அ.ராமசாமியின் விலகல் தத்துவம் - தேவி பாரதி

 

ஒன்று

ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு கைகூடும் கனவு அது.

1957இல் பிறந்த, அப்போதைய கோவை மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமொன்றில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த, தன் சக ஆசிரியர்களால் கே.என். எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட நல்லமுத்து ஆசிரியர் - முத்தம்மாள் தம்பதியின் மூத்தமகன் எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியொன்றில் குமாஸ்தாவாக இருப்பவன், 1993இல் எழுதி வெளியிட்ட 'பலி' என்னும் தமிழின் புகழ்பெற்ற தலித் சிறுகதை 2012இல் கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ரானடே ஆடிட்டோரியத்தில் தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்றுநாள் கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய நிகழ்வாக மேடையேற்றப்படவிருந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இப்போதைய தமிழ்த்துறைப் பேராசிரியரும் முன்னாள் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியரும் முன்னாள் வார்சா பல்கலைக்கழக ஆசியவியல் துறைத் தலைவரும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவரும் அதன் இயக்குனருமான பேராசிரியர் அ. ராமசாமியின் இருபதாண்டு காலக் கற்பனை, கடின உழைப்பின் விளைவு இது. இதைப் பார்ப்பதற்காக உலகின் வெவ்வேறு பகுதிகளையும் வெவ்வேறு குழுக்களையும் சேர்ந்த எழுத்தாளர்களும் கவிகளும் பேராசிரியர்களும் பல்துறை ஆளுமைகளும் திரண்டு வந்து காத்திருக்கிறார்கள்.

 நாடகம் ஏறக்குறைய தயாராகிவிட்டது. சுமார் இரண்டுமாத காலமாக நடைபெற்றுவந்த ஒத்திகை முற்றுப்பெற்றுவிட்டது. எஞ்சியிருந்தது ஓர் இறுதி ஒத்திகை மட்டுமே. லைட்டிங், மேக்கப், மியூசிக் முதலான அனைத்து அம்சங்களுடனான இறுதி ஒத்திகை. அது முடிந்தபிறகு அடுத்த பதினெட்டு மணி நேரத்தில் நாடகம் மேடையேற்றப்பட்டுவிடும். அ. ராமசாமி இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டார். அவருடைய மாணவர்கள் சிலரும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள் சிலரும் சேர்ந்து இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேடையில் தொங்கவிடப்படுவதற்காக ரோகிணி மணி இரண்டு தைலவண்ண ஓவியங்களைச் சட்டமிட்டு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். அதை மேடையில் எங்கே எப்படிப் பொருத்துவது என்பதைப்பற்றி அந்த நாடகத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் யோசனை கேட்டுக்கொண்டிருக்கிறார். சம்பந்தப்படாத சிலரும்கூட யோசனை சொல்கிறார்கள். ஓவியரால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவர் மிகக் கலக்கத்துடன் காணப்படுகிறார். நாடகத்தின் மூலக்கதை ஆசிரியரான என்னைப் பார்க்க நேரும் தருணங்களில் சங்கடத்துடன் புன்னகைக்கிறார். அது நான் அறியக்கூடாத ரகசியம் என்பதுபோலக் கடந்து போய்விடுகிறார். நாடகத்தின் முடிவில் அதற்குக் கூடுதலான அடர்த்தியை அளிக்கும்பொருட்டு தனது கவிதையொன்றை வாசிக்கும்படி கவிஞர் சுகிர்தராணி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்ததாக ரகசியமான தகவல் உலவிக்கொண்டிருந்தது. பேராசிரியர் அ. ராமசாமி அதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்பியிருக்கக்கூடும். கவிதை எழுதுவதோடு ரகசியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு தன்மீது சுமத்தப்பட்டிருந்ததால் கவிஞர் பரபரப்பாக இருந்தார். யாருடனும் பேசுவதைத் தவிர்த்து அறையிலேயே முடங்கிக் கிடந்தார். சூரியோதயத்தைப் பார்ப்பதற்குக்கூடக் கடற்கரைக்குப் போகவில்லை.

அ. ராவும் அவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். கவிதையை ஏற்கனவே எழுதி எடுத்துக்கொண்டு வந்திருந்தார் என்றாலும் அதை மேலும் செப்பனிட வேண்டியிருந்தது. வார்த்தைகளை மேலும் மேலும் கூர்மைப்படுத்த வேண்டியிருந்தது. அதற்காகக் கவிஞர் தனிமையில் இருக்க விரும்புகிறார். யாராவது தனது தனிமையைக் குலைத்துவிடுவார்களோ என்னும் பதற்றம் காரணமாகவும் யாரிடமும் நட்பு பாராட்டுவதை அறவே தவிர்க்கிறார்.

 நாடகத்தின் சூத்திரதாரி, இயக்குனர் பேராசிரியர் அ. ராமசாமி மட்டும் சிறிதும் பதற்றமற்ற மனிதராகத் தென்படுகிறார். எல்லா அமர்வுகளிலும் ஏதோவொரு தருணத்தில் ஏதோவொரு நாற்காலியில் யாராவது ஒருவருடன் அவர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சிறுகதை எழுத்தாளர்களைப் பார்க்கும்போது அவர்களது கதைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கும்பொருட்டோ என்னவோ அவர்களிடம் புதுமைப்பித்தனைப் பற்றியோ மௌனியைப் பற்றியோ பேசுகிறார். நாவலாசிரியர்களைப் பார்க்கும்போது ஹெமிங்வேயைப் பற்றியோ தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றியோ பேசுகிறார். இமையத்தைப் பார்க்க நேரும்போது மட்டும் இமையத்தைப் பற்றியே பேசுகிறார். இப்படியே கவிஞர்களைப் பார்க்கும்போது பாரதியைப் பற்றியும் அறிஞர்களைப் பார்க்கும்போது உவேசா பற்றியும் பேசுகிறார். ஆனால் நாடகத்தைப் பற்றிய ரகசியமான கவலை அவரிடமும் தென்பட்டுக்கொண்டுதான் இருந்தது. யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது பார்வை உறைந்துவிடுகிறது. நெற்றி சுருங்குகிறது. உதடுகள் இறுகுகின்றன. பேசிக்கொண்டே தன் மார்பில் தொங்கிக்கொண்டிருக்கும் முகக்கண்ணாடியை இருகைகளாலும் பற்றிச் சுத்தமாகத் துடைக்கிறார். பழையபடி மார்பின்மீது தொங்கவிட்டுக் கொள்கிறார். விடைபெற்றுக்கொண்டு ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தியேட்டரை நோக்கித் தன்னந்தனி மனிதராக நடந்து செல்கிறார். பிறகு அவரது உருவம் பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது.

அவருங்கூட என்னைப் பார்ப்பதை அறவே தவிர்க்கிறார்.

பேராசிரியர் மட்டுமின்றி அந்த நாடகத்தோடு அப்படி இப்படியெனத் தொடர்பு வைத்துக்கொண்டிருந்த எல்லோருமே என்னைத் தவிர்ப்பதை உணர்ந்தேன். ஒத்திகை நடைபெறும் தியேட்டருக்குப் போனால் வேண்டாத விருந்தாளியாக உணர்கிறேன். அதன் கதவுகள் இறுகச் சாத்தப்பட்டிருக்கின்றன. அழைப்பு மணியை அழுத்தினால் யாராவது வருகிறார்கள். கதவைக் கொஞ்சமாகத் திறந்து எட்டிப் பார்க்கிறார்கள். என்ன விஷயம் என்றோ யாரைப் பார்க்க வேண்டுமென்றோ கறாரான குரலில் கேட்கிறார்கள். என்னை அடையாளம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் யாருடைய கண்களிலும் இல்லை. சொன்னாலும் பிறகு வரச்சொல்கிறார்கள்.

யாருக்கும் அவகாசமில்லை. ஒவ்வொருவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் முன்னிரவு சரியாக எட்டு மணிக்கு ஒத்திகை ஆரம்பமாக இருக்கிறது.

இறுதி ஒத்திகை.

அது வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் அதற்கடுத்த இரவில் நாடகம் மேடையேற்றப்படும். வேறு யாருக்கு இல்லை என்றாலும் உங்களைப் பொறுத்தவரை அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள்.

கதவுக்கு வெளியே நீளும் ஒவ்வொரு சிரசும் இதையே தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டு திரும்பிவிடுகிறேன்.

மனப்பிறழ்வுக்குள்ளானவனைப் போலக் கேந்திரம் முழுவதும் சுற்றித் திரிகிறேன். தன்னந்தனி ஆளாகநின்று சூரியன் எழுவதையும் மறைவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்களைப் பார்க்கிறேன். முகமன் கூறுகிறேன். கை குலுக்குகிறேன். ஜோக் அடிக்கிறேன். பிறர் அடிக்கும் ஜோக்குகளுக்குச் சிரிக்கிறேன். பார்களுக்குப் போகிறேன். விஸ்கி, பியர் குடிக்கிறேன். வறுத்த கடலைப் பருப்பு, மிளகுத்தூள் தூவிய வெள்ளரிக்காய், மீன் விரல்கள் என எனக்கு முன்னால் வைக்கப்பட்ட தட்டுகளில் தென்பட்ட எல்லாவற்றையும் தின்று தீர்க்கிறேன். ஆனாலும் நான் உற்சாகமாக இருக்கிறேன். மூன்று நாட்கள், இரண்டு அரங்குகள், பதினான்கு அமர்வுகள், ஓர் ஓவியக் காட்சி, ஓர் இசைக் கச்சேரி, இரு நவீன நாடகங்கள். அவற்றிலொன்றின் மூலக்கதை என்னுடையது. அதைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து அறிவுலக ஆளுமைகள் பலர் வந்து காத்திருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய பேறு இது?

இரண்டு

அந்தக் கதையை ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன் எழுதினேன். கோவை ஞானியின் நிகழ் இதழொன்றில் அந்தக் கதை வெளிவந்தது.

அவள் பிராமண குலத்தில் பிறந்த வேசி. தொழிலுக்குப் புதியவள்.

தலித் வாடிக்கையாளனொருவன் விடுதியிலிருந்து அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்து வருகிறான். அவள் நல்ல அழகி. தொழிலுக்குப் பொருத்தமற்ற குழந்தை முகம். இன்னும்கூடக் கன்னிமையின் எழில் சிதைக்கப்படாதவள். உடைந்து அழத் தயாரானநிலையில் பொலிவிழந்ததொரு புராதனச் சிற்பம்போலத் தன் முன்னால் நிற்கும் அந்த வேசியின்மீது அவன் பச்சாதாபம் கொள்கிறான். அவளை உட்காரச் சொல்கிறான். அவளுக்கு பிஸ்கட்டுகளும் தேநீரும் சாப்பிடத் தருகிறான். பிறகு அவளுடைய பெயரையும் ஊரையும் கேட்கிறான். அவள் தயக்கத்துடன் அவனுக்குப் பதிலளிக்கிறாள்.

அவள் தன்னுடைய பூர்வீகக் கிராமத்தைச் சேர்ந்தவள் என்பதை அறிபவன் அவளுடைய முன்னோர் களைப் பற்றிக் கேட்கிறான். (அவர் ஒரு பிராமணர்). கடவுளின் தூதர்களைப்போலத் தன்னுடைய கிராமத்தின் தெருக்களில் நடமாடியவர்கள் அவர்கள். தீண்டத்தகாதவரான தன்னுடைய பாட்டனார் அவளுடைய பாட்டனாரின் மலத்தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த கசப்பான கடந்த காலம் ஒரு பயங்கரமான கனவைப்போல அவனது நினைவுக்கு வருகிறது.

பிறகு அவன் அவளை முத்த மிடுகிறான். செத்த மாட்டின் இறைச்சியைத் தின்று வளர்ந்த தன் உமிழ்நீரைப் பிரம்மனின் தலையில் பிறந்ததாகச் சொல்லப்பட்ட அவளு டைய வாய்க்குள் துப்புகிறான். சிகரெட் நுனியில் கனன்ற நெருப்பால் அவள் உடல் முழுவதையும் சுடுகிறான். தன்னுடைய முன்னோர்களுக்கு அவளுடைய முன்னோர்கள்இழைத்த கொடுமைகளைப் பற்றி விவரித்துக் கொண்டே அவன் அவளைப் புணர்வதையும் அவளது உடலைச் சுட்டுப்பொசுக்குவதையும் பெயரோ உருவமோ அற்ற கதை சொல்பவர் ஒருவர் உலகப் புகழ்பெற்ற திரைப் படங்களிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பெற்ற மேற்கோள்களின் உதவியுடன் வாசகர்களுக்கு விளக்குகிறார்.

கதை முடிவற்ற ஒன்றாக முடிந்து விடுகிறது.

கதையின் சுருக்கம் இது.

கதை வெளிவந்த சில நாள்கட்களுக்குள்ளாகவே அது பரவலான வாசக கவனத்தைப் பெற்றது நான்பெற்ற பேறுகளில் ஒன்று. தமிழின் முக்கியமான தலித் சிறுகதை என்று தலித் இலக்கியவாதிகளாலும் தலித் அல்லாத தலித் அறிஞர்களாலும் கொண்டாடப்பட்டது. விமர்சகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றது. கதை வந்த வருடத்தில் வெளியான நிறப்பிரிகை இதழ் ஒன்று குறிப்பிடத்தகுந்த தலித் எழுத்தாளர்களைப் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஏறக்குறைய அதே தருணத்தில் வந்த Indian Literature இதழில் ராஜ்கௌதமன் எழுதிய கட்டுரை ஒன்றில் அது ஒரு powerful short story என்னும் வாசகம் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து நான் துள்ளினேன். என் பெயரோடு 'பலி' என்னும் முன்னொட்டுகூடச் சேர்ந்து கொண்டு சில வருடங்கள்வரை புழக்கத்திலிருந்தது.
எனக்குப் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலிருந்து அழைப்பிதழ்கள் வரத்தொடங்கியிருந்தன. எழுத்தாளர்களிடமிருந்தும் நண்பர் களிடமிருந்தும் நிறையக் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. எழுபதுக்கும் குறைவான வீடுகளைக் கொண்டிருந்த எங்கள் ஊருக்கு நாள்தோறும் வந்துபோக வேண்டியிருந்த குட்டப் பாளையம் கிளை அஞ்சலகத் தபால்காரரின் கசப்பைச் சம்பாதித் துக் கொண்டிருந்தேன். தினமணி கதிரில் இலக்கியத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக எனது பெயர் புகைப் படத்துடன் இடம்பெற்றபோது பலரது புருவங்களும் உயர்ந்தன.
இதுபோன்ற சூழலில்தான் 1994இல் சங்கீத நாடக அக்காதெமி நடத்திய இளம் நாடக ஆசிரியர்களுக்கான பயிலரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு சிறந்த நாடகங்களில் ஒன்றாக எனது 'மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்' என்ற நாடகப் பிரதி தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றொன்று மலைச்சாமியின் முனி. 'முனி' தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத் துறையில் பேராசிரியர் மு. ராமசாமியின் இயக்கத்திலும் என்னுடைய நாடகம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் ஆர். ராஜூவின் இயக்கத்திலும் தயாரிக்கப்பட்டது. பயிற்சிப்பட்டறையில் நாடக ஆசிரியரும் பங்கேற்க வேண்டும். இயக்குனர்களும் நடிகர்களும் நாடக ஆசிரியருடன் விவாதிப்பார்கள். நாடக ஆக்கத்தின்போது பிரதி அடையும் மாற்றங்களை நாடக ஆசிரியர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்; அல்லது அவற்றை ஏற்க வேண்டும். விருப்பப்பட்டால் அவரே மாற்றங்களைச் செய்து தரலாம்.

