மேல்பார்வை X கீழ்பார்வை = குடலாப்ரேஷன்
ஆபரேஷன்
சக்சஸ் என்று சொன்னபடி வந்த ஜூனியர் டாக்டர்களின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார்
டாக்டர் அ.ரா. . சட்டென இந்த ஆபரேஷன் மெத்தடாலஜியை மாணவர்கள் புரிந்து கொண்டதில் உள்ளபடியே
அவருக்கு மகிழ்ச்சி. அவர் மேஜை மீதிருந்த ஒரு படத்தில் கோமாளி சிரித்துக் கொண்டிருந்தான்.
அதில் இருந்த வாசகம்-
‘ஆபரேசன்
செய்ய வேண்டிய கேஸ் ‘ என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்; அதற்கான அடையாளங்கள் என்னென்ன
உடம்பில் இருந்தன. சொல்லுங்கள் என்றபடி சிகரெட் பற்றவைத்தார். ‘அதற்கு முன்னால் ஒரு
சின்ன சந்தேகம்’ என்றபடி ஒரு மாணவர் அவர் தள்ளிய சிகரெட் பாக்கெட்டிலிருந்து தானும்
ஒன்றை எடுத்துக் கொண்டு தீப்பெட்டிக்காக கையை நீட்டினார். ‘ பிரதியைக் கட்டவிழ்த்தல்,
மறுவாசிப்புக் குட்படுத்தல்’ என்றெல்லாம் இந்த
ஆபரேசனுக்குப் பெயர் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் கவிதைக் கைடுகள் தயாரிக்கும் ஒரு
நபர் , குடலாப்ரேஷன் என்று பெயர் சொல்லி இருக்கிறார். அந்தப் பெயர் எவ்வளவு தூரம் பொருந்தும்
என்று கேட்டார். வாய்விட்டுச் சிரித்துவிட்டு, குடலாப்ரேஷன் - கட்டவிழ்த்தல் நல்லாத்தான்
இருக்கு என்றார். தொடர்ந்து எந்த ஒரு வார்த்தைக்கும் நேரடியான அர்த்தமும், பயன்பாட்டு
நிலையில் ஒரு அர்த்தமும் இருக்கும் நேரடியான அர்த்தத்தை அகராதி அர்த்தம்
(Dictionary Meaning) என்று சொல்லப்படும் . இது சூழலுக்கேற்ப மாறாது. பயன்பாட்டு அர்த்தம்
(Functional Meaning) சூழலுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். பேராசிரியர் ரவிக்குமார்
சுஜாதாவின் ‘மஞ்சள் ரத்தம்’ - ஐ டீகண்ஸ்றக்ட் பண்ணிய போது , அகராதி அர்த்தத்தில் பிரதியைக்
கட்டவிழ்த்தல் அல்லது பிரதியின் மீதான மறுவாசிப்பு என்று சொன்னோம். வாசிப்புக்குள்ளான
- பயன்பாட்டுப் பிரதி சுஜாதாவினுடையது என்பதால் பயன்பாட்டு அர்த்தத்தில் , ‘குடலாப்ரேஷன்’
என்று சொல்லியிருக்கலாம். இதில் ஒன்றும் தப்பில்லை. இன்னொருத்தருக்கு, ‘மயிர் பிளக்கும்’
காரியமாகப் படலாம்.
சரி மேலே போகலாமா..? உங்கள் குறிப்புக்களை வாசியுங்கள் என்றார்
டாக்டர் அ.ரா. மாணவர் ஒருவர் தொடர்ந்தார்.
வாசிக்கப்பட்ட
பிரதி - மேல்பார்வை
பிரதியின்
முதல்வாசகர் - சுந்தரராமசாமி
அடுத்து
வாசித்தவர் - வாஸந்தி ( இந்தியா
டுடே இலக்கிய ஆண்டு
மலரின்
ஆசிரியருக்காக)
நோயின்
அடையாளங்கள் - உடம்பில் இருந்த வண்ணங்கள்
[வண்¢ணங்கள்
அடையாளப்படுத்தும் குணங்களைப் பேராசிரியர் ரவிக்குமார் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
எனவே நேரடியாகச் சொல்லி விடலாம்]
நீலச்சட்டையினர் - தலித் இலக்கியவாதிகள்
சிவப்புச்
சட்டையினர் - முற்போக்கு இடதுசாரி
இலக்கியவாதிகள்
மஞ்சள்
சட்டைப் பொற்கொடி - கலை இலக்கியங்களின் வெற்றி
, தோல்விகளைத் தீர்மானிக்கும்
(பிராமணீய) ஜாம்பவான்கள்/
பத்திரிகைகள்.இந்த வண்ணங்கள் கலந்து மோதிப் பரவி விலகும் வெளி மைதானம் - தமிழ் நவீனப்
இலக்கியப் பரப்பு.
