உத்தமவில்லன் : இன்பியலில் கரையும் துன்பியல்


எழுதியது ஒரேயொரு கவிதை. மனித வாழ்வின் சலனங்கள் அனைத்தையும் உறையச் செய்துவிடும் வல்லமைகொண்ட வரிகள் கொண்ட கவிதை. அந்தக் கவிதைக்குள் அவன் வைத்த அலங்காரச் சொற்றொடர் “நீர்வழிப்படூஉம் புனை”. உத்தம வில்லன் படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து படுத்த நள்ளிரவில் கணியன் பூங்குன்றனின் இந்தச் சொற்றொடரோடு ஔவையின் ‘உயவுநோயறியாது துஞ்சும் ஊர்’ என்ற வரியும் சேர்ந்துகொண்டு தூக்கம் கலைத்துக்கொண்டே இருந்தன. மரணத்தையும் காமத்தையும் இணைத்த படத்தின் தாக்கம் என நினைத்துக் கொண்டேன். இப்படித் தூக்கம் தொலைப்பதற்காக வரும் கவிவரிகள் சில இருக்கின்றன;அவ்வப்போது செருப்பிடைப்பட்ட சிறுபரல்போல உருண்டவண்ணம் இருக்கும். ‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ எனச் சொல்லிக்கொண்டே தூங்கவிடாமல் அடித்த சேரனோடு ‘துணிக்கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்’ என்று எழுதிய ஆத்மநாம் சேர்ந்துகொள்வது ஒருசில நாட்கள் என்றால், ‘வேற்றாகி நின்ற வெளியை’த் தூரத்தில் நின்று பார்த்துவிட்டுத் திரும்பியவனைக்காட்டிய வில்வரத்தினத்தோடு ‘என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்ட இரவு மிருகம்’ என்று எழுதித் தொல்லைப்படுத்தும் சுகிர்தராணி சேர்ந்துகொள்வது வேறு நாட்களாக இருக்கும். ஆனால் ஆண்டாளும் பாரதியும் இரவில் வந்து தொல்லை செய்வதில்லை; பகல் பயணங்களில் கூட வந்துகொண்டே இருப்பார்கள். துன்பியல் உணர்வுகள் இத்தகைய ஆச்சரியங்களை உண்டாக்குவதன் வழியாகவே நமக்குள் நின்று நிலைத்துக் கொள்கின்றன. கவிதைவரிகளோடு இந்தச் சினிமாவும் சேர்ந்துகொண்டது ஆச்சரியம். கலையின் வேலை வேறென்னவாக இருக்கமுடியும்?

மரணத்தின் பரிமாணங்கள்

புறவயமான சமூகச்சூழலோடு தொடர்புபடுத்தியே தங்கள் முன் இருக்கும் பிரதிகளை வாசித்துப்பழகியவர்களையும் தனக்குள் இழுத்துக்கொண்டு அகவழிப்பயணத்தை வேண்டுவது மரணம். மரணத்தின் தறுவாயில் மனிதமனம் கொள்ளும் அலைவுகளைப் பேசிய எல்லாவகைப் பிரதிகளும் அதன் இலக்கைக் கட்டிப்போடவும் கலங்கடிக்கவும் செய்யும். கமல்ஹாசன் திரைக்கதை அமைத்து, ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள உத்தமவில்லன் அசல் துன்பியல் படம்.
 
இந்த உலகத்தில் எவ்வளவு காலம் இருக்க வந்திருக்கிறோம்? என்ற கணக்கு உறுதியாகத் தெரியாதபோது எதைச் செய்வது. எதைச் செய்யாமல் விடுவது? என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்தபோது கிடைத்த விடைகளே அறநிலைப்பாடுகளாகவும், சமயச்சிந்தனைகளாகவும் ஆகியிருக்கின்றன. ஆனால் நவீன அறிவியலோ மரணத்தைத் தள்ளிப்போடுவதைச் சொல்லிக் கொண்டே தேதியை முடிவுசெய்யும் வேலையையும் செய்கிறது. அப்படி நாள் குறிக்கப்பட்டவனின் இருநிலைகளே உத்தமவில்லன் சினிமா. வில்லனாக இருப்பது உலகவாழ்வின் வீரத்தனமென்றால், உத்தமனாகக் காட்டிக்கொள்வது மரணத்தை வெல்லும் சாகசம். மரணத்தை வெல்ல ஆசைப்படாதவர் யார்தான் இருக்கிறார்?
 