நாடக இயக்குனரைப் பொறுத்த வரை இது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமல்ல. நாடக ஆக்கம் பற்றிய முதல் விவாதத்தின்போது அதில் பங்கேற்று நடிக்கவிருந்த நாடகத்துறை மாணவர்களிடம் பேராசிரியர் ராஜூ சொன்ன முதல் வாக்கியம் இது, “ஒரு நல்ல நாடகம் அதன் ஆசிரியனைக் கொன்றபிறகே உருவாகிறது”.

நான் திடுக்கிட்டுப் போனேன். நான் கொலை செய்யப்படுவது, அதை நானே பார்த்துக்கொண்டிருப்பது, அதற்கு உதவி செய்வது, அல்லது இயக்குனர், நடிகர்களின் அபிப் பிராயத்திற்கிணங்க நானே என்னைக் கொன்று கொல்வது! சங்கீத நாடக அக்காதெமி நவீனமாகத் தான் சிந்தித்திருக்கிறது. இந்தக் கொலை, தற்கொலை முயற்சிகளில் உடனிருப்பதற்காகப் பெட்டியுடன் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறைக்கு வந்து சேர்ந்தேன். உடை, உடமைகளுடன் என் சிறுகதைத் தொகுதியின் பத்துப் பன்னிரண்டு படிகளும் அந்தப் பெட்டியில் இருந்தன. நாடகத்துறையில் இருந்த அ. ராமசாமி, ஆறுமுகம், கரு.அழ. குணசேகரன் (அப்போது அவர் நாடகத்துறைத் தலைவர்) தவிர பல்கலைக்கழக விடுதியறையில் என்னுடன் தங்கியிருந்த சுப்பையா, அனீஸ் ஆகிய மாணவர்களுக்கும் பேராசிரியர் ராஜூவுக்கும் ஆளுக்கொரு பிரதி கொடுத்தேன்.

 பேராசிரியர் அ. ராமசாமியை அதற்கு முன்பே ஓரிருமுறை சந்தித்திருந்தேன். இலக்கியக் கூட்டங்களில் கலகம் செய்யும் பேராசிரியராக அவர் பெரும்புகழ் பெறத் தொடங்கியிருந்த தருணம் அது. அப்போது பிரபலமாக இருந்த தெலுங்குப்பட வில்லன் ஒருவனின் சாயலில் இருந்த அ. ராவைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்போதைய கலக இலக்கியவாதிகள் நிறைய கெட்டவார்த்தை பேசுவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் கெட்டவார்த்தை பேசினார்களோ அவ்வளவுக்கவ்வளவு நவீனமானவர்களாகவும் பின்நவீனமானவர்களாகவும் கருதப்பட்டார்கள். கூட்டங்களில் யாராவதொரு முதுபெரும் எழுத்தாளர் பேசிக் கொண்டிருக்கும்போது ஆவேசமாக எழுந்து நிற்க வேண்டும். “எதுக்காக இவ்வளவு அபத்தமாப் பேசிக்கிட்டிருக்கீங்க?” எனக் கோபத்துடன் கேட்க வேண்டும். அதைச் சற்றும் எதிர்பார்த்திராத முதுபெரும் எழுத்தாளர் பேச்சை இழந்து திடுக்கிட்டு நிற்கும்போது, “இதெல்லாம் எங்க மேல திணிக்கற வன்முறை” என உரத்த குரலில் ஆவேசமாகக் கத்த வேண்டும். கூட்டத்தின் உற்சாகத்தைப் பொறுத்து இந்த வாக்கியங்களுக்கு முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ இரண்டு கெட்டவார்த்தைகளைப் போட வேண்டும். பிறகு மற்றவர்களும் தைரியமடைந்து தமக்குத் தெரிந்த கெட்டவார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள். அநேகமாகக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிடும். இதைச் சாத்தியப்படுத்தும் பல இளம்தலைமுறை இலக்கியவாதிகள் அப்போது நிறைய இருந்தார்கள்.

இதில் விமலாதித்த மாமல்லன் தேர்ந்தவர்.

 ஒருமுறை கோயமுத்தூரில் பூமணியின் பிறகு நாவலுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்கில் எடுத்த எடுப்பில் மாமல்லன் பிரயோகித்த கெட்டவார்த்தையைக் கேட்டு எல்லோரும் ஆடிப்போனார்கள். பூமணியையும் அவரது நாவலின் விமர்சகர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாமல்லன் பிரயோகித்த அந்தக் கெட்டவார்த்தை முக்கியத்துவம் பெற்றது. அதற்குப் பிறகு மாமல்லனின் தலை தென்பட்டாலே கூட்டம் பரபரப்படையும். பின்னர் உருவான லக்ஷ்மி மணிவண்ணன், முருகேச பாண்டியன் போன்ற கலகக்காரர்களுக்கு மாமல்லனே முன்னோடி.

அ. ராமசாமி அதுபோன்ற கெட்டவார்த்தைகளைப் பிரயோகிப்பவரல்ல என்றாலும் தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் கலகக்காரராகவே அறியப்பட்டிருந்தார். அப்போது பாண்டிச்சேரியிலிருந்து ஊடகம் என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதன் ஆசிரியர் குழுவில் அ. ராமசாமி இருந்தார். பிசாசு எழுதுதல் என்று பசுவய்யா, ஞானக்கூத்தன், நகுலன், விக்கிரமாதித்தியன், பழமலை முதலான தமிழின் முக்கியமான பதினோரு கவிஞர்களின் பெயரில் ஊடகம் ஆசிரியர் குழுவே கவிதைகளை எழுதிப் பிரசுரித்திருந்தது. அதில் கடைசியாய் இடம்பெற்ற அறிவுமதியின் ஹைக்கூ கவிதை இன்னும் நினைவிருக்கிறது.
மணியடிக்கிறது

வகுப்பில் ஆசிரியர் இல்லை

உள்ளேன் அய்யா

அறிவுமதி அப்போது 'உள்ளேன் அய்யா' என்னும் பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு முயன்றுகொண்டிருந்தார். அந்த முயற்சி ஏனோ தடைபட்டுக் கொண்டே இருந்தது. கடைசியில் கைகூடாமலும் போயிற்று. ஆனால் அறிவுமதி தொடர்ந்து அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியவற்றை வைத்துப் பார்த்தபோது அந்தப்படம் மட்டும் வெளிவந்திருந்தால் தமிழ் சினிமாவின் தலைவிதியே மாறியிருந்திருக்கும் என்று தோன்றியது. இருந்தும் பிசாசு அவரது பெயரிலும் ஒரு கவிதை எழுதிப் பிரசுரித்திருந்தது ஏன் எனத் தெரியவில்லை.


பல தீவிர வாசகர்களுக்கு அவை பிசாசு எழுதிய கவிதைகள் என்பதே தெரியவில்லை. கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் பிரசுரித்ததற்காவும் ஆசிரியர் குழுவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. அ. ராமசாமியைத் தொலைபேசியில் அழைத்த ஒரு கவி தன் கவிதையைப் பிரசுரித்ததற்காக நன்றியும் சொன்னாராம். பழமலை 'நான் எப்போது ஊடகத்திற்குக் கவிதை அனுப்பினேன்?' எனப் பல நாட்கள் குழம்பிக் கொண்டிருந்தாராம். அவர்களுடைய கலகச் செயல்பாடுகளில் குறிப்பிடத் தகுந்த மற்றொன்று சிறந்த நூல்களுக்கு 'டகம்' விருது கொடுத்தது. பத்துப் பைசாவும் தகரப் பட்டயமும் கொண்ட விருது அது. அப்போது வெளியாகியிருந்த என்னுடைய 'கண் விழித்த மறுநாள்' என்னும் கவிதைத் தொகுப்புக்கு டகம் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மாதங்களாகியும் அவை எனக்கு வந்து சேரவில்லை. சங்கீத நாடக அக்காதெமியின் நாடகப் பயிலரங்கிற்காகப் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்திற்குப் போனபோது பேராசிரியர் அ. ராவைச் சந்தித்து “எங்கே எனக்கு அறிவிக்கப்பட்ட தகரப் பட்டயமும் பத்துப் பைசாவும்?” எனக் கேட்டேன்.

அ.ரா. வாய்விட்டுச் சிரித்தார்.

ஏறக்குறைய முகம் முழுவதையும் மறைக்கும் அழகான தாடியைக்கொண்ட அந்தக் கலகக்காரரால் வாய்விட்டுச் சிரிக்கவும் முடியும் என்பதை உண்மையிலேயே அப்போது என்னால் நம்ப முடிந்திருக்கவில்லை.

அதற்குப் பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களானோம்.

அவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த நாட்களில் அவரது வீட்டுக்குப்போன ஒவ்வொரு முறையும் எனக்குப் பறிமாறப்பட்ட சுவையான மீன் உணவுவகைகளைச் சாப்பிட்டபிறகு இவ்வளவு பிரமாதமாகச் சாப்பிட்டுக்கொண்டு இந்த மனிதர் ஏன் கலகமெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. அவர் என்னைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், ரவிக்குமார் முதலான பாண்டிச்சேரி வாழ் எழுத்தாளர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றார். எல்லோரிடமும் அவர்கள் எனக்கு முன்பே தெரிந்தவர்களாக இருந்தபோதும் “இவரைத் தெரியுமல்லவா? பலி இவருடைய கதைதான்” என அறிமுகம் செய்து வைத்தார். நான் அவர்களின் கைகளைப் பற்றிக் குலுக்குவேன். கையோடு எடுத்துச் சென்றிருக்கும் பலி தொகுப்பின் ஒரு பிரதியை ஏற்கனவே அது அவர்களிடம் இருந்தாலும்கூட 'இருக்கட்டும்' எனக் கொடுத்துவைப்பேன். பேசிக்கொண்டே இருவரும் பாண்டிச்சேரியின் தெருக்களையும் பூங்காக்களையும் சுற்றிவருவோம். “பாண்டிச்சேரி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சொற்பமான இந்திய நகரங்களுள் ஒன்று” என்பார். ஏதாவதொரு பார்க்கிலோ சிமென்ட் பெஞ்சிலோ உட்கார்ந்துகொள்வோம். பார்களுக்குப் போவோம். ஏழைப் பிள்ளையார் கோயில் இருந்த தெருவில் நடக்கும்போது அந்தப் பிள்ளையாருக்கு ஏழைப் பிள்ளை யார் எனப் பெயர் வந்தது எப்படி என்று விளக்குவார். புதுவை அரசின் கெஸ்ட் ஹவுஸ்கள், பிரஞ்சுக்காரர்கள் கட்டி விட்டுவிட்டுச்சென்ற வீடுகள், லே கபேக்கள், மாஸ் ஹோட்டல் எனப் புதுவையின் சரித்திரப் பிரசித்தி பெற்ற எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். நாடகத்துறையில் இருந்த அவரது அறையில் இருந்துகொண்டு நாடகத்தைத் தவிர மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் உரையாடினோம்.

அனீசுடனும் சுப்பையாவுடனும் சேர்ந்துகொண்டு பல்கலைக் கழகத்திற்கு எதிரே இருந்த சிறிய சாப்பாட்டுக் கடை ஒன்றில் மீன் சாப்பிட்டோம். சில நாட்களில் தன்னந்தனி ஆளாகப் புறப்பட்டுப் போய் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் இருந்த புறநோயாளிகள் பிரிவில் உட்கார்ந்து கொண்டிருப்பதும் மருத்துவமனை வளாகத்திலும் வார்டுகளிலும் இலக்கின்றிச் சுற்றிக் கொண்டிருப்பதுமாய்ப் பொழுதைப் போக்கினேன். நாடகத் தயாரிப்பு எப்போது தொடங்கும் என வெகு ஆவலாகக் காத்திருந்தேன். பேராசிரியர் ராஜூவுக்கு அப்படியொரு எண்ணமே இல்லாததுபோல் தோன்றியது. “எனக்குத் தெரிந்தது நாடகம் மட்டும்தான்” என என்னைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் ராஜூ. அதைக் கேட்கும்போது பிறகு ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறார் எனத் தோன்றும்.

நாடகம் சார்ந்த நூற்றுக்கணக்கான சொல்லாடல்களில் சிலவற்றையாவது தெரிந்துகொள்ள வாய்த்த தருணங்கள் அவை.

நான் உங்கள் பிரதியை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக் கிறேன். முக்கியமாக உங்கள் தொனி என்ன என்பது தெரிய வேண்டும். பிறகு அதிலிருந்து எனது குரலை, அதாவது இயக்குனரின் குரலைக் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கவலையுடன் சொல்லிக்கொண்டிருப்பார் ராஜூ. சில நாள்களில் காலியாகக் கிடக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைவேய்ந்த வெப்பமான கொட்டகை ஒன்றில் நாடகத்துறை மாணவர்கள் அனை வரும் நீள்வட்ட வடிவிலான மேசையொன்றைச் சுற்றி உட் கார்ந்துகொண்டு பிரதியை வாசிக்கத் தொடங்குவார்கள். நான் பேராசிரியர் ராஜூவுக்கு வலப்புறமாகவோ இடப்புறமாகவோ உட் கார்ந்துகொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவர் கையிலும் எனது நாடகப் பிரதியின் நிழற்பட நகல்கள் இருக்கும். மாணவர்கள் ஆளுக் கொரு பாத்திரத்தைத் தேர்வு செய்து கொண்டு தத்தமக்குரிய பகுதிகளை வாசிப்பர். ராஜூ முதலில் அமைதியாக அவர்கள் வாசிப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பார். பிறகு குறுக்கிடுவார். பேராசிரியர்களுக்கே உரிய தணிந்த உணர்ச்சிவசப்படாத குரலில் பேசத்தொடங்கி பிறகு மெதுவாகக் குரலை உயர்த்தி சீக்கிரத்திலேயே இடியென முழங்கத் தொடங்கிவிடுவார். நான் திடுக்கிட்டுப் போய்விடுவேன். மாணவர்களின் இறுகிய முகங்களில் ரகசியமான புன்னகை அரும்பும். ஆனால் நான் சொல்ல வந்தது எனது அந்த நாடகம் எப்படித் தயாரிக்கப்பட்டது என்பதை அல்ல.

பேராசிரியர் அ. ராமசாமி எனது பலி சிறுகதையை நாடகமாக்க முயன்றதைப் பற்றியும் ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகு அந்த முயற்சி கைகூடியதைப் பற்றியும் நாடகம் முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்ட பிறகு மேடையேற்ற முடியாமல் ஒத்திகையோடு கைவிடப்பட்டதைப் பற்றியும்தான்.


மூன்று

 நாடக ஆக்கத்தின்போது சில நாட்களில் பேராசிரியர்

அ. ராமசாமி அதைப் பார்ப்பதற்காக வருவார். அந்த நாடகம்பற்றி எனக்கு இருந்து கொண்டிருந்த கற்பனைகளோடு அங்கே நடந்தவற்றைப் பொருத்திக் கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்த நான் அ. ராமசாமிக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு எனது சந்தேகங்களைக் கேட்பேன். “இந்த நாடகத்துல ஒரு ஆலமரம் வருதே சார், அத எப்படிக் கொண்டு வருவாங்க?” என்பது அனேகமாக ஒவ்வொரு நாளும் நான் தவறாமல் கேட்டுக் கொண்டிருந்த கேள்வி. “அதயெல்லாம் செட் டிசைன்ல பாத்துக்குவாங்க” என அதுபற்றிக் கவலைப்படுவதற்குக் கொலைக் களத்தில் நிற்கும் பிரதியின் ஆசிரிய னுக்கு எந்த உரிமையுமில்லை என்பதுபோல் சிரித்துக்கொண்டே சொல்வார். பிறகு எனக்கு ஆறுதல் அளிக்கும் பாங்கில் அரங்க அமைப்புக்கு காந்திகிராம் பல் கலையில் பணிபுரியும் பேராசிரியர் எஸ்.பி. சீனிவாசன் வருவார் என்றார். அவர் காந்திகிராமிலிருந்து ஒரு ஆலமரத்தையே வேரோடு பிடுங்கி எடுத்து லாரியில் ஏற்றிக்கொண்டு வந்துவிடுவார் என உறுதியளிப்பதைப் போல இருந்தது அ. ராவின் தொனி. தவிர நாடகத்தின் லைட்டிங் டிசைனர் டாக்டர் ரவீந்திரன் தன் ஒளியின் மூலமாகவே ஆலமரத்தை மேடைக்குக் கொண்டு வந்துவிடும் சமர்த்தர் என்ற கூடுதலான ஒரு தகவலையும் சொன்னார். என்னால் அதைக் கற்பனை செய்ய முடிய வில்லை.

