போன்றன உணர்ச்சிகரமாக -விரிவாக எழுதப்படுவதுண்டு. இந்த நாவலில் தந்தை- மகன் உறவுக்குள் இருந்த பகைமையோடு கூடிய வெறுப்பு விரிவாகப் பதிவாகியிருக்கிறது. இது அதிகமும் எழுதப்படாத ஒன்று. தந்தையின் மீது விருப்பமில்லாமல் இருந்ததற்காகக் கவர்னர் கொள்ளும் குற்றமனத்தின் எண்ணங்கள் இதுவரை வாசிக்கக் கிடைக்காத எழுத்துப் பகுதி. தமிழ்ப் புனைகதைப்பரப்பில் புதியது. இந்தக் கதாபாத்திர வார்ப்பும் வளர்ச்சியும் தான் இந்த நாவலைச் செய்தித் தன்மையிலிருந்து விலக்கி நாவலென்னும் கலைப்படைப்பாக ஆக்கியிருக்கிறது. அதனை உணரும் விதமாக நாவலின் பகுதிகள் சிலவற்றை இங்கே வாசிக்கத் தரலாம்:
சண்முகத்தின் பக்கத்தில் படுத்துக்கொண்டிருப்பதே கவர்னருக்குச் சங்கடமாக இருந்தது. வீட்டில் சண்முகத்தின் பக்கத்தில் படுத்திருந்ததாக அவனுக்கு நினைவே இல்லை. எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரையில் முத்துக்கருப்பாயியின் பக்கத்தில் படுத்திருக்கிறான். அதன் பிறகு தனியாகத்தான் படுத்துக்கொள்வான். வழக்கமாக அவன் படுக்கிற இடத்தில் முத்து கருப்பாயி படுத்திருந்தால், என்னோட இடத்தில் எதுக்குப் படுத்திருக்கிற? என்று கேட்பான் (32)
கவர்னர் பத்தாம் வகுப்புக்குப் போன பிறகு சண்முகம் அவனிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்.காரணமில்லாமல் பேசுவதில்லை. பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசுவார். கவர்னர் என்ன தவறு செய்தாலும் நேரிடையாக அவனிடம் கேட்க மாட்டார். முத்து கருப்பாயியிடம், ‘என்னடி புள்ள பெத்து வச்சியிருக்க? என்று கேட்டு, கவர்னர் செய்த தவறுகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்பதுபோல் பேசுவார். ‘இன்னமுட்டும் வீட்டுலதான் இருந்தான். அவன்கிட்ட நேரா, ‘ஏண்டா கழுத இப்படிச் செஞ்ச?’னு கேட்டா என்ன. மகன் மொகம் கோணக்கூடாது. அப்பனுக்கும் மவனுக்கும் பொன்னேரிக்காரன் மவதான் கெடச்சாளா, திட்டுறதுக்கும், கேள்வி கேட்கிறதுக்கும் சண்டை பண்றதுக்கும்?’ என்று கேட்டு சண்முகத்திடம் சண்டைக்குப் பாய்வாள்.(111)
கவர்னர் படுக்கையில் படுத்துக்கொண்டு கண்களை மூடியபோது பகலாக இருந்தது. அவன் கண்களைத் திறந்து பார்த்தபோது இருட்டாக இருந்தது. முத்து கருப்பாயியின் பேச்சுக்குரல் கேட்டுக் கொண்டிருந்ததே எங்கே இருக்கிறாள் என்று பார்த்தான். ஆளில்லை. இருட்டு மட்டும்தான் தெரிந்தது.
