மனித நாகரிக வளர்ச்சி என்ற சொல்லாடலில் இலக்கியங்களுக்குப் பெரும்பங்கு இருக்கின்றன என்ற கருத்து இன்று ஏற்கப்பெற்ற கருத்து. அதிலும் தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளிலிருந்து உருவான இலக்கியங்கள், அம்மொழி பேசுகின்றவர்களின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், உலகந்தழுவிய பொதுமைக் கூறுகளை முன் வைத்து உலக நாகரிக வளர்ச்சிக்கே காரணிகளாக ஆகியிருக்கின்றன. இக்கட்டுரை தமிழ்ச் செவ்வியல் பரப்பிற்குள் இருக்கும் திருக்குறளின் கல்வி, கேள்வி என்ற சொல்லாடல்கள் முன் வைக்கும் கருத்தியல் மற்றும் இயங்குநிலையைப் பற்றிப் பேசுகின்றது. ஆளுமைப் பண்பு உருவாக்கம் : மனிதன் என்னவாக இருக்கிறான்? என்ற கேள்வி தத்துவம் சார்ந்ததாக இன்று அறியப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்வி அடிப்படையில் உலகில் உள்ள மனிதன் உள்ளிட்ட உயிரினங்களும், கடல், வான், அண்டம், பூமி, கோள்கள் என இயங்கும் இயற்கைப் பொருட்களும், இவ்வியற்கைப் பொருட்கள் தரும் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பெறும் செயற்கைப் பொருட்களும் எவ்வாறு இருக்கின்றன? என்ற அறிதலுக்கான அடிப்படைக் கேள்வியிலிருந்து உருவாகும் அறிவுத்தோற்றவியல் ( Epistemology) கேள்வியே என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்ட...