இந்தியவியல் துறைகளின் தேவை.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் புலத்தில் தமிழ்ப் வந்திருக்கிறேன். இந்தியவியல் புலத்தில் போலந்து மாணவ மாணவி களுக்கு காலப்பழமையும் பாரம்பரிய வளமும் கொண்ட இந்தியாவின் செவ்வியல் மொழிகளான  சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றோடு இந்தி, பஞ்சாபி, வங்காளம் ஆகிய சார்பு மொழிகளையும் கற்பிக்கப் போலந்து பேராசிரியர்களும், இந்தியாவிலிருந்து வருகை தந்து குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இம்மொழிகளின் நிகழ்கால இருப்பைக் கற்றுத்தரும் வருகை தரு பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.

நான் தமிழுக்கான வருகைதரு பேராசிரியராக வந்திருக்கிறேன். தமிழின் அடிப்படை அமைப்பு, பொதுத்தமிழ், எழுத்துக்கள் வரிவடிவம், எழுத்துக்களைக் கூட்டி வாசித்தல் போன்றனவற்றைக் கற்றுக் கொள்ளும் மாணாக்கர்களுக்குக் கூடுதலாகப் பேச்சுத்தமிழ்ப் பயிற்சி வழங்க வேண்டிய வேலை என்னுடையதாக இருக்கும் என்பதை இப்போது உணர்ந்திருக்கிறேன். அதுதவிர தமிழ் இலக்கிய அறிமுகம், முக்கியப் போக்குகள் பற்றியும் சொல்லித் தர வேண்டியதிருக்கலாம். காலப்போக்கில் நான் செய்ய வேண்டிய வேலைகளை நானே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் எனக்கிருப்பதாக முதல் நாள் உணர்த்தப் பட்டேன்.

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் இருப்பது போல  இந்தியவியல் துறைகள் உலகநாடுகள் பலவற்றில் இயங்குகின்றன. இந்தியாவைத் தாண்டி தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, மொரீசியஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாட்டுத் தமிழர்களுக்காகத் தமிழ்த் துறைகளை நடத்துகின்றன. அவையெல்லாம் இந்தியவியல் துறைகள் அல்ல. நம்மூரில் இருப்பது போலத் தமிழ்த்துறைகள். ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள்,  பிரான்ஸ், ஜெர்மன், ருஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவீடன் போன்ற நாடுகளில் இருக்கும் ஒருசில பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் துறைகள் இருக்கின்றன. இந்தியவியல் துறைகளின் ஒரு பகுதியாகத் தமிழ் மொழியும், இலக்கியங்களும் கற்றுத் தரப்படுகின்றன. அங்கெல்லாம் முழு நேரத்தமிழ்ப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள தன்மை உள்ளது. தற்காலிகப் பேராசிரியர்களாக அந்தந்த நாடுகளுக்குச் செல்லும் நபர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கும் இருக்கிறது. ஆனால் வார்சாவிற்கு மட்டும் இந்திய அரசாங்கத்தின் பண்பாட்டு அமைச்சகம் விருந்துநிலைப் பேராசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. அத்தகைய விருந்துநிலைப் பேராசிரியராகவே நான் வார்சா வந்திருக்கிறேன். இப்போது எனது பயணம் பற்றியோ, நான் தேர்வு செய்யப்பட்ட பெருமைகளையோ பேசப் போவதில்லை. இப்போது பேசநினைப்பது இந்தியவியல் துறைகள் ஏன் அயல் தேசங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்ற கேள்வியோடு தமிழ் வளர்ச்சி பற்றிச் சில ஐயங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

அயல்தேசங்களில் இருக்கும் இந்தியவியல் துறைகள் பெரும்பாலும் தென்னாசியவில் படிப்பு (SOUTH ASIAN STUDIES)அல்லது தென்கிழக்காசியவியல் படிப்பு (SOUTH EAST ASIAN STUDIES)என்ற பிரிவின் கீழ் செயல்படுகின்றன. அங்குக் கற்பிக்கப்படும் படிப்பு வெறும் மொழிக்கல்வி மட்டும் அல்ல என்பதை முதலில் சொல்ல வேண்டும். இந்தியவியல் துறையில் சேரும் ஒரு மாணவிக்கு அல்லது மாணவனுக்கு இந்தியப் பொதுமனத்தைப் புரிந்து கொள்ள உதவும் அரசியல், சமுதாய, பண்பாட்டு வரலாறுகள் அடங்கிய இந்திய வரலாற்றைக் கற்றுத் தருகிறார்கள். அதே போல் இந்திய மதங்களைப் பற்றியும் இந்திய தத்துவ மரபு பற்றியும் தாள்கள் உள்ளன. இவற்றுக்கப்பால் தான் மொழிக்கல்வியும் இலக்கியக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