“நாலுபேருக்கு நல்லதெச் செஞ்சிட்டுச் சாகணும்; அப்பத்தான் செத்தகட்டைக்குப் புண்ணியம் கெடைக்கும்” மரணத்தின் தறுவாயில் இருக்கும் மனிதர்களை முன் வைத்துச் சொல்லப்படும் வாசகம். இதிலுள்ள ‘நாலுபேருக்கு நல்லது’ என்பதைக் கெதியாக வாழுங்காலத்தில் ஒருவிதமாகவும், சாகும்தருவாயில் இன்னொரு விதமாகவும் விளக்கம் செய்துகொள்வது மனித இயல்பு. தன்னை உள்ளடக்கிய தனது குடும்ப உறுப்பினர்களையே ‘அந்த நான்கு’ பேராகக் கருதும் மனநிலையிலிருந்து விலக்கி, யாரோ நான்குபேருக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்க வைக்கிறது மரணம். இந்த நான்குபேர் என்பது ஒவ்வொரு மனிதர்களும் செயல்படும் துறைகளுக்கேற்ப எண்ணிக்கையில் வேறுபடலாம். தான் வாழும் வெளியே- வீடு, தெரு, கிராமம் தான்- உலகம் என்று இருப்பவர்களுக்கு நான்குபேர் என்பது அவர்களை நாடிவரும் அந்நிய மனிதர்கள். ஆனால் தமிழ்ச்சினிமாவில் உச்சபட்ச நடிகராக விளங்கும் ஒருவருக்கு நான்கு பேரென்பது நான்குகோடி ரசிகர்கள். இந்த வித்தியாசம் புரிந்து கொள்ளப்பப்பட வேண்டிய ஒன்று.
 
மரணத்தின் துரத்தல் என்பது உண்மையில் ஒவ்வொருவருக்குள்ளும் உறையும் குற்றவுணர்வுகளின் துரத்தலே. அப்படித்துரத்தும் குற்றவுணர்வுகள் எல்லார் வாழ்விலும் ஒருபடித்தானவையாக இருப்பதில்லை. ஒருவருக்கு அகவாழ்வு சார்ந்ததாக இருக்கும்; இன்னொருவருக்குப் புறவாழ்க்கையின் தொடர்புகளாகவும் இருக்கலாம். பொதுநிலைப்பட்ட அல்லது புறவாழ்வுதொடர்பான குற்றவுணர்களைச் சட்டம், சூழல், நிறுவன நடைமுறைகள், அவற்றை நடத்துவதற்கான விதிகள் எனக்காரணம் காட்டித் தப்பிக்க முடியும். ஆனால் அகவாழ்வில் தோன்றும் குற்றவுணர்வுகள் அதுவும் காமம் சார்ந்த குற்றவுணர்வுகள் அவ்வளவு சுலபமாகப் புறமொதுக்கிவிட முடியாமல் படுத்தியெடுத்திவிடும். அத்தகையதொரு தவிப்பில் இருப்பவனே மனோரஞ்சன் என்னும் மகா நடிகன். அவன் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் கேள்வி, நான் உத்தமனா? அல்லது வில்லனா?.
எல்லா வகையான ஆண் - பெண் உறவும் குடும்ப அமைப்பை உருவாக்குவதில்லை. வெளிப்படையான சடங்குகள் வழி உருவாகும் உறவுகளே குடும்ப அமைப்பை உருவாக்குகின்றன. மனோரஞ்சனின் வாழ்க்கையில் அப்படியான உறவு அவன் இயங்கிய சினிமாத்தொழில்சார்ந்த நெருக்கடியால் ஏற்பட்டது. அந்த நெருக்கடி அவனது விருப்பமான காதலியை - யாழினியைத் துரத்திவிட்டு ஒட்டிக்கொண்ட பந்தம். அதையறியாது காதலி விலகிச் சென்றுவிட்டாள் என்று கருதி, ‘போனதைக் கைவிட்டு வந்ததோடு’ தொடர்கிறான். ‘ஒப்புதலற்ற ஒப்பந்தம் மீறலை யாசிக்கும்’ என்ற மனநிலைக்கேற்ப இன்னொரு உறவும் ஏற்படுகிறது. தனது உடல்நோய்க்கான மருத்துவரைத் தனது மனநோய்க்கும் மருத்துவராக்கியதோடு காதல் நோய்க்கும் தீனியாக்கித் தவிக்கிறது அந்தப் பிரபல நிலை. ஒரு ஆணின் அகவாழ்க்கையில் மூன்று பெண்கள் என்ற நிலைபாடு ஏற்கத்தக்கதல்ல என்று சுட்டிக் காட்டுகிறது மரணத்தோடு சேர்ந்து மிரட்டும் குற்ற உணர்வு.
 
