போய்த் திரும்பும் பறவைகள் -ஜெயந்திசங்கரின் கதைகள்

 

ஒரு படைப்பாளியின் கதைகளை அவ்வப்போது வாசிக்கும்போது வாசிப்பவரிடம் உருவாகும் நினைப்புகள் ஒருவிதமானவை. நிதானமாக வாசித்து முடித்தபின் அந்தக் கதையின் வெளிகளுக்குள் வாசகரை அழைத்துச் சென்று கதைக்குள் உருவாக்கப் பெற்ற மனிதர்களின் வினைகளையும் அவ்வினைகளுக்கான காரணங்களையும் முன்வைக்க முயல்வது முதன்மைச் செயல்பாடாக இருக்கும். அப்படி முன் வைக்கும் காரணங்களாகக் கதாபாத்திரங்கள் வாழ நேர்ந்த சமூகச்சூழலும் அதை எழுதியவரின் காலச்சூழலும் இருக்க முயல்கின்றன. அந்த நேரத்தில், கதாசிரியன் உருவாக்கும் வெளி, பாத்திரங்கள், அவைகளின் வினைகள், அவை நிகழ்வதற்கான காரணிகள் என்ற எல்லைகளைத் தாண்டி வாசகமனம் செல்வதில்லை. ஜெயந்தி சங்கரின் பல கதைகளை நான் அப்படித்தான் வாசித்து முடித்திருந்தேன். அத்தகைய வாசிப்புகளின் போதெல்லாம் அவரால் உருவாக்கிய பாத்திரங்களே என்னோடு நெருக்கமாக நின்று என்னோடு பேசினார்கள்; தங்களை முன் வைத்தார்கள்; தங்களின் செயல்பாடுகளுக்கான காரணகாரியங்களைச் சொல்லப்பார்த்தார்கள். அப்படிச் சொல்லியபோதே இவர்களெல்லாம் என்னருகில் இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து வைத்திருந்தேன்.

என்னருகில் இல்லை என்பதனாலேயே அவர்களை இந்த உலகத்திலேயே இல்லாதவர்கள்  என நான் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அவ்வாறிருப்பதற்கான காரணங்களை முழுமையாகக் கொண்டிருப்பவர்கள் என்றே என் வாசிப்பு மனம் நினைத்து வைத்திருந்தது.  அப்படியான மனிதர்களை என் முன் முன்னால் அனுப்பும் ஜெயந்திசங்கர் தொடர்ந்து கவனிக்கத்தக்க எழுத்தாளர் எனவும் புரிந்து வைத்திருந்தேன். ஜெயந்திசங்கர் என்றில்லை; என் காலப் படைப்பாளிகள் பலரும் என்னிடம், என்னுள்ளே வந்து சேரும் விதம் இப்படியானதுதான். தீவிரமான கதை வாசகரின் கவனத்தைப் பெறும் படைப்பாளிகள் இப்படித்தான் இலக்கியப் பரப்பில் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

அவ்வப்போது எழுதிய கதைகளின் வழியாகத் தன்னைத் தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியராக என்னிடமும் தீவிரமான வாசகர்களிடமும் நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட ஜெயந்திசங்கரின் கதைகளை மொத்தமாக வாசிக்க நேர்ந்த அனுபவம் இன்னும் கூடுதலானது. இவர் என்றில்லை எந்தவொரு படைப்பாளியின் கதைகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும்போது நிகழ்வன தனிக்கதைகளை வாசித்தபோது உருவான அதே மனநிலையாக இருக்க முடியாது. இது வேறுவிதமான கவன ஈர்ப்பாக இருக்கின்றது. ஒரு படைப்பாளியின்  கதைகளை மொத்தத் தொகுதியாகவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளாகவோ வாசிக்கும்போது இப்படியான கவன ஈர்ப்புகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன்.  இந்தக் கதைகளை எழுதிய  படைப்பாளியை எப்படி அடையாளப்படுத்தித் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. 

