கறுப்புமில்லை-வெளுப்புமில்லை: வண்ணங்கள்

நயன்தாரா - விக்னேஷ் திருமணம் சமூக ஊடகங்களின் பெரும்போக்காக -ட்ரெண்டாக உருட்டப்பட்டன. இரண்டு நாளைக்கு முன் கமல்ஹாசன் நடித்த விக்ரம்- 2 என்ற சினிமாவின் உருவாக்கமும் அது உண்டாக்கிய உணர்வுகளும் உருட்டல்கள். அதற்கு முன் கலைஞர் பிறந்தநாள். எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குதல். இப்படியான உருட்டல்களால் சமூக ஊடகங்களின் இருப்பு தவிர்க்க முடியாதனவாக மாற்றப்படுகின்றன. மாற்றப்படும் நிகழ்வுகளைக் கவனித்தால் அவற்றிற்குப் பேருருத்தன்மைகள் இருப்பதைக் கவனிக்கலாம். பேருருத்தன்மை(MACRO)களால் உருவாக்கப்படும் வெகுமக்கள் பண்பாடே (POPULAR) நம்காலத்தின் அரசியலாகவும் பண்பாடாகவும் வெகுமக்கள் பண்பாட்டை உருவாக்கும் கூறுகளுக்குள் சிற்றலகுகள் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், நிகழ்வுகள், பண்பாட்டு நடவடிக்கைகள் கவனம் பெறாமல் போய்விடும்.

பேரடையாளங்களை முன்னிறுத்துச் சிற்றடையாளங்களைக் காணாமல் ஆக்கும் இந்தப் போக்கு பின் நவீனத்துவ காலகட்டத்தின் அடையாளங்களில் ஒன்று. இந்தப் போக்கின் பருண்மையான அடையாளங்களாக நான்குவழிச் சாலைகளும் எட்டுவழிச்சாலைகளும் இருக்கின்றன. ஸ்மாட் சிட்டிகள் என அழைக்கப்படும் சீர்மலி நகரங்கள் இருக்கின்றன. எல்லாச் சிறுநகரங்களிலும் பட்டறைகளையும் சிறுகுறு தொழில்களை வளர்ச்சியையும் முதன்மைப்படுத்திய ஆரம்பக் கட்ட முதலாளியம், பெருமுதலாளியமாக மாறியதின் வெளிப்பாடுகள் இவை. பேரங்காடிகள், பெருநகரங்கள், பெருந்திருவிழாக்கள் என நகரும் போக்கோடு நாடுதழுவிய - பான் இண்டியன்(PAN INDIAN ) - சினிமாக்கள் எனப் பெருமுதலாளியம் இந்தியாவைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. இப்போதைய இந்தியா பின் நவீனத்துவ காலகட்டத்து நகர்வுகளுக்குள் அலைந்துகொண்டிருக்கிறது. பின் நவீனத்துவ காலகட்டத்தில் பேரடையாளங்களும் பேருருக்களும் மட்டுமே வலம் வரும் என்பதில்லை. சிற்றடையாளங்கள், சிறுகதையாடல்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை உருட்டிஉருட்டி விவாதிக்கும் மாற்றுச் சமூக ஊடகங்கள் தான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

********
கொரோனா காலத்தில் தொலைக்காட்சிகளில் வாரக்கடைசி நாட்களில் தயாரிக்கப்பட்ட நீயா? நானா? , தமிழா! தமிழா!! போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் போய்விட்டன. அவை எதிர்வுகளால் கட்டியெழுப்பப்படும் நிகழ்ச்சிகள். இவைகளின் நேர்மறை அம்சமாக இருப்பன, எதிரணியின் கருத்துகளும் முன்வைக்கப்படும் வாய்ப்புகளை வழங்குகின்றன என்பதுதான். ஆனால் தீர்ப்பு சொல்லும் நடுவர்களும் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் எல்லாவற்றையும்- இருபக்க நியாயங்களையும் மறக்கடிப்பதைப்போல நீண்ட சொற்பொழிவொன்றை நிகழ்த்தி அவர்களது முடிவை – ஒற்றை முடிவை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள் என்பதும் நடைமுறை உண்மை.
 