உத்தமவில்லன் : உருவாக்கம்
 
குற்றத்திற்குத் தண்டனை பரிகாரம் அல்லது பாவமன்னிப்பு என்பது சமய நம்பிக்கை தரும் சலுகை. சாதாரண மனிதர்கள் நாலுபேருக்கு நல்லது செய்து முடிக்கும் வேலையை நான்கு கோடிப்பேருக்குச் செய்து மீட்டுக்கொள்ளலாம் என நினைக்கிறான் பிரபல நடிகன். உத்தம வில்லனின் ஒருவரிக்கதை இதிலிருந்தே உருவாகியுள்ளது. துயர(Tragedy)வாழ்க்கையின் பரிகாரமாக - அவன் நடிக்க நினைத்த படம் இன்பியல் (Comedy). சாவைத் தள்ளிப்போட உதவும் மிருத்யுஞ்சனின் தொன்மத்தையும் மற்றும் மரணம் வந்தே தீரும் என்பதைச் சொல்லும் இரணியகசிபு புராணத்தையும் நினைவூட்டும் நகைச்சுவைக்கதையைக் கடைசிப் படமாகத் தனது குருநாதரான மார்க்கதரிசியைக் கொண்டு தயாரித்துத் தருவதன் மூலம் தனது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான மகிழ்ச்சியைத் தருவதோடு தனது நடிப்புக்கலையின் பாரம்பரியமான தெய்யம் என்னும் நாட்டார் அரங்கின் அடையாளங்களோடு செய்யும்போது கலைக்கும் பங்களிப்புசெய்த திருப்தியும் கிடைக்கும் என நம்புகிறான்.

 படத்தைத் தொடங்குவதற்குக் காரணமான மூளைப்புற்று படம் வளர்வதுபோலவே தலைவலியாகத் தொடங்கி வளர்கிறது; வலியாகத் தொடங்கி மரணத்தின் பகுதிகளாக மாறி இறுக்க இறுக்கப் படமும் நீள்கிறது. தயாரிக்கப்படும் படம் நீளும்போது சொந்தவாழ்வின் சிடுக்குகள் அறுந்து விலகுகின்றன. அக வாழ்வில் நுழைந்த மூன்று பெண்களுடனான உறவு நிகழ்ந்த உண்மைகள் தான் என்றபோதிலும் அவை மனதறிந்து செய்த குற்றங்கள் அல்ல என்பதை முன்வைக்கிறான். இந்த உலகத்திற்கு நிரூபிப்பதைவிட அவனது பிள்ளைகளுக்கு - பார்க்கவே விரும்பாத- காதலிக்குப் பிறந்த மகளுக்கும், அம்மாவை ஏமாற்றுகிறார் தனது அப்பா எனத் தெரிந்து கொண்டு தன்னை உதாசீனப்படுத்திய மகனுக்கும் உணர்த்துவதோடு, சுற்றியிருக்கும் காரோட்டி, மானேஜர், மனைவி, மாமனார் என அனைவருக்கும் உணர்த்திவிடுகிறார்ன். தனது வில்லத்தனத்திற்குள் ஒரு உத்தமன் இருந்தான் என்பதைப்புரிய வைக்கும் நோக்கம் நிறைவேறும்போது எடுத்த படமும் திருப்தியளிக்கிறது; மரணமும் அணைத்துக்கொள்கிறது. படத்தின் உச்சநிலைக் காட்சிகள் நாயகனின் வில்லத்தனங்கள் மட்டுமே தெரிந்தவர்கள் என நினைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடம் அவன் சொல்லும் பாவமன்னிப்புக்கோரலாக நகர்கின்றன.
 
