நூல்கள் - இதழ்கள் -மொழி


மாயைகள் : ஒன்று இன்னொன்றாய்
நிலவெளிப்பயணம்
விளையாட்டை எழுதும் மொழி விளையாட்டு
நன்றி கல்யாண்ஜிக்கு பாராட்டுகள் ஜோதிக்கு
மாயைகள் : ஒன்று இன்னொன்றாய்
மாயாவாதம் பற்றிய அறிதலும் விமரிசனங்களும் ஏற்கெனவே இருந்தாலும் ‘ மாயை’களை அறியும் திசையைக் காட்டியது இந்த நூல்தான். அப்போது குணாவாக அறிமுகமாகி இப்போது அறிஞர் குணாவாக உச்சரிக்கப்படும் அவர் எழுதிய அச்சிறுநூல் எழுப்பிய கேள்விகள் இவ்வளவு பெரிய ஆச்சரியங்களாகும் என்று அப்போது நினைக்கவில்லை.

அடர் நீலத்தில் மூன்றில் ஒரு பகுதியையும் மென்நீலவண்ணத்தில் இருபகுதியையும் கொண்ட சாதாரண அட்டையோடு வந்த அந்தச் சிறு நூலின் (80 பக்கம்/ 8ரூபாய்) தலைப்பு: திராவிடத்தால் வீழ்ந்தோம்! (தலைப்பில் ஆச்சரியக்குறி இருந்தது) வந்த ஆண்டு தி.பி. ஆண்டு 2029 (கி.பி.1994, டிசம்பர்) தமிழக ஆய்வரண், பெங்களூர் வெளியீடாக வந்த நூல் அச்சிடப்பட்டது சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடரங்கம் தெருவில் இருந்த பஃறுளி அச்சகத்தில். அதே பெயரில் பதிப்பகத்தையும் அச்சகத்தையும் நடத்தி வந்த ந.அரணமுறுவல் அவர்கள் பொறுப்பெடுத்து அச்சிட்டதோடு விற்பனைப் பொறுப்பையும் செய்து வந்தார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் சிந்தனைப் பள்ளியில் இருந்த அரணமுறுவல் அவரைப் போலவே மீசையும் வைத்திருந்தவர். மனிதர்களின் மீதான அன்புக்கும் பெருஞ்சிரிப்புக்கும் சொந்தக்காரர். நாங்கள் ஊடகம் இதழைத் தொடங்கியபோது அச்சாக்கத்திற்கான கணினி வடிவாக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தவர். அரசு வேலைகள் பலவற்றிற்கு முயன்றபின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் என்ற பதவி உருவாக்கப்பட்டபோது நேரடி நியமனத்தில் திருநெல்வேலிக்கு வந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் இரண்டையும் ஒருவரே கவனித்துக் கொண்டார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் என்ற பெயர் மட்டும் பெரியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் ஒரு பிரிவாக இருக்கும் அத்துறை தமிழ் வளர்ச்சிக்காகப் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. எழுதப்படும் கோப்புகளில் இருக்கும் மொழிப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவதோடு தமிழ்வளர்ச்சியை முடித்துக்கொள்ளும். அஃதல்லாமல் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் விருதாளர் பட்டியலுக்குப் பெயர்களைப் பரிந்துரை செய்யும்.

நூலை அச்சிட்டுக் கொண்டுவந்து பாண்டிச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்த தலித் கலைவிழா ஒன்றின்போது கடை விரித்த அரணமுறுவல் அச்சிறு நூலை என்னிடம் தரும்போது பக்கத்தில் இருந்த நண்பர் ரவிக்குமார் அரணமுறுவலின் தனித்தமிழ்ப் பற்றைக் கிண்டலடித்து ஒரு சொற்றொடரைச் சொன்னபோதும் சிரித்துக் கொண்டே நூலைக் கையில் திணித்துவிட்டார். அந்த நூலைப் படித்த சூடு அடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது கருணா மனோகரனின் “திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா?(தலைப்பில் கேள்விக்குறிகள்) மதுரை பாண்டியன் அச்சகத்தில் அச்சிட்டு திருப்பூர் சமூகநீதிப் பதிப்பகத்தின் முகவரியான 54, கண்ணகி நகர் , பெருமாநல்லூர் சாலைக்கு வந்த அந்த நாளில் நான் திருப்பூரில் இருந்தேன். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் விடியல் பதிப்பகம் சிவாவோடு பார்த்திருந்த கருணா மனோகரனைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவரும் நூலைக் கையில் திணித்துவிட்டார்.

