ஆண்மை அடங்கட்டும்



தினசரிக் காட்சி என்று சொல்ல முடியாது. எனது பணி இடத்துக்குச் செல்லும் வாகனத்தைத் தவற விடாமல் பிடித்து விடும் நோக்கத்தோடு சரியான நேரத்துக்கு வரும் ஒவ்வொரு நாளும் காணும் காட்சி என்று சொல்லலாம்.

நான் பயணம் செய்யும் வாகனத்தைப் பிடிக்கக் குறைந்தது 5 நிமிடம் முன்னதாகவே வந்து விடும் வழக்கம் எனக்கு. ஆனால் அவர் அப்படி இல்லை. நான் வாகனத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் என் முன்னால் தான் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவார். அதன் நிறுத்தியைச் சரி செய்து தூக்கி நிறுத்திச் சாவியைத் திருகி அதன் எஞ்சினைக் கூட நிறுத்த மாட்டார். வண்டி உறுமிக் கொண்டே இருக்கும். அவருக்குப் பின்னால் அமர்ந்து வரும் பெண்ணிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு இறங்கிக் கொள்வார். அந்தப் பெண் வண்டியைக் கிளப்பி நகர்வதையோ வேகம் எடுத்து முன்னேறி திருப்பத்தில் மறைவதையோ பொருட்படுத்திப் பார்க்கவே மாட்டார். அதற்கெல்லாம் அவருக்கு நேரமில்லை என்பது என் கணக்கு.

அநேகமாக இறங்கிய அடுத்த நிமிடம் அவர் ஏற வேண்டிய பேருந்து வந்து நிற்கும். உடனே ஏறி விடுவார். அல்லது அவர் வருகிறார் என்பதைத் தூரத்திலேயே பார்த்துவிட்டு ஓட்டுநர் காத்திருப்பார் போலும். அவர் ஏறியவுடன் பேருந்து கிளம்பி விடும். ஏறுபவர் ஓரத்து இருக்கை தேடி அமர்ந்து வெளியில் பார்ப்பார். தன்னிடம் ஒப்படைத்த வாகனத்தைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண் அதுவரை காத்திருக்கவும் மாட்டாள். தன் வசம் வந்த வாகனத்தை நிதானமாக முன் நகர்த்திப் பின் வேகம் பிடித்து முன்னேறி விடுவாள். அலாதியான லாவகத்துடன் முன் நகர்த்திச் செல்லும் அந்தப் பெண் சாலையின் திருப்பத்தில் திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன். இருசக்கர வாகனத்தைச் செலுத்தும் அவளது லாவகமும் கவனமும் என்னிடம் இல்லை என்பதால் கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக் கொண்டு நிற்பேன்.

வீட்டிலிருந்து கிளம்பும் வாகனத்தில் இந்தப் பேருந்து நிறுத்தம் வரை அவள் பின் இருக்கையில் அமர்ந்திருக்க, வாகனத்தை ஓட்டும் இடத்தில் அவர் அமர்ந்து ஓட்டி வருவார். தன்னை ஏற்றிச் செல்லும் பேருந்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற நினைப்புடன் வண்டியை ஓட்டி வரும் பதற்றம் அவர் வண்டியை நிறுத்தும்போது வெளிப்படும். சில நேரங்களில் பின்னிருக்கையில் இருக்கும் பெண் வாகனத்தின் கைப்பிடியைப் பற்றிக் கொள்வதற்குள் நடக்கத் தொடங்கிப் பின் நிதானமாகி ஒரு முறைப்புடன் ஒப்படைத்து விட்டுப் போவார்.

பல தடவை பார்த்த இந்தக் காட்சி தான் இது. ஆனால் இன்று தான் இந்தக் கேள்வியை உருவாக்கியது. இருசக்கர வாகனத்தை இவ்வளவு லாவகமாக ஓட்டும் அந்தப் பெண்ணிடம் வாகனத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் தான் பின்னிருக்கையில் அமர்ந்து வரலாமே என்று எப்போதாவது யோசித்திருப்பாரா? என்ற கேள்வி தான் அது. நீயே வீட்டிலிருந்து ஓட்டி வா; நான் உன் பின்னால் உட்கார்ந்து வருகிறேன் என்று சொல்லி வண்டியை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்தால் அவருக்கு ஏற்படும் பதற்றமும் படபடப்பும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்தப் பெண் ஓட்டி வந்தாள் இவரை இன்னும் சற்று முன்னதாகவே அந்த நிறுத்தத்தில் சேர்த்து விடும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. நிதானமும் வேகமும் அவளது லாவகத்தில் வெளிப்படுவதை ஒவ்வொரு நாளும் பார்த்ததிலிருந்து சொல்கிறேன்.