ஒரு படைப்பாளியை அடையாளப்படுத்துவதில் இரண்டு முக்கியமான நிலைப்பாடுகள்  இருப்பதாக நினைக்கிறேன். இலக்கியம் பொதுதான் என்றாலும் வடிவத்தாலும் வெளிப்பாட்டு நோக்கத்தாலும், மொழியைப் பயன்படுத்தும் விதத்தாலும் வகைப்பாடுகள் உருவாகியுள்ளன. எல்லா வகையான இலக்கியங்களையும் பற்றிப் பேசும் பொதுவான இலக்கியக் கோட்பாடுகளை முன் வைத்த இலக்கியத்திறனாய்வு தன்னை முடித்துக் கொண்டு ஆண்டுகள் சில பத்துகள் முடிந்துவிட்டன. ஒவ்வொருவகையான இலக்கியவகைக்கும் தனித்தனியான அளவுகோல்களால் அளந்து பார்க்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அந்த அளவுகோல்களையும்கூட அவ்வப்போது மாற்றிக்கொண்டேயிருக்கிறோம்.  கவிதையின் அளவுகோல்களால் நாடகத்தை எடைபோட்டுப் பேசுவதில் அர்த்தமில்லை. நாடகத்தின் அளவுகோல்களால் புனைகதையின் பரப்பை அளந்துவிட முடியாது. புனைகதையை அளக்க 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பட்ட கருவிகளால் இன்றைய கதைகளை அளந்துவிட முடியாது. மனித மனங்களை மட்டும் எழுதிக்காட்டும் படைப்பாளியின் எழுத்தைப் பற்றிப் பேசும் பேச்சுகள் புறவெளியில் அலையும் மனிதர்களின் அலைவுகளைச் சொல்லும் கதைகளுக்குப் பொருந்தாமல் போய்விடும். வாசிப்பவனின்  கைவசம் விதம்விதமான அளவுகோல்கள் இருந்தால் தன் முன்னே கிடக்கும் கதைப்பரப்பையும், அதில் உலவும் மனிதர்களையும் நிதானமாக அளந்து பார்த்து விதந்து பேசலாம்.

ஜெயந்திசங்கரின் இந்தப் பத்துக் கதைகளும் - தேர்ந்தெடுக்கப்பெற்ற பத்துக் கதைகளும் என்னிடம் கேட்டுப் பெற்ற அளவுகோல்களால் அளந்து பார்த்தேன்.  10 கதைகளும் பத்துவிதமானவை போல முதலில் தோன்றியதென்னவோ உண்மையே. கதையில் உலவும் மாந்தர்களின் வெளியால் அந்த வேறுபாடுகள் உருவாக்கப்பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்தபிறகு இன்னொன்றிற்குள் என் நினைவுகள் சுற்றிச் சுழல ஆரம்பித்தன. இந்தக் கதைகளுக்குள் இருப்பது  ஜெயந்திசங்கர் என்னும் பெண்நிலை என்பதுதான் அந்த இன்னொன்று. தொடர்ச்சியாகப் புதுப்புது வெளிகளுக்குள் நுழைந்து வெளியேறும் வாய்ப்புப் பெற்ற ஜெயந்திசங்கர் அங்கெல்லாம் அலையும் மனுசிகளை -கவனிக்கப்பட வேண்டிய மனுசிகளை- எழுதிக்காட்டியுள்ளார் என்பது புரிந்தது. அந்த மனுசிகள் ஒவ்வொருத்தியும் ஏன் என் கவனத்திற்குரியவளாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதாகவே ஜெயந்திசங்கரின் கதைகள் இருக்கின்றன.

நமது காலம் எழுதப்படாமல் கைவிடப்பெற்ற மனிதர்களை- விளிம்புநிலை மனிதர்களை-  எழுதும் காலமாக இருக்கிறது. அதை எழுதுபவர்களும் அவர்களாகவே இருக்கிறார்கள். பெரிதும் பெண்களையே எழுதும் ஜெயந்திசங்கர் என்னும் பெண் தன்னிலையின் எழுத்தில் முக்கியமான - கவனிக்கத்தக்க கூறொன்றைக் கொண்டிருப்பதை இந்தப் பத்துக் கதைகளின் வழி நான் கவனித்தேன்.