இந்தியவியல் புலத்திற்குள் தமிழ்ப் படிப்பைத் தனது விருப்பமாகத் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்குக் கூடுதலாகத் தமிழின் மொழி,  இலக்கிய, அரசியல் வரலாறுகளோடு பேச்சுத்தமிழும் அதன் பன்முகத்தன்மையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அதனூடாக நிகழ்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்ள வேண்டும் என மிகுந்த ஆர்வத்தைக் காட்டும் மாணாக்கர்கள் முழுமையாகக் கற்றுத் தேர்கிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அப்படியான நோக்கம் அந்தப் பாடத்திட்டங்களிலும், கற்பிக்கும் முறையிலும் இருக்கின்றன.

எனது 30 வருட ஆசிரியப் பணியில் ஏழரை ஆண்டுகள் புதுச்சேரியில் நாடகத்துறை ஆசிரியனாக இருந்தேன். அங்கு உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்திலும் இப்படியான ஒருங்கிணைப்புத் தன்மை இருந்ததைக் கவனித்திருக்கிறேன்.. அதன் காரணமாகப் புதுவை நாடகப்பள்ளி ஆசிரியர்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைப்புடன் கற்றுத் தராத போதும் படைப்பாற்றல் மிக்க நாடகக்கலைஞர்கள் உருவானார்கள். குமாரவேல், வேலுசரவணன், அனிஸ், மனு ஜோஸ், பாலசரவணன், முருகபூபதி, கோபி போன்ற கலைஞர்களும், அனந்த கிருஷ்ணன், ராஜாரவி வர்மா, சிபு எஸ்.கொட்டாரம் போன்ற நாடகத்துறை ஆசிரியர்களும் உருவாகக் காரணம் நாடகப்பள்ளியின் பாடத்திட்டமே என இப்போது நினைக்கிறேன். ஆனால் பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ் கற்பிக்கும் நான் அப்படியான பெயர்கள் எதையும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இத்தனைக்கும் தமிழ்க் கல்விக்கான இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களை உருவாக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறேன். அவற்றில் எல்லாம் ஒருங்கிணைப்புத் தன்மையோடு கூடிய பாடங்களை உருவாக்கும் முறையைப் பற்றிய விவாதத்திற்கே வழி ஏற்பட்டதில்லை என்ற உண்மையை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.
என்னிடம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்த மாணாக்கர்களுக்குக் கூட ஒருங்கிணைப்பும் காத்திறமான நோக்கங்களும் கொண்ட- தமிழின் இலக்கிய,பண்பாட்டுப் போக்குகளைக் குறித்த சொல்லாடல்களையும் கருத்தோட்டங்களையும் விவாதிக்கும் வகையிலான பாடத்திட்டங்களை உருவாக்கவோ, கற்பிக்கும்படி தூண்டவோ முடியவில்லை என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தின் உயர்ந்த நிலையான துறைத்தலைவர், மொழிப்புல முதன்மையர் போன்ற  உச்சபட்சப் பதவிகளில் இருந்தவன் நான். எனக்கே இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் அதன் பின்னணிக் காரணங்கள் பலவிதமானவை. காரணங்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களுக்குள்ளேயும் அதன் பாடத்திட்டங்களிலும், கற்பிக்கும் முறையிலும் மட்டுமே இருப்பதாகச் சொல்ல முடியாது. எனது இயலாமையைப் போலந்தில் உட்கார்ந்து கொண்டு எழுதுவது சரியல்ல தான். ஆனால் முழுமையாகத் தோல்வி அடைந்ததை இங்கு வந்து தான் உணர முடிகிறது.
கல்விப் புலத்தில் மொழி இலக்கியப் பாடங்கள்  வெறுமனே தகவல்கள் நிரம்பிய பிரதிகளாகக் கருதும் போக்கை முதலில் மாற்ற வேண்டும். அப்படியொரு எண்ணம் – கருத்து உருவாகக் கல்விப் புலம் மட்டுமே காரணங்கள் அல்ல. அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் அதனதன் அளவில் பங்குண்டு. திராவிட இயக்கங்கள் பண்பாட்டு நடவடிக்கைகளை அரசியல் நடவடிக்கைகளாக மாற்றும் போக்கில் தொடங்கி வைத்த இந்தப் பார்வையைப் பின்னர் பொதுவுடமை இயக்கக் கலை இலக்கிய அமைப்புகளும் விலகாமல் தொடர்கின்றன. அவற்றின் நீட்சியாகத் தலித் இயக்கங்களும் விலகப் போவதில்லை. ஆனால் பெண்ணிய இயக்கங்கள் அப்படிச் செய்யாது என்பதுதான் ஒரே ஆறுதல். ஏனென்றால் பெண்ணிய இயக்கங்களுக்கு உடனடியாக அரசியல் அதிகாரம் பற்றிய நினைப்புகள் இன்னும் உருவாகவில்லை..