ஒருநாள் கடற்கரைக்குப்

போயிருந்தோம்.

பாரதி பூங்கா எதிரே உள்ள சிமென்ட் பெஞ்ச் ஒன்றில் உட் கார்ந்து கொண்டிருந்தபோது கடலில் குளிக்கும் ஆசை உருவாயிற்று. அதைச் சொன்னபோது அ. ரா. தனக்கு அதுபோன்ற ஆசை எதுவும் இல்லை எனச் சொல்லிவிட்டு, “நீங்க குளிங்க. நா வேணும்னா வேடிக்க பாக்கறேன்” எனக் கரையில் உட்கார்ந்துவிட்டார்.

நான் உள்ளாடையுடன் கடலில் இறங்கினேன்.

என்னவோ அப்போது அந்தக் கடலின்மீது பெரும் நம்பிக்கை உருவாகியிருந்தது. என்னைப்போல ஒரு ஏழெட்டு பேர் எனக்கு அருகிலும் தொலைவிலும் குளித்துக்கொண்டிருந்தனர். எனக்குப் பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒருவர் அலைகள் கரைநோக்கித் தாவும்போது அவற்றிலிருந்து லாவகமாகத் தப்பிக் கடலுக்குள் முன்னேறிச் சென்றதைப் பார்த்த எனக்கு அது சுலபமான காரியம் எனத் தோன்றியது. அலை மேலெழும்பி வரும்போது தண்ணீருக்குள் மூழ்கிப் பதுங்கிக்கொண்டு அலை நம்மைக் கடந்து செல்ல வழிவிட்டுவிட வேண்டும். இதுதான் சூட்சுமம். நானும் அதற்கு முயன்றேன். நான்கைந்து முறை தோல்வியடைந்து அலைகளின் மூர்க்கமான பிடிக்குள் சிக்கிக்கொண்டு கரைக்கு அடித்து வரப்பட்டேன். கரையையொட்டிக் குன்றுகளைப்போலக் கிடந்த பாறைகளை எட்டியவுடன் அவற்றின்மீது மோதிக்கொள்ளாமல் சுதாரித்துக்கொள்வதற்கும்கூட எனக்கு முடிந்திருந்தது.
அ. ரா. அதை ரசித்துக்கொண்டிருந்தார். கரைக்குவந்த ஒவ்வொரு முறையும் ஓரிரு வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டோம்.

நேரம் ஆக ஆக அலைகளின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. முன்புபோல அலைகளின் கைகளுக்குச் சிக்காமல் நீர்ப்பரப்புக்குக் கீழே பதுங்குவது எளிமையானதாக இருக்கவில்லை. ஆனால் நான் பிடிவாதமாக எதிர்த்து நிற்க முயன்றேன். மூர்க்கமாக வந்த அலையொன்று என்னைச் சுருட்டிக்கொண்டு கரையைநோக்கி வந்தபோது சாகசமொன்றை மேற்கொண்டிருப்பதைப்போல நான் வாய்விட்டுச் சிரித்தேன். ஆனால் அலை மூர்க்கமாக என்னைப் புரட்டிக் கரடுமுரடான பரப்பைக்கொண்டிருந்த பாறையொன்றின் மீது வீசிற்று. அதைப் பார்த்த அ. ரா. தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார். நான் சிரித்துக்கொண்டே எழுந்து நிற்க முயன்றேன். ஆனால் கடல் சீறியது. பேரலையொன்று முதுகிலறைந்தது. பின்னோக்கித் திரும்பிப் பார்க்க முயன்றபோது பெரும் நீர்ப்பாறையொன்று முகத்திலறைந்தது. நான் பணிந்தேன். பீதியுற்றேன். தப்ப முற்பட்டுப் பாறைத் துண்டு ஒன்றைத் தழுவினேன். அதன் சொரசொரப்பான நுனியைப் பற்றிக்கொண்டு மேலெழ முயன்றேன். அதற்குள் அ.ரா. என்னை நோக்கி வந்திருந்தார். நீட்டிய அவரது கையைப் பற்றிக்கொண்டு மேலே வந்து பாதுகாப்பான இடத்தில் நின்று புன்னகைக்க முயன்றேன். கை, கால்களில் தாளமுடியாத வலி. பல இடங்களில் சிராய்ப்புகள். கரிக்கும் நீரோடு சேர்ந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. நல்லவேளையாகப் பெரிய காயம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. உடைமாற்றிக்கொண்டு அருகிலிருந்த கிளினிக் ஒன்றுக்குப் போய் சிராய்த்த இடங்களில் டிங்சரைப் பூசிக்கொண்டு பாரதி பூங்காவுக்கு வந்து மர நிழலொன்றில் எதிரெதிராக உட்கார்ந்தோம்.

நான் சிரித்தேன்.

புகைபிடிக்கத் தொடங்கினேன்.

நானோ அவரோ இயல்புநிலைக்கு முழுமையாகத் திரும்பியிராத அந்தத் தருணத்தில் பேராசிரியர் அ. ராமசாமி சொன்னார், “நா உங்க பலி சிறுகதய நாடகமாப் பண்ணலாமான்னு பாக்கறேன்”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்தத் தருணத்தில் அவருக்கு ஏன் அப்படியொரு யோசனை வர வேண்டும்? நான் அலைகளோடு போராடியதற்கும் காயங்களுடன் மீண்டு பாரதி பூங்காவின் மர நிழல் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு புகைபிடிக்கத் தொடங்கியிருந்ததற்கும் அவரது இந்த முடிவுக்குமிடையே நிச்சயமாக ஏதாவது தொடர்பிருக்க வேண்டுமென நினைத்தேன்.

நான்கு

பிறகு நாடக ஆக்கப் பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கியிருந்தன. அனீசும் சுப்பையாவும் கடும் உழைப்பிற்குப் பிறகு பேராசிரியர் ராஜூ விரும்பியது போல் நாடகத்தின் தொனியைக் கச்சிதமாகப் பற்றிக் கொண்டிருந்தார்கள். ஒப்பனைகளோ ஒளியமைப்போ அரங்க நிர்மாணமோ இல்லாமல் ஒத்திகைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நடிகர்களால் ஒரு வசனத்தைச் சரியாக உச்சரிக்க முடியாதபோது பேராசிரியர் ஈவிரக்கமில்லாமல் அதை வெட்டியெறிந்தார். வசனங்களை வெகுவாகக் குறைத்தார். இசை, நடனம் இயைந்த கூத்துபோன்ற ஒரு வடிவத்தை நோக்கி எனது பிரதியை நகர்த்திச் சென்றுகொண்டிருந்தார் ராஜூ. நடிகர்கள் வசனங்களை மனப்பாடம் செய்வதைக் கிட்டத்தட்டக் கைவிட்டுவிட்டுப் பாட்டுப்பாடி நடனமாடத் தொடங்கியிருந்தனர். எல்லோரும் சேர்ந்து ஆசிரியனைக் கொலை செய்யும் பணியைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் நான் ரத்தம் சிந்துவதற்குச் சுலபத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. எங்களுக்கிடையேயான பரஸ்பர சகிப்புத்தன்மையின் எல்லைகள் சுருங்கிக்கொண்டிருந்தன. விவாதங்களின் போது இருதரப்பினருக்கும் வார்த்தைகள் தடித்துக்கொண்டிருந்தன. ஒருமுறை பேராசிரியர் ராஜூவிடம் நேரடியாக மோதிக்கொண்டேன். மாணவர்களில் சிலர் அவருக்கு ஆதரவாகப் பேச முயன்றபோது மூர்க்கமாக அவர்களை மறித்தேன். ஒரு நாடகாசிரியன் என்ற முறையில் எனக்குள்ள உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்றுகூடச் சொன்னேன். பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்காக ராஜூவின் வீட்டுக்கு அவரது அழைப்பின் பேரில் போய்விட்டுத் திரும்பிய பிறகு எனது எதிர்ப்பைக் கைவிட்டேன்.

பிரதியில் இருந்தபடி பின்னணியில் ஒலிக்க வேண்டியிருந்த பெண் ஓலம் அதுவரையிலான ஒத்திகைகளில் ஒலிக்கவே இல்லை. இதைப்பற்றி அ. ராவிடம் கேட்டபோது நாடகத்துறை மாணவிகளில் சிலர் அதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். பயிற்சி நடைபெற்ற அரங்கத்திற்கும் அழைத்துச் சென்றார். அதிக வெளிச்சமில்லாத அந்த அரங்கில் பூச்சிக்கூடுகள் மண்டிய உத்தரங்களுக்குக் கீழே ஏழு மாணவிகள் வட்டவடிவமாக உட்கார்ந்து பயிற்சியெடுத்துக்கொண்டிருந்தனர். நவீன நாடகத்துக்கும் வட்டவடிவத்துக்கும் ஏதாவது அமானுஷ்யத் தொடர்பு இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். நாங்கள் அவர்களுக்குத் தொந்தரவளிக்காத ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த புராதனமான டெஸ்க் ஒன்றில் உட்கார்ந்துகொண்டோம். எங்கள் வருகையினால் ஏற்பட்ட சிறு தடங்கலைச் சரிசெய்துகொண்டு அந்த மாணவிகள் ஓலத்தைத் தொடர்ந்தனர். முதலில் அது சமீபத்தில் பார்த்திருந்த கலைப் படமொன்றின் பின்னணி இசைபோல் ஒலித்தது. நான் டெஸ்க்கில் குப்புறக் கவிழ்ந்து கண்களை மூடிக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டு கேட்டபோது பிரதியில் நான் குறிப்பிட்டிருந்த ஓலத்தின் நினைவு வந்தது. ஆனால் பார்வையாளர்கள் எல்லோரும் கண்களை மூடிக்கொள்வார்களா என்ன? பிரதி என்பது வெறும் வார்த்தைகளாலானது என ஒருமுறை என்னிடம் சொல்லியிருந்தார் பேராசிரியர். நான் அதைக் கடுமையாக ஆட்சேபித்திருந்தேன்.

வார்த்தை அல்ல சார். மன அரங்கில் ஏற்கனவே மேடை யேற்றப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வைப் பற்றிய குறிப்புகளே அந்தப் பிரதியில் இடம்பெற்றிருப்பவை. பிரதிக்குள் ஒலிக்கும் ஓலத்தை ஏற்கனவே என் செவி களுக்குள் உணர்ந்திருக்கிறேன்”

அது சரிதான். ஆனால் நீங்கள் எதை உணர்ந்தீர்களோ அதை முதலில் இயக்குனர் உணர வேண்டும். பிறகு நடிகர்கள் உணர வேண்டும். இசையமைப்பாளர், அரங்க வடிவமைப்பாளர், ஒளி வடிவமைப்பாளர், ஒப்பனையாளர், நடன இயக்குனர் என ஒவ்வொரு வருமே உணர வேண்டும். அப்போது தான் நாடகம் என்ற வடிவம் முழுமை பெறும். நீங்கள் ஒரு சிவன் கோயில் இருந்தது என எழுதுகிறீர்கள். நாடகம் முழுவதும் ஒரு ஆலமரத்திற்குக் கீழே நடைபெறுவதாக எழுதியிருக்கிறீர்கள். அதற்காக எஸ்.பி. சீனிவாசன் காந்தி கிராமத்திலிருந்து ஒரு ஆலமரத்தை வேரோடு பிடுங்கிக்கொண்டு வருவார் என்றா நினைத்தீர்கள்?” என்றார்.

சரிதான்”

அதற்குப் பிறகு நான் எனது பங்களிப்பை பார்வையாளனாக மட்டும் இருந்து செலுத்துவதே சாலச்சிறந்தது என முடிவெடுத்தேன். காந்திகிராமத்தில் இருந்து எஸ்.பி. சீனிவாசன் வந்து சேர்ந் தார். தன்னுடைய உடைகள் உள்ள ஒரு சிறிய சூட்கேசுடன் நாடகத் துறையின் வரவேற்பறைக்குள் நுழைந்தவரை அப்போது என்னுடன் நின்றுகொண்டிருந்த துறைத் தலைவர் கே.ஏ. குணசேகரன் வரவேற்றார்.

இவர்தான் நாடக ஆசிரியர்” என நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

அது என்ன தலைப்பு? மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்?” எனக் கேட்டவர், “ஒரு செட் டிசைனரா ஆலமரத்தை மேடைக்குக் கொண்டுவர வேண்டிய பெரிய வேலையை எனக்குத் தந்திருக்கிறீர்கள்” எனக் கைகளைக் குலுக்கியவர் ஒரு பெரூமுச்சுடன் கே.ஏ.ஜியைப் பின்தொடர்ந்து அவரது அலுவலக அறைக்குள் சென்றார். வெளியே வேரோடு பிடுங்கப்பட்ட ஆலமரத்தை ஏற்றிக்கொண்டு ஏதாவது லாரி வந்து நிற்கிறதா என எட்டிப் பார்க்கும் ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அன்று மாலையே தில்லியிலி ருந்து டாக்டர் ரவீந்திரனும் வந்து சேர்ந்தார்.

அவரும் வெறுங்கையுடன்தான் வந்து நின்றார்.

லைட்டெல்லாம் வந்துருச்சா சார்?” எனக் கேட்டதற்குக் கேள்வி காதில் விழாததுபோலச் சென்று விட்டார்.

மறுநாள் Final rehearsal.

உண்மையாகவே அன்றிரவு நான் தூங்கவில்லை.

ஆனால் இறுதி ஒத்திகையைப் பார்ப்பதற்காக மறுநாள் பிற்பகல் அரங்கத்திற்குப் போனபோது பிரமித்துப் போனேன்.

மேடையில் பிரும்மாண்டமான ஆலமரமும் பாழடைந்த கோயி லும். வெறும் தரைவிரிப்புகளைக் கொண்டே அவற்றை உருவாக்கியிருந்தார் சீனிவாசன். டாக்டர் ரவீந்திரனின் ஒளியமைப்புதான் அந்தத் தரைவிரிப்புகளை ஆலமர மாகவும் பாழடைந்த கோயிலாகவும் மாற்றியிருந்தது. ஒப்பனை பூண்ட நடிகர்களிலிருந்து அனீசையும் சுப்பையாவையும் கண்டுபிடிக்க உண்மையில் கொஞ்சம் சிரமப்பட்டேன். அந்த இறுதி ஒத்திகையின் போது மட்டுமல்லாமல் மறுநாள் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நாடகம் அரங்கேற்றப்பட்டபோதும் நான் வெறும் பர்வையாளனாகவே இருந்தேன்.

பக்கத்து இருக்கையில் பேராசிரியர் அ. ராமசாமி.

நாடகம் எப்படி வந்திருக்கிறது சார்?” எனத் தணிந்த குரலில் கேட்டேன்.

அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்”

நான் மௌனமாக இருந்தேன்.

உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?” என விடாமல் கேட்டார்.

பதிலளிக்க வேண்டிய கட்டாயத் துக்குத் தள்ளப் பட்டேன்.

திருப்திதான் சார். ஆனால் ஒரு நாடகப் பிரதி மேடையேற்றப் படுவதைவிட வாசிப்பதற்கான பிரதியாகவே இருந்துவிடுவது நல்லது என நினைக்கிறேன்” என்றேன்.