சிறப்பு நிகழ்ச்சிகளின் இரட்டைநிலையை நிகழ்காலத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் விவாதங்களும் உள்வாங்கியுள்ளன. பெரும்பாலும் அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மேல் உருவாக்கப்படும் அந்நிகழ்ச்சிகள் இவர்கள் X அவர்கள் என்ற மனநிலையில் விவாதங்கள் நடக்கின்றன; நடத்தப்படுகின்றன. அந்த விவாதங்கள் பெரும்பாலும் மாநில அரசு X மைய அரசு அல்லது தேசிய அரசியல் X மாநில அரசியல் அல்லது ஆளுங்கட்சி X எதிர்க்கட்சி அல்லது வலதுசாரிகள் X இடதுசாரிகள் என்பதான எதிர்வுகளில் அமைகின்றன. அத்தகைய விவாதங்கள் நடக்கும்விதமாகவே பேசுவதற்கான தலைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதனை ஒட்டியும் வெட்டியும் விவாதிக்கத்தக்க விதமாகவே பங்கேற்பாளர்களும் அழைக்கப்படுகின்றனர்.

“வெட்டு ஒன்று; துண்டு ரெண்டு” – இப்படிப் பேசுபவர்களைப் பெரும்பாலோருக்குப் பிடித்துப்போகிறது. இந்தச் சொற்றொடரைக் கிராமத்துப் பஞ்சாயத்துகளில் நீங்கள் கேட்டிருக்கக்கூடும் . பஞ்சாயத்துகளில் தீர்ப்புச் சொல்லும் நாட்டாண்மைகள் தங்களை – தங்களது தீர்ப்பை – முடிவை இப்படியான ஒன்றாகக் காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள். அப்படிச் சொல்லும் தீர்ப்புகளைப் பஞ்சாயத்தில் உட்கார்ந்திருக்கும் பலரும் ஏற்றுக் கொண்டு மறுப்பு சொல்லாமல் வீடு திரும்புவதையும் பார்த்திருக்கலாம். கணவன் – மனைவி உறவுச்சிக்கல், தந்தை -மகன் குடும்பச்சிக்கல், அண்ணன் – தம்பி சொத்துத் தகராறு, பக்கத்து நிலத்துக்காரருடன் வாய்க்கால், வரப்புத் தகராறு, அடுத்த தெருக்காரருடன் கோயில் தகராறு போன்றவற்றில் தீர்ப்பு சொல்பவர்கள் கறாரான ஒரு முடிவை – வெட்டு ஒன்னு; துண்டு ரெண்டு என்பதுபோலச் சொல்லிவிட வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள். வழக்கென்று வந்துவிட்டால் வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் வேலையெல்லாம் நீதிமன்றங்களின் – வழக்குரைஞர்களின் வேலை. கிராமத்து பஞ்சாயத்து என்றால் ‘கையிலெ காசு; வாயிலெ தோசை’ என்பதுபோல முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கிராமப் பஞ்சாயத்து நாட்டாமைகளைப் போலவே நகரத்தெருக்களிலும் அரங்குகளிலும் திரளான மக்கள் முன்னால் சில நிகழ்வுகள் நடப்பதுண்டு. அங்கும் நிகழ்ச்சிகள் முடியும்போது தெள்ளத் தெளிவான முடிவு இதுதான் எனச்சொல்லி மக்கள் அனுப்பப்படுவார்கள். கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? மறைந்து நின்று வாலியைக் கொன்றது சரியா? தவறா? மக்கள் வாழ்வதற்கேற்ற இடங்கள் நகரங்களா? கிராமங்களா? போன்ற எதிரிணைகள் உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படும் வழக்காடு மன்றங்களும் பட்டி மன்றங்களும் முன்வைக்கப்படும் முடிவுகளும் கிராமத்து நாட்டாண்மைகளின் தீர்ப்புகளையே நினைவூட்டவல்லன. இந்தப் பட்டிமன்றங்களும் வழக்காடு மன்றங்களும் இப்போது நமது தொலைக்காட்சி நிலையங்களின் சிறப்புநாள் நிகழ்ச்சிகளாக மாறிவிட்டன. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, விசயதசமி என முதன்மையான பண்டிகைநாட்களின் முதன்மை நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.

அண்மைக்காலங்களில் பரவலாகவும் பரபரப்பாகவும் இருக்கும் சமூக ஊடகங்களுக்கும் இந்தக் கட்டமைப்பு நீண்டு வருகின்றது. அனைவரும் பங்கேற்கும் வாய்ப்புகொண்ட சமூக ஊடகங்களான முகநூல், சிட்டுரை போன்றவற்றில்கூட இதுபோன்ற இரட்டைநிலைப் பதிவுகளே அதிகம் விரும்பப்படுகின்றன. அதிகமான விருப்பங்கள் பெறவிரும்பும் நோக்கத்தில் அன்றாட நிகழ்வுகளில் சிலவற்றைத் தேர்வுசெய்து அன்றைய பெரும்போக்காக (Trend) பெரும்பாலோர் ஏற்கும் விதமாகவே பலரும் பதிவுகள் எழுதுகின்றனர். தங்களின் பதிவுகளின் கீழ் வளரும் விருப்பக்குறிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்காக எழுதும் மனநிலையும் ஒருவிதத்தில் நாட்டாண்மையின் தீர்ப்பு மனநிலைதான்.