தமிழிச் சினிமாவின் பிரபல நாயக நடிகனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முதன்மைக் கதைப்பின்னல் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகர்விலும் எழுப்பவேண்டிய உணர்வு; தரவேண்டிய நடிப்பு; உண்டாக்கவேண்டிய எதிர்பார்ப்பு எனப் பின்னப்பட்டுள்ளது. கமல்ஹாசனும் அவரோடு இணையும் நடிக, நடிகர்களும் பாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். நடிகரின் மானேஜராக வரும் எம். எஸ். பாஸ்கரும் ஆண்ட்ரியாவும் பாத்திரத்திற்கான பேச்சு மற்றும் உடல்மொழியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியுள்ளார்கள். மகளாக வரும் பார்வதியின் முகமும் கண்களும் பாவனைகளால் பேசும் சாத்தியங்களை உச்சபட்சமாகக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாத்திரங்களுக்கென்றே தன்னை வடிவமைத்துக்கொண்டவராக மாறியிருக்கிறார்கள் ஊர்வசியும் விஸ்வநாத்தும்.
நாயகன் நடிக்கவிரும்பிய - மார்க்கதரிசி (கே.பாலச்சந்தர்) இயக்கும்- சினிமாவுக்குப் இயல்பான நடிப்பு வேண்டாம் பத்ததி நடிப்புப்பாணி (Stylised acting) தேவையென்பதை உணர்ந்து, பாரம்பரிய அடவுகளையும் பேச்சுமுறையையும் தேடியிருக்கிறார்கள். தொடர்ந்து பாரம்பரிய அரங்கக்கலையோடு தொடர்புகொள்வதில் ஆர்வம் காட்டும் நடிகர் நாசரையும், சண்முகராஜனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். நாசர் தனது இயக்கத்தில் வந்த அவதாரம், தேவதை போன்ற படங்களில் முயற்சி செய்து புதிய அழகியலை உருவாக்க முயன்றவர். நகைச்சுவையான குரல்மொழிக்காகப் பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் உள்ளிழுக்கப்பட்டிருக்கிறார். 

தன்மீது காதலும் காமமும் கொண்ட சதிகார மந்திரியின் காதைக் கடித்துத்துப்பும்போது உக்கிரம் காட்டும் பூஜாகுமார், நாயகனோடு ஆடும் நடனத்திலும், ஆட்டத்திலும் காணாமல் போய்விடுகிறார். ஈடுபாடில்லாத அல்லது பாத்திரவடிவமைப்பைப் புரிந்துகொள்ளாமல் வெளிப்படுகிறார். நோயோடு மல்லாடுவதால் என்னமோ கமலஹாசனாகிய மனோரஞ்சன் அந்தப் பகுதியில் கவனிக்கத்தக்க நடிப்பைத் தரவில்லை. திரைக்கதைப்படியும் உத்திநோக்கிலும் முக்கியமான இடத்தைப் பிடிக்க வேண்டிய அந்தக் காட்சித்தொகுதிகள் உத்தமவில்லன் படத்தைப் பார்வையாளர்களிடமிருந்து விலகிச் செல்லவைத்திருக்கிறது. பாரம்பரிய அரங்கைப் பயன்படுத்தி உருவாக்கும் படம் இரைச்சல்களின் இணைப்பாலும் பெரும் அசைவுகளாலும் ஆனதாக இருக்கும் என நினைப்பது தவறு எனத் திரையுலகம் புரிய இன்னும் சில காலம் ஆகலாம்.
 
