ஞாநியென்னும் அக்கினிக்குஞ்சு

புதியதொரு இடத்தில் – நெருக்கடியான இடத்தில் படுத்திருப்பதுபோலக் கனவு. திரும்பிப்படுக்கும்போது, இடது கைபட்டு ஜன்னலில் இருந்த சின்னஞ்சிறு முகம் பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து கலீரென்று உடைகிற சத்தம். தட்டியெழுப்பியபோல விழிப்பு. கழிப்பறைக்குப் போய்வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. அரைமணி நேரமாகியும் கண்சொருகவில்லை. கணினியின் திரையைத் திறந்து முகநூலுக்குள் நுழைந்தபோது கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் ஞாநியின் மரணச்செய்தியை அறிவுப்புச் செய்திருந்தார். சரியாக 38 நிமிடங்கள் ஆகியிருந்தன. இவ்வளவு துல்லியமாகச் சொல்லக்காரணம் உள்ளுணர்வின் முன்னறிவிப்புதான். உள்ளுணர்வு பற்றி இப்போது கேட்டாலும் தர்க்க அறிவு நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால் அந்த உள்ளுணர்வு தனது முன்னறிவிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறது. வழக்கமாக 5 மணிநேர இடைவெளியில் தான் விழிப்பு வரும். இரவு 11 மணிக்குப் படுத்தால் காலையில் 4 மணி. 12 என்றால் காலை 5. எப்போது படுத்தாலும் ஐந்தரை மணிக்கு எழுந்துவிட வேண்டுமென பழக்கமாக்கப்பட்ட உடல். அன்று தடம்புரண்டு மூன்றரை மணிநேரத்தில் விழித்துக்கொண்டது. படுத்திருந்த அறை புதிய இடம்தான். ஆனால் குறுகலா...