விளையாட்டும் சினிமாவும்


அமீர்கானின் “ தங்கல்/ யுத்தம்” பார்த்தவுடன் சில மாதங்களுக்கு முன்பு பார்த்த “எம்.எஸ்.தோனி”யும் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ”இறுதிச்சுற்று”ம் நினைவுக்கு வந்தன.

இந்த மூன்று சினிமாக்களும் விளையாட்டு, அதில் ஈடுபடும் இளையோர் சந்திக்கும் சிக்கல்கள், அதனைத் தாங்கி/தாண்டி வெற்றிபெறும் வல்லமை என்பதுபோன்ற சொல்லாடல்களை மேல்தளத்தில் பேசுகின்றன. ஆனால் அதை மட்டுமே இந்தப் படங்கள் பேசியிருந்தால், இந்தப் படங்கள் வணிக வெற்றியையும் கவனிப்பையும் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. இந்தப் படங்களின் வெற்றி சில எல்லைகளைத் தாண்டியதற்கான வெற்றி. விளையாட்டு வீரர்கள் என்ற எல்லையைத் தாண்டி இந்திய சமூக அமைப்பு புதியனவற்றை எதிர்கொள்வதில் கடைப்பிடிக்கும் இறுக்கமான தடைகளையும், அதற்குப் பின்னால் இந்திய சமயமரபு, சாதிய அமைப்பு, பாலின வேறுபாட்டுப்பார்வை, நவீன அரசியல் செயல்படும் குதர்க்கநிலை ஆகியவற்றையும் இவை பேசியுள்ளன.
இவையெல்லாம் பேசப்படுகின்றன என்பதை முதன்மைப்படுத்தாமல், விளையாட்டோடு சேர்த்தே பேசியுள்ளன என்பதுதான் அந்தப் அடங்களை இயக்கிய இயக்குநர்கள் திறமையெனக் கருதுகிறேன்.அமீர்கான் போன்ற படைப்பாளிகளால் தொடர்ச்சியாக இந்திய சமூகத்தின் மீதான விமரிசனத்தைக் காலத்தின் சூழலில் வைத்துப் பேச முடிகிறது.

விளையாட்டு என்ற உண்மையை வைத்துக்கொண்டு இந்திய சமூகத்தை விமரிசிக்கும் சினிமாக்களை இயக்கமுடிவதுபோல் வறுமை, ஊழல், அரசியல் அடாவடித்தனம், அதிகாரத்தின் குரூரம், சாதியின் இறுக்கம், மதவாதத்தின் மோசடித்தனம் போன்ற உண்மைகளை வைத்துக்கொண்டு வெற்றிகரமான - நம்பகமான சினிமாக்களை எடுக்கமுடியாமல் தடுப்பது எது என யோசிக்கவேண்டும். அந்த யோசனையே சரியான திரைக்கதையை உருவாக்க உதவும். அந்த யோசனை ஒருவரின் யோசனையாக இல்லாமல் கூட்டு யோசனையாக இருக்கும்போது நல்ல சினிமா - நம்பிக்கையான - நம்பத்தக்க சினிமா உருவாகும்.

சினிமாவை இயக்குபவர் ஒருவரே என்றாலும், சினிமா எப்போதும் கூட்டுக்கலை தான்.

மேரிகோம்: நிஜமும் நிழலும்

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகிவிட்ட நிலையில் அவர் காட்டிய தீவிர ஈடுபாட்டைச் சொல்லியது 2014 இல் எடுக்கப்பட்ட அந்தப்படம். இப்போது அவருக்கு மூன்று குழந்தைகள். ஆறாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன்னால் -21/11/2018- சென்னையில் இருந்தபோது மேரிகோம் படம் பார்த்தேன். வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப்(Bio-pic) பார்க்கும் ஆர்வம் பேரன் நந்தாவுக்கு அதிகம். விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், சாகசக்காரர்கள் எனப் பலவிதமான வாழ்க்கை வரலாற்றுச் சினிமாக்களின் தொகுதியைச் சேர்த்து வைத்திருக்கிறான். மகேந்திரசிங் தோனி படத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பார்க்கும் வாய்ப்பு அத்தொகுதி மூலமும் பேரனின் ஆர்வம் மூலமும்தான் கிடைத்தது.

புனைவுப் படங்களில் பார்த்த அழகுப்பொம்மை ப்ரியங்கா சோப்ராவை முற்றிலும் மறக்கச்செய்து விட்டு தேர்ந்த நடிகையாகத் தன்னை அதில் நிறுத்தியிருந்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலப்பெண்ணாக - தாய்மையை விட்டுவிட முடியாத ஒரு வீராங்கனையாக மேரிகோமாக அந்தப் படத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார் ப்ரியங்கா.