இந்தக் கதைகளில் அலைபவர்கள் மனதால் மட்டுமே தமிழர்கள். வெளியால் வேற்றுப் புலத்தவர்கள். பஞ்சம், கலவரம், போர் போன்ற பெருஞ்சமூக நெருக்கடியால் வேற்றுப் புலத்திற்குப் பெயர்ந்தவர்கள் அல்ல. அப்படியானவர்களின் கதைகளை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிக்காட்டியுள்ளார்கள். மாதச்சம்பளக்காரர்களாக ஆனதால் காவேரி, தாமிரபரணிக்கரைக் கிராமங்களை விட்டுவிட்டு அல்லது மதுரைமாவட்டப் புஞ்சைக்காட்டை விட்டுவிட்டு சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களும் அல்ல. அப்படியான பெருங்கூட்டத்தின் கதைகளைத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பு விரித்து வைத்திருக்கிறது. 

1960 களுக்கு முந்திய முன்னோடிச் சிறுகதையாசிரியர்கள் அவர்களைத் தான் எழுதிக்காட்டினார்கள்.  தீப்பெட்டித் தொழில், பனியன்கம்பெனி, உலோகப்பட்டறைகள் என அண்மை நகரங்களில் ஏற்பட்ட தொழில் பெருக்கத்தால் நகரம் நோக்கி நகர்ந்த மனிதர்களின் கதைகளையும் வட்டாரக் கதைகள் என்ற பெயரில் நாம் வாசித்திருக்கிறோம். அவை எல்லாவற்றிலுமிருந்த விலகிய கதைகள் ஜெயந்திசங்கரின் கதைகள். இந்தக் கதைகளில் இருப்பவர்கள் தன் விருப்பத்தோடு, குடும்ப நெருக்கடிகளால், அது உண்டாக்கும் நிர்ப்பந்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள். ஆம் இவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. இடம் பெயர்ந்தவர்கள். கீழ்த்திசைப் பிரதேசங்களான மலேசியா, சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள். அங்கிருக்கும் சட்டம், ஒழுங்கு, சுத்தம், நாகரிகம், கட்டுப்பாடு, மாற்றம், பொருள் வளம் என ஒவ்வொன்றாலும் ஈர்க்கப்பட்டவர்கள் அல்லது பயமுறுத்தப்பட்டவர்கள். அப்படியான மனிதர்களின் மனதிற்குள் நுழைந்து அவர்களைக் கதையாக்கியிருக்கிறார் ஜெயந்திசங்கர். அப்படிக் கதையாக்கும்போது அவர்களுக்குள்ளிருக்கும் மனம் திரும்பத்திரும்ப நினைத்துக் கொள்ளும் மனவோட்டம் ஒன்றைத் தனது கதைகளுக்குள் பரவவிட்டுள்ளார். 

இந்தியப் பெருவெளி அல்லது தமிழகப் பரப்பு என்ற ஒருவெளி இருக்கிறது; அதுவே எனது பூர்வவெளி; சொந்தவெளி என நினைத்துக் கொள்ளும் மனவோட்டம் அது. இழந்துபோனது வெற்றுநிலமே ஆனாலு என் சொந்தநிலம் எனக் கருதும் ஆழ்மனத்தைக் கதையாகப் படிக்க ஆசைப்படும் ஒவ்வொருவரும் ஜெயந்திசங்கரின் கதைகளைப் படித்துப் பார்க்கலாம். தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் இத்தகைய கதைவெளியைத் தொடர்ந்து உருவாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்யும் அவரைத் தமிழ் வாசகப்பரப்பு கொண்டாடிக் கொண்டே இருக்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

கெட்டுப்போகும் பெண்கள்

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கி