சிரித்தார்.

மறுநாளே புதுவையை விட்டுப் புறப்பட்டேன்.

சங்கீத நாடக அக்காதெமி கொடுத்த பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து ஆறு கிலோ எடையுள்ள கையடக்கத் தட்டச்சு இயந்திரமொன்றையும் கொஞ்சம் துணிமணிகளையும் வாங்கிக்கொண்டேன். பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த பார் ஒன்றில் பியர் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தபோது அ. ராமசாமி மறுபடியும் எனது சிறுகதையை நாடகமாக்குவது பற்றிய பேச்சைத் தொடங்கினார்.

நான் வேண்டுமானால் அந்தக் கதையை ஸ்கிரிப்டாக எழுதித் தந்துவிடட்டுமா சார்?” எனக் கேட்டதற்கு வேண்டாமென்றார். மனதளவில் தான் அதை ஏற்கனவே எழுதி முடித்துவிட்டதாகவும் சீக்கிரத்திலேயே பல்கலைக் கழக நாடகத்துறை மாணவர்களைக் கொண்டு அதன் தயரிப்புப் பணிகளில் ஈடுபடப்போவதாகவும் அந்த ஆண்டு தேசிய நாடக விழாவில் அதை மேடையேற்ற முயலப் போவதாகவும் சொன்னார்.

நான் எப்போது வர வேண்டியிருக்கும் சார்?”

எதற்கு”

நான் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனேன். அவர் என்னுடைய சிறுகதையைத்தானே நாடகமாக்கப் போவதாகச் சொல்கிறார்? என்னுடைய ஒத்தாசை வேண்டாமா?

சும்மா ஒரு பார்வையாளனாக இருப்பதற்கு. நாடக உருவாக்கத்தின் ஏதாவதொரு கட்டத்தில் வந்து பார்க்கலாம் அல்லவா?”

வேண்டாம்; நீங்கள் Final rehearsalக்கு வந்தால் போதும்”

சரி”

நாடக உருவாக்கத்தின்போது ஆசிரியன் உடன் இருப்பது இரு தரப்பினருக்கும் நல்லதல்ல என்பதே என் கொள்கை”

சரி”

விருந்துண்ண வருபவர்கள் அடுப்பங்கரைக்குள் நுழையக் கூடாது”

ரொம்ப சரி”

ஆசிரியனைத் தொலைவிலிருந்தபடியே கொலைசெய்ய எங்களுக்கு முடியும். அது அவருக்கு நாங்கள் காட்டும் கருணை என்று வைத்துக்கொள்ளுங்கள்”

அவரது கருணை உள்ளத்திற்கு நன்றிகூறி விடைபெற்றுக்கொண்டேன்.

ஐந்து

நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு திடீரென நினைத்துக்கொண்டு அந்தக் கதையை எடுத்துப் படித்தேன். நாடகமாக யோசித்துப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. உடனடியாக பக்கத்து ஊருக்குப்போய் அங்கிருந்த பொதுத் தொலைபேசியிலிருந்து பேராசிரியர் அ. ராமசாமியைத் தொடர்புகொண்டேன். அவரது மனைவிதான் பேசினார்.

சார் இல்லையே, சங்கரன்கோயில் போயிருக்காரு. வர ரண்டு நாளாகும். நீங்க யாரு?”

சொன்னேன்.

நலம் விசாரித்தார். நான் அவருடைய மீன் குழம்பின் சுவை பற்றி நான்கு வார்த்தைகள் சொன்னேன். அவர் திரும்பிவந்தவுடன் சொல்வதாக வாக்களித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அழைத்தபோது அவர் பல்கலைக்கழகம் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது. சளைக்காமல் பல்கலைக்கழக நாடகத்துறையைத் தொடர்பு கொண்டேன். அங்கும் அவர் இல்லையெனப் பதில் வந்தது. ஆறுமுகம்தான் பேசினார்.

அவசரமாப் பேசணும்னா ராஜ்கௌதமன் வீட்டு நம்பருக்குக் கூப்பிடுங்க. அநேகமா அங்கதான் இருப்பாரு”

ராஜ்கௌதமன் வீட்டில் அப்போது அ. ராவும் இல்லை, ராஜ்கௌதமனும் இல்லை.

பிறகு ஒரு ஆவேசத்தில் நானே எனது சிறுகதைக்கு நாடக வடிவம் கொடுக்க முற்பட்டுச் சில பக்கங்கள் வரை எழுதினேன். நாடக ஈடுபாடு கொண்ட நண்பர்கள் சிலரிடம் பேசி அதை நாடகமாகத் தயாரிப்பது பற்றிச் சொல்லி அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரினேன். ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர் ஒருவரது உதவியுடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வகுப்பறையில் நாடகத் தயாரிப்புக்கான பணிகளைத் தொடங்கினேன். நான் எதிர்கொண்ட முதல் சிக்கல் நடிகர்கள்தாம். கதையின் இரு முக்கியப் பாத்திரங்களில் ஒன்று பெண். வேசியர் விடுதியிலிருந்து தலித் வாடிக்கையாளன் ஒருவனால் அழைத்துவரப்படும் தொழிலுக்குப் புதியவளான பிராமண வேசி. எங்கள் ஊரில் நாடகத்தில் நடிக்கப் பெண்ணுக்கு எங்கே போவது? அதிலும் வேசியாக. நண்பர் ஒருவர் உண்மையான வேசியொருத்தியையே நடிக்க வைத்தால் என்ன என்று கேட்டார். அது நல்ல யோசனையாகப்பட்டது. இப்போதைய தமிழ் அறிவுலகம் இருக்கிற இருப்புக்கு நாடகம் பரபரப்பாகப் பேசப்படும். எனவே சேலம், நாமக்கல் என வேசிகளைத் தேடிக் கொஞ்ச நாட்கள் அலைந்து திரிந்தோம். கடைசியில் முன்னாள் நாடக நடிகை ஒருத்தியைக் கண்டுபிடித்து அவளிடம் விஷயத்தைச் சொன்னோம். கதையை முழுமையாகச் சொல்லுமாறு வற்புறுத்தினாள். கவனமாகக் கேட்டுக்கொண்டவள் தான் வேசியாகவே இருந்தாலும் பிராமண வேசியாக நடிப்பதற்கு விரும்பவில்லை என்றாள். “அது பாவம், தெய்வ குத்தமாயிடும்” என்றவள் வேண்டுமானால் அவளை கவுண்டர், முதலியார், வன்னியர் இனத்தைச் சேர்ந்த ஒருத்தியாக மாற்றிவிடுங்களேன் என யோசனை சொன்னாள். எங்கள் நாடகக் குழுவில் ஏற்கனவே இரண்டு தலித் இளைஞர்கள் இருந்ததால் தலித் வாடிக்கையாளன் பாத்திரத்துக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை.

இந்த ஏற்பாடுகளுடன் அநேகமாக ஒவ்வொரு வாரமும் அந்த ஆரம்பப் பள்ளியில் ஒத்திகைக்காகக் கூடினோம். வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதையை வாசித்தோம். ஸ்கிரிப்ட் முழுமையாக உருவாகாததால் நேரடியாக மூலக்கதையைக் கொண்டே பயிற்சியைத் தொடங்குவது என்பது திட்டம். வாசிப்பின்போது கிடைக்கும் அனுபவங்களைக்கொண்டே நாடகத்துக்கான ஸ்கிரிப்டை உருவாக்கலாம் எனவும் நினைத்தோம். குழுவில் யாருமே நாடக அனுபவம் கொண்டவர்களாக இல்லாததால் தொடக்கம் பெரும் சவாலாக இருந்தது. வேசியாக நடிப்பதற்குச் சம்மதித்திருந்த முன்னாள் நாடக நடிகை தன்னால் ஒத்திகைக்கெல்லாம் வர முடியாது எனச் சொல்லியிருந்ததால் அவளுக்குப் பதிலியாக நானே அந்த பிராமண வேசியின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். தலித் இளைஞன் வாசிப்பின்போதே கொந்தளிக்கத் தொடங்கியிருந்தான். சிகரெட்டுகளாகப் புகைத்துத் தீர்த்தான். அவனுக்குக் கதையின் முடிவு திருப்தி தரவில்லை.

இந்தக் கதையின் மூலம் நீங்கள் தலித் - பார்ப்பனர் ஒற்றுமையை வலியுறுத்துகிறீர்களா தோழர்? அதெப்படி அடிப்படை முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளாமல் இரண்டு பகை சக்திகளுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறீர்கள்?” எனக் கோட்பாட்டு ரீதியிலான கேள்விகளை எழுப்பி என்னைத் திணற அடித்தான். கொஞ்சகாலம் திராவிட இயக்கங்களிலும் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்தவன் அவன். ஆக ஒத்திகைக்காகக் கூடிய ஒவ்வொரு தருணத்தையும் இதுபோன்ற விவாதங்களே ஆக் கிரமித்துக்கொண்டதால் ஒத் திகை தொடங்கவே இல்லை. சொந்த வாழ்வில் எனக்கும் பல நெருக்கடிகள். இதற்கிடையே வணிக ரீதியிலான திரைப்படமொன்றுக்குக் கதை எழுதப்போனேன். அந்த அனுபவங்கள் தந்த மன உளைச்சல்களால் முடங்கினேன்.

இந்தக் காலகட்டங்களில் பேராசிரியர் அ. ராமசாமியுடன் அநேகமாக எந்தத் தொடர்பும் இல்லை. சில வருடங்களுக்குப் பிறகு காலச்சுவடு- ஸ்ரீராம் ட்ரஸ்ட் இணைந்து நடத்திய நாடக விழாவுக்குப் போயிருந்த போது சென்னை மியூசியம் தியேட்டரில் அவரைச் சந்தித்தேன். இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலிருந்து வெளி யேறியிருந்தவர் அப்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றுவதாகச் சொன்னார்.

நாடக விழாவில் சந்திக்க நேர்ந்ததால் இயல்பாகவே நாடகம் பற்றிப் பேசினோம். அப்போது அறிவுலகத்தின்மீது தலித்தியம் தீவிரமாகச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியிருந்த காலம். ஆனால் 'பலி' தலித் சிறுகதைதானா என்னும் சந்தேகம் விமர்சகர்கள் பலருக்கும் எழுந்திருந்தது. நான் தலித்தா இல்லையா என்ற கேள்வியைச் சில இடங்களில் நேரடியாகவே எதிர்கொண்டேன். பிறப்பால் நான் தலித் அல்லவென்றாலும் தலித்துகளைப் போலவே சாதி இந்துக்களின் ஒடுக்குமுறைக்குள்ளான சாதியைச் சேர்ந்தவன் என்பதை விளக்குவதற்கு எவ்வளவோ முயன்றேன். அது பெரிய அளவில் எனக்கு உதவவில்லை. தலித் இலக்கியவாதிகளிடையே என்மீதான சந்தேகத்தின் பிடி இறுகிக்கொண்டே போயிற்று. எல்லாவற்றுக்கும் அப்பால் பலி முக்கியமான கதை என்றார் அ. ரா.

அதை நாடகமாக்கும் முயற்சி யைத் தான் முற்றாகக் கைவிட்டு விடவில்லையென்றார்.

உண்மையில் அதற்கான ஸ்கிரிப்டை நான் இரண்டு வருடங் களுக்கு முன்பாகவே எழுதி விட்டேன்”

சரி”

நடிகர்களும்கூடத் தயாராக இருக்கிறார்கள்”

சரி”

ஒரு ஸ்பான்சர்கூடக் கிடைத் திருக்கிறார்”

சரி”

நான் சரி சொன்ன அந்தச் சமயத்தில் ந. முத்துசாமியும் முருகபூபதியும் எங்களைக் கடந்து செல்ல முயன்றனர்.

எப்படியிருக்கு நாடக விழா?”

நாடகவிழா என்பதே ஒருவகையான நாடகம்தானே?” என்றார் அ. ரா.

முத்துசாமி பெரிதாகச் சிரித்தார். பிறகு முருகபூபதியிடம் முந்தைய நாள் நடந்து முடிந்த அவரது நாடகம் பற்றிப் பேசத் தொடங்கினோம். வெளி. ரங்கராஜன், சுரேஷ்குமார இந்திரஜித் எனச் சிறுகூட்டமொன்று திரண்டது. தற்செயலாக நடிகர் நாசர் அங்கு வந்து சேர்ந்ததும் கூட்டம் பெரிதானது.

என்ன நாசர் மேக்பத் என்னாச்சு?”

கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்”

அது அவரது கனவுத் திட்டங்களில் ஒன்று.

பிறகு மேக்பத் பற்றி எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். எல்லோருமாகச் சேர்ந்து எதிரே இருந்த ரெஸ்டாரன்டுக்கு நடந்தோம். அதற்குள் யாரோ கல்கியின் 'பொன்னியின் செல்வ'னை நாடகமாக்குவதற்கு யாரோ மேற்கொண்டுள்ள முயற்சியைப் பற்றிக் குறிப்பிடவும் பேச்சின் திசை முற்றாக மாறியது. கொஞ்சம் தள்ளியிருந்த மேசையொன்றில் லக்ஷ்மி மணிவண்ணனோடு பிரபஞ்சனும் பரீக்ஷா ஞாநியும் தென்பட்டார்கள். பிரபஞ்சனின் களைத்த முகத்தோற்றத்திலிருந்து நீண்ட நேரமாக அவர் களுக்குள் உரையாடலொன்று நடைபெற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டுமென யூகித்தேன். எங்களைக் கண்டவுடன் ஞாநி எழுந்து தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைக் கையோடு இழுத்துக் கொண்டு வந்து பக்கத்தில் உட்கார்ந்தார்.

ஒண்ண கவனிச்சீங்களா? பொன்னியின் செல்வனை நாடக மாக்கறதுக்கு இதுக்கு முன்னாலயே பலபேர் முயற்சி பண்ணினாங்க. ஆனா அது கைகூடல”

எம்.ஜி.ஆர். அத சினிமாவா எடுக்க முயற்சி பண்ணினார். அவராலயே முடியல”

இது ரொம்ப மிஸ்ட்டிக்கான விஷயம்”

ஹஹஹஹா...”

நா சீரியஸா சொல்றேன்”

நானும் சீரியஸாத்தான் சிரிச்சேன்”

ஹஹஹஹஹா”

யாரோ சபிச்சுட்டாங்கபோல இருக்கு”

வேற யாரு சொவிதான்”

யாரு புபியா?”

வேற யாரா இருக்க முடியும்? சொவின்னா புபி. புபின்னா சொவி”

மீண்டும் முத்துசாமி சிரித்தார். அந்தக் கணத்தில் ரெஸ்டாரன்ட்டில் இருந்தவர்கள் எல்லோருமே எங்களை நோக்கித் திரும்பினார்கள்.

பலிகூட யாராலோ சபிக்கப்பட்ட கதையாக இருக்குமோ என நினைத்துக்கொண்டேன்.

அதற்குப் பிறகு அங்கே பேராசிரியர் அ. ராமசாமியைச் சந்திக்க முடியவில்லை. மறுநாள் நாடக விழாவுக்கும் அவர் வரவில்லை. ஊருக்குத் திரும்பி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் கொடுத்துச் சென்றிருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்தபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நாடகவிழா முடிந்த சில நாட்களுக்குள்

ளாகவே அவர் போலந்து புறப்பட்டுச் சென்றுவிட்டாராம். இரண்டு வருடங்களுக்கு வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாம். ஒருவேளை அந்த நாடகத்தைப் போலிஸ் மொழியில் வார்சா பல்கலைக்கழக மாணவர்களைக்கொண்டு தயாரித்து அங்கேயே மேடையேற்ற எண்ணியிருக்கிறாரோ என்னவோ?