கிராமத்து நாட்டாண்மையின் தீர்ப்பு தொடங்கி சமூக ஊடகங்களின் பெரும்போக்குப் பதிவுகள் வரை வெளிப்படும் இரட்டை எதிர்மனநிலைகள் (Bi-nary oppositions) பெரும்பாலும் எல்லாவற்றையும் கறுப்பு – வெள்ளையாகப் பார்க்கும் தன்மைகொண்டன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிகழ்வு அல்லது ஒரு நபர் அல்லது ஒரு செய்தி போன்றவற்றை இரட்டை எதிர்மனநிலைகளில் நின்று பார்ப்பது எப்போதும் நல்ல முடிவுகளைத் தராது. அதுவும் மக்களாட்சி நடக்கும் இந்தக் காலத்தில் ஒவ்வொன்றையும் இதுவா? அதுவா? எனப் பார்க்கும் மனநிலையினால் தான் நமது மாநிலத்தில் / நாட்டில் ஆட்சி மாற்றங்கள் நடக்காமல் போகின்றன. அப்படி நடந்தாலும் ஏற்கெனவே இருக்கும் இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் மனப்போக்கில் வாக்களிக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும்; மாற்றப்படவேண்டும்.
நல்லது அல்லது கெட்டது எனப்பார்க்கும் பார்வையை மனித உயிர்களுக்கு உருவாக்குவதில் சமயச் சடங்குகளும் நம்பிக்கைகளும் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் சமயங்களின் இன்னொரு பரிமாணமான ஆன்மீக நிலைப்பாடுகளும் ஞானமரபுகளும் இப்படி இரட்டை நிலையை முன்வைப்பதில்லை. அவை மனித மனங்களின் அலைவுகளையும் படிநிலைகளையும் ஏற்கின்றன. கலை இலக்கியங்களின் இயங்குநிலையும் இதனைச் செய்வனவே. இதே நிலையைத்தான் மக்களாட்சி அமைப்பின் சட்டங்களும் மரபுகளும் உருவாக்குகின்றன. ஆனால் வெகுமக்கள் ஊடகங்கள் அவ்வாறு முன்வைப்பதில்லை. ஆனால் ஞானமரபை முன்னெடுக்க வேண்டிய சமயவாதிகளும், இருப்பின்மீதான பல அடுக்குகளையும் சாயல்களையும் எழுதிக் காட்ட வேண்டிய எழுத்தாளர்களும், மனிதக்கூட்டத்தின் நலன்களை முன்னெடுக்க வேண்டிய அரசியல்வாதிகளும் இரட்டையின் ஒன்று என்றே அலைகின்றனர். ஒத்தையா? ரெட்டையா? இரண்டில் ஒன்று; போட்டுப்பாரு இதுதான் நடப்பாக இருக்கின்றன.

ஏற்கத்தக்கனXநிராகரிக்கவேண்டியன என்ற எதிர்நிலையில் எழுதப்படும் சட்டங்களை மட்டுமே பின்பற்றாமல் மரபுகளையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களாட்சி அமைப்பில் செயல்படும் மிக உயர்ந்த அமைப்புகளான பாராளுமன்ற, சட்டமன்ற சபைகளும், நீதிமன்றங்களும் எழுதப்படாத மரபுகளையும் எழுதப்பட்ட சட்டங்களையும் பின்பற்றுவது விரும்பப்படுகின்றன.

இந்தப் புரிதலின் பின்னணியில் மனித உயிர்கள் இந்த உலகத்தின் இயற்கை வண்ணங்களை ரசிக்கும் மனோபாவமும் ஏற்கும் மனநிலையில் இருக்கின்றன. கறுப்பு – வெளுப்பு என்பதாக இந்த உலகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கருமை, வெண்மை என்பன இயற்கை வண்ணங்களே அல்ல. இயற்கையின் அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும் வானவில்லைப் பார்த்திருப்போம். நிறப்பிரிகையை -நிறங்களின் சேர்க்கையான அனைத்து வண்ணங்களையும் தனித்தனியாக க்காட்டாமல் ஒன்றின்மேல் ஒன்றாகப் பிணைந்து வானத்தில் தோன்றி வர்ணஜாலம் காட்டும் வானவில்லைப் போல ஒவ்வொன்றையும் ஏற்கும் மனநிலையை மனிதர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்