கையில் திணிக்கப்பட்ட இவ்விரண்டு நூல்களையும் வாசித்தபோது சி.என். அண்ணாதுரை எழுதிய ‘ ஆரிய மாயை’யை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. அதைத் தேடி வாசிப்பதற்கு முன்பாகவே கோ.கேசவனும் அ.மார்க்ஸும் சேர்ந்து எழுதிய ‘ குணா: பாசிசத்தின் மறுவடிவம்’ வந்துவிட்டது. புதிய ஜனநாயகம் இதழிலும் குணாவின் நோக்கங்கள் குறித்துக் கட்டுரைகள் வந்துகொண்டே இருந்தன. தலித் இயக்கங்களை நோக்கிப் பேசும் தொனியைக் கொண்ட அச்சிறுநூலைப் பெரும்பாலும் தலித் சிந்தனையாளர்களும் களப்பணியாளர்களும் சந்தேகக் கண்கொண்டுதான் பார்த்தார்கள்; வாசித்தார்கள். நானும் வாசித்தேன். அதற்கிடையில் சுப்பு என்பவர் எழுதிய ‘ திராவிட மாயை’யும் வாசிக்கக் கிடைத்தது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்னும் சிறுநூல் உருவாகக் காரணமாக இருந்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பது சொல்லப்பட வேண்டிய சுவாரசியமான தகவல்.1994 சூன் 25-26 தேதிகளில் குடந்தையில் பா.ம.க. நடத்திய கருத்தரங்கில் குணாவை ‘திராவிட மாயை’ என்னும் தலைப்பில் கட்டுரை வாசிக்க அழைத்தது. அவரைக் கட்டுரை வாசிக்க அழைத்தவரொடு ஏற்பட்ட செய்திப் போக்குவரத்துச் சுணக்கத்தால் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் கட்டுரையை எழுதத் தூண்டுகோல் அக்கருத்தரங்கம் தான் என எழுதுகிறார் குணா. அந்த முன்னுரையில் “குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை, நல்ல தூசியைக் கிளப்புமென்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்” என்றும் நன்கறிவேன் என்கிறார். அது கிளப்பிய தூசி நல்ல தூசியா? கண்கெடுக்கும் தூசியா? என்பதை நிகழ்காலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

வழிநூல்களையெல்லாம் வாசித்த பின்னரே முதல் நூலான ஆரிய மாயைத் தேடி வாசித்தேன். சி.என். அண்ணா என்ற பெயரோடு முதலில் அச்சிடப்பெற்ற ஆரியமாயை வாசிப்பதற்கு முன்பே அவரது நாடகமான நீதிதேவன் மயக்கத்தை வாசித்திருந்ததால், அந்நாடகம் எழுதுவதற்காகத் தரவுகளாகத் திரட்டப்பட்டவைக் கொண்டே ஆரியமாயை நூல் எழுதப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது. ஆரிய மாயை சென்னை மாகாண அரசால் தடைசெய்யப்பட்ட நூல் என்றும் தண்டமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சிறைக்கு அனுப்பவில்லை அரசாங்கம் என்றும் அவரே எழுதியுள்ளார். அப்படிச் சிறையில் அடைக்கப்பட்டால் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனையாகும் என்பது அரசுக்குத் தெரியும் என்பதால் தன்னைச் சிறைக்கு அனுப்பவில்லை என்கிறார். தொடர்ந்து அவரது குறிப்பு இப்படி உள்ளது:

ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயன சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரிய மாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.அண்ணாத்துரை உள்ளதைத்தான் எழுதினான் என்ற அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது.


ஒன்றைத் தொட்டு இன்னொன்றாய் எழுதுவதும் வாசிப்பதும் ஒருவிதப் பயணம். அது சுற்றுலாவியலுக்குள் அடங்காத கருத்தியல் பயணம்..