சண்முகத்தின் உயிர் எப்படி அடங்கியிருக்கும் என்று யோசித்தான். அப்பன் செத்துப் பிணமாகத் தனி அறையில் கிடக்கும்போதும் எனக்கு எப்படித் தூக்கம் வந்தது? சண்முகம் இறந்து விட்டார் என்று சொன்னபோது மனதில் ஏற்பட்டிருந்த பயமும் கவலையும் தணிந்திருந்தது. ஆனாலும் கட்டிலை ஓங்கி ஒரு குத்துவிட்டான். பிறகு அழ ஆரம்பித்தான்.(184)
அவன் சொன்னது ஜன்னலிடமா, ஜன்னலுக்கு வெளியே இருந்த இருட்டிடமா? ‘கடல் தண்ணிய வெயில்ல காய வச்சா உப்பு. உப்ப கடல்ல கொட்டுனா தண்ணி. இதுதான் வாழ்க்க. இதுதான் ஒலகம். பொறந்ததிலிருந்து சுடுகாடு போறவர ‘சீ அவனா’னு பேரு எடுக்காமப் போகணும்’ என்று எப்போதோ கவர்னரிடம் சண்முகம் சொன்னது நினைவுக்கு வந்தது. “செத்திட்டியா அப்பா” என்று சொல்லி கவர்னர் கதறி அழுதான் (188)
ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்த கவர்னர், “எங்கப்பாவ கொரானா கொல்லல. நான்தான் கொன்னுட்டன். ஏன் தான் அன்னிக்கி சாவுக்குப் போனேனோ தெரியலியே” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தான். கவர்னர் அறையில் தனியாக அழுது கொண்டுருந்தான். ‘அழாத விடு பார்த்துக்கலாம்’ என்று சொல்வதற்கு ஆளற்ற இடத்தில் அழுதுகொண்டிருந்தான். எவ்வளவு நேரம் அழுதாலும், ‘எதுக்கு அழுவுற?’ என்று யாரும் வந்து கேட்க மாட்டார்கள் என்று தெரிந்தும் அழுது கொண்டிருந்தான். “செத்தவன் கிட்டத்தான்னு இல்ல, அழுவுறவன்கிட்டயும் யாரையும் அண்டவிடலியே கொரானா” என்று சொல்லி அழுதான்.(206)
ஓம் பொணத்துக்கு ஒரு மாலை போட முடியல. ஒம்பொணத்த தொட்டுத் தூக்க முடியல, ஒம்பொணத்துமேல ஒரு கைப்புடி மண்ணக்கூட அள்ளிப்போட முடியல. எனக்கு உசுரக் கொடுத்த ஒனக்கு என்னால என் தல மசுரக்கூடக் கொடுக்க முடியல. இந்த நோவு யாரும் யாருக்கும் சொந்தமில்லைன்னு ஆக்கிடிச்சே. அப்பன், மவன்ங்கிற மொறயில இத்தன வருசத்தில நேருக்கு நேரா நின்னு அஞ்சி, பத்து நிமிஷம் கூட நீயும் நானும் பேசிக்கலியே. எங்கப்பன் சாவல. எஞ்சாமி செத்துடுச்சி” என்று சொல்லி வாய்விட்டுக் கதறி அழுத கவர்னர் நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்த்து கும்பிட்டான்.(216)
“இருட்டுற நேரத்தில புள்ளைங்கள அழச்சிக்கிட்டு சுடுகாட்டுக்குப் போவலாமா?” என்று கலா கேட்டதும் கவர்னருக்குக் கோபம் வந்துவிட்டது. “ எங்கப்பன் தெருத்தெருவா, ஊர் ஊராப் போயி உப்பு வித்த காசில சோறு தின்னு வளந்த புள்ளங்கதான? ஒரு கை மண்ணள்ளிப் போடட்டும். புண்ணியம் கிடைக்கும்” என்று சொன்னான். பிறகு ஆனந்தியிடம் ,”தாத்தா குழி மோட்டுல கை நெறைய மண்ணள்ளிப் போடணும், விழுந்து மூணு மொற கும்பிடணும், புரியுதாம்மா “ என்று கேட்டான்.
“சரிப்பா, தாத்தா எப்பவும் என்னெ, ‘தங்கம் தங்கம்’னுதான் கூப்பிடுவாருப்பா “ என்று ஆனந்தி சொன்னதும் கவர்னருக்கு அழுகை வந்துவிட்டது.(246)
*******
கொரோனோ நோயின் பின்னணியில் உப்பு வண்டிக்காரனின் மகன் வழியாகச் சொல்லப்படும் குடும்பத்தின் துயரக்கதையைத் தாண்டி, கொரோனோ என்னும் பெருந்தொற்று உலகத்தைப் படுத்திய பாடுகளைப் பாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் வழியாக விரிவாக எழுதிக் காட்டுகின்றார். அதில் அந்தக் கால கட்டத்தின் நடவடிக்கைகள் மீது தீவிரமான விமரிசனங்களையும் செய்துள்ளார் இமையம். நெருக்கடியான காலச்சூழலில்/ காரணங்களில் அரசு அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நுட்பமான அவதானிப்புகளாலும் நகைச்சுவை தொனிக்கும் உரையாடல்களாலும் எழுதிக்காட்டுகின்றார். சட்டத்தின் விதிகளைச் சொல்லித் தப்பிக்கும் அதிகாரிகள், அந்த வேலையிலும் லஞ்சம், ஊழல், அதிகார மீறல் போன்றவற்றில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதையும் சில காட்சிகள் வழியாகச் சொல்லியிருக்கிறார். எல்லா நெருக்கடியிலும் மனிதர்கள் காதலிக்கிறார்கள்; கல்யாணம் செய்துகொள்கிறார்கள்; காமத்தில் திளைக்கிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். நேரடியாக நாவலின் காட்சிகளாக இல்லாமலேயே கொரோனா காலகட்டத்து ஊடகச் செயல்பாடுகளும், அரசியல் கட்சிகளின் பொருத்தமற்ற கொள்கைகளையும் பேசிக் கடக்கும் பாத்திரங்களின் உரையாடல்கள் நாவலின் கனதியான துயரத்திலிருந்து விடுவிப்பு மனநிலையை உண்டாக்கி வாசிப்பைத் தக்க வைத்துள்ளன. சமயவாதிகளின் கையறு நிலையையும், காதலிப்பவர்களின் சுயநலத்தையும், காமத்தைத் தணித்துக்கொள்வதில் இருந்த அச்சத்தையும் கூடப் போகின்ற போக்கில் – குறிப்பாகக் கவர்னரின் பார்வைக் கோணத்தில் சொல்லிவிடுகின்றார் இமையம்.