ஆறு

நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு அவரே என்னைத் தொடர்பு கொண்டார். உற்சாகமாகப் பேசினார். போலந்து அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தார்.

ப்ளே ரெடியாயிருச்சு”

சரி”

கேள்விப்பட்டீங்களா? யாராவது சொன்னாங்களா?”

இல்லையே சார், யார் சொல்வாங்க?”

கண்ணன் சொல்லலியோ? ஆக்சுவலா கன்னியா குமரில சுரா - எண்பது பங்ஷன் நடக்கப் போகுதில்ல? அதுலதான் ஸ்டேஜ் பண்ணப் போறோம்”

சந்தோஷம் சார்”

செட் டிசைன நம்ம சண்முகராஜா பண்றார். சண்முகராஜா தெரியுமில்லையா? என்எஸ்டி ஸ்டூடன்ட். விருமாண்டில ஜெயிலரா வருவாரே?

அவரா? ஞாபகம் வருது”

பங்ஷன்ல அவரு நாடகம்கூட ஒண்ணு இருக்கு. குதிரை முட்டைன்னு, பரமார்த்த குரு கததான்”

அத மறுவாசிப்பு பண்ணியிருக்காரா சார்?”

சிரித்தார்.

பரமார்த்த குருவா நடிக்கறது யாரு தெரியுமா?”

யாரு சார்?”

நம்ம கிருஷ்ணன். நெய்தல் கிருஷ்ணன்”

அவரா?”

 அவரேதான். ஒரு மாசமா சோறு தண்ணியில்லாம உழைக்கிறாரு”

கிருஷ்ணனைச் சோறு தண்ணியில்லாமல் உழைக்க வைத்திருக்கிறார் என்றால் சண்முக ராஜா உண்மையிலேயே பெரிய இயக்குனராகத்தான் இருக்க வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

பங்ஷன்ல நீங்க எதாவது பேப்பர் வாசிக்கறீங்களா?”

ஆமா சார், ஜே.ஜே.பத்தி ஒரு கட்டுரை வாசிக்கறதா இருக்கேன்”

இன்னும் அத விடமாட்டீங்களாய்யா?”

சிரித்தார். சாபம் நீங்கிவிட்ட சந்தோஷத்தில் நானும் சிரித்தேன். அன்று முழுக்கப் பரபரப்பான மனநிலையில் இருந்தேன். அரா அதற்கு முன்னால் அவ்வளவு உற்சாகமாக இருந்து நான் பார்த்ததில்லை. அப்படியானால் நாடகம் பிழைத்துக்கொண்டுவிடும். அவரது இயக்கத்தில் உருவான 'பல்லக்குத் தூக்கிகள்'போல் 'பலி'யும் பேசப்படும்.

நான் மிதந்தேன்.

மாலையில் மீண்டும் அழைத்தேன்.

நாடக ஆக்கம் பற்றி விரிவாகப் பேசினார்.

சார் ஒத்தி எங்க வெச்சுப் பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

இங்க யுனிவெர்சிட்டில வெச்சுத்தான். இங்க ஒரு நல்ல தியேட்டர் இருக்கு”

ஒருநாள் நான் வரட்டுமா சார்?”

வேண்டாம். நாடக ஆக்கம்ங்கறதே நாடக ஆசிரியரக் கொல செய்யற காரியம்தான். இது உங்களுக்குத் தெரிஞ்சதுதானே? உங்களக் கொல செய்யறத நீங்களே பாக்க வேண்டாம்” எனச் சொல்லிச் சிரித்தவர் சற்று யோசித்துவிட்டு, சுரா- எண்பது நிகழ்ச்சியின்போது நாடகம் அரங்கேற்றப்படுவதற்கு முந்தைய இரவு அங்குள்ள ஆடிட்டோரியத்தில் இறுதி ஒத்திகை இருப்பதாகவும் அப்போது நான் ஒரு பார்வையாளனாக எதிரில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கலாம் எனவும் சொன்னார்.

விதிப்படி நடக்கட்டும் என விட்டுவிட்டு 'ஜே.ஜே. சில குறிப்புகள்' பற்றிய கட்டுரை எழுதுவதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன்.

 ஏழு

சுந்தர ராமசாமியையும் ஜே.ஜேயையும் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் எனது நாடகத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு கன்னியாகுமரி போனேன். முதல்நாள் பகல் முழுவதும் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் அரங்கிற்கு வெளியே நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்தேன். உலகம் முழுவதிலுமிருந்து கவிகளும் சிறுகதை, நாவலாசிரியர்களும் ஓவியர்களும் நாடகக்காரர்களும் பத்திரிகையாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பேராசிரியர்களும் இன்னபிறருமென நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் விழா நடைபெற்ற விவேகானந்தா கேந்திரத்தில் குழுமியிருந்தனர். சிலர் முந்தையநாளே வந்திருந்தனர். இன்னும் சிலர் அப்போதுதான் வந்திறங்கியிருந்தனர். உணவகங்கள், பேக்கரிகள், பெட்டிக்கடைகள், மதுவிடுதிகள், கடற்கரை, காந்தி மண்டபம் என எங்கு நோக்கினும் இலக்கிய ஆளுமைகள். அதிகாலை ரயிலில் வந்திறங்கியவர்கள் உடைமைகளைத் தமக்கென ஒதுக்கப்பட்ட காட்டேஜ்

களில் வைத்துவிட்டு அவசர அவசரமாகச் சூரியோதயம் பார்க்கக் கிளம்பியிருந்தார்கள். இளம் எழுத்தாளர்கள் மூத்த எழுத்தாளர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். யாராவது கண்ணில் படும்போது சுயஅறிமுகம் செய்துகொண்டு அந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த தமது கவிதைத் தொகுப்பின் ஒரு பிரதியைக் கையெழுத்திட்டு வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

படிச்சுட்டுச் சொல்லுங்க சார்”

நிச்சயமா. முடிஞ்சா எதுலயாவது எழுதறேன்”

நன்றி சார், ரொம்ப நன்றி”


நானும் எனது புத்தகங்களில் சிலவற்றைக் கொண்டுவந்திருந்தேன். 'பலி' மட்டும் பத்துப் பிரதிகள். புத்தகத்தைக் கொடுத்துவிட்டு மூன்றாம் நாள் மாலையில் எனது கதை பேராசிரியர் அ. ராமசாமி இயக்கத்தில் நாடகமாகத் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்படவிருக்கிற விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் யாருக்குமே அது பெரிதாகப் பொருட்படுத்தக் கூடிய தகவலாக இல்லை. அழைப்பிதழில் அதுபற்றிய தகவல் அச்சிடப்பட்டிருந்தும் யாருடைய கண்களுக்கும் அது படவில்லை. நியாயம்தானே? மூன்று நாட்கள், இரண்டு அரங்குகள், பதினான்கு அமர்வுகள். தவிர வாசிப்பு, இசை, நாட்டிய நிகழ்வுகள். எல்லாவற்றையும் முழுமையாகக் கவனிக்க யாரால்தான் முடியும்? என்ன செய்வதெனத் தெரியாமல் அரங்குகளுக்குள் நுழைந்து பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தேன். பலநாட்களாகச் சந்திக்க முடியாத இலக்கிய நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். யாராவது சிலருடன் சேர்ந்து மரநிழல்களில் நின்று புகைபிடித்தேன். டீக்கடைகளில் மணிக்கணக்காக உட்கார்ந்துகொண்டு இலக்கியம் பேசினேன். கவிஞர்கள் கவிஞர்களோடும் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களோடும் பேராசிரியர்கள் பேராசிரியர்களோடும் மற்றவர்கள் வேறு மற்றவர்களோடும் குழு சேர்ந்திருந்தனர். எங்கும் இலக்கியம் என்பதே பேச்சு. மரத்தடி விவாதங்களில் நாவல்களுக்கும் கவிதைகளுக்குமே அதிக முக்கியத்துவம் கிடைத்திருந்தது. கடல்கொள்ளத் தயங்கும் ஆயிரம் பக்க நாவல்கள், புத்தம் புதிதாகத் தோன்றிப் பரவத் தொடங்கியிருக்கும் சாருவின் படை, கோணங்கியின் இன்னும் எழுதி முடிக்கப்படாத பேரிலக்கியம், பெண்கவிகள் உயர்த்திப் பிடிக்கும் உடலரசியல், சாகித்திய அக்காதெமி, இயல், விளக்கு விருதுகள், நோபல் பரிசு எனத் திசைகளற்ற உரையாடல்களில் மனத்தைப் பறிகொடுத்திருந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்ட போது அமர்வுகளில் எத்தனைபேர் இருப்பார்கள் என்ற கவலை ஏற்பட்டது. இவை போதாதென்று லண்டன், பாரிஸ், ஜெனீவாவிலிருந்து வந்திருந்த புலம்பெயர் எழுத்தாளர்களைச் சுற்றித் திரண்ட மாபெரும் கூட்டம். போர்க் குற்றங்களுக்காக ஐநா மனித உரிமை ஆணையம் ராஜபக்ஷவைத் தண்டிக்குமா என்பதுதான் கேட்கப்பட்ட ஒரே கேள்வி. என்ன பதில் கிடைத்ததென்று தெரியவில்லை. நான் அங்கே போய்ச் சேர்வதற்குள் அதற்கான பதில் சொல்லி முடிக்கப்பட்டிருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்துவிட்டு என்னுடைய காட்டேஜுக்குத் திரும்பினேன். வழியில் வேறொரு காட்டேஜின் முற்றத்தில் ஒயின் ஓரியைச் சூழ்ந்து இளம் கவிகளின் பெரிய வட்டம். அநேகமாக விழாவுக்கு வந்திருந்த எல்லாக் கவிகளையும் ஒருசேரத் தரிசிக்க முடிந்த பெரும்பேற்றினை அளித்ததற்காக

கண்ணனுக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன். ஆனால் சுகிர்தராணியை மட்டும் அங்கே காண முடியவில்லை. அவர் தன்னுடைய காட்டேஜில் இருக்கிறார் என்றார்

ஒரு இளங்கவி. போகும் வழியில் அவருடைய காட்டேஜுக்குப் போய் அழைப்பு மணியை அழுத்தினேன். சிறிது அவகாசமெடுத்துக்கொண்டு கதவைத் திறந்தார். உள்ளே அனுமதிக்கும் எண்ணமில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக வாசலை மறித்துக்கொண்டு நின்றார். கண்களில் சோர்வும் பதற்றமும் தெரிந்தது.

உங்களுக்கு ஒடம்பு சரியில்லையா என்ன?”

இல்லை, அந்தக் கவிதையை இன்னும் செப்பனிட்டு முடிக்கவில்லை. சில வார்த்தைகள் இடறுகின்றன”

எந்தக் கவிதையை?” என அ. ரா. காப்பாற்ற விரும்பிய ரகசியத்தைக் குலைக்க விரும்பாமல் அப்பாவியாகக் கேட்டேன்.

உங்களுக்கு விஷயமே தெரியாதா?”

தெரியாது” எனத் துணிந்து பொய்சொன்னேன்.

உங்களுடைய நாடகத்தின் ஒரு பகுதியாக நான் கவிதை வாசிக்கிறேன். நாடகம் தொடங்குவதற்கு முன்பும் பின்பும்”

அரா என்னிடம் எதுவும் சொல்லவில்லை”

சொல்ல வேண்டாமென்றுதான் என்னிடமும் சொன்னார். ஆனால் நான் சொல்லி விட்டேன்” எனப் புன்னகைத்துக்கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டார் சுகிர்தராணி. என்னுடைய காட்டேஜுக்கு வந்து கட்டிலில் தலைகுப்புற விழுந்தேன். நாடகம்பற்றி அனிச்சையாக எழுந்த கவலைகளைப் புறக்கணித்துவிட்டுத் தூங்க முயன்றேன்.

கண்கள் செருகத் தொடங்கியிருந்தபோது பேராசிரியர் அ. ராமசாமி என்னைத் தேடிக்கொண்டு காட்டேஜுக்கு வந்தார். நிழல்போல் அவரைப் பின்தொடர்ந்து அறைக்குள் நுழைந்தார் சண்முகராஜா.

எட்டு

அ. ரா. களைத்துப்போனவராகத் தென்பட்டார். தான் உட்பட நாடகத்தோடு தொடர்புடைய எல்லோருமே அன்றைய இரவு நடக்கவிருந்த இறுதி ஒத்திகைக்கு முழுமையாகத் தயாராகி விட்டதாகச் சொன்னவர் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டியிருக்கிறதென்றார்.

மூவருமாக பார் ஒன்றை நோக்கி நடந்தோம்.

அந்தக் கதையை நாடகமாக்குவது பற்றிய தொடக்ககட்ட உரையாடலுக்குப் பிந்தைய இருபதாண்டுகளில் முதல் முறையாக நாடகத்தைப்பற்றிப் பேசத் தொடங்கியிருந்தார். நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நடந்தேன். மேடையாக்கத்திற்கான பிரதியை உருவாக்குவதில் அவர் பெரிய சவால்கள் எதையும் எதிர்கொள்ளவில்லை. சிறுகதையில் அடிப்படையான மாற்றங்கள் எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் நடிகர்களைக் கண்டறிவதுதான் பெரிய சிக்கலாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்னர் நான் எதிர்கொண்ட அதே சிக்கல். பிராமண வேசியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கப் பெண்கள் யாரும் முன்வரவில்லை. வேசி, மேடையில் ஆடைகளைக் களைய வேண்டியவள், கடைசியில் இளைஞனொருவனின் சித்திரவதையை எதிர்கொள்ள வேண்டியவள். எல்லாவற்றையும் கௌரவமாகக் காட்டுவதற்கான தனது மேடை உத்திகளைப்பற்றி அவர் எவ்வளவோ விளக்கிப் பார்த்திருக்கிறார். எதுவும் பலனளிக்கவில்லை. அவர் போலந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒரு மாணவி முன்வந்தார். அவளைக்கொண்டு சில நாட்கள்வரை பயிற்சியுங்கூட மேற்கொள்ளப்பட்டது. வார்சாவிலிருந்து அழைப்பு வந்ததால் அந்த முயற்சியைத் தொடர முடியவில்லை என வருத்தப்பட்டார்.

இப்போது அந்தப் பெண்ணையேகூடப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே சார்?”

அவள் படிப்பை முடித்துவிட்டுப் போய்விட்டாள். திருமணமும் நடந்துவிட்டது. சமீபத்தில் இதற்காகவே அவளைத் தேடிக் கண்டுபிடித்தேன். சமயநல்லூரில் தனியார் கல்லூரி ஒன்றில் லெக்சரராக இருக்கிறாள். வடக்குமாசி வீதியிலிருந்த அவளது வீட்டுக்குப்போய் என் திட்டத்தைச் சொல்லி நீதான் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றேன். மூர்க்கமாக மறுத்துவிட்டாள். அருகிலிருந்த கணவரின் முகத்தைப் பார்க்குமாறு சைகை காட்டினாள். பிறகு வேறெதுவும் பேசாமல் அவளது மணவாழ்க்கை சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்திவிட்டு வெளியேறினேன். இன்னும் ஒரு வார்த்தை அதைப்பற்றிப் பேசியிருந்தாலும் அடி வாங்கியிருப்பேன்” எனச் சொல்லிச் சிரித்தார்.

இப்போது அந்தப் பாத்திரத்தில் நடிப்பவர் ஒரு ஆண் நடிகர், இல்லையா சார்?”

ஆமாம். புனேயில் மென்பொருள் நிறுவனமொன்றில் பொறியாளராக இருக்கிறான். கான்பூர் ஐஐடியில் படித்தவன். சீக்கிரத்திலேயே அமெரிக்காவுக்குப் போய்விடுவான் போலிருக்கிறது. நாடகத்தின்மீது தீராத ஆர்வம். அவன் தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி. சென்னையிலிருந்தபோது பரீக்ஷாவின் சில நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார். நாடக ஆர்வம் தந்தையிடமிருந்து பெற்றது”

அப்படியா? யார் அவர்?”