நிலவெளிப்பயணம்

சென்னை-78,கே.கே.நகர், முனிசாமி சாலை, மஹாவீர் காம்பளக்ஸ், எண்.6, டிஸ்கவரி புக் பேலஸ் முகவரியிலிருந்து அதன் புதிய வெளியீடான நிலவெளி -மாத இதழ், ஆளஞ்சல் மூலம் வந்து சேர்ந்த நேரம் நேற்று(16-05-2019) மாலை 6 மணி. 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட நினைக்கவில்லை. என்றாலும் முதல் இதழ் என்பதால் 68 பக்கங்களையும் வாசித்து விடுவது என்று கங்கணம் கட்டி வாசிக்கத் தொடங்கினேன். மொத்தமாக நான்கு அமர்வுகள்.

முதல் வாசிப்பில் 9 பக்கங்களில் விரிக்கப்பட்டிருந்த ஐந்து கவிகளின் 18 கவிதைகளையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தபின் சச்சின், வே.நி.சூர்யா, இளங்கோ கிருஷ்ணன் ஆகியோரின் கவிதைகள் ஒதுங்கிக்கொள்ள, பெருந்தேவியின் கவிதைகளும் வியாகுலனின் கவிதைகளும் திரும்ப ஒருமுறை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டன. மூன்றாவது தடவை வாசித்துச் சிரித்துக்கொள்ளத் தூண்டிய நிலையில் வியாகுலன் சொல்முறையாலும் தேர்வுசெய்த மனிதர்களின் வழியாகவும் நினைவில் இருக்கிறார்.

இரண்டாவது அமர்வில் வாசித்தவை நேர்காணலும் மூன்று -அதீதன். .சா.தேவதாஸ், தொ.பத்தினாதன்- கட்டுரைகளும் .தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கத்தின் நேர்காணல் அவரது துறைசார்ந்த பணியின் பொறுப்புகளைச் சரியாகச் செய்தவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் தமிழக வரலாறு பற்றிய அவரது புரிதலிலும் அவர் சொல்லும் கால அடுக்குகளிலும் பல கேள்விகள் எனக்கு உண்டு. இதுவரை நடந்துள்ள ஆய்வுகள், வரலாற்றுக்கு இலக்கியத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ள விதம், வரலாற்றெழுதியலில் இருக்கும் பல்வேறு போக்குகள் பற்றி அவரது கூற்றுகள் விவாதத்திற்குரியன. கேள்விகளும் ஒருமுகப்படுத்திய நோக்கம் இன்றித் தாவித் தாவிச் சென்றுள்ளன.

வழக்கமான நூல் மதிப்புரையிலிருந்து அதீதனின் மதிப்புரை மாறுபடவில்லை. லைலா எக்ஸின் பிரதியின் நிர்வாணம் என்னும் சிறுகதைத் தொகுதியைப் பற்றிய அறிமுகம். இன்னொரு அறிமுகக் கட்டுரையாகத் துருக்கி எழுத்தாளர் எலீப் ஷஃபக்கின் எழுத்துகள் குறித்து மொழி பெயர்ப்பாளார் சா.தேவதாஸ். பிறமொழி எழுத்தாளர் ஒருவரை வாசிக்கத்தூண்டும் அறிமுகம். முன்றாவதாக தொ. பத்திநாதனின் கட்டுரை. தடம் விகடனில் எழுதிய கட்டுரையின் நீட்சியாகக் கூடுதல் விவரங்களைச் சேர்த்து ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் .அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும் வாய்ப்புகள் கூடிவரும் என்ற அவரது நம்பிக்கை நிறைவேற நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்குப் பின் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இம்மூன்றோடு ஓர் இடைவெளி.