திரும்பத்திரும்பச் சொல்லி அழுத்தம் தர நினைக்கும் எழுத்து முறை தன்னுடையது என நம்புகிறார் இமையம். அதற்குக் காரணமாக இருப்பன இமையத்தின் புனைவுகளில் இடம்பெறும் அதிகப்படியான உரையாடல்களே. இந்த நாவலிலும் பல இடங்களில் திரும்பத்திரும்பப் பேசும் உரையாடல்கள் உள்ளன. அதேபோல் இந்த நாவலின் மையப்பாத்திரமான ‘கவர்னர்’ என்ற பெயரிடல் திட்டமிட்டு வைக்கப்பட்டது போல முதலில் தோன்றியது. ஆனால் தமிழ்நாட்டுக் கிராமங்களில் கலெக்டர், முன்சீப், சிவிலியான், ஐகோர்ட் மகாராசன், டிஎஸ்பி , ஏட்டு, தாசில்தார் போன்ற பதவிப்பெயர்களைச் சூட்டுவதில் ஓர் அரசியல் உண்டு. அதே நுட்பமான அரசியல் தொனியோடு தான் இந்த நாவலின் கவர்னர் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது என்பது பின்னர் புலனாகிறது. அந்தப் பெயர் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு இடத்திலும் உண்டாக்கும் எரிச்சலும் எள்ளல் தன்மையும் தொடக்கத்தில் இருக்கும் அதே நிலையில் பின்னர் இல்லை. மருத்துவமனைக்குள் தந்தையையும் தாயையும் அனுப்பிவிட்டுத் தவிக்கும்போது அந்தப் பெயரும், அவனது முந்திய தெனாவட்டுப் போக்கும் காணாமல் போய்விடுகின்றன.
*******
பின்னணியும் தமிழ்நாவல்களும்
கொரானோ ஏற்படுத்திய அச்சமும் அச்சம் சார்ந்த துயரமும் என்னும் உரிப்பொருள் தெரிவுக்காக மட்டுமல்லாமல் அதனைத் தேர்ந்த நாவல் வடிவில் தந்துள்ளார் என்பதற்காகவும் இந்த நாவல் சிறப்பான எழுத்தாக இருக்கிறது எனக் கூறத்தோன்றுகிறது. நாவல் இலக்கிய வடிவம், காலம், இடம், பாத்திரங்கள் என்ற மூன்றிலும் விரிவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக் கொண்ட வடிவம். அதனாலேயே உலக இலக்கியங்கள் பற்றி விரிவான ஆய்வுகள் செய்தவர்கள் நாவல் வடிவம், செவ்வியல் காலக் காவியத்தின் நவீன வடிவம் என்கின்றனர். தமிழின் நாவல் வரலாற்றில் குறிப்பான வட்டாரத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் ஏராளமாக உள்ளன. கொங்கு வட்டாரப்பின்னணியை ஆர்.சண்முகசுந்தரமும், கரிசல் வட்டாரப்பின்னணியை கி.ராஜநாராயணனும் தொடங்கி வைத்த பின்னர் இவ்விரு வட்டாரங்களின் அடையாளத்தோடு சில பத்து எழுத்தாளர் வட்டாரப் புனைகதைகளை எழுதி நிரப்பினார்கள். ஒரு கிராமத்தை மையமாக்கிக் கொண்டு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் தொகுப்பைப் பின்னணியாகக் கொண்ட வட்டார நாவல்களின் எண்ணிக்கை 1970 கள் தொடங்கி 2000 வரை ஆண்டுதோறும் அச்சாகின. அதற்குப் பின்பு நகரப்பின்னணியில் எழுதப்பெற்ற நாவல்கள் வந்துள்ளன. ஆனால் குறிப்பான காலப்பின்னணியையும் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த பெரும் நிகழ்வுகளையும் உள்ளடக்கிய இலக்கியப்பனுவல்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எழுதப்படவில்லை.