இலக்கியப் புரிதல் பற்றிய இந்த மாற்றத்தை இப்போது பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு உருவாக்க நினைப்பது பரிதாபமான முயற்சி என்பதை நானறிவேன். ஓர் இலக்கியப் பிரதிக்குள் இருக்கும் தகவல்களைக் கண்டு சொல்லும் வேலையைக் கூட அவர்களாகச் செய்யாமல், முன்னோர் கண்டு சொல்லியபடி சொல்லும் கிளிப்பிள்ளைகளாக வளர்ந்துள்ளவர்கள் அவர்கள். பல கல்லூரிகளில் தங்கள் ஆசிரியர் கொடுத்த குறிப்புகளையே இன்னும் பொக்கிஷமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடத்தில் மொழி மற்றும் இலக்கியத்தின் வடிவத்திற்குள் கட்டமைக்கப்பட்ட படிமங்களும் அதன் வழிப் பயணம் செய்யும் மனித மனங்களும்  மிதந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லிப் புரியவைப்பது எளிய காரியமன்று. புதிய நிறுவனங்களையும் புதிய மனிதர்களையும் தான் இதற்கு நாட வேண்டும்.
இந்த நிலையில் தான் இந்தியாவில் – தமிழகத்தில் – இந்தியவியல் துறைகளைத் தொடங்கும் யோசனையை முன் வைக்க விரும்புகிறேன்.. நானறிய மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரா. முத்துச் சண்முகன் தனது அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு இத்தகைய முயற்சியைச் செய்தார். அதன் தமிழ்த்துறையை தமிழ் மற்றும் இந்திய மொழிகள் பள்ளி (SCHOOL OF INDIAN & OTHER LANGUAGES) என்பதாக மாற்றினார்.  அதுவும் கூட மொழி மற்றும் இலக்கியத்தை மையப்படுத்திய மாற்றம் தான். இந்தியவியல் படிப்பு என்பதன் உள்ளார்ந்த கட்டமைப்பு அதில் கிடையாது. ஆனால் அந்த மாற்றமே அவருக்குப் பின்னால் சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனத் தனித்தனி மொழிகள் துறைகளாகவும், மொழியியல் என இன்னொரு துறையுமாகப் பிரிந்து போனது.  இப்போது போதிய ஆசிரியர்கள் இல்லாமல் சிலவற்றை மூடப்போகிறார்கள் என்பது தான் நிலைமை.டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகளுக்கான துறையொன்று இருந்த போதிலும் ஒருங்கிணைப்புகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நிர்வாக ரீதியாக ஒரு தலைமையின் கீழ்  ஒவ்வொரு மொழிக்கான துறையும் தனித்தனியான வேலைத்திட்டங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நமக்கு நாமே பெருமை பாராட்டிக் கொள்வதால் தமிழ் வளர்ந்து விடாது. தமிழின் வளர்ச்சி என்பது அதன் இலக்கண, இலக்கியத்தைப் புத்தாக்கம் செய்வதோடு முடிந்து போவதில்லை. தமிழின் பாரம்பரியத்தையும் வளத்தையும், அடைந்துள்ள மாற்றங்களையும்  நவீனப்போக்கையும், இவற்றில் எல்லாம் செயல்பட்ட ஆளுமைகளையும் உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் கொண்டு செல்ல வேண்டும். இதனை நமது அரசுகள் முதலில் உணர வேண்டும்; ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை பேராசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இருக்கிறது. தமிழின் திறமான வளர்ச்சி சாத்தியமாக வேண்டுமென்றால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் இந்தியவியல் துறைகளைப் போன்ற அமைப்புடைய – நோக்கங்கள் கொண்ட- புலங்களைத் தமிழ்நாட்டிலேயே தொடங்க வேண்டும். அவற்றை எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தொடங்குவதை விடத் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் அல்லது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் போன்ற சிறப்பு நிறுவனங்களில் தொடங்கலாம். அவற்றில் சேர்வதற்குக் கடும் போட்டி நிலவும் வகையில் உதவித் தொகைகளை அந்நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதற்கான நிதியாதாரங்களை மைய மாநில அரசுகள் உருவாக்கித் தர வேண்டும். தொடங்கப் போகும் இந்தியவியல் துறைகளில் பணியாற்றத் தேவையான ஆசிரியர்களை இப்போது உலகெங்கும் உள்ள இந்தியவியல் துறைகளிலிருந்து அதிகச் சம்பளம் கொடுத்துக் கடன் வாங்கியாக வேண்டும். நிரந்தரமாகவும் குறுகிய காலத்திற்கும் ஆசிரியர்களைக் கடன் பெற்றே அந்த மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மொழியைப் பத்துப் பேருக்குக் கற்றுக் கொடுக்க வளர்ந்து கொண்டிருக்கும் போலந்து செலவழிக்கும் தொகையைப் போல ஒரு தொகையைப் போலிஷ் கற்றுக் கொடுக்க நாம் ஏன் செலவழிக்கக் கூடாது.