திருமணம், குடும்பம், இரட்டைக் குழந்தைகள் பிறப்பு போன்றன அவரது அடுத்த கட்ட நகர்வுக்குத் தடையாகிவிடும் வாய்ப்புகளைக் கவனமாக உருவாக்கிக் காட்டிய சினிமா, அந்தத் தருணங்களையும் தனது பிடிவாதத்தாலும் விடாப்பிடியான பயிற்சிகளாலும் வென்றெடுத்த விதங்களையும் காட்டியது. விளையாட்டு - குறிப்பாகக் குத்துச்சண்டை போன்ற உடல் சார்ந்த சாகசங்களுக்கு குடும்பமும் குழந்தைகளும் தடையாக இருக்கின்றன என்ற கருத்துநிலையைத் தவிடுபொடியாக்கிக் காட்டியவர் மேரிகோம். தானொரு வடகிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் என்பதால் இந்திய ஒன்றியம் கண்டுகொள்ளவில்லையோ என்ற ஆதங்கமும் அவருக்கு உண்டு. அதையும் அந்தப் படம் உணர்த்தியது.
நிஜங்களை நிழல்களாக்கித் தரும் வாழ்க்கைவரலாற்றுச் சினிமாக்களை பள்ளிப் பாடத்திட்டங்களின் பகுதியாகக் காட்டலாம் என்பது எனது பரிந்துரைகளில் ஒன்று.

கனா: சிதறும் இலக்குகள்

2.0 சினிமாவை நெல்லையில் ஒரு தடவை பார்த்தேன். அது ஒற்றை அரங்கு. பார்வையாளர்களாக வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தரவயதினர். குழந்தைகள் குறைவு. இரண்டாவது தடவை சென்னையில். அது பல அரங்குகள் கொண்ட சினிமா வளாகம். அங்கே குழந்தை, குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக அந்தப் படத்திற்கு வரிசை கட்டுகிறார்கள். வேறு படங்களுக்குப் போகும்போதும் கவனிக்கிறேன்.

ரஜினியின் 2.0 குழந்தைகளுக்கான படமாக முடிவுசெய்யப்பட்டு குடும்பமாக வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அலைபேசிக் கோபுர அதிகரிப்பு அதனால் உண்டாகப்போகும் விளைவுகள் பற்றியெல்லாம் நினைத்துக்கொள்ளாமல் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியைத் தரும் சிட்டி, குட்டி ரோபோக்களை முதன்மையாக்கிக் குழந்தைகள் படமாக நினைத்துக்கொண்டு பிள்ளைகளோடு போய்க்குவிகிறார்கள்.சரியாகச் சொல்வதென்றால் 2.0.குழந்தைகள் சினிமா அல்ல.

இதன் எதிர்த்திசையில் நகர்கிறது கனாவுக்கான கூட்டம். நடுத்தர வயதினரும் பெரியவர்களுமே அதன் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். உண்மையில் இந்த சினிமாவின் இலக்குப் பார்வையாளர்களாக குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இருக்கவேண்டிய படம். ஆனால் குடும்பமாக வந்து பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கனாவிலும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கான ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. விவசாயத்தைக் காக்கவேண்டும் என்னும் உயிராதாரமான பிரச்சினையும் அதற்கெதிரான விவசாயக் கொள்கையும் இயல்பான கதையில் விமரிசனத் தொனியில் முன்வைக்கப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்ட நடுத்தரவர்க்கத் தமிழர்களின் குற்றமனத்தைத் தூண்டும் அந்தக் கதையோடு சமூக வெளியில் பெண்களின் இடம், அவர்களின் திறனை மேம்படுத்தத் தேவையான ஊக்கம் போன்றன சரிவிகிதத்தில் கலந்து தரப்பட்டுள்ள படம். ஒருவித இணைப்பிரதியாக்கத்தன்மையைக் கொண்டுவர இயக்குநர் முயன்றுள்ளார். சொல்முறையில் கவனமாகச் செயல்பட்டிருந்தால் இணைப்பிரதியின் அழுத்தமான காட்சிகள் பாராட்டத்தக்கதாக ஆகியிருக்கக் கூடும். அதற்குப் பதிலாக நகைச்சுவைக் காட்சிகளாக மாறியிருக்கின்றன.