நகர் மயமாதல், தொழில் மயமாதல் போன்ற கருத்துநிலைகளைப் பின்னணியாக்கி நாவல்கள் எழுதப்பெற்றுள்ளன. சா.கந்தசாமியின் சாயாவனமும், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையும் இவ்விரு போக்குக்கும் எடுத்துக்காட்டுகள். தேச விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் ர.சு. நல்லபெருமாள் (கல்லுக்குள் ஈரம், போராட்டங்கள்), க.சீ. வேங்கடரமணி (தேசபக்தன் கந்தன்), நா.பார்த்தசாரதி (ஆத்மாவின் ராகங்கள்) ,சி.சு.செல்லப்பா( சுதந்திரதாகம்) போன்றவர்களின் நாவல்கள் வந்துள்ளன. அதேபோல் இடதுசாரி இயக்கங்கள் கிராம வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்களைக் குறிப்பாகச் சொல்லாமல் பொதுநிலைப் படுத்திக் காட்டும் நாவல்களும், ஆலைத்தொழில் வளர்ச்சியில் நடத்திய போராட்டங்களையும் நாவல்கள் ஆக்கியுள்ளனர். டி.செல்வராஜின் மலரும் சருகும் தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும் அப்படியான நாவல்களே.
இந்த அளவுக்குக் கூடத் திராவிட இயக்கங்களின் போராட்டங்களைக் குறிப்பாகக் காட்டும் நாவல்கள் இடப் பின்னணியோடும் காலப்பின்னனியோடும் எழுதப்படவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கொதிநிலைப்படுத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாவல் வடிவத்தில் எழுதப்பெறவில்லை என்பது நினைவில் வருகிறது. அதே நேரத்தில் அவர்கள் தங்களின் கருத்தியல்களைத் திரள் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் நாடகங்களில் வெளிப்பட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கிறது. 1990 களில் தொடங்கிய தலித்திய எழுச்சியோடு அச்சான தலித்திய நாவல்கள் சாதிய முரண்களைப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் கற்பனையான பாத்திரங்களைத் தேர்வு செய்தே பேசியிருக்கின்றன. இத்தகைய போக்குகளின் நீட்சியாக இல்லாமல், குறிப்பான பெரும் நிகழ்வின் பின்னணியில் இமையம் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார். அதனாலேயே தனிச்சிறப்பான இடத்திற்குரியதாக ஆகியிருக்கிறது
கோவிட் நோய்த்தொற்று அலைகளால் நெருக்குண்ட காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரும் நாவலை வாசிக்கும்போது நாவலில் விவரிக்கப்படும் நிகழ்வுகளை அவரவர் அனுபவங்களாகக் கருதிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. நான் அப்படித்தான் உணர்கிறேன். இந்த நாவலில் இடம்பெற்றுள்ள முகாம்கள் பெரும்பாலும் அரசு முகாம்கள்; இலவசமாக மருத்துவம் தந்த முகாம்கள். நானும் கோவிட் நோயில் பாதிக்கப்பட்டு மருத்துவமுகாமில் இருந்தேன். ஆனால் நானிருந்தது ஒரு லட்சம் பணம் செலுத்தித் தனியார் மருத்துவமனை ஒன்றில். ஒருவார காலம் தங்கித் திரும்பிய அந்தக் காலம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. பெரும் துன்பியல் நினைவுகளாக இப்போதும் விரிந்துகொண்டே இருக்கின்றன. ஓராண்டுக்கும் மேலாக உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி-மரணத்தின் பிடியில் நிறுத்தி, மனித வாழ்க்கையின் இருப்பின் மீது இரக்கமற்று வினையாற்றிய நோய்க்காலம் அது. அதனைக் குறித்ததொரு நாவலை எழுதியதின் மூலம் இமையம் தனது எழுத்து வாழ்க்கையில் இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறார் .

கருத்துகள்