போலந்து நாட்டு வார்சாப் பல்கலைக்கழகத்து இந்தியவியல் துறை என்பது ஒரு மாதிரி மட்டும் தான். நமக்கு ஏராளமான அயல்படிப்புத்துறைகள் தேவைப்படுகின்றன. தமிழ் இந்திய மொழிகளுக்குள் மட்டும் போதாது என நினைக்கும் போது இயல்பாகவே ஆசியவியல் துறைகளையும், ஐரோப்பிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க, மத்தியகிழக்கு நாடுகளுக்கான படிப்புகளையும் தொடங்க வேண்டும் என்ற தேவை தேவை உருவாகும். ஏனென்றால் உலகமயமாகி விட்ட இன்றைய சூழலில் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும். அப்போது தான் தமிழர்கள் வெறும் சேவைப் பணியாளர்களாக இல்லாமல், மூலதன உற்பத்தியைக் கையாள்பவர்களாகச் சீனத்துக்கும், ஜப்பானுக்கும் பிரேசிலுக்கும், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் போக முடியும். இவை எல்லாவற்றையும் ஆங்கிலம் வழியாகவே நான் கற்றுக் கொள்வேன் என்ற பிடிவாதம் காட்டினால் ஆங்கிலம் மட்டுமே வளர்ச்சி அடைந்த மொழியாக இருக்கும். தமிழின் தனித்துவத்தை –தமிழர்களின் ஆளுமையை உலகிற்குச் சொல்ல முதலில் தேவை அந்தந்த நாடுகளையும் பண்பாட்டையும் நமது மொழியில் சொல்ல நூல்கள் வேண்டும். அதே நேரத்தில் நமது பண்பாட்டையும் இலக்கியத்தையும் பிறமொழிகளில் சொல்லவும் நூல்கள் வேண்டும். இவை இன்று தமிழ் கற்பிக்கப்படும் முறையில் சாத்தியமாகாது ஒன்று என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்வேன்.

”வடமொழி வேண்டாம்; தமிழே போதும்” எனவும் ”இந்தி ஒழிக! தமிழ் வாழ்க” எனவும் ஓங்கி ஒலித்த குரல்களைத் தமிழ்நாட்டில் கேட்ட தலைமுறை இப்போது அறுபது வயதைத் தாண்டி இருக்கலாம். அவர்களில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் நபர்களை விட்டுவிட்டு நிதானமாகப் பேசுபவர்களிடம் தனியாகப் பேசினால் இந்த  உண்மைகளை ஒத்துக் கொள்ளவே செய்வார்கள். மொழி அரசியலில் நேர்மறை விளைவுகளை மட்டுமே எதிர்பார்த்த அவர்களுக்கு அந்தக் குரல்களினால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் இப்போதும் புரிந்திருக்கவில்லையென்றால் அவர்களிடம் பேசுவதை விட்டு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

தாய்மொழிப் பற்று என்பதாக முன்மொழியப் பட்ட அந்தக் குரல்கள் தமிழ்மொழியை மையப்படுத்திய பண்பாட்டு அரசியலாகவும், சாதி வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம் பேணும் சமூகநீதி அரசியலாகவும் மாறும் என நினைத்த திராவிட இயக்க அரசியல், முழுக்க முழுக்கப் பிராமண எதிர்ப்பு அரசியலாகவும், அவர்களைப் புலம்பெயரச் செய்யும் தீவிரத்துடன் செயல் பட்டபின் தனித்தனிச் சாதிகளுக்கான அரசியலாகவும், ஒவ்வொரு சாதித்  தலைவர்களின் குடும்ப அரசியலுக்கான விதைகளாகவும் மாறிக் கொண்டிருக்கும் கதையை நாம் சொல்லாமல் விட்டு விட்டால், அடுத்த தலைமுறைக்கும் துரோகம் செய்யப் போகிறோம் என்று சொல்வதைத்  தவிர வேறு ஒன்றும் இல்லை. தொடர்ந்து தமிழ் அறிவுஜீவிகள் அறிவு நேர்மை அற்றவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றால் யார்தான் என்ன செய்ய முடியும்? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்