மூன்றாவது அமர்வில் 2 கட்டுரைகள் சரவணன் சந்திரனும் குமாரசெல்வாவும். தனது வெவ்வேறு ஈடுபாடுகளில் முழுமையாக ஐக்கியமாகி விடுபவராகக் காட்டும் சரவணன் சந்திரன், எழுத்தாளராகத் தன்னை முன்வைப்பதிலும் அதே தீவிரத்தைக் காட்டிவருகிறார். இதுவரையிலான அவரது எழுத்துகளை வாசித்ததிலிருந்து புனைவெழுத்து, புனைவு நீக்கிய எழுத்து என்ற வகைமை வேறுபாட்டைத் தெரிந்தே அழிக்கிறாரா? தெரியாமல் செய்கிறாரா? எனச் சொல்ல முடியவில்லை. வாசிப்புச் சுவையைக் கூட்டும் நோக்கம் வெளிப்படும் அவரது எழுத்துகளில் எப்போதும் மனிதர்களின் இருப்பின் மீது அக்கறையான விமரிசனம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வெளிப்பாட்டிற்கெனக் குறிப்பான மனிதர்களை - அதற்கான அனுபவங்களைக் கொண்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர் என்பதை அவரது எழுத்துகள் சொல்கின்றன. அம்மனிதர்களின் அருகிருந்து பார்த்துச் சொல்கிறேன் என்ற கவனப்படுத்தும் எழுத்தாக இருக்கிறது அவரது எழுத்துமுறைமை. நிலவெளியில் தொடங்கியுள்ள பத்திக் கட்டுரையான ” பொங்கிமுத்துவின் எக்ஸ்.எல். சூப்பர்!” என்பதிலும் அக்கவன ஈர்ப்பு இருக்கிறது. பத்தி எழுத்து என்னும் புனைவு நீக்கிய எழுத்தில், புனைவின் தொனியைக் கொண்டுவந்திருக்கிறார். கிராமத்து மனிதர்களின் அந்நியமாதல் நிலையைச் சொல்லும் அரசியல் பொருளாதார விமரிசனத்தை- அழுகை மெய்ப்பாட்டை எள்ளலோடு சொல்கிறது.

திறனாய்வாளர் ந.முருகேசபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வரும் நிலவெளியின் கண்டுபிடிப்பாகச் சொல்ல வேண்டிய ஒன்று குமாரசெல்வாவின் கட்டுரை. தங்கள் எழுத்தை எந்தப் பின்னணியில் எத்தகைய புரிதலோடு வாசிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் - வாசிப்பவர்களுக்கு உதவும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள- கட்டுரையை ஒவ்வொரு இதழிலும் இடம்பெறச் செய்தால், நிலவெளி இதழின் புதுப்பங்களிப்பாக இருக்கும். குமாரசெல்வா எழுத்திற்குப் பின்னால் வட்டாரமொழியின் அர்த்த அடுக்குகள் இருப்பதுபோல ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வெவ்வேறு பனுவலாக்கப் புதிர்கள் இருக்கக் கூடும். அதைக் கொண்டுவரும் நோக்கத்தோடு ஒரு கட்டுரையை எழுதச்செய்யலாம்.

கடைசியாக வாசித்தது என்.ஸ்ரீராமின் ’துருத்தி நடனம்’ என்னும் நெடுங்கதை. அரிச்சந்திர மயான காண்ட நிகழ்வுகளை - பொம்மைக் கூத்தாட்டத்தின் பாடல் பிரதிகளை இணைப்பிரதியாக்கிக் கொண்டு தர்க்கமற்ற சமகாலக் கிராமத்துப் பாத்திரமொன்றின் அவலத்தை முன்வைக்கிறது. மாடு என்னும் செல்வத்தைக் கையாள்வதில் வல்லவனான விசுவின் நாயகத்தனம், அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு விட்டுத்தரும் தற்செயல் முடிவுகளால் அடையும் அவலம் அது. சொத்து, பாசம், மனைவி, காமம் என எல்லாவற்றையும் இன்னொன்றால் பதிலீடு செய்துவிடும் அவனது முடிவுகளுக்குத் தர்க்கரீதியான காரணங்கள் எதுவுமில்லை. துருத்திக் கன்றைக் கொண்டு பால் கறந்துவிடும் சாகசம் அல்ல மனித வாழ்க்கை. ரத்தமும் சதையுமான மனிதர்களோடு போட்டியிடும் தருணங்கள் கொண்டது என்பதை இயல்புவாத மொழிநடையில் எழுதியுள்ளார் என்.ஸ்ரீராம். இந்தக் கதை விவரிக்கும் பரப்பும் கதை மாந்தர்களும் தமிழ் வட்டார எழுத்தில் மட்டும் கிடைக்கக் கூடியன.
****************** 
வீட்டுமுகவரிக்கு வந்து கொண்டிருக்கும் அம்ருதா, உயிர்மை, காக்கைச் சிறகினிலே, புத்தகம் பேசுது, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், காலச்சுவடு என ஒவ்வொன்றையும் வந்தவுடன் முதல் பார்வையாக ஒரு புரட்டுப் புரட்டிவிட்டுப் பின்னர் தேர்வு செய்து படிப்பதுண்டு. பல நேரங்களில் அவற்றின் எல்லாப் பக்கங்களையும் வாசித்து முடிப்பதில்லை. அப்படி நினைத்தால் வேறு எதனையும் வாசிக்கவே முடியாது. முதல் இதழ் என்பதால் நிலவெளியின் பக்கங்களை 
24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட வேண்டுமென்ற கங்கணம் கட்டி முடித்து விட்டேன். அண்மைக்காலத்தில் இது ஒரு சாதனை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளலாம்.

