தொடரும் பாவனைப்போர்கள் -2

தொல்காப்பியம் Xஅகத்தியம் / ஐந்திரம் /இறையனார்
 
அண்மைக்காலத்தில் அகத்தியம் என்னும் கற்பனை நூலொன்றைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அகத்தியரை உருவாக்கியவர் இறையனார்(சிவன் என்பது புராணம் ) அதன் பின்னணியில் இருக்கும் நோக்கங்களை விரிவாக எழுதவேண்டும்.
 
தொல்காப்பியத்தைக் குறிவைத்துப் பேச அகத்தியத்தைக் கையிலெடுப்பது, பெரியாரைக் குறிவைத்துச் சச்சரவுகளை உருவாக்குவது போன்றது. நவீன மொழியியல் முன்வைக்கும் எழுத்து, சொல் இலக்கணங்களுக்கு இணையாக மொழியைக் குறித்துப் பேசும் இலக்கணம் தொல்காப்பியம். அதேபோல் அரிஸ்டாடிலின் ' கவிதையியல் (Poetics ) ' என்னும் பனுவலைப் போல இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசுவது தொல்காப்பியப் பொருளதிகாரம். இதனைத் தமிழியல் ஆய்வுலகம் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் இந்தியவியல் துறைகளின் மொழியியல், இலக்கியவியல் துறைகளும் அவற்றின் பேராசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 
தொல்காப்பியத்தைப் பின்பற்றி நடந்துள்ள ஆய்வுகள், நவீனப் பகுப்பாய்வு அடிப்படையில் நடந்தவை. அவற்றைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் அகத்தியம் / அகத்தியர் என்னும் கற்பனை முன் வைக்கப்படுகின்றது. புராணங்களை இலக்கியமாகக் கூட ஏற்காமல் விலக்கிவைத்த தமிழ் ஆய்வுப் போக்கை மாற்றிவிட நினைக்கிறார்கள். புராணங்களே இலக்கியம்; புராணங்களே வரலாற்றுத் தரவுகள் எனப் பேச நினைக்கும் நோக்கம் இதன் பின்னணியாக இருக்கிறது.

நான் முதுகலை மாணவனாக இருந்தபோது ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடந்தது. அப்போது ஒரு சிறு குழு 'ஐந்திரம்' என்றொரு நூலை முன்வைத்தது. தொல்காப்பியப் பாயிரத்தில் 'ஐந்திரம் அறிந்த தொல்காப்பியன்' என்ற வரி இருப்பதால், இந்த ஐந்திரம் என்ற நூல் தொல்காப்பியத்திற்கு முந்தியது. அதனை எழுதியது இந்திரன் என்று பேசி/ எழுதி/ அச்சிட்டு மாநாட்டுக்கு வந்த பேராளர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். அப்போதைய முதல்வர் திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அச்சிட நிதி வழங்கினார். அரசின் வெளியீடாகவே வந்தது. ஆனால் அறிவார்ந்த பேராளர்கள் அந்த நூலைக் கருத்தரங்க அறைகளிலேயே விட்டுவிட்டுப் போனார்கள். ஒருவர் கூடப் பின்னர் அது குறித்துப் பேசவில்லை; எழுதவில்லை. ஏனென்றால் அது ஒரு கற்பனைப் பனுவல். திசைதிருப்ப உருவாக்கப்பட்ட நூல்.

