இன்குலாப்: இப்படி நினைக்கப்படுவார்


நவீனத்துவக் கவிதை ஒருவர் இன்னொருவரோடு பேசும் அல்லது முன்வைக்கும் சொல்முறையைக் கொண்டிருப்பதாக அமையவேண்டும் என்பது தமிழில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்றாக ஆகிவிட்டது. அந்த இன்னொருவரைத் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு பேசும் சாத்தியங்கள் இருந்தால் அவையே நவீனத்துவக் கவிதையின் நுட்பமாகவும் நம்பப்படுகிறது. இதற்குமாறாகத் தன் சொற்களை ஒருவரோடல்லாமல் பலருக்கும் சொல்லும் வடிவத்தைக் கொண்ட கவிதையைப் பிரச்சாரம் எனப் பேசி ஒதுக்குவதும் நவீனக் கவிதையை நிறுவிவிடும் விமரிசகர்கள் அல்லது இலக்கியவாதிகளின் போக்காக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் சாகுல் அமீது என்ற பெயரை “ இன்குலாப்” என மாற்றிக்கொண்டவரைக் ”கவி” யென அங்கீகரித்ததில்லை.
இந்த வரையறைகள் மட்டுமே கவிதையின் இலக்கணமல்ல. தமிழின் கவிதைச் சொத்தில் எப்போதும் தவிர்க்கமுடியாத தொகைநூல் புறநானூறு. அந்தத் தொகைநூலின் கவிதைகள் வாசிப்பவர்களோடு நேரடியாகக் கேள்விகளை எழுப்பி உரையாடல் செய்யும் வடிவம் கொண்டவை. அந்த உரையாடலில் பொதுவெளிப் பிரச்சனைகளே பேசுபொருளாக இருக்கும். தன்னனுபவம் தவிர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய வடிவத்தின் நிகழ்காலப்பிரதிநிதியாக நினைக்கவேண்டியவர் இன்குலாப்.

கவிதை வடிவம் தாண்டி நாடகப்பிரதிகளையும் உருவாக்கித் தந்தவர் அவர். அவரது ஔவை நாடகத்தின் மேடையேற்றத்தை விமரிசனம் செய்து, பிரதியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதியதற்குச் சில மாதங்களுக்குப் பின் நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். சமூகவியல் துறையில் உரையாற்றியபின் எம் துறைக்கு வந்து மாணவர்களோடு உரையாடியபின் என்னைத் தனியாகச் சந்தித்து அந்த விமரிசனத்தை நினைவுபடுத்திப் பேசிய பாங்கு இப்போது நினைவில் வந்துகொண்டிருக்கிறது.

நினைவில் வரும்விதமாகச் சன் செய்தியில் அவருக்கொரு அஞ்சலிக்குறிப்பைச் செய்தியை வாசித்தார் வாசிப்பாளப் பெண். அந்தக் குரல் முடிந்தபோது நண்பர் கே.ஏ. குணசேகரனின் உச்சமான குரலில் மனுசங்கடா என்ற பாடலும் ஒலித்தது. சன் செய்திகளில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட கச்சிதமான செய்தி அது எனச் சொல்வேன். இதில் ஒலித்தது போல ஒலிப்பதற்கான கவிதைகளை மட்டும் எழுதியவரல்ல இன்குலாப். அவரது நிதானமான கவிதைகள் எழுப்பும் வினாக்களையும் விமரிசனத்தொனியையும் முன்வைக்கும் இந்தக் கவிதையை இப்போது வாசித்தேன். நீங்களும் வாசித்து நம்காலக்கவியை நினைத்துக்கொள்ளலாம். .
==================================================
என்ன கெட்டது -நான்
இப்படியே இருப்பதால்
பேச எனக்கு வார்த்தைகள் உண்டு
கேட்கவும் செய்கிறேன்.
பார்.
என் உதடுகளில் நெளிவதைப்
புன்னகை இல்லை என்று
உன்னால்
சத்தியம் செய்ய முடியுமா.?
நான் பார்த்து ரசிக்கத் திரைப்படம் உண்டு.
கேட்டுக் களிக்கப் பாடல்கள் உண்டு
பக்கத்தில் படுக்க ஒரு பெண்துணை உண்டு.
இரவில் ஒருபோதும்
தூங்காமல் இல்லை.
தூக்கம் வண்ணக் கனவுகளால் தளும்பும்.
காலை எனது
கனவைக் கலைக்கும்.
நான் அணிந்து கொண்டு புறப்பட
பெட்டி போடப்பட்ட
சட்டை மட்டுமல்ல.
ஒரு வாழ்க்கையும்
வீட்டுக் கொடியில் தொங்குகிறது.
என் சக்திக்கு ஏற்ப
நான்
உன் விரல்களைக் கடிக்கும் போதே
என்னிலும் பெரிய வாய் ஒன்று
என்பிடரியைக் கவ்வுவதை
நீ
பார்க்கக் கூடும்.
இருந்தாலும்
நான் கொறித்துத் தீர்ப்பதற்கும்
சிலர் குதறித் தீர்ப்பதற்கும்
வாழ்க்கை
இன்னும்
மிச்சப்பட்டுத் துடிப்பதால்
என்ன கெட்டது
இதை
மாற்றித்தொலைக்க..?
====== மிச்சப்பட்டுத் துடிக்கும் வாழ்க்கை
No photo description available.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்