தண்டனைகளற்ற உலகம்


ஒவ்வொரு பருவம் முடியும்போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பாடம் கற்க வந்தவர்களின் வருகைப் பதிவைச் சோதித்து, அவர்களைத் தேர்வுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப் பல்கலைக்கழகங்களில் விதிகள் உண்டு. நடத்தப்பெற்ற வகுப்புகளில் மாணாக்கர் 75% வந்திருந்தால் கவலையே பட வேண்டாம். ஆசிரியர் அவரைத் தேர்வுக்கு அனுப்பித் தான் ஆக வேண்டும். வகுப்புக்கு வந்து பாடம் தான் கேட்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. வருகை, பதிவில் இருந்தால் போதும். 60% க்கும் குறைவாக வந்தால் தேர்வில் பங்கேற்பது முடியாது. இது கடுமையான தண்டனை. ஆனால் 60-75 சதம் வந்திருந்தால் தண்டத் தொகையைக் கட்டிவிட்டுத் தேர்வுகளை எழுதிவிடலாம். இந்த நடைமுறையை நீங்கள் தண்டனையாகவும் கருதலாம்; மன்னிப்பாகவும் நினைக்கலாம்.

சிறந்த கல்லூரிகள் எனக் கருதப்படுபவை மாணாக்கர்களின் வருகைப் பதிவேட்டிலும், அதனை முன்வைத்து அளிக்கப்படும் தண்டனை மற்றும் மன்னிப்பில் கவனமாக இருக்கின்றன. அதிலிருந்து விலகுவதன் வழியாக ஒரு கல்லூரி தனது தரத்தினை - கட்டுப்பாட்டினை இழந்து விடுகின்றது. ஆனால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துறைகளில் தினசரி வருகைப் பதிவேடுகள் முறையாகப் பதிவு கூடச் செய்யப்படுவதில்லை. அப்படிப் பதிவு செய்தாலும், ஒவ்வொரு ஆசிரியரின் வகுப்பிற்கும் ஒரு மாணவி அல்லது மாணவன் வந்திருந்தான் எனக் கணக்கிடும் முறையிலான பதிவுகளை வைத்திருப்பதில்லை. ஆனால் தன்னாட்சிக் கல்லூரிகள் இவற்றையெல்லாம் கறாராகச் செய்கின்றன. அதன் வழியாகவே தங்களின் கட்டுப்பாடுகளை உறுதி செய்கின்றன. பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் வருகையைப் பதிவு செய்வதைத் தங்களின் பொறுப்பாக நினைப்பதில்லை. பாடம் சொல்வது மட்டுமே தங்களின் பொறுப்பு என நினைப்பதன் வெளிப்பாடாகக் கருதி வருகைப் பதிவைச் செய்யும் பேராசிரியர்களைக் கேவலமாகக் கூட நினைப்பதுண்டு. நானே மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உரிமை, கடமை, சுதந்திரம் என்பதைப் பற்றிப் பேசுவதையும் நடைமுறைப்படுத்துவதையும் மூச்சுவிடுவது போன்ற இயல்புடன் செய்யும் ஐரோப்பியப் பல்கலைக்கழக வளாகங்களில் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கறாரானதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் வருகைப் பதிவைத் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். பருவம் முடியும்போது மாணாக்கர்களின் வருகைப்பதிவைக் கடைசி வகுப்பில் அறிவிப்பு செய்கிறார்கள்.அந்த நடைமுறையை இப்போது இங்கேயும் நான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஆனால் இந்திய மனநிலையோடு செய்யத் தொடங்கினேன் என்பதும் உண்மை.

பெரும்பாலும் இங்கே ஆசிரியர்கள் எதையும் பொதுவில் வைப்பதில்லை; விவாதிப்பதுமில்லை. எல்லாவற்றையும் விதிகளின்படி செய்வதாகக் காட்டுவார்கள். அல்லது விதிகளையே பின்பற்றாமல் கட்டற்ற சுதந்திரம் வழங்குபவர்களாகக் காட்டுவார்கள். இரண்டுமே சிக்கலானது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதனால் இந்த இரண்டையும் நான் செய்வதில்லை. நான் பாடம் எடுக்கச் செல்லும் மூன்று வகுப்புகளிலும் மாணாக்கர்களின் வருகைப் பதிவை வாசித்துவிட்டு யார்யார் தேர்வெழுத முடியாது; யார்யார் தண்டத் தொகை கட்ட வேண்டியவர்கள்; யாரெல்லாம் சிக்கலில்லாமல் தேர்வெழுதலாம் என அறிவித்த போது வகுப்பறையில் பேரமைதி நிலவியது. 50 சதவீதம் வகுப்புக்கு வராமல் இருந்தவர்கள் எழுந்து தவறை ஒத்துக் கொள்ளும் தொனியில் சில காரணங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். அந்தக் காரணங்களில் சில தவிர்க்க முடியாத காரணங்கள். சில காரணங்கள் அவர்கள் சார்ந்ததாக இல்லாமல் பொதுநலனுக்கான வேலையாக இருந்தன. நண்பர்களுக்காக எடுத்த விடுப்புகளாக இருந்தன. அந்தக் காரணங்களை நான் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கவில்லை. வகுப்பில் அனைவருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சொல்லிமுடித்தபின் தண்டனையை அல்லது மன்னிப்பை நான் வழங்காமல் மாணாக்கர்களிடம் விட்ட போது ஒருவர் கூடத் தண்டனை வழங்கலாம் எனச் சொல்லவில்லை. மன்னிக்கலாமா? என்றால் அதையும் உறுதியாக ஏற்றுவிடவில்லை. அப்படியானால் என்ன செய்யலாம்? தண்டனையாகவும் இல்லாத மன்னிப்பாகவும் இல்லாத ஒன்றிற்கே அவர்கள் வழிநடத்தினார்கள். தங்களோடு உள்ள ஒருவரை விதிகளின்படி தண்டிக்க பொதுமனம் எப்போதும் விரும்பவில்லை என்பதையே இம்மூன்று வகுப்பு மாணாக்கர்களின் மனநிலையும் காட்டுகிறது எனப்புரிந்து கொண்டேன். கடைசியில் செய்தவை மன்னிப்பாகவும் இல்லை; தண்டனையாகவும் இல்லை. கேளிக்கையாக மாறிவிட்டது. உங்களோடு படித்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களைத் தண்டிக்காது மன்னிக்கும் மனநிலையில் தான் ஆயிரக்கணக்கான கோடிகளில் பணம் சம்பாதித்துப் பதுக்கியிருக்கும் அரசியல்வாதிகளை மக்கள் மன்னிக்கிறார்கள் என்று சொன்னேன். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் மனநிலையும் பாமரர்களின் மனநிலையும் பொதுவில் ஒன்றாகவே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்