சினிமாவுக்குள் சினிமா என்பது பற்றிய படங்கள் அதன் உருவாக்கப்பகுதிகள் பற்றியும் பேசும் என்று எதிர்பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. எள்ளலோடு பேசநினைத்த ‘தமிழ்ப்படம்’ வெற்று நகைச்சுவைப்படம் என்பதாக நின்றுபோனது. ஜிகிர்தண்டா கதைசெய்வதையே படமாக்குதல் என்றது. பார்த்திபன் அதனோடு சேர்த்து வியாபாரம் செய்வதையும் தனது கதை, திரைக்கதைவசனம், இயக்கத்தில் பேசியதோடு, புனைவுக்கும் நடப்புக்குமான இணைவையும் முரணையும் தொட்டுக்காட்டினார். ஆனால் தமிழ்ச்சினிமா உலகம் என்பது நாயக நடிகனை முடிவு செய்வதும், நாயக நடிகன் மற்ற அனைத்தையும் தீர்மானிப்பதுமாக இருக்கிறது. இங்கே இயக்குநர்கள் நடிகர்களுக்காகவே கதை செய்கிறார்கள்; அவர்களின் விருப்பப்படியே தான் மற்ற நடிகர்களும் பின்னணிக்கலைஞர்களும் முடிவுசெய்யப்படுகிறார்கள். விதிவிலக்குகள் மிகக்குறைவு. சினிமாவுக்குள் சினிமா எனத் தன்னையே விமரிசனம் செய்துகொள்ள நினைக்கும் ஒரு தமிழ்ச்சினிமா இதைப்பற்றியெல்லாம் பேசும் காலம் எப்போதுவரும் எனத்தெரியவில்லை.
 
கதை உருவாக்குவது - அதைத் திரைக்கதையாக மாற்றுவது மட்டுமே சினிமா உருவாக்கம் என நினைக்கும் மனநிலை உத்தமவில்லனிலும் வெளிப்பட்டுள்ளது. சினிமாவைப்பற்றி இன்னும் விரிவாகப்பேச வாய்ப்புக் கொண்ட திரைக்கதையமைப்போடு இருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்- படப்பிடிப்பு - படப்பிடிப்புக்குப் பின் என மூன்று நிலையிலும் மார்க்கதரிசி தனது படப்பிடிப்பு முறைகளைச் சொல்லியிருக்கலாம். படத்தில் காட்டப்படுவதைப்போல அவர் தமிழ்ச் சினிமாவில் பல சாதனைகளைச் செய்தவர்; பல நட்சத்திரங்களை உருவாக்கியவர்; தனது கலைக்கோட்பாட்டை வியாபாரத்திற்காக விட்டுக்கொடுக்காதவர். அப்படிப்பட்டவரைக் கொண்டுதான் தமிழ்ச்சினிமாவின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் விமரிசிக்க முடியும். இதற்கான வாய்ப்புகள் இருந்தும் அந்த முயற்சிக்குள் படம் நுழையவில்லை. அப்படி நுழைந்திருந்தால், பார்வையாளர்களுக்குச் சினிமாவின் கலையியலையும் ரசனையையும் கற்றுக்கொடுத்த படமாகவும் ஆகியிருக்கும். அதன் வழியாக மனோரஞ்சனின் துன்பியல் வாழ்வின்மீது கூடுதல் இரக்கம் தூண்டப்பட்டிருக்கும். நவீனத்துவ அழகியல், விலக்கிவைத்து உள்ளிழுப்பதையும், அதன்வழியாக இருப்பு வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுவதையுமே முக்கியமாக நினைக்கிறது.
 
துன்பியலின் சாத்தியங்கள்
 
துன்பியல் சினிமாவின் சாத்தியங்களுள் முதன்மையானது பார்வையாளர்களைத் தன்வசம் ஈர்த்துக்கொள்வதும், அவர்களது மனத்திற்குள் அசைவுகளை எழுப்புவதுமாகும். தமிழில் ஆகச் சிறந்த துன்பியல் படம் எனப் பட்டியல் ஒன்றைப் போட்டுக்காட்ட முடிவதில்லை. துன்பியலின் சாயல் கொண்ட படங்களே இங்கு எடுக்கப்படுகின்றன. அவற்றைப் பார்வையாளர்கள் ஏற்று ரசிக்கவும் செய்கிறார்கள். முதல் மரியாதை, சுப்பிரமணியபுரம், பிதாமகன் போன்ற படங்களைக் கொண்டாடவும் செய்தார்கள். ஆனால் உத்தமவில்லைனைக் கொண்டாடுவார்களா? என்பது பெரியகேள்வி. இதனை முழுமையாகச் செய்வதன்மூலம் தமிழின் முக்கியமான துன்பியல் படமாக ஆகியிருக்கவேண்டிய உத்தமவில்லன் அப்படி ஆகவில்லை என்றே தோன்றியது. திரையரங்கில் படம் பார்த்த பலரும் ஆழ்ந்த ரசனைக்குரிய படமொன்றைப் பார்க்கும் மனநிலையில் பார்க்கவில்லை. விருப்பமின்மையை வெளிப்படுத்தும் மௌன மொழிகளே திரையரங்கில் வெளிப்பட்டன.ஒருதடவைக்கு இரண்டு தடவையாகப் பார்த்தபோது இதையே உணர முடிந்தது.
 