குறிப்புகளை
வாசித்து நிறுத்திய அந்த ஜுனியர் டாக்டர் இந்தக் குறியீடுகளோடு ஒத்துப் போகும் மற்ற
தகவல், புறத்தில் நிகழும் சொல்லாடல்களோடு குறிப்பான்களாகப் பொருந்தி நிற்கின்றன என்றார்.
‘நீலச்சட்டையினர்
சோர்வாக ஆடினர்; காலைமிதித்து வீழ்த்தினர். காலை மிதித்து வீழ்த்தினர்; பொற்செல்வியின்
கட்டளைக்கு அடிபணிய மறுத்தனர்’ -
மேல்பார்வையின்
உடலில் உள்ள அடையாளங்கள் பின்வரும் சொல்லாடல்களோடு பொருந்துமா என்று பாருங்கள்:
தலித்தியத்திற்கு
இவ்வளவு விரிந்த உலகப்பார்வை இல்லை. விரிந்த பார்வை கொள்ளாமல் வரலாற்றில் இயக்கம் இல்லை.
- ஞானி/ சுபமங்களா/ ஆகஸ்டு,93
இலக்கியம்
என்று பார்த்தால் ஒன்றும் தேறாது. உரத்த தொனி , சொல்லாட்சியில் சமத்காரம், இதுவே இலக்கியமாகி
விடுமா? நான் குறிப்பிட்டது தலித் இலக்கியம் என்று லேபிள் ஒட்டி வலிந்து எழுதப்படும்
படைப்புகளே - கணையாழியில் முஸ்தபா/ மார்ச்,ஏப்ரல் ‘94
மரபோ,
மறுப்போ, பிரசாரம் பிரசாரம் தான். கலை கலைதான். அழகியல் பயில வேண்டியதும் பயிற்றுவிக்க
வேண்டியதும் ஆகும். - பழமலய் / அர்ஜுன் டாங்ளேயின் தலித் இலக்கியம் என்ற நூலின் மதிப்புரையில்/
சுபமங்களா
வலு
உள்ளவன், நோஞ்சான்களை அடித்து வீழ்த்தக் கூட சலுகை தடி தேவை என்பது இந்திய சமூக அமைப்பின்
ஜனநாயக ஆட்சி முறையின் பரிதாபமான தோற்றம். - ஜனகன், கணையாழியில் சர்ச்சைக்குரிய சலுகை
குறுநாவலை எழுதியவர்.
இவர்
(டானியேல்) அளவுக்கு சாதிக்கொடுமைக்கு எதிராகப் போராடித் துன்பப்பட்ட உயர்சாதி முற்போக்காளர்
அரசியலிலும் இலக்கியத்திலும் நிறையப்பேர் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர். - சே.
யோகநாதன் , தலித் இலக்கியம், தலித்துகளால் மட்டுமே எழுதப்பட வேண்டுமென்ற கருத்து பற்றி..
சுபமங்களாவின் கேள்விக்கு.
இன்னும்
இது போன்ற சொல்லாடல்கள் தலித் இலக்கியம் குறித்து நிலவுகின்றன. இவையெல்லாம் ‘பாதியிலேயே
’ ஆட்டத்தை முடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறும் நீலச்சட்டையினரோடு பொருந்திப்
போவதென்னவோ உண்மைதான். அதுமட்டுமல்ல; சிவப்பு சட்டையினர் குறித்த தகவல்கள் இப்போதைய
முற்போக்கு எழுத்தாளர்களுடன் ஒத்தும் போகின்றன என்று சொல்லிவிட்டுத் தனது குறிப்புகளை
டாக்டர் அ.ரா.விடம் நீட்டினார் இன்னொரு மாணவர்.