விளையாட்டை எழுதும் மொழி விளையாட்டு

விளையாட்டுச் செய்திகளை எழுதும் கட்டுரையாளர்கள், தங்கள் எழுத்தைச் சுவாரசியமாக மாற்றப் பலவிதமான உத்திகளைக் கையாள்வார்கள்.தமிழில் கிரிக்கெட் பற்றிக் கட்டுரை எழுதும் விமரிசகர்கள் முன் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி வாசகர்களுக்குக் கூடுதல் விவரங்களைத் தருகிறார்கள். அத்தோடு குறிப்பிட்ட வீரர்கள் முன்புசெய்த தவறுகள் அல்லது சிறப்பான செயல்பாடுகளை விரிவாக விளக்கி எழுதும்போது வாசகர்கள் கதை கேட்பவர்களாக ஆகிவிடுவர். அத்தகைய செயல்பாடுகளைச் சொல்லும்போது வீரரின் உளவியலையும் அணிக்காக அவர் விட்டுக்கொடுத்த தருணங்களையும் சுட்டிக்காட்டிச் சொன்னால் இன்னும் கூடுதலான ஈர்ப்பு வாசிப்பவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.

விமரிசனக்கட்டுரைக்குப் பதிலாகச் செய்திக் கட்டுரையாக எழுதுவதில் கூடத் திறமை காட்டலாம். நேற்றுச் சென்னையில் நடந்த சென்னை சூப்பர்கிங்ஸ்X டெல்லி கேபிடல் அணிகளுக்கிடையே நடந்த ஐபிஎல் ஆட்டத்தைச் செய்திக்கட்டுரையாக எழுதியிருக்கும் நித்திஷ் (விகடன்.காம்) தான் பயன்படுத்திய மொழியைக் கொண்டு சிறப்பான வாசிப்பை உண்டாக்கியிருக்கிறார். அவர் எழுத எடுத்துக் கொண்ட விளையாட்டு நிகழ்வை -ஐபிஎல் ஆட்டத்தை - ஒரு ரசிகமனோபாவத்துடன் எழுதியதின் மூலம் இதனைச் செய்திருக்கிறார். தமிழில் எழுதப்போகிறேன்; தமிழ் வாசகர்கள் சென்னை அணியை - தோனியின் தலைமையில் இயங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியைத் தான் பெரும்பான்மையோர் விரும்புவார்கள் என்பதை உறுதிசெய்து கொண்டு அவரும் அப்பெரும்பான்மையோடு இணைந்துகொண்டு செய்திக்கட்டுரையைச் சுவாரசியமாக்குகிறார். அணியின் வேகத்தை - அணியில் செய்யப்பட்ட மாற்றத்தை - அவர்களின் பலம்- பலவீனம் ஆகியவற்றை - அணி வீரர்கள் காட்டிய திடீர் ஆவேசத்தை - எதிர்பாராத நிலையில் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதைச் சுட்டிக்காட்டி எழுதுவதன் மூலம் ஆட்டத்தைச் சிறப்பாக முன்வைத்துள்ளார். அப்படி முன்வைக்கும்போது ஒவ்வொன்றுக்கும் அவர் காட்டும் உவமைகள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் தெரிந்த சினிமாக்காட்சிகளாக இருக்கின்றன. சினிமாக் காட்சிகளில் உண்டாகும் உணர்வுகள் கிரிக்கெட் நிகழ்வின் உணர்வாக மாறும்போது வாசிப்பவர்கள் சின்னச் சின்னப் புன்னகைகளோடு வாசித்து முடிப்பார்கள். அதன் மூலம் அவரது மொழிப்பயன்பாட்டிற்கு ஒரு சமகாலத்தன்மை உருவாகிறது.
வாசிப்பவர்களைப் புன்னகைக்க வைக்கும் உவமைத்தொடர்களும் உருவகத்தொடர்களும் வருமாறு:

”சேப்பாக்கத்தில் சுண்டப்படும் டாஸ் காயின்கூட தோனி சொல்படிதான் நடக்கும். நேற்று ஏனோ ஸ்ரேயாஸுக்கு அடித்தது யோகம்.”