தன் வீட்டிலிருந்து கிளம்பும்போது தானே வண்டியைக் கிளப்ப வேண்டும்; தன் பின்னால் தான் தன் மனைவி உட்கார்ந்து வர வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது எது? உண்டாக்கப் பெற்ற அந்த எண்ணத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தொடரச் செய்வது எது? ஆணின் அடையாளம் முன்னால் இருப்பது என்ற நிலைபாடாகத் தான் இருக்கும். நடந்து சென்றால் கூட ஆண் முன்னால் நடக்க, பெண்கள் அவர்களைத் தொடர்ந்து வர வேண்டும் என்று வலியுறுத்தும் நமது மரபான பழக்கம். கடையம் வீதியில் செல்லம்மாளை முன்னே நடக்கச் சொல்லித் தான் பின்னே நடப்பதும், சில நேரங்களில் அவள் தோள்மீது கைபோட்டு நடந்து செல்வதுமாக மாற்றிக் காட்டிய பாரதி நினைவுக்கு வருகிறான்

மரபான பழக்க வழக் கங்கள் ஆண்களை முதன்மைப் படுத்து வதாகத் தோன்றலாம். முதன்மைப் படுத்தப் படும்போது ஆண்களின் சுமை கூடுகிறது என்பது ஏன் இந்த ஆண்களுக்குப் புரிவதில்லை. எல்லாச் சுமைகளையும் தன் தோளில் சுமக்கும்போது அவர்களின் உடல் நலம் கெட்டுப் போகும் என்பது கூடவா தெரியாது. நாளை பேருந்து நிறுத்தத்தில் அந்த நபர் என் முன்னே இறங்கும்போது தோளில் கைபோட்டு நிறுத்தி இந்த யோசனையைச் சொல்லிப் பார்க்க வேண்டும். ”வீட்டிலிருந்தே உங்கள் மனைவியை வாகன ஓட்டியாக முன்னிடத்தில் உட்கார வைத்துப் பின்னிருக்கையில் அமர்ந்து வருவதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்” என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற அச்சமும் இருக்கிறது.

அவருக்கு மட்டுமல்ல. அந்தப் பெண்ணுக்கும் சொல்வதற்கு ஒரு செய்தி என்னிடம் இருக்கிறது. அவரிடமிருந்து வாகனத்தைப் பெற்றுக் கொண்ட உடனே கிளம்பாமல் நின்று ஒரு புன்முறுவலோடு கைகாட்டி அனுப்பினால் அவர் முகம் மலர்ச்சி அடையக்கூடும். அந்த எதிர்பார்ப்போடு தான் பேருந்தின் ஓரத்து இருக்கையில் அமர்ந்து சாலையைப் பார்ப்பார். அந்தக் கையசைப்பும் புன்னகையும் அவரது தினசரிப் பணிகளை அயர்வில்லாமல் நடத்துவதற்கு உதவக் கூடும்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதோடு புன்னகைகளையும் பரிமாறிக் கொள்ள முடியும் என்றால் களைப்பும் அயர்வும் குறையும் என்பது அனுபவசாலிகளின் நம்பிக்கை. கணவனுக்கு மனைவியின் புன்னகை அல்லது மனைவிக்குக் கணவனின் புன்னகை என்றில்லை. ஒரு பெண்ணுக்கு அவளைத் தெரிந்த ஒரு ஆடவனின் புன்னகையும் விசாரிப்புகளும் தருகின்ற ஆறுதலுக்குச் சற்றும் குறைந்ததல்ல தெரிந்த பெண்களின் புன்னகையும் விசாரிப்புகளும்.

அவர்களுக்கு இந்தச் செய்தியை நேர்க்கூற்றாகச் சொல்ல முடியாமல் போகலாம். அதனால் என்ன? அவர்கள் மட்டுமா இப்படி இருக்கிறார்கள். நம்மில் பலரும் அப்படித் தானே இருக்கிறோம். அதனால் தான் அந்தச் செய்திகளைப் பொதுவில் வைக்கிறேன். ஆண்மை அடங்கட்டும்.

கருத்துகள்

Gopinath Jambulingam இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்து. ஆனால், உங்கள் பார்வையில் இலாவகமாக வண்டியை செலுத்துகின்ற அந்தப் பெண், கணவரை பின்னால் உட்காரவைத்து ஓட்டிய சந்தர்ப்பத்தில், ஏதேனும் விபத்தை ஏற்படுத்தி இருக்கவும், அவரின் செயலுக்கு அந்தப் பயம் காரணமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆதிக்க மனநிலையை விசாரித்தலும் அகத்தைப் பேசுதலும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நவீனத்துவமும் பாரதியும்