· சிவப்புச் சட்டையினர் கை ஓங்கி இருந்தது. திறமையான
ஆட்டக்காரர்கள்.
· கூட்டத்தின் ஆதரவு அவர்கள் பக்கம்
· கண்ணுக்குப் புலனாகாத இயற்கை அந்த (பந்தை கூடைக்குள்
தள்ளும்) பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது போல இருக்கிறது.
· பொற்கொடியிடம் முறையிட்டனர். கால இடறியவனைச் சுட்டிக்காட்டினர்.
தலித்
எழுத்தாளர்களைவிட முற்போக்கு எழுத்தாளர்கள் திறமையானவர்கள்.
இடதுசாரிகளின்
எழுத்து முறையான எதார்த்த எழுத்திற்கு வாசகர் ஆதரவு உண்டு
தலித்துக்கள்
இந்துக்கள் அல்ல என்று கூவுகின்றனர். இடதுசாரிகள் கடவுளை ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டன
ஜாம்பவான்களை
இடதுசாரிகள் மதிக்கத் தொடங்கியுள்ளனர். விதிகளின்படி சட்டத்திற் குட்பட்டு நடக்கின்றனர்.
இலக்கியத்திற்கு ஆபத்து என்றால் முதல் குரல் எழுப்புகின்றனர்.
மாணவர்
வாசித்து முடித்த போது டாக்டர் அ.ரா., ‘ சிவப்புச் சட்டையினர் எல்லாவித அடையாளங் களோடும்
பொருந்துவார்கள்; ஒரே மாதிரியான சிவப்புச் சட்டையினரா இருக்கிறார்கள் ‘ என்று சொல்லிவிட்டு
அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்தார். சரி மஞ்சள் சட்டை அணிந்ததினாலேயே பிராமண இலக்கிய
ஜாம்பவான்களாக பொற்கொடி ஆகிவிடுவாளா.. ? என்று கேட்டார்.
பொற்கொடி
என்ற தனிநபர் கலை இலக்கிய பிருமாக்களின் குறியீடாக ஆக முடியுமா ? என்ற குழப்பம் முதலில்
இருந்தது என்னவோ உண்மைதான்.. ஆனால் நான் தரும் சமன்பாடுகளைக் கொஞ்சம் பாருங்கள் என்று
சொல்லிவிட்டு மூன்றாவது மாணவர் தனது குறிப்புக்களைக் கொடுத்தார்.
1.பொற்கொடி
போட்டிகளைப் பாரபட்சமின்றி நடத்துபவள் என்ற புகழ்.பயமற்றவள் என்றபுகழ். விளையாட்டுக்குரிய
சட்டதிட்டங்களில் நிபுணி.
இலக்கியத்தை
இலக்கியமாக மட்டும் பார்ப்பவர்கள். இலக்கியத்தின் நுணுக்கங்கள் கைவரப் பெற்றவர்கள்.
தரமான இலக்கியத்தைப் படைப்பவர்கள் .
[சிறந்த
சிறுகதைக்கு சோ. தர்மனுக்¢குப் பரிசு; அவர் கதை கதாவுக்கு தேர்வு;- சோ.தர்மன் தலித்
தேர்வு செய்தவர் - வெங்கட் சாமிநாதன், இதே கதை இலக்கியச் சிந்தனையிலும் பரிசு பெற்றது. ஒவ்வொரு வருடமும் தலித் படைப்பிலக்கியப் பரிசுக்கு
ஏற்பாடு. குரல்-கடலூர். அதன் பொறுப்பாளர் இரா.நடராசன்.
10
குறுநாவல் தேர்வில் 3 தலித்தியப் பிரச்சினைகளைப் பேசும் குறுநாவல்களுக்கு இடம் -கணையாழியில்,
கணையாழியில் மட்டும் அல்ல; சுபமங்களா, இந்தியா டுடே போன்றவற்றிலும் தலித் இலக்கியத்திற்கும்
முற்போக்கு இலக்கியத்திற்கும் உரிய இடம்.]
2.
தன்னுடல் மற்றொரு உடலில் படாமலும் பந்தில் படாமலும் லாவகமாகச் சுழலுவாள் பொற்கொடி.
3.
சிவப்புச் சட்டையினரின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு,அவர்கள் வென்றதாக
அறிவிக்கிறாள்.