இதுபோன்ற விளையாட்டு ஆளுமைகளைக் குறித்த எம்.எஸ், தோனி- சொல்லப்படாத கதை, மேரி கோம்ஸ், சச்சின் போன்ற படங்கள் அளவுக்குக் கூட கனா கவனம் பெறவில்லை. முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் புனைவுப்படமாக ஆக்கியது காரணமாக இருக்கலாம். ஆனால் உண்மைக்குப் பக்கத்தில் இருக்கும் புனைவுப்படம். கிரிக்கெட் வீராங்கனை -கௌசல்யா முருகேசனாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் நடிப்பும் பாத்திரத்தை முழுமையாக்க அவர் காட்டியுள்ள ஈடுபாடும் தொடர்ச்சியாக அவர் வெளிப்படுத்தும் நடிப்பாற்றலின் ஒரு பரிமாணம். அப்பாவாக நடித்துள்ள சத்யராஜ், அம்மா , உரக்கடைக்காரர், உதவும் உறவினர்/ காதலர் என ஒவ்வொருவரும் படத்தின் புனைவுக்கும் நடப்பும் உதவுகிறார்கள். முழுமையும் வெளிப்புறப்படப்பிடிப்பாகக் கிராமக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அக்காட்சிகளில் நடிப்பவர்களைத் தயார் செய்வதில் இருக்கும் கஷ்டங்கள் சினிமாவில் இருப்பவர்களுக்குத் தான் புரியும்.

நடப்பியல் படம் என்பதால் கிராமப்புற மனிதர்களின் பெண்கள் பற்றிய பார்வையோடு உடன்படாமல் மாற்றத்தை முன்னெடுக்கும் வகைமாதிரிகளாகப் பாத்திரங்களை வடிவமைத்துள்ள இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாராட்டப்படவேண்டியவர்., அவருக்கு அந்த நிலையை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ள தயாரிப்பாளர் சிவ கார்த்திகேயனும் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்தில் வரும் சிவகார்த்திகேயன் இதுவரையான அவரது ஒற்றைப் பரிமாண அடையாளத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும் முயன்றிருக்கிறார்.
படிக்கவும் வேலை செய்யவும் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருக்கும் பெண் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இந்தப் படத்தின் இலக்குப் பார்வையாளர்கள் அவர்கள் தான். அவர்களை அழைத்துச் சென்று பார்க்கச் செய்யும் பெற்றோரும் இந்த இலக்கை ஏற்கும் பார்வையாளர்களாக ஆகிக்கொள்ளலாம்

மகேந்திரசிங் தோனி: பங்குச் சந்தையின் வேகக் குதிரை

விளையாடும் அணியின் சராசரி வயது 35 ஆக இருக்கலாம். மொத்தமாக அணி எடுத்த ஓட்டங்களில் மற்ற அணிகள் எல்லாவற்றையும் விடக் குறைவான ஓட்டங்களை எடுத்திருக்கிறது. ஆனால் அதிகமான வெற்றிகளைப் பெற்று முதல் அணியாகத் தகுதிச் சுற்றை உறுதி செய்தது. அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் அணித்தலைவர் தோனிமட்டும் தான் இருக்கிறார். அவர் கடைசிவரை நீன்று அடித்த 84 தான் அணியில் தனிநபராக அதிக ஓட்டங்கள். இறுதியில் விளையாடும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் படுதோல்வி.

இதற்கு மாறாக அணியின் பந்துவீச்சு எப்போதும் கைகொடுத்திருக்கிறது. அனைத்து ஆட்டங்களிலும் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் சாஹரும் சுழற்பந்து வீச்சாளர் தஹீரும் விக்கெட்டுகளை எடுத்து அணிக்கு உதவியிருக்கிறார்கள். இவ்விரு முதன்மைப் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக ஹர்பஜனும் ஜடேஜாவும் இருந்து அணியாக வெற்றிகளைப் பெற்றுத்தந்தார்கள். பந்துவீச்சாளர்கள் திறமை களத்தில் நின்று பந்தைத் தடுப்பவர்களாலும் பிடிப்பவர்களும் மட்டுமே உணரப்படும்.
மட்டை வீச்சில் அணித்தலைவர் தோனியை மட்டுமே நம்பியிருப்பதுபோலத் தோன்றினாலும் இறுதிப் போட்டியில் அணியின் இலக்கு 150 தான். இந்த ஓட்டங்களை எடுத்து வெற்றியைத் தட்டிச் செல்லவேண்டியதற்குச் சென்னை அதிகம் சிரமப்படாது என்றே நினைக்கிறேன்.

தோனியும் சென்னை சூப்பர் ஹிங்ஸ் அணியும் கிரிக்கெட் என்னும் கொண்டாட்டப் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் துணிச்சலாகப் பணத்தை முதலீடு செய்யலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்