பெயரைச் சொன்னார். நான் தாளமுடியாத அதிர்ச்சிக்குள்ளானேன்.

அவர், அந்த ஐஏஎஸ் அதிகாரி ஒரு தலித்”

ஆமாம். இப்போது ஹரியானாவில் ஒரு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்”

அவர்தான் பார்ப்பன வேசியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்?”

ஆமாம்”

என்ன சொல்வதெனத் தெரியாமல் சற்றுநேரம் மௌனமாக இருந்தேன்.

சரி இன்னொன்றையும் சொல்லுங்கள் அ.ரா., அந்தத் தலித் வாடிக்கையாளனின் பாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? நிச்சயம் அவர் பிராமணராக இருக்கமாட்டார் இல்லையா?”

அ. ரா. புன்னகைத்தார்.

உங்கள் கேள்விக்கான பதில், இல்லை என்பதுதான். அவனுடைய தந்தை நெல்லையப்பர் கோயிலில் குருக்களாக இருக்கிறார். இந்தப் பையன் என்னுடைய மாணவன். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவன். பிற்காலச் சோழர்கால இலக்கியத்தில் சாதியத்தின் தாக்கம்பற்றி ஆராய்ச்சி செய்கிறான். அதே நெல்லையப்பர் கோயிலில் பகுதிநேரக் குருக்களாகவும் இருக்கிறான். பொதுவாக மழுங்கச் சிரைக்கப்பட்ட முகத்துடன் காணப்படுவான். இப்போது இந்த நாடகத்தில் தலித் வாடிக்கையாளனாக நடிப்பதற்காகக் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகச் சவரம் செய்துகொள்வதைத் தவிர்த்துவிட்டு மீசை, தாடியுடன் இருக்கிறான்”

என் முன்னால் இருந்த விஸ்கி நிரம்பிய கோப்பையை ஒரே மூச்சில் காலி செய்தேன். அவர் சொன்னவற்றைப் புரிந்துகொள்வதற்காகக் கொஞ்சநேரம் மௌனமாக இருந்தேன். பிறகு மேசையைத் தட்டிக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தேன். இன்னொரு மேசையில் பீர் குடித்துக்கொண்டிருந்த ஸ்டாலின் ராஜாங்கமும் கவிஞர் இரா. சின்னசாமியும் எங்களை நோக்கித் திரும்பியிருந்தார்கள்.

அதாவது உங்கள் நாடகத்தில் ஒரு பிராமண இளைஞன் தலித் வேசியொருத்தியை நிர்வாணமாக்கப் போகிறான். அவளைப் புணரப்போகிறான். நாங்கள் செத்த மாட்டின் இறைச்சியை உண்பவர்கள் எனச் சொல்லிக்கொண்டே தன்னுடைய எச்சிலை அவளுடைய வாய்க்குள் துப்பப்போகிறான். நெல்லையப்பர் கோயில் குருக்களின் அந்த மகன் ஹரியானாவின் ஏதோ ஒரு மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருக்கும் தலித் ஐஏஎஸ் அதிகாரியின் உடலை சிகரெட் நெருப்பால் சுடப்போகிறான். இல்லையா சார்? உங்களுடைய கலகச் செயல்பாடுகளுக்கு என்ன எல்லை?”

என் பேச்சைக்கேட்டு ஏதோ விபரீதம் என நினைத்தோ என்னவோ ஸ்டாலின் ராஜாங்கமும் இரா. சின்னசாமியும் எங்களுடைய மேசைக்கு வந்தனர். சின்னசாமி எல்லோரையும் விரைப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இல்லை, இதில் கலகமொன்று மில்லை. உங்களுக்கும் எனக்கும்தான் அவன், அந்த தலித் வாடிக்கையாளன் நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகன் என்பதும் அந்த பிராமண வேசி தலித் ஐஏஎஸ் அதிகாரியின் மகன் என்பதும் தெரியும். பார்வையாளர்களுக்கு அவள் பிராமண வேசி. அவன் தலித் வாடிக்கையாளன். தன் முன்னோர்களுக்கு அவளுடைய முன்னோர்கள் இழைத்த கொடுமை களுக்காக அந்த தலித் வாடிக்கையாளன் அந்தப் பிராமண வேசியைப் பலி மிருகமாக மாற்றுகிறான். அவளைப் புணர்கிறான். சிகரெட் நெருப்பால் அவளுடைய உடலைப் பொசுக்குகிறான். இப்போது உங்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்க வாய்ப்பில்லையென நினைக்கிறேன்”

எனக்குத் தலைசுற்றுகிறது”

அதிகமாகக் குடித்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். அறைக்குப்போய் ஓய்வெடுத்துக்கொண்டு இரவு ஒத்திகை பார்க்க வாருங்கள்” எனச் சொல்லிக்கொண்டு எழுந்தபோது தன் கையிலிருந்த கோப்பையைக் காலி செய்துவிட்டு ஸ்டாலின் ராஜாங்கம் சொன்னார்,

அந்த இளைஞனை எனக்குத் தெரியும்”

யாரை?”

பிராமண வேசியாக நடிக்கும் தலித் இளைஞனை”

“.........................”

எங்கள் ஊர்ப்பக்கம்தான். அவனுடைய தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான். ஆனால் அவனுடைய பாட்டனார் உண்மையாகவே

பிராமணரொருவரின் மலத் தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தவர். அவனுக்குக்கூட இந்த வரலாறு தெரியாது”

தான் ஒரு தலித் என்பதேகூட அவனுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை சார்” என்றார் அவ்வளவு நேரமும் மௌனமாக இருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சண்முகராஜா.

அது தெரிந்திருந்தாலும் ஒரு தலித்தாக இருப்பது என்றால் என்னவென்று நிச்சயமாக அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என அவருக்குப் பதிலளித்தார் ஸ்டாலின்.

இது நீங்கள் திட்டமிட்டுச் செய்த ஏற்பாடா சார்?” என அ. ரா. வைக் கேட்டேன்.

எது?”

ஒரு தலித் வாடிக்கையாளனின் பலி மிருகமாக ஆகவேண்டியிருந்த பிராமண வேசியின் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு தலித் இளைஞனைத் தேர்ந்தெடுத்தது?”

ஒருவகையில்” என்றார் அ.ரா. பெருமூச்சு விட்டார். தொண்டையைச் செருமினார்.

ஒருவகையில் அப்படித்தான். பாத்திரத்திற்கும் அதை ஏற்று நடிக்கும் நடிகனுக்குமிடையே விலகல் இருக்க வேண்டும். நடிகன் பாத்திரத்தோடு முழுமையாக ஒன்றிவிடக் கூடாது. இது ஒரு முக்கியமான நாடக விதி”

நடிகன் என்பவன் உணர்ச்சிகளுக்கு இரையாகக் கூடாதவன்” எனத் தன் கோப்பையிலிருந்து கடைசி மிடறை விழுங்கிவிட்டுச் சொன்னார் சண்முகராஜா, “இது நாடகம். நாடகத்தில் யாரும்யாரை யும் புணரப்போவதில்லை. யாரும் யாருடைய உடலையும் சிகரெட் நெருப்பால் சுட்டுப் பொசுக்கப் போவதில்லை. ஆனால் பார்வையாளர் கள் அது நடப்பதாக நம்ப வேண்டும். அவர்கள் விரும்பினால் உணர்ச்சிவசப்படவும் செய்யலாம்”

இதையெல்லாம் எப்படிக் காட்டப்போகிறீர்கள் அரா?”
அது ரகசியம்” கண்களைச் சிமிட்டிக்கொண்டு சிரித்தார்.

நாளை மேடையில் நீங்கள் அதைக் காணலாம்” எனச் சொல்லிக்கொண்டே எழுந்தார் பேராசிரியர்.

ஒன்பது

நாங்கள் விடுதியை விட்டு வெளியேற முற்பட்டபோது அந்த இரண்டு இளைஞர்களும் உள்ளே நுழைந்தனர். கதவருகில் வைத்து இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் அ. ரா. அவர்களிடம் கொஞ்சம் பேச விரும்புவதாகச் சொன்னபோது இரண்டு நிபந்தனைகளை விதித்து என்னை அவர்களிடம் விட்டுவிட்டுப் போனார். நிபந்தனை ஒன்று: அவர்களிடம் நாடகம் தொடர்பாக எதுவும் விவாதிக்கக் கூடாது. இரண்டு: நான் அதற்கு மேலும் குடிக்கக் கூடாது. இரண்டையும் ஒப்புக்கொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.

மூவரும் ஒரு மேசைக்கு வந்தோம்.

என்ன சாப்பிடுகிறீர்கள் சார்?” எனக் கேட்டான் தலித் ஐஏஎஸ் அதிகாரியின் மகன்.

எனக்கு எதுவும் வேண்டாம்” என்றேன். அவன் ஒரு கோப்பை விஸ்கிக்குச் சொன்னான்.

உங்களுக்கு வேண்டாமா?” என நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகனிடம் கேட்டேன்.

பழக்கமில்லை” எனக் கூச்சத்துடன் சொன்னான்.

நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகன் என் எதிர்பார்ப்புக்கு மாறாகச் சற்றுக் கருத்தத் தோலையுடையவனாய் இருந்தான். தட்டையான மூக்கு, அடர்ந்த புருவம், சிறிய கண்கள். புருவங்களுக்கும் கண்களுக்குமிடையே அசாதாரணமான இடைவெளி தென்பட்டது. ஒழுங்கற்ற பல்வரிசையை வெளியே காட்டிக்கொள்ளும் விருப்ப மற்றவனைப்போல அடக்கமாகச் சிரித்தான். உடலின் எந்த உறுப்பிலும் முரட்டுத்தனம் தென்படவில்லை. பார்வை இயல்பாகவே சாந்தமாக இருந்தது. அவனது அசைவுகளில் தென்பட்ட பெண்மையின் நளினத்தைக் கவனித்தபோது

அ. ராமசாமி அந்த வன்மம்மிகுந்த தலித் வாடிக்கையாளனின் பாத்திரத்துக்கு இந்த இளைஞனை ஏன் தேர்ந்தெடுத்தார் எனக் குழம்பினேன்.

பரிதாபத்துக்குரிய பிராமண வேசியின் பாத்திரத்தை ஏற்றிருந்த தலித் ஐஏஎஸ் அதிகாரியின் மகன் அதற்குள் இரண்டு கோப்பை விஸ்கியைக் காலி செய்திருந்தான்.

பார்க்கப் பார்க்கப் பெண்போல்தான் தெரிந்தான் அந்த இளைஞன். சிவந்த நிறம், குழந்தை முகம், அகன்ற துயரம் தோய்ந்த கண்கள், படபடக்கும் இமைகள். நிகோடினின் கருத்த தடயங்களையுடைய உதடுகளாலும் அழகாக நறுக்கிவிடப்பட்ட மீசையாலும் இளம்தாடியாலும் அவனிடம் இயல்பாகப் படிந்துள்ள பெண்மையின் சாயலை முழுமையாக மறைத்துவிட முடியவில்லை. திறமையான ஒப்பனையாளர் ஒருவரால் நிச்சயம் அந்த இளைஞனை கன்னிமை சிதையாத, தொழிலுக்குப் புதிய அழகிய இளம்வேசியாக மாற்றிவிட முடியும். நான் அவனைப் பார்த்த பார்வை எனக்கே கூச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கதைப்படி நாடகத்தின் ஒரு கட்டத்தில் அவள் - மிருதுவான சருமத்தையுடைய அந்த தலித் இளைஞன் - நெல்லையப்பர் கோயில் குருக்கள் மகனின் வேண்டுகோளை ஏற்று அல்லது அவனது மிரட்டலுக்குப் பயந்து தன் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க வேண்டுமே. அதை

அ. ரா. எப்படிச் சமாளிக்கப் போகிறார்?

பிராமண வேசி அதற்குள் மூன்றாவது கோப்பையைக் காலி செய்திருந்தான். பக்கத்திலிருந்த சாம்பல் கிண்ணம் அவனால் தேய்த்து நசுக்கப்பட்ட கரிந்துபோன சிகரெட் துண்டுகளால் வேகமாக நிரம்பிக்கொண்டிருந்தது.

நாடகத்தில் வரும் அந்தப் பிராமணப் பெண் உங்கள் கற்பனையா? இல்லை அதுபோன்ற ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா?” என லேசாக இருமிக்கொண்டே கேட்டான் அந்தப் பிராமண வேசி.

கற்பனைதான்” என்றேன்.

இது நான் யூகித்ததுதான்” என்றவன் திடீரென வெடித்துச் சிரிக்கத் தொடங்கினான்.

உண்மையில் நீங்கள் ஒரு வேசியர் விடுதியை நேரில் பார்த்திருக்கக்கூட மாட்டீர்கள் அல்லவா?”

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?”

கதையைப் படித்தபோது அப்படித்தான் தோன்றியது” என்றவர் புகையை ஆழ்ந்து உள்ளிழுத்தார். யோசிப்பதுபோல் கண்களை மூடிக்கொண்டார். பிறகு எதிரில் உட்கார்ந்திருந்த தனது சகாவான தலித் வாடிக்கையாளனை நோக்கி அதே கேள்வியைக் கேட்டான்.

நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகன் பதில்சொல்லக் கூச்சப்படுபவனைப் போல உதட்டைக் கடித்துக்கொண்டான்.

தலித் இளைஞன் அதற்கும் சிரித்தான்.

அவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு சாதாரண வேசியைக்கூடப் பார்த்திருக்கமாட்டார். தொலைவிலிருந்தும்கூட. அதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்”

எப்படி?”

அது மிகச் சுலபமானது. கடந்த சில சந்திப்புகளில் அவர் ஒருமுறைகூடப் புகைபிடித்து நான் பார்த்ததில்லை. ராமசாமி சாரைக் கண்டால் அவருக்குச் சப்த நாடியும் ஒடுங்கிப்போய்விடுகிறது. நானோ அவருடன் சேர்ந்து குடிக்கிறேன். நான் எவ்வளவு ஒழுங்கீனமான மாணவன் என்று பாருங்கள்” என மீண்டும் வெடித்துச் சிரித்தான்.

நீங்கள் குடிப்பதில்லையா?” எனப் பிராமண இளைஞனைக் கேட்டேன். அவன் அதற்குப் பதில் சொல்வதற்கும் கூச்சப்பட்டான்.

என் தந்தை அதை விரும்புவதில்லை”

ஆனால் நாடகத்தில் நீங்கள் குடிக்க வேண்டுமே?”

ஆமாம், எனக்கு அப்படி நடிக்க முடியும்தான்”

நீங்கள் அவளை, அந்த இளம் பிராமண வேசியை நிர்வாணமாக்க வேண்டும்” என சிகரெட் புகையால் சூழப்பட்டிருந்த தலித் இளைஞனைச் சுட்டிக் காண்பித்தேன்.

அவனது முகம் சிவந்தது.

அப்படியும் என்னால் நடிக்க முடியும்தான்”

அவளது உடலை உங்கள் சிகரெட் நெருப்பால் சுட வேண்டும்”

அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமானதில்லை. ஏனென்றால் நாங்கள் பலமுறை ஒத்திகை பார்த்திருக்கிறோம்”

உங்கள் கண்களில், குரலில், உடலில் பழியின் தீவிரம் தென்பட வேண்டும்?”