 
இப்போது பாரதமொழிகளுக்கான அமைப்பு என்ற பெயரில் நிதியுதவி செய்து அகத்தியத்தை - அகத்தியரைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும் பங்காளியாக இருந்து உதவுகிறது. நானறிய புதுச்சேரி மையப்பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மொழி ஆய்வு நிறுவனம், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் போன்றன அகத்தியம் குறித்த கருத்தரங்குகளை நடத்தியுள்ளன. இம்மூன்று கருத்தரங்கிற்கு முன்பே செம்மொழி நிறுவனத்தில் அகத்தியர் குறித்துச் சொற்பொழிவு நடந்துள்ளது. செம்மொழி நிறுவனத்திற்குப் புதிதாக வந்துள்ள துணைத்தலைவர் வழிகாட்டல் இருக்கவே செய்யும். இவரது வருகைக்கு முன்பே செம்மொழி நிறுவனம், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுக்குள் பக்தி, கடவுள், ஆன்மீகம், வேதமரபு போன்றவற்றைத் தேடத் தொடங்கிவிட்டது. அத்தகைய ஆய்வு செய்தவர்களைக் கொண்டாடவும் ஆய்வுப்பொருளாக்கவும் தொடங்கி விட்டது. தங்களுக்கென இலக்கியக் கோட்பாடும், இலக்கணவியல் பார்வையும் இல்லாத ஆய்வாளர்கள் கருத்தரங்குகள் நடத்தவும் கட்டுரைகள் படிக்கவும் தயாராகவே இருப்பார்கள்.

காசியில் தமிழ்ச்சங்கமம் நடத்தி, இலவசமாகப் பயண ஏற்பாடுகளும் சுற்றுலா வாய்ப்புகளும் கிடைத்தால் மறுப்பவர்கள் குறைவு. உறுதியான மொழி, இலக்கியப்பார்வை கொண்டவர்கள் மறுப்பார்கள், எதிர்நிலையில் கட்டுரைகளை வாசிக்க அனுமதித்தால் வாசிப்பார்கள். அப்படியில்லாதவர்களுக்குத் தேவை கல்விப்புல அங்கீகாரங்கள்; பதவி உயர்வுகள். அதனால் அவர்களைக் குறைசொல்லவும் முடியாது
இந்தத் திசை திருப்பல்கள் நடக்கும்போது தமிழ்நாட்டரசு தனது கவனத்தைச் செம்மொழி நிறுவனத்தின் பக்கம் திருப்பாமல் இருக்கிறது.அதன் தலைவராகக் கலைஞர் மு.கருணாநிதி இருந்தபோது சில ஆலோசனைக் குழுக்களை அமைத்திருந்தார். எண்பேராயம், ஐம்பெருங்குழு என்ற பெயரில் இருந்த அக்குழுக்கள் குறிப்பிட்ட கால அளவில் கூடி, அங்கு நடப்பனவற்றைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கின. ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் அவரைச் சந்தித்துக் கூட்டத்தில் விவாதித்தனவற்றை சொல்லிவிட்டுக் கலைந்தார்கள். அவற்றில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் இப்போது அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் முதல்வர் தான் செம்மொழி நிறுவனத்தின் தலைவர். ஆனால் எண்பேராயமும், ஐம்பெருங்குழுவும் இப்போது இல்லை. அந்த இடத்தில் தான் புதிதாக உருவாக்கப்பட்ட துணைத்தலைவர் இருக்கிறார். அவருக்கு உதவவும் ஆலோசனைகள் வழங்கவும் வெளிப்படாத குழுக்கள் இருக்கவும் கூடும்.

விமரிசனங்கள் மறுப்புகள் அல்ல

இரண்டு நாட்களுக்கு முன்னால் எழுதிய பெரியாரை மறுத்தலுக்கு எதிரான எனது பதிவொன்றில் ஒருவர் "இதையெல்லாம் ரவிக்குமாருடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்ததில் நீங்களும் ஒருவர்" என்ற பின்னூட்டம் இட்டார்.
அவர் சொல்வதில் ஓரளவு உண்மை உண்டு. 1990 களில் "பெரியார் மீதான விமரிசனங்களை ரவிக்குமார் முன்வைத்தபோது நானும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். அந்தக் கட்டுரைகள் புதிய கோடாங்கி இதழில் அச்சிடப்பெற்றன. அவ்விதழின் ஆசிரியர் சிவகாமியும் பெரியார் மீது விமரிசனம் வைக்கும் கட்டுரைகளை எழுதினார். இன்னும் சிலரும் எழுதினார்கள். எழுதப்பெற்ற விமரிசனங்கள் அனைத்தும் தலித்தியப் பார்வையில் முன்வைக்கப்பட்ட விமரிசனங்கள். ஆம் விமரிசனங்கள்; மறுப்புகளோ பெரியார் நீக்கமோ அல்ல.
***
குறிப்பிட்ட நிகழ்வுகளை, சில தனிப்பட்ட ஆளுமைகளை, குறிப்பான ஒரு சில எழுத்துகளை முன்வைத்து இயக்கங்களின் நிலைபாட்டை விமரிசனம் செய்யலாம். அந்த விமரிசனம் எதிர்நிலைப்பாடெடுத்து மறுத்து ஒதுக்குவதை நோக்கிச் செல்லும் என்றால் நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கம்யூனிஸ்டுகளை நோக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரப்புரைகள் விமரிசனங்கள் மட்டுமே.