”மூன்றாவது ஓவரின் முடிவில்தான் அவர்கள் அவ்வளவு நேரமாகத் தேடியது பந்தைத்தான்” 
”சூர்யவம்சம் சின்ராசு குழந்தை குட்டிகளைப் பாடித் தூங்க வைப்பதைப்போல”

”பன்ட்டை அவுட்டாக்கிய தாஹிர் பாரீஸ் கார்னர் வரை பறக்க, ஓலா புக் பண்ணி திரும்ப அழைத்துவந்தார்கள்”

”இவர்களை பேக் செய்த தாஹிர் ஓ.எம்.ஆர் ரோடுவரை ஓடி ரியல் எஸ்டேட் நிலவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு வந்தார்”.

ஜடேஜாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ ஆனார் இங்க்ரம். ஸ்கோர் 67/4. சந்திரமுகியில் கோவாலு ஒற்றையாளாக உட்கார்ந்து வெள்ளை அடிப்பதுபோல களத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் மட்டும்விடாமல் போராடிக்கொண்டிருந்தார்

நான்கு விக்கெட்கள் எடுத்த குஷியில் தாஹிர் ஓடியே பஞ்சாப் பார்டர் போய்விட்டதாகவும் அடுத்த ஆட்டத்துக்காக மற்றவர்கள் நாளை கிளம்ப இருப்பதாகவும் தகவல்.

'பழக்கவழக்கமெல்லாம் பீச்சோட நிறுத்திக்கிடணும் மேட்ச்ல எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது' என முன்னாள் சி.எஸ்.கே ப்ளேயரான மோரிஸை முதலில் கிழித்துத் தொங்கவிட்டார்.


இதைக் கேட்டு 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாட்டு மனதுக்குள் ஓடினால் நீங்களும் சி.எஸ்.கே ரசிகரே!
************* 
இப்படிச் சுவாரசியப்படுத்திய நித்திஷ் போகிற போக்கில் ,
“இந்த முறையும் ஏமாற்றாமல் ரன்களை சேர்த்தார்”

இப்படியொரு சொற்றொடரை எழுதியிருக்கிறார் நித்திஷ்.இது சென்னை அணியில் ஆல்ரவுண்டராக இடம்பெறும் ரவீந்தீர் ஜடேஜாவைப் பற்றிய தொடர். இத்தொடர் ஒருவித மயக்கத் தொடர். இதனை வாசிப்பவர்கள் நேர்வாசிப்பில் , ரவீந்தர் ஜடேஜா அவர் ஆடும் ஒவ்வொரு முறையும் ரன்கள் அடித்துக் கொடுப்பார்; அதேபோல் இன்றும் ரன்கள் அடித்துக்கொடுத்தார் என்பதாகப் பொருள் தரக்கூடியது. ஆனால் நித்திஷின் கட்டுரையிலேயே அது உண்மையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் அவர் எழுதியுள்ள நீண்ட சொற்றொடரையும் அதற்குள் அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்றொடரையும் வாசித்துப்பாருங்கள்:
”2019-ன் இரண்டாவது அதிசயமாக (முதல் அதிசயம் ரவீந்திர ஜடேஜா ரன் அடிக்க ஆரம்பித்தது) இந்த இரு அணிகளும் மற்ற அணிகளை முந்தி நாக் அவுட் ஸ்டேஜுக்குள் நுழைந்தன”
அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்றொடரின்படி, ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து ரன் அடிக்காமல் இருந்தார் என்பதுதான் அவர் சொல்லும் குறிப்பு. இந்தக் குறிப்புக்கு மாற்றாக ஒரு தொடரை அவரே மயக்கத்துடன் எழுதியிருக்கிறார். அந்த மயக்கம் அவரது மொழிப்பயன்பாட்டு வேகத்தில் கவனப்படாமல் போக வாய்ப்புண்டு என்றாலும் மயக்கத் தொடர்களைத் தவிர்ப்பது செய்திக்கட்டுரையாளர்கள் பின்பற்றவேண்டிய ஒன்று.
நித்திஷ் இந்தக் கட்டுரையில் காட்டியுள்ள மொழிப் பயன்பாட்டின் சமகாலத்தன்மையையும் உவமைகள், உருவகப்பயன்பாடுகளையும் இந்து தமிழ்திசையில் செய்திக்கட்டுரைகள் எழுதும் கே.கே.மகேஷின் மொழிப்பயன்பாட்டிலும் வாசித்திருக்கிறேன். இருவருக்கும்வாழ்த்துகள். நித்திஷின் கட்டுரையை வாசிக்கத் தூண்டியது கே.என். சிவராமனின் முகநூல் குறிப்புதான். அவருக்கும் நன்றி..
நன்றி கல்யாண்ஜிக்கு பாராட்டுகள் ஜோதிக்கு