ஆமாம், கதையில் அப்படித்தான் வருகிறது. தன் பாட்டனார் அவளுடைய பாட்டனாரின் வீட்டில் மலத்தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார் என்பதை அந்தப் பிராமண வேசியிடம் சொல்லும்போது கண்களில் நீங்கள் விரும்பும் அந்தத் தீவிரத்தைக் காண்பிக்க என்னால் முடியும். பார்க்கிறீர்களா?” என்றவன் உடனே தான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து நாடகத்தின் அந்தக் கட்டத்தை நடித்துக்காட்ட முற்பட்டான். பார்வை உண்மையாகவே தீவிரம் கொண்டது. உதடுகள் இறுகின. விடைத்த மூக்கின் நுனியில் வன்மம் தெறித்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த தலித் இளைஞன் போட்டி மனப்பான்மையால் தூண்டப்பட்டவனைப் போலப் பிராமண வேசியின் பொலிவிழந்த புராதனச் சிற்பத்தை நினைவூட்டுவதைப் போன்ற பாவனையை அனாயாசமாகத் தன் முகத்தில் வரவழைத்துக்கொண்டு நின்றான்.

இருவருமே திறமையான, தாம் ஏற்றிருக்கும் வேடங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள்தாம் என நினைத்துக்கொண்டேன்.

பேராசிரியரின் இரண்டாவது நிபந்தனையையும் பொருட்படுத்தாமல் விஸ்கிக்கு ஆர்டர் கொடுத்தேன்.

பத்து

விளக்குகள் இன்னும் அணைக்கப் பட்டிருக்கவில்லை. மேடை கிட்டத் தட்ட தயாராக இருந்தது. எளிய அரங்கம். படுக்கை, அலமாரி, மேசை, நாற்காலி அப்புறம் ஒரு டீப்பாய். மேடையின்மீது யாரோ சிலர் நடமாடிக்கொண்டிருந்தனர்.

ஆஷ் ட்ரே எங்க?” என யாரோ உரத்த குரலில் கேட்டார்கள்.

பிளாஸ்க்ல டீயக் காணோம்? அனீஸ் நீ அதக் கவனிக்கலயா?”

பிஸ்கட் பாக்கெட் இங்க இருக்கு பாரு”

என் கதையில் வரும் தலித் வாடிக்கையாளனின் அறையில் அனேகமாக அதற்கு மேல் ஒன்று மில்லை. காட்சி தொடங்கும்போது அவள் நின்றுகொண்டிருக்கிறாள். மிகப் பயந்தவளைப்போலத் தென்படுகிறாள். அவன் அவளைப் பார்க்கிறான். அவள்மீது பச்சாதாபம் கொள்கிறான். பிறகு உட்காரச் சொல்கிறான். அவள் தயக்கத்துடன் உட்காருகிறாள். அதற்குத்தான் அந்த நாற்காலி. ஆனால் அது பிளாஸ்டிக்காலானதாக இருந்தது.

என் கதையில் நான் அதை பிளாஸ்டிக் நாற்காலி எனக் குறிப்பிடவில்லை. வேறு எதனாலானது என்றும் குறிப்பிடவில்லை. ஆனால் கதையை எழுதிய அந்த வருடங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகள் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. ஒருவேளை அவர்களுக்கு மர நாற்காலி எதுவும் கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். ஆனால் அந்த நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகன் “உட்கார்” எனச் சொன்னவுடன் தலித் ஐஏஎஸ் ஆபீசரின் மகனால் தயக்கத்துடன் அதில் உட்கார்ந்து கொள்ள முடியும். அவன் அவளுக்கு பிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுக்கிறான். அதற்காகவே டீப்பாயின்மீது இரண்டு பிரிட்டானியா மில்க் பிஸ்கட் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பிளாஸ்க் இருக்கிறது. ஆனால் அதில் தேநீர் இல்லை. அதைத்தான் யாரோ யாருக்கோ சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேசை விளிம்பில் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியும்படி நான்கைந்து கோல்ட் பிளாக் சிகரெட் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை அந்தத் தலித் ஐஏஎஸ் அதிகாரியின் மகன் தற்போது ஏற்றிருக்கும் பிராமண வேசியின் பாத்திரத்துக்குப் பதிலாகத் தலித் வாடிக்கையாளனின் பாத்திரத்தை ஏற்றிருந்தால் அங்கே வேறு உயர்ந்த பிராண்ட் சிகரெட் பாக்கெட்டுகளை வைக்க வேண்டியிருந்திருக்கும். புகைபிடிக்கும் பழக்கமில்லாத அந்த நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகனுக்கு எந்தப் பிராண்டாக இருந்தாலும் ஒன்றுதான். அங்கே வைக்கப்பட்டிருக்கும் பாக்கெட்டுகள் எல்லாவற்றிலும் சிகரெட்டுகள் இருக்கின்றனவா இல்லை காலிப் பாக்கெட்டுகளா எனத் தெரியவில்லை. புகைக்க விரும்பாவிட்டாலும் சிகரெட்டைக் கொளுத்தி விரலிடுக்கில் பற்றிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அதன் நுனியில் உள்ள கங்கு மிருகமொன்றின் பழி நிறைந்த கண்களின் சாயலைப் பெறும்வரை புகையை ஆழ்ந்து உள்ளிழுக்கத் தெரிந்திருக்க வேண்டும். நடிப்பின் மீது தீராத காதல்கொண்ட அந்த இளம் பிராமணனுக்கு அது முடியும் என்றுதான் நினைத்தேன். அதற்காகத்தான் சிகரெட் பாக் கெட்டுகளுக்குப் பக்கத்தில் ஒரு தீப்பெட்டி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் எதற்காக ஆஷ் ட்ரேயைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்? ஏற்கனவே பிரசுரமான எனது கதையில் ஆஷ் ட்ரே இருந்ததாக நான் குறிப்பிடவில்லை. பின்னால் சுவர்போலப் பழுப்பு நிறத்தில் ஒரு திரைச்சீலை. அதில் சட்டமிடப்பட்ட இரண்டு ஓவியங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. ஒன்றில் ரத்தம் தெறிக்கும் ஆணுறையொன்று விரைத்த நிலையில் செங்குத்தாக நிற்கிறது. மற்றொன்றில் படுக்கைக்கிடையாகப் பிரும்மாண்டமானதொரு சிகரெட். சிகரெட்டின் நுனி பற்றி யெரியும் சிறுத்தையின் ஒற்றைக் கண்ணைப்போல் தோற்றமளிக்கிறது. அநேகமாக ரோகிணி மணியின் ஓவியங்கள்தாம்.

 ஆஷ் ட்ரே கெடச்சுருச்சா?”

ஆஷ் ட்ரே, ஆஷ் ட்ரே”

மங்கலான ஒளியில் யாரோ ஒருவர் ஓடிவந்து ஆஷ் ட்ரேயை வைத்துவிட்டுப் போவது தெரிகிறது. ஒருவர் காலியான பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு போகிறார்.

ஒத்திகை தொடங்க இன்னும் சற்றுநேரம் ஆகலாம். நான் உட்கார்ந்திருந்த வரிசையில் என்னைத் தவிரயாருமில்லை.

உண்மையில் அங்கே அதிகம்பேர் இல்லை. அது ஒத்திகை என்பதால் மிகக் குறைவானவர்களே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். தென்பட்டவர்கள் எல்லோருமே மிகமிக முக்கியமானவர்கள். சலபதியும் அதியமானும் எனக்கு முன்னால் இருந்த வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். சலபதி அதியமானிடம் கு. அழகிரிசாமியின் ஏதோ ஒரு கதையைப் பற்றித் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். வரவிருக்கும் கு. அழகிரிசாமி படைப்புகளுக்கு அதியமான்தான் பதிப்பாசிரியர். பேச்சு அதைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். பின்வரிசையில் சல்மா, கவிதா முரளிதரன், பிரேமா ரேவதி, ஜோதிமணி முதலான தமிழின் முக்கியப் பெண்மணிகள். கன்னியாகுமரி வந்ததிலிருந்து ஒருவரிடமிருந்து ஒருவர் பிரியக்காணோம். செட்டாக நடக்கிறார்கள். செட்டாக உட்காருகிறார்கள். செட்டாகச் சாப்பிடுகிறார்கள். செட்டாகத் தூங்குகிறார்கள். செட்டாகச் சூரிய உதயம் பார்க்கப் போகிறார்கள். பேச்சில் உற்சாகம் கரைபுரண்டது. மு. ராமசாமியும் பெருமாள்முருகனும் மற்றொரு மூலையில் தென்பட்டார்கள். கடந்த இரண்டு நாள்களாகவே அவர்களும் செட்டாகத்தான் தென்படுகிறார்கள். பெருமாள்முருகனின் ஏதாவதொரு நாவலை நாடகமாக்க விரும்புவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ மு. ராமசாமி? சமயரேகை பொறுப்பாசிரியர் சுகுமாரன் யாருடனோ தொலை பேசியில் உரையாடிக்கொண்டிருந்தார். குரலில் எரிச்சல் கண்களில் லேசான பதற்றம். article அனுப்பி வைத்திருந்த யாராவது பிரசுர விவரம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். வலப்புற இருக்கை வரிசையில்

ஜி. குப்புசாமி தென்பட்டார். அவரது அகன்ற முகம் அடுத்திருந்த வேறு யாருடைய முகத்தையோ மறைத்துக்கொண்டிருந்தது. மறைந்திருந்தவரின் முகக்கண்ணாடியையும் முன் மண்டையின் லேசான வழுக்கையையும் நிறத்தையும் கொண்டு பார்த்தால் ஓரான் பாமுக் மாதிரி தெரிந்தது. பாமுக்கா? இருக்கலாம். விழாவுக்குப் பன்னாட்டு எழுத்தாளர்கள் சிலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்களே. பாமுக்காக இருந்தால் கைகொடுத்து ஒரு வார்த்தை பேசி செல்போனில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வரலாமே என எழுந்தபோது பாமுக்கும் எழுந்தார். பாமுக் இல்லை. பிரம்மராஜன். அது தெரிந்ததும் மீண்டும் அதே கிடையில் உட்கார்ந்தேன். ந. முத்துசாமியைக் காணோமே எனத் தேடினால் வாசலில் ஜி. நாகராஜன். அவிழ்த்துவிடப்பட்டிருந்த திரைச்சீலையின் நிழல் அவர்மீது விழுந்திருந்ததால் மங்கலான வெளிச்சத்தில் ஆவியைப்போலத் தென்பட்டார். ஆனால் அது ஒரு தோற்ற மயக்கம் மட்டுமே. நின்றுகொண்டிருந்தவர் உடலும் உயிருமான ஜி. நாகராஜன்தான். எட்டு முழ வேட்டி, டெர்லின் சட்டை, கழுத்தில் ருத்ராட்சம் போன்ற ஏதோ ஒன்று. முனியைப்போல அடர்ந்த தாடி. புஷ்டியான நம்பி அண்ணாச்சியைப் பார்த்த மாதிரி இருக்கிறது. தன்மீது கவிந்த திரைச்சீலையின் நிழலை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவர் சௌகரியமான இடமொன்றைத் தேடத் தொடங்கியிருந்தார்.

குடியை அறவே விட்டொழித்துவிட்டாராம் ஜி.என். மறுபிறப்பென்றுதான் சொல்ல வேண்டும். நம்பியைக் கண்டால் கும்பிடுபோட்டுவிட்டுக் கடந்து போய்விடுகிறாராம். ஏன் என்று தெரியவில்லை, அவருக்கும் நாடகத்தின்மீது கட்டுக்கடங்காத ஆர்வம். கடந்த மூன்றுவருடங்களில் ஐந்து முக்கியமான நாடகங்களை எழுதியிருந்தார். அவரிடம் நாடகப் பிரதி கேட்டுப் பல நாடக இயக்குனர்கள் நடையாய் நடக்கிறார்கள். சினிமாவுக்குக்கூடக் கதை கேட்டார்களாம். ஜி.என். நிர்தாட்சண்யமாக அவர்களுக்கு நோ சொல்லிவிட்டாராம். ஆனால் சினிமாவில் நடிக்கிறார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். பெரும்பாலும் சாமியார் வேடம். சரித்திரப்படம் ஒன்றில் ராஜகுரு. சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் வரவேற்பறை அவ்வளவு ஒழுங்கு. பார்க்கலாம் என்று போனால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ப்ரெக்ட், ஸ்டானிஸ்லாவ்ஸ்க்கி பற்றிச் சொந்தக் கற்பனையோ என நினைக்குமளவுக்குப் பல புதிய தகவல்களைச் சொல்கிறார். புதுயுகத் திரைப்பட இயக்குனர்கள் அவரது பேச்சை வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாலா, மிஷ்கின், சசிகுமார், வசந்தபாலன் எல்லாம் அவரைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.

இன்னும் எத்தனை மாற்றங்கள்? ஆனால் பழமையின் மீதுள்ள பிடிப்பு மட்டும் மாறவில்லை ஜி.என்.னுக்கு. அவரைவிடக் காலத்தால் முதிர்ந்த எழுத்தாளர்களில் பலர் அனாயாசமாகக் கணினியில் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கும்போது ஜி.என். இன்னும் பேனாவையும் பேப்பரையும்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கையெழுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்போல் இருக்கிறது. வெவ்வேறு பிராண்டுகளில் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த விதவிதமான மை பேனாக்களை வைத்திருக்கிறார். அவற்றில் நிரப்புவதற்கான மை கிடைக்காமல் திண்டாடிப் போகிறார். கேம்ளின், கேமல், ப்ரில் போன்ற நிறுவனங்களெல்லாம் அவற்றின் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துவிட்ட நிலையில் ஒரு மைபாட்டிலுக்காக சாலிக்கிராமத்திலிருந்து திருவல்லிக்கேணி வருகிறார். பை கிராப்ட்ஸ் ரோட்டிலுள்ள ஒரு நாட்டு மருந்துக் கடையில் நீலம், கருப்பு, சிவப்பு, பச்சை என எல்லா நிறங்களிலும் தரமான பேனா மை கிடைக்கிறது. விலை அதிகம். மனிதர் அதைப் பொருட்படுத்தாமல் ஆசை ஆசையாய் வாங்கிக்கொண்டு போகிறார்.


அவர் பேனாவுக்கு மை ஊற்றும் அழகைப் பார்க்க வேண்டும். அரவிந்தாட்ச மேனன் கற்பனை. ஜி.என். நிஜம். சுந்தர ராமசாமிக்கு இதையெல்லாம் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை.

வேட்டி நுனியைப் பற்றிக்கொண்டு கம்பீரமாக அவர் அரங்கிற்குள் நுழைந்தபோது எல்லாக் கண்களும் அவரை நோக்கித் திரும்பின. நேராக முன்வரிசையை நோக்கி நடந்தார். யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் காலியாகக் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து நேர்கொண்ட பார்வையால் மேடையை ஊடுருவினார். முன்வரிசையில் அவரிடமிருந்து நான்கு நாற்காலிகள் தள்ளி அரவிந்தன் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் சமஸ், அவருக்கும் பக்கத்தில் பி.ஏ. கிருஷ்ணன். என் நாடகத்துக்கு எவ்வளவு கௌரவமான பார்வையாளர்கள். அநேகமாக தி இந்துவில் இதைப் பற்றி ஒரு விரிவான பதிவு வரக்கூடும்.

பதினொன்று


விளக்குகள் அணைக்கப்பட்டபோது எங்கிருந்தோ ஓடிவந்த பேராசிரியர் அ. ராமசாமி எனக்குத் துணையாகப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

 சார் நீங்க மேடைல இருக்க வேண்டியதில்லையா?”

ஒரு இயக்குனருக்கு மேடையில் என்ன வேலை? இப்போது நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. மேடையின் மீதோ நடிகர்களின் மீதோ இப்போது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை”

இதுவும் உங்களுடைய விலகல் தத்துவத்தின் ஒரு பகுதியா சார்?”

தத்துவம் என்னுடையதல்ல. ஏற்கனவே இருந்து கொண்டிருப்பது”

அ. ரா. பிடிவாதமான கலகக்காரர்தான் என நினைத்துக்கொண்டேன்.