 காங்கிரஸுக்கு மாற்றாகக் கம்யூனிஸ்டுகள் வளர்வதைத் தடுகத் தி.மு.க. மேற்கொண்ட உத்திகள் அவை. அதேபோல் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியைப் பிடித்தபோது இடதுசாரிகள் மேற்கொண்ட விமரிசனங்களும் அத்தகையனவே. அதற்குப் பதிலுரையாகத் திராவிட முன்னேற்றக்கழகம் முன்வைத்தனவும் விமரிசனங்களே. அவை கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிட வேண்டும் என்றோ, திமுக வை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்றோ மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்ல.
 
தொண்ணூறுகளின் நடுவில் தலித்தியச் செயல்பாட்டாளர்கள் பெரியார் மீதும், திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீதும் எழுப்பியனவெல்லாம் விமரிசனப்பார்வைகள் மட்டுமே. பிராமணர் X பிராமணரல்லாதார் என்ற எதிர்நிலையில் தலித்துகளின் இடம் இல்லாமல் ஆக்கப்படுகிறது என்ற புரிதலோடு தலித்துகளின் இடத்தைக் கோரிய முன்வைப்புகள் அவை. குறிப்பாகப் பெரியாருக்கு இணையாகவே சநாதன - வர்ணப்பார்வை மீது அயோத்திதாசர் தனது விமரிசனங்களை முன்வைத்துள்ளார்; அம்பேத்கரின் ஆய்வுகள் இருந்துள்ளன என்ற நிலையில் அவையெல்லாம் தமிழ்நாட்டு அறிவுத்தளத்தில் விவாதமாகவில்லை என்ற ஆதங்கத்தால் எழுந்த விமரிசனங்கள். அந்த விமரிசனங்கள் முழுமையாகப் பெரியாரை - பெரியாரின் சிந்தனைகளைத் தமிழ் மக்களிடமிருந்து விலக்கித் தூரமாக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டவை அல்ல. அந்த விமரிசனங்கள் தான், பெரியாரை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கிய கலகக்காரர் என்று பேசுவதோடு நாம் X அவர்கள் என்ற முரணிலையில் தலித்துகளையும் சிறுபான்மைச் சமயத்தவரையும் அவர்கள் என்ற இடத்தில் வைத்தார் என்று காட்டின. குறிப்பான சில நிகழ்வுகளில் இடைநிலைச் சாதி ஆதரவோடு இருந்தவர் என்றும் காட்டின. இதற்கெல்லாம் அவரது உரைகளிலிருந்தும் எழுத்துகளிலிருந்தும் சான்றுகள் காட்டப்பட்டன என்பதைக் கவனிக்க வேண்டும். அதே வேளை அவரைத்த் தமிழ் வெறுப்பாளர்; தலித்துகளின் எதிரி என்று கட்டமைக்க நினைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

அந்த விமரிசனங்களுக்கும், கடந்த 10 ஆண்டுகளில் ஒலிக்கும் 'காங்கிரஸ் இல்லாத இந்தியா; திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழ்நாடு :பெரியார் இல்லாத தமிழ் அறிவிப்பரப்பு ' போன்ற குரல்களுக்கும் வேறுபாடு உண்டு என்பதுதான் கவனிக்க வேண்டியன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

தனித்தன்மையான கல்வி; தனித்துவமான வாழ்க்கை: எதிர்நீச்சலடிக்கும் எதிர்பார்ப்பு.

புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்