இலக்கியப்
படைப்பில் இன்னொரு படைப்பின் சாயல் வந்துவிடாமல் தனித்துவம் துலங்க வைப்பவர்கள்; தன்னை
படைப்பில் காட்டிக் கொள்ளாதவர்கள்.
தலித்
இலக்கியவாதிகளின் வரவால் பாதிப்புக்குள்ளாகியுள்ள முற்போக்கு எழுத்துக்களின் சரிவை
பாதுகாக்கும் முயற்சியில் அபாரமான கூட்டு ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிந்தது.
சுபமங்களா கருத்தரங்குகளில் - முற்போக்கு எழுத்தாளர்கள்
சங்கம் நடத்தும் கலை இலக்கிய இரவுகளில்- இந்தியா டுடே இலக்கிய ஆண்டு மலரில் எல்லாம்
இந்தக் கூட்டின் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிகின்றன.
நிதானமாக
படித்த டாக்டர் அ.ரா,. கையிலிருந்த காகிதங்களை வைத்துவிட்டு, ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டிருந்த
மேல்பார்வையின் அருகில் வந்து அப்படியானால் நோய் என்ன என்றார்.?
‘கலை
கலைக்காகவே ’ குழுவினர் , ‘ கலை சமூக மாற்றத்திற்காகவே ‘ என்று சொல்லித் திரிந்தவர்களை
‘ வெற்றி பெற்ற இலக்கியவாதி’ களாக அங்கீகரிக்கத் தயாராகியுள்ளனர். இதன் மூலம் தலித்
இலக்கியம் என்ற பெயரில் வரும் கும்பலை இலக்கியப் பரப்பிலிருந்து வெளியேற்ற முடியும்.
அப்பொழுது தான் இலக்கிய ஜாம்பவான்களின் (பொற்கொடியின்) மேல்பார்வை தக்க வைக்கப்படும்.
இது தான் நோயின் ஆழமான நிலைமை என்றார். முதன் முதலில் நோயாளியின் குறிப்புகளை வாசித்த
அந்த மாணவர்.
உங்கள்
சமன்பாடுகள் ஏற்றுக் கொள்ளும்படியான நிலையில் இருந்த போதிலும் சில குறைபாடுகள் இருப்பதாகவே
எனக்குத் தெரிகிறது. மேல்பார்வை செய்யும் பொற்கொடி பெண். பெண்மை = பிராமணியம் அல்லது
தரம் வாய்ந்தது என்று குறியீடுகளாக அர்த்தம் தருவதில் பிரச்சினைகள் இருக்கின்றன என்று
சொல்லிய டாக்டர் அ.ரா. மைதானத்தை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை வெறும் ‘பொதுஜனம்
‘ என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. பொது ஜனங்களுக்குள்ளும் வெவ்வேறு தரத்தினராய்
இருக்கின்றனர். அவர்களில் சிலர் மைதான நிகழ்வில் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளராக
மாறுகின்றனர். வந்தவர்களில் பலர் பொற்கொடியையே வேடிக்கை பார்க்கின்றனர். அவளைச் சூழ்ந்து
கொண்டு தொட்டுப் பார்த்து மகிழ்கின்றனர்.உங்கள் குறிப்புகளில் மைதானப் பார்வை யாளர்களை
எந்தவித அடையாளங்களோடும் பொருத்தவில்லை. நீங்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே நினைத்ததாகத்
தெரியவில்லை.
ஒத்தைக்குத்
தடியன்களை மேய்க்கும் பொற்கொடியின் இடத்திற்குப் போட்டியிடும் ஒரு கிழவி சில துல்லியமான
குறியீடாக இருக்கிறாள். பொற்கொடியின் அழகிலும் அறிவிலும் பிரேமை கொண்டு அவளே தானாக
எண்ணிக்கொள்ளும் மனம் அந்தக் கூடைக்காரிகளுக்கு. அவளது துல்லியமான ஆளுமையில் அடிமையாகிவிடும்
ஒரு மனமும், அவள் சொல்ல வேண்டிய தீர்ப்பைத் தானே சொல்வதன் மூலம் தானே பொற்கொடியாகிவிடும்
இன்னொரு மனமும் அவர்களிடம் வெளிப்படுகிறது. அடிமைகளும் பாமரர்கள் தான்; ஆண்டைகளும்
பாமரர்கள் தான். ஆனால் அடிமைகளாக இருப்பது யதார்த்தம். ஆண்டைகளாக இருப்பது வெறும் மனோநிலை-
மாயைதான்.