துறை முகவரிக்கு வந்த அந்தக் கட்டுக்கடிதத்தைப் பிரித்தபோது உள்ளே இருந்தது சக்திஜோதியின் சங்கப்பெண்கவிதைகள். உடனடியாக நன்றி சொல்ல நினைத்தேன்; சொல்லவில்லை. வாசித்துமுடித்துவிட்டுச் சொல்லலாம் என்று தள்ளிவைத்துவிட்டேன்.

செவ்வியல் தமிழ்க் கவிதைகளைப் பலரும் பலவிதமாக வாசித்துள்ளனர். வெவ்வேறு இயக்கங்கள் முனைப்பாக இருக்கும்போது அவ்வியக்கச் சார்பாளர்கள், செவ்வியல் கவிதைகளை வாசித்துக்காட்டியுள்ளனர். தமிழ்ப் பண்பாட்டுப் பெருமிதத்தோடு திராவிட இயக்க அரசியல்வாதிகளும் தமிழாசிரியர்களும் எழுதியனவற்றை வாசித்துள்ளேன். மார்க்சிய விமரிசனம் முன்னெடுக்கப்பெற்றபோது வர்க்கமுரணை முன்னிலைப்படுத்தி எழுதியனவற்றையும் வாசித்துள்ளேன். இவ்விரு அரசியல் முதன்மைப் பார்வைகளும் அகக்கவிதைகளைவிடவும் புறக் கவிதைகளையே முக்கியமானவைகளாகக் கருதின.ஆனால் சக்திஜோதியின் பார்வையும் எழுதுமுறைமையும் வேறுபட்டது. மொத்தத் தொகைக்குள்ளும் பெண்கள் எழுதிய கவிதைகளைத் தனியாகப் பிரித்துக்கொண்டு அந்தத் தன்னிலைகள், கவிதைக்குள் எழுப்பும் சித்திரமும் உணர்வு வெளிப்பாடுகளும் பெண் தன்னிலைகளின் வெளிப்பாடு என்பதைக் காட்ட முயன்றுள்ளது.

சக்திஜோதியின் எழுத்து தொடராக வந்தபோது எல்லாக் கட்டுரைகளையும் வாசிக்கவில்லை. சிலவற்றை வாசித்தபோது அசையும் சித்திரங்களை உருவாக்கிய அந்த ரசனைக்காகவும் சொல்முறைமைக்காகவும் நூலாக்கம் ஆனவுடன் மொத்தமாக வாசிக்க வேண்டுமென நினைத்திருந்தேன். நேரில் பார்த்தபோது சொல்லவும் செய்திருந்தேன். நூலாக்கம் நடந்தபோது அந்தத் தகவலைச் சொன்னார். வந்தவுடன் அனுப்பிவைப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படிதான் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். வாசித்தபின் சக்திஜோதியிடம் பேசியபோது, “ சந்தியா பதிப்பகத்திலிருந்து உங்களுக்கு வந்த நூலை நான் அனுப்பவில்லை. அனுப்பச் சொன்னவர் வண்ணதாசன் என்றார். எனது நூலை அவரது கணக்கிலிருந்து 5 பேருக்கு அனுப்பச் சொன்னார். அதில் உங்கள் பெயரும் இருந்தது என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக எழுத்தாளர்கள் அவர்கள் நூல்களையே வாசிக்கத்தருவார்கள். ஆனால் வண்ணதாசன் மற்றவரது நூலை வாசிக்கச் செய்யும் நோக்கத்தோடு அனுப்புகிறார். அவர் தான் வண்ணதாசன். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னால் நெல்லைப் புத்தகத்திருவிழாவில் வண்ணதாசனைப் பார்த்தபோது நேரில் நன்றி சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் நன்றி கவி கல்யாண்ஜிக்கு. பாராட்டுகள் கவி சக்திஜோதிக்கு..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்