நல்ல சினிமா அல்லது ரசனைக்குரிய படம் என விமரிசகர்கள் பாராட்டும் படத்தை வெகுமக்கள் பார்க்காமல் புறக்கணிக்கும்போது அவர்களது ரசனைமுறையும் மற்றும் தரமும் கேள்விக்குள்ளாக்கப்படுவது வாடிக்கை. உத்தமவில்லனைப் பற்றிய பேச்சிலும் விமரிசனக்குறிப்புகளிலும் கூட அப்படியான குறிப்புகளைக் கவனிக்க முடிகிறது ‘இந்தப் படம் பொதுப்பார்வையாளர்களுக்குரிய படமல்ல; விமரிசகர்களுக்கான படம்’ எனக் கூறுவதைக் கேட்க முடிந்தது. தமிழ்ச் சினிமா “ரசிகனின் ரசிப்பு மனநிலையைத் தாண்டிய படம்” எனச் சிலர் குறிப்பிட்டார்கள். இவை ஏற்கத்தக்க குறிப்புகள் அல்ல. பார்வையாளர்களின் ஈர்ப்புக்குரியதாக இல்லாமல் விலக்கி வைக்கும் அம்சங்கள் உத்தமவில்லன் படத்தில் இருக்கின்றன. அவை படத்திற்குள்ளாக இருப்பதோடு வெளியேயும் இருந்தது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
 
பார்வையாளர்களைப் படத்திலிருந்து விலகச் செய்யும் தன்மையில் முதலிடம் மார்க்கதரிசி இயக்கும் இன்னொரு சினிமாவுக்கே. அது சினிமாவாக இல்லாமல், நாட்டுப்புறக் கதைப்பாடல் ஒன்றை நிகழ்த்திக்காட்டும் கேரளத்தின் தெய்யத்தை ஆவணப்படுத்தும் தன்மையோடு பேச்சு மற்றும் உடல்மொழியில் மாற்றம் இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சினிமா நாயகனின் துயரவாழ்வின் இணைப்பிரதிக்குக் கேரளத்தின் தெய்யம் ஏன் தேர்வு செய்யப்படவேண்டும். இதே இரண்ய நாடகத்தை நிகழ்த்தும் மெலட்டூர் பாகவதமேளாவோ, நார்த்தேவன் குடிக்காட்டுக் கூத்தோ தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். தன் கணவனின் உயிரை எமனிடம் விட்டுத்தரமுடியாது எனத் தீர்மானமாக நின்று போராடிய சாவித்திரியின் கதையை இசைநாடகமாக ஆக்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் பாணியிலிருந்தும் அதனை உருவாக்கியிருக்கலாம். இவையிரண்டுமே இசை, நடனம், வசனம் என்ற மூன்றுக்கும் சம அளவில் வாய்ப்பளிக்கும் பாரம்பரிய அரங்குகளே. அத்தோடு தமிழ் நினைவில் இருக்கும் வடிவங்களும் கூட.