விரித்துக்
கொண்டே போன டாக்டர் அ.ரா. வை இடைமறித்த மாணவரொருவர், ‘ ஆம், கூடைக்காரிகளைக் கண்டு
கொள்ளாமல் விட்டது சரியில்லை தான்; அதுவும் பாம்படங்கள் தோள்¤ல் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும்
’ அந்தக் கிழவி கதையில் பொற்கொடியின் இடத்தைப் பிடிப்பது என்று கங்கணம் கட்டியவளாக
இருக்கிறாள்.
விளையாட்டைக்
காணவந்த கனவான்களைத் தனது விமரிசனக் கீற்றுகள் மூலம் தன்பக்கம் திருப்பிக் கொள்ள முயல்கிறாள்.
ஒரு கட்டத்தில், ‘ திடீரென்று மைதானத்திற்குள்’ வந்து நீலச்சட்டையினருக்கு எதிரான பொற்கொடியின்
தீர்ப்பை தீவிரமாக ஆமோதிக்கிறாள் என்றார். ‘ இதனால் ஒன்றும் நோய் வேறொன்றாக ஆகிவிட்டது
என்று சொல்லி விட முடியுமா.? என்று கோபமாகக் கேட்டார் இன்னொரு மாணவர். ‘பிராமணீய’ கலை,
இலக்கிய ஜாம்பவான்களையும் இடதுசாரிகளையும் சாதாரண (பாமர ஜனங்களும் ) வாசகர்களும் ஏற்றுக்
கொள்ளத் தயாராக உள்ளனர். ஆனால் தலித் இலக்கியவாதிகள் மைதானத்தை விட்டு வெளியேறிவிட
வேண்டும் என்பதுதான் முடிவு’ என்று சொன்னார். அவரிடம் சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும்
தள்ளிவிட்டு டாக்டர் அ.ரா. சிரித்தார்.
மாணவர்களே
! இப்படிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்:
மைதானம்
- தமிழ்
நாட்டின் அரசியல் வெளி ( Political space) பொற்செல்வி -
மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா (இப்போதைய/1991-1996 ) நீல, சிவப்புச் சட்டையினர் - பல்வேறு அரசியல் கட்சிகள் (ஆளுங் கட்சியினர்,
எதிர்க்கட்சி
உட்பிரிவுகள்
உட்பட)
பார்வையாளர் - நடுத்தர/ படித்த வர்க்கம்
கூடைக்காரிகள் - பாமர ஜனங்கள்
இவையெல்லாம்
துல்லியமாகப் பொருந்திப் போகின்றன என்பதென்னவோ உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட இன்னொரு
மாணவர் வேறு சிலவற்றை வரிசைப்படுத்தலானார்.
· வீரர்களுக்கு இணையாகத் தாண்டும் வீராங்கனை· வீரர்களோடு ஒப்பிடும்பொழுது நாலைந்து வயது குறைவு;
உயரமும் மட்டு. [ முதல்வரின் அரசியல் அனுபவம் மற்றவர்களைவிடக் குறைவு; செயல்பாடுகளும்
மட்டு]
· பயமற்றவர்; நிபுணி; சிறுவயதிலேயே இவ்வளவு புகழ்.
வலது கையை உயர்த்தி கைஜாடை காட்டுவதும், விரல்களின் அசைவுகளும், ஆங்கில உச்சரிப்பும்
[ தனது அமைச்சர்களிடமும் சட்டசபையிலும் ஜெ.யின் அன்றாடச் செயல்பாடுகள்]
· அந்த அக்கா சொல்லுதத்தான் எல்லா அண்ணன்களூ [ அண்ணன்
நெடுஞ்செழியன், எஸ்.டி. சோமசுந்தரம் உள்பட ] கேட்கணுமாம். ஆமா கேட்காட்டி..? கழுத்தப்பிடிச்சுத்
தள்ளிப் போடுவா . எல்லா தடியன்களையும் [ சபாநாயகர் சேடபட்டி முத்தையா வேறு எதற்கு இருக்கிறார்] அவ்வளவு பவ்வரா அந்தக் குட்டிக்கு..?