வீணையின் மெலிந்த நாதத்தோடு தொடங்கியது ஒத்திகை. இருள் சூழ்ந்த மேடையில், கலங்கலான தண்ணீரைப்போலப் பரவத் தொடங்கிற்று ஒளியின் ஒரு தனித்த கற்றை. அது குவிந்த திசையில் சுகிர்தராணி தென்பட்டார். மிருதுவான குரலில் வரலாற்றின் துரோகத்தை, அதன்மீது கவிந்த துயரத்தை, வன்மத்தை, பழியை வாசித்தவர் கதைசொல்பவர் என ஒரு பாத்திரத்தை அறிமுகப் படுத்திவிட்டு இருளின் புகைப் படலத்தினுள் கரைந்தார். அட, அந்தப் பாத்திரத்தையே நான் மறந்துவிட்டேன். இவ்வளவுக்கும் என் கதைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்ததே அந்தக் கதைசொல்பவரது பாத்திரம்தான் எனப் பல விமர்சகர்கள் சொல்லியிருந்தனர். அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் யார் எனக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேடை இருண்டிருந்தது. கண்களுக்குப் புலப்படாத சாம்பல் வண்ண ஒளிக்குள் குடுகுடுப்பைக்காரரைப்போல வேடமணிந்த ஓர் உருவம் அலைந்து கொண்டிருந்தது. குரலை வைத்துப் பார்த்தால் ரவி சுப்பிரமணியனாக இருக்குமோ எனச் சந்தேகித்தேன். பேராசிரியர் அ.ரா.வோ வேறு யாருமோ எழுதிக்கொடுத்திருந்த வசனங்களைப் பாடலாக மாற்று வதிலிருந்து தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்வதற்குத் திணறிக் கொண்டிருந்ததை வைத்துத்தான் அப்படியொரு சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் ஒத்திகை தொடங்கியிருந்தது.

தலித் ஐஏஎஸ் அதிகாரியின் மகனுக்குப் பிராமண வேசியின் ஒப்பனை அற்புதமாகப் பொருந்தியிருந்தது. உண்மையாகவே பேரழகியாகத் தென்பட்டான். தலித் வாடிக்கையாளனுக்குச் செய்யப்பட்டிருந்த ஒப்பனை நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகனை முற்றாக மாற்றியிருந்தது. ஆனால் உடல் அசைவுகளில் அதீத தீவிரம் காட்டியது ஏனென்று விளங்கவில்லை. தனக்கெதிரே துயர் ததும்ப நின்றுகொண்டிருந்த - பிராமண வேசியின் வேடம் தரித்த - தலித் இளைஞனைப் பார்த்த பார்வையில் தெரிந்த மூர்க்கம் சிகரெட்டின் நுனியில் ரோகிணி மணி வரைந்திருந்த சிறுத்தையின் ஒற்றைக் கண்ணை நினைவூட்டியது. அசைவுகள்கூடச் சிறுத்தையினுடையதாகவே தென்பட்டன. பதுங்கிப் பதுங்கி தலித் இளைஞனின் அருகில் வந்த குருக்களின் மகன் அவன் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து இரண்டடி தொலைவில் முழங்கால்களை ஊன்றி ஒரு சிற்பத்தைப்போல நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு மெதுவாக ஸ்லோமோஷனில் நகர்ந்து அவளருகே சென்றான். முன்பும் பின்பும் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நகர்ந்துசென்று எல்லாத் திசைகளிலுமிருந்து அவளை ஆராய்ந்தான். ஆனால் அந்த வேசியின்மீது பச்சாதாபம்கொண்டு, “உட்கார்” எனச் சொன்னபோது குரலை மிருதுவாக்கிக் கொள்ள அவனுக்குத் தெரிந்திருந்தது. வசனங்களைத் தெளிவாக உச்சரித் தான். அவள் தன் பூர்வீகக் கிராமத்தைச் சேர்ந்தவள் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு, “அங்கே நீ யாருடைய மகள்?” எனக் கேட்ட கேள்வியில் தென்பட்ட நடுக்கம் இயற்கையாக இருந்தது. உச்சரிப்பில் கொஞ்சம்கூடப் பிராமண வாடை இல்லை. உணர்ச்சிகளுக்கும் இரையாகவில்லை. தலித் இளைஞனுக்குச் சிறுகதையிலுள்ளதைப் போலவே மிகமிகக் குறைவான வசனங்கள். அவன் கொஞ்சம்கூடப் பதற்றப்படாதவனாகத் தென்பட்டான். “வேசியே இன்னும் ஏன் உன் உடைகளைக் களைந்து நிர்வாணமாகாமல் இருக்கிறாய்?” என அந்தப் பிராமண இளைஞன் தன்னை நோக்கிக் கேட்டபோதும்கூட உணர்ச்சிவசப்படாமல் தன் உடைகளை ஒவ்வொன்றாகக் களைந்து கொண்டிருந்தான்.

பேராசிரியரின் விலகல் உத்தி பொருளற்றதல்லதான்.

ஆனால் சீக்கிரத்திலேயே மேடையின்மீது வீசிக்கொண்டிருந்த மங்கலான ஒளி பலவீனமுற்று அந்த இரண்டு பாத்திரங்களும் இருளில் நிற்கும்படி ஆயிற்று. பிராமண வேசியும் தலித் வாடிக்கையாளனும். ஆனால் யாருடைய உருவமும் மங்கலாகக்கூடத் தென்படவில்லை. ஒளியின் எந்தத் தடயமும் அப்போது மேடையில் தென்படவில்லை. தலித் வாடிக்கையாளன் சிகரெட்டைக் கொழுத்திக் கொண்டிருப்பதைக் கூடச் சிகரெட்டின் நுனியில் எரிந்த கங்கு மின்னியதைக்கொண்டே அனுமானிக்க முடிந்தது. பிறகு இருளின் ஆழத்திலிருந்து ஒரு கேவல். தலித் வாடிக்கையாளன் சிகரெட்டின் பழி நிறைந்த கங்கை அவளுடைய உடலின் ஏதாவதொரு இடத்தில் வைத்து அழுத்தியிருக்க வேண்டும்.

எங்கள் மூச்சுக்காற்றுக்கூடத் தீண்டத்தகாததாகக் கருதப்பட்டது”

ரவி சுப்பிரமணியனின் குரல்தான், சந்தேகமில்லை. மேடையில் உள்ளவர் களுக்காகத் திரைச்சீலைக்குப்பின்னாலிருந்து அவர் குரல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென யூகித்தேன்.

நான் வேசி”

நிச்சயமாக இது பிராமண வேசியின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் தலித் இளைஞனின் குரல் அல்ல. இதுவும் திரைச்சீலைக்கு அப்பாலிருந்துதான் ஒலிக்கிறது.

நாங்கள் செத்த மாடுகளின் மாமிசத்தைப் புசிப்பவர்கள்”

நான் வேசி”

வாடிக்கையாளனின் விரலிடுக்கில் கனன்றுகொண்டிருக்கும் கங்கு பழியுடன் எழுகிறது, தாழ்கிறது, இரையைப் பற்ற முனையும் ஒரு கழுகைப்போலச் சரேலெனக் கீழிறங்குகிறது. வன்மத்துடன் வேசியின் உடலின் ஏதாவதொரு பாகத்தைப் பொசுக்குகிறது. கங்கின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஒரு நெடிய கேவல், “நான் வேசி” என்னும் பதிலடி. தலித் வாடிக்கையாளன் தனது முன்னோர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியை நினைவூட்டிக்கொண்டே பிராமண வேசியைப் புணர்கிறான். புணர்ச்சி வெறும் சத்தமாக இருக்கிறது. வெறும் நிழலாக இருக்கிறது. வெறும் கற்பனையாக இருக்கிறது. ஒளியே அற்ற மேடையில் இரு நிழல்கள் ஒன்றையொன்று மூர்க்கமாகத் தழுவுகின்றன. புரள்கின்றன. இருளுக்குள் புதைந்திருக்கும் பார்வையாளர்களின் கற்பனையில் அது ஒரு யுத்தமாக விரிகிறது. எழுந்து தணியும் கேவல்களில் உண்மையான வேதனையின் தீவிரம்.

நான் பெருமூச்செறிந்தேன்.



இந்தக் காட்சியை எப்படி வடிவமைத்திருக்கிறீர்கள் சார்?” எனத் தணிந்த குரலில் பேராசிரியர் அ.ரா. வைக் கேட்டேன், “எனக்குப் புரியவில்லை. உண்மையாகவே அந்த நெல்லையப்பர் கோயில் குருக்களின் மகன் தலித் ஐஏஎஸ் அதிகாரியின் மகனைச் சிகரெட் நெருப்பால் சுடுகிறானா என்ன? எனக்கு அப்படியொரு கற்பனை”

அந்த இருளுக்குள்ளிருந்தும் அடர்ந்த தாடிக்குள்ளிருந்தும் அவர் புன்னகைத்தார்.

அந்தப் பிராமண வேசியின் கைகளில் ஒரு ஆஷ்ட்ரே இருக்கிறது. அவன் அதைச் சிகரெட்டின் கங்குக்கு எதிராக மலர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கிறான். கனன்றுகொண்டிருக்கும் சிகரெட்டின் நுனியை இளம் பிராமணன் அந்த ஆஷ்ட்ரேயில் வைத்து அழுத்துகிறான். மேடையில் யாரும் யாரையும் புணர்வதில்லை. அதைப்போலவேதான் எந்த நெருப்பும் யாருடைய உடலையும் சுடுவதில்லை. கேவல்களைத் திரைச்சீலைக்குப் பின்னாலிருந்து என் மாணவியொருத்தி எழுப்பிக்கொண்டிருக்கிறாள்”

எனக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது.

யாருடைய கண்களுக்கும் புலப்படாத கதைசொல்லி தன் தணிந்த பிசிரற்ற குரலில் எல்லோருக்கும் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் இருள் சூழ்ந்த மேடையில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைத் திட்டவட்டமாக யூகிக்க முடியவில்லை. கதைசொல்பவரின் தணிந்த நிதானமான குரலுக்கு மேலாக உயர்ந்தெழுந்த தீர்க்கமான கேவல்கள் யாருக்கானவை என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோவொரு தருணத்தில் அச்சிடப்பட்ட எனது கதை முற்றுப்பெற்றது. அதன் கடைசி வரியும் உச்சரிக்கப்பட்டு விட்டது. இசைக்கோவைகள் ஒவ்வொன்றாகத் தணிந்துகொண்டிருந்தன.

பார்வையாளர்களின் நீண்ட கைதட்டல். முடிவாக எஞ்சியிருந்தது சுகிர்தராணியின் கவிதை மட்டுமே. கவிஞர் தன் கையில் தயாராக வைத்துக்கொண்டிருந்த தாள்களுடன் தன் மறைவிடத்திலிருந்து வெளியேவந்து மேடையில் படரத்தொடங்கியிருந்த மங்கலான ஒளியில் அப்போதுதான் பிரவேசிக்கத் தொடங்கியிருந்தார். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் பேராசிரியர் அ. ராமசாமியும் பதற்றத்துடன் எழுந்து நின்றிருந்தார். எதையோ கேட்க நினைத்து அவரை நோக்கித் திரும்பியபோது அவர் மேடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஏதோ விபரீதத்தை உணர்ந்து அவரைப் பின்தொடர்ந்தேன்.

பயங்கரமான அனுபவம் அது.

மேடையில் புணர்வதெற்கென்று போடப்பட்டிருந்த கட்டிலில் தாறுமாறாகக் குலைந்து கிடந்தான் அந்த தலித் வாடிக்கையாளன். பக்கத்தில் அந்த பிளாஸ்டிக் நாற்காலியில் கிரேக்கச் சிற்பமொன்றைப்போலத் தலைவிரி கோலமாக உட்கார்ந்திருந்தாள் பிராமண வேசி. நெல்லையப்பர் கோயில் குருக்களின் புத்திரனின் மிருதுவான உடலில் பல இடங்களில் கோல்ட் பிளாக் சிகரெட்டின் கங்குகளால் துளைக்கப்பட்ட புத்தம்புதிய காயங்கள். அவனது கழுத்திலும் கன்னங்களிலும் ஆழமான நகக்கீறல்கள். கிழிந்து தொங்கிய உதடுகளிலிருந்து ரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. தலித் வாடிக்கையாளனாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அந்தப் பிராமண இளைஞன் ஏற்கனவே மூர்ச்சையுற்றிருந்தான். கைகளைப் பரப்பி நீட்டி தலைகுப்புறக் கவிழ்ந்த நிலையில் எதையோ முனகிக்கொண்டு கிடந்தவனை நோக்கிக் குனிந்த அ.ரா. யாருக்கோ எதையோ சொல்லவும் முற்பட்டிருந்தார். அவரது குரல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால் பிராமண வேசி யாரையும் பொருட்படுத்தவில்லை. நிலைகுத்திய விழிகளால் பேராசிரியர் அ. ராமசாமியை வெறித்துப் பார்த்தவன் பிறகு எழுந்து திடமாக நின்றான். நிதானமாக நடந்துசென்று மேடையின் ஒரு மூலையில் குலைந்து கிடந்த சேலையை எடுத்து உடுத்திக்கொண்டான். தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் தேர்ந்த நடிகனுக்கேயுரிய அசைவுகளுடன் மேடையின் முன்புறத்தை அடைந்த அந்தத் தலித் ஐஏஎஸ் அதிகாரியின் மகன், தன்னை ஒரு தலித்தாக உணராத, தலித்தாக இருப்பதென்றால் என்னவென்றே தெரியாத முன்னாள் கான்பூர் ஐஐடி மாணவன் பார்வையாளர்களை நோக்கித் தனது உரத்த, பிசிரற்ற குரலில் “நான் தீண்டத்தகாதவன், நான் வேசி” என அறிவித்தான். பேராசிரியர் அ. ராமசாமியும் தான் எழுதிக்கொண்டு வந்திருந்த இரண்டு கவிதைகளில் முக்கியமான ஒன்றை வாசிக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்திருந்த கவிஞர் சுகிர்தராணியும் எனது மற்ற கௌரவமான பார்வையாளர்களும் திகைத்து நின்றுகொண்டிருந்தபோது அவன் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.



குறிப்பு:

1. இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள பெயர்கள், சம்பவங்கள், இடங்கள், நாள்கள், உரையாடல்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. பெயர்களில் தென்படும் ஒற்றுமையைக்கொண்டு யாராவது அது தன்னைக் குறிப்பது என நினைத்தால், விரும்பினால் அது சம்பந்தப்பட்டவர்களின் கற்பனை.

2. இரண்டு நாட்கள் கழித்து இந்த நாடகம் பற்றிய விரிவான விமர்சனக் கட்டுரையொன்று 'தி இந்து' நாளிதழில் வெளிவந்தது. ஜி. நாகராஜன்தான் எழுதியிருந்தார். நடுப்பக்கத்தில் முக்கியத்துவம் அளித்து பிரசுரிக்கப்பட்டிருந்த அக்கட்டுரையில் நடைபெற்றது நாடகமல்ல, ஒத்திகை என்பதைக் குறிப்பிடும் வாக்கியம் ஒன்றுகூட இல்லை. ஆனால் அது தமிழின் முக்கியமான நாடக முயற்சிகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார் ஜி.என். அதற்கடுத்த நாள் தி இந்து ஆங்கில நாளிதழில் பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் இந்த விஷயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 'ஒரு மோசமான நாடக அனுபவம்' என்பது தன் கட்டுரைக்குப் பி.ஏ. கிருஷ்ணன் அளித்திருந்த தலைப்பு. இரண்டு வெவ்வேறு ஆளுமைகளின் கலை அனுபவங்களுக்கிடையேதான் எவ்வளவு வேறுபாடு?

தேவிபாரதி

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்