 கிராமத்திருவிழாக்களில் இப்போதும்கூட நிகழ்த்தப்படும் வடிவங்கள். இவற்றைவிட்டுவிட்டுக் கேரளத்தின் தெய்யத்தின்வழியான சோதனை முயற்சிக்கு ஏன் போகவேண்டும்? கேரளத்துக் கலைவடிவங்களின் வண்ணமயமான ஒப்பனைகளும் ஏற்ற இறக்க நடன அடவுகளுமாக இருக்கலாம். ஆனால் எப்போதும் சோதனை முயற்சிகள் அறியப்படாத ஒன்றிலிருந்து உருவாக்கப்படுவதைவிட அறிந்த ஒன்றிலிருந்து உருவாக்கும்போதே எதிர்பார்த்த பலனை அளிக்கும் என்பது கலையியலின் அடிப்படைப்பாடம். இது இயக்குநர் ரமேஷ் அரவிந்துக்குத் தெரியுமா என்பது பற்றிச் சொல்ல முடியாது; திரைக்கதை ஆசிரியர் கமல்ஹாசனுக்குத் தெரியாத ஒன்றல்ல. பட உருவாக்கத்தின் உள்ளே இருக்கும் சிக்கல் .
இரண்டாவது இடம், படத்திற்கு வெளியில் இருக்கும் ஒன்று. இதனை வெளியில் இருக்கும் சிக்கல் எனச் சொன்னாலும் படத்திற்குள் இருக்கும் சிக்கலாகவே புரிந்துகொள்ளும் வாய்ப்புடையது. பார்வையாளர்கள் மனோரஞ்சனின் கதையை யாரோ ஒரு நடிகரின் கதையாகப் பார்க்காமல் நடிகர் கமல்ஹாசனின் கதையாகவே பார்க்கிறார்கள்/ வாசிக்கிறார்கள் . இந்தப் படத்தின் கதைப்பின்னல் போன்றதல்ல அவரது சொந்த வாழ்க்கை என்றபோதிலும், இணைத்துப் பார்க்கும்தன்மையுடையது என்பதை மறுக்கமுடியாது. 

 இரண்டு தடவை விவாகரத்துப் பெற்றதும், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்வதில் சிக்கல் எதுவும் இல்லை என வெளிப்படையாகச் சொன்னதும் இந்தப்படத்தோடு இணைப்பிரதியாக நினைக்கப்படும் வாய்ப்புக்கொண்டது. அதன் காரணமாகத் தன்வரலாற்றுப்படமாகவும், தனது இருப்புக்கு - பெண்களோடு தனக்கிருந்த உறவுகளுக்கு நியாயம் கற்பிக்கும் முயற்சியாகவும் கருத இடமளிக்கவே செய்கிறது. அத்தோடு அவரைக் கண்டுபிடித்து உருவாக்கிய கே. பாலச்சந்தரே மார்க்கதரிசியாக நடிக்கும்போது இந்த எண்ணம் கூடுதல் உண்மையாகத் தோன்றிவிடுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதின் அடிப்படையிலான குடும்ப அமைப்புமீதும், திருமணத்திற்குப் பின்னான ஆண் பெண் உறவு மீதும் கடுமையான நம்பிக்கைகொண்டதாகக் காட்டிக்கொள்ளும் இந்திய/ தமிழ்ப்பார்வையாள மனம் கமல்ஹாசன் என்னும் நடிகரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். அவரது சொந்த வாழ்க்கையேக் கூச்சமின்றிப் பாராட்டும் என எதிர்பார்க்க முடியாது. பொழுதுபோக்குப் படமாகக்கூட அந்தக் கலகத்தை ஏற்றுக் கொண்டாடத்தயங்கவே செய்யும்.
 
உத்தமவில்லனின் பார்வையாளர்கள் உருவாக்கிக்கொண்ட இணைப்பிரதியும், சினிமாவுக்குள் சினிமாவாக உருவாக்கப்பட்ட இன்னொரு சினிமா உண்டாக்கிய அலுப்பும் சேர்ந்து மொத்தப்படத்தையும் பார்க்க வேண்டிய படமல்ல என்ற முடிவுக்குத் தள்ளியிருக்கிறது. இந்த முடிவுகள் பார்த்து விட்டு வருபவர்கள் தரும் விமரிசனங்களிலிருந்து உருவாகிறது என்பது நம்பமுடியாத- ஆனால் நம்ப வேண்டிய உண்மை. எனவே, நவீன தமிழ்ச் சினிமாவைப் பரிசோதனை செய்ய நினைப்பவர்கள் அதனை ரசிப்பதற்கான உத்திகளையும் படத்தின் வழியாகவே தந்தாக வேண்டும்.



கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
I wanted to read a review after watching the film to understand it more precisely...you have given me an insight.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

புதிய உரையாசிரியர்கள்