· வென்றதாக அறிவிக்கிறேன் [ ஆட்டம் முடியாமலேயே]
வரிசைப்படுத்திவிட்டு , ஜெயலலிதாவைப் பற்றிய குறியீடுகள் மூலம் ‘ மேல்பார்வை’ ஆரோக்கியமான
அரசியல் விமரிசனம் என்று சொல்லலாமா? என்று கேட்டார் அந்த மாணவர்.
அப்படிச்
சொல்ல இடம் இருந்தால், சொல்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றார் டாக்டர்
அ.ரா. ‘ யதார்த்தத்தில் அடிமைகளாக உள்ள பாமரர்களுக்கு, மனோநிலையில் அரசியாக இருந்து
கொள்ளும் வெளியை உருவாக்கித் தரும்’ பொற்கொடியின் ( ஜெயலலிதாவின் ) மேல்பார்வை ( ஆட்சி)
யின் இருப்பை நியாயப்படுத்துகிறது சுந்தரராமசாமியின் பிரதி. ஆட்டத்தை முழுவதும் முடிக்காமலேயே ‘வென்றதாக அறிவிப்பதும்’ ‘ வெளியேற்றுவதும்’ நடுத்தரவர்க்க
படித்த ஜனங்களுக்கு வேண்டுமானால் சரியல்ல என்று படலாம். ஆனால் கூடைக்காரிகள் (பாமர
ஜனங்கள்) அவளின் தீர்ப்புகளை ‘ அப்படிச் சொல்லு என் தங்கம்; என் ராணி ’ என்று கரகோஷம்
செய்து பாராட்டுகின்றனர் என்று நியாயப்படுத்துகிறார் என்றார் டாக்டர் அ.ரா.
அப்படியானால்
குடலாப்ரேஷன் இன்னும் முழுமையாகப் புரியவில்லை டாக்டர் என்று மாணவர்கள் சொன்னார்கள்.
‘
திரும்பத் திரும்பச் செய்யுங்கள்; புரிய ஆரம்பித்து விடும்’ என்று சொல்லி சகலகலாவல்லவனான
சுஜாதாவின் ‘பெட்டி’ யை ஸ்டெச்சரில் கிடத்தினார் டாக்டர்.
புரியலேன்னு சொன்னதுக்காக இவ்வளவு
சுலபமான அஸைன்மெண்டா கொடுக்கணும்
டாக்டர்.என்.
ஆர். ஐ களாக இருந்து கொண்டு பூமியின் சகல பரப்பிலும் கோயில் குருக்களாக வேஷமிடும் பிராமணர்களாக - உலகந் தெரியாத அப்பாவிகளாக சித்திரிக்கும்
கதை. சமீபத்தில் சென்னையில் ஆர்.எஸ். எஸ். ஆபிஸில் வெடித்த குண்டிற்கு முஸ்ல¦ம்கள்
தான் காரணம் எனச் சொல்லும் சிறுகதை’ என்றார் ஒரு மாணவர்.
‘
நண்பர்களே ! அது சிறுகதை அல்ல; நாடகம்’ ஆமாம் டாக்டர். காதில சுபமங்களாங்கிற வெண்டைக்காயை
வச்சிருக்கிற கோமல் சுவாமிநாதனின் கூற்றுப்படி அது நாடகம்.
வாசித்துக்
கொள்ள வேண்டியவை
1. மஞ்சள் ரத்தம் - சுஜாதா, இந்தியா டுடே இலக்கிய ஆண்டு
மலர் -93-94
2. ரவிக்குமார் - நோரா கிரகத்து ஆண்களும் பூவுலகத்து
அடிமைப்பெண்களும் - முன்றில் 13,1993
3. மேல்பார்வை- சுந்தரராமசாமி , இந்தியா டுடே இலக்கிய ஆண்டு மலர் 94-95. இதே இதழில் சுஜாதா, கோமல்
எழுதிய பிரதிகளும்
4. கடைசிப் பக்கம்- சுஜாதா, கணையாழி, மே,1994.
====================================
களம்புதிது
கருத்துகள்
வ்.கொ.விஜயராகவன்