உள்ளூர் விளையாட்டுகள் அழிந்து கிரிக்கெட் உருவானது.



இந்தியாவில் நடக்கும் மாற்றங்களின் பின்னணியில் ’சமஸ்கிருதமயமாதல்’ என்னும் மனநிலை செயல்படுவதாக எம். என். ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவார். இந்திய சாதியக் கட்டமைப்பு அடுக்கின் உச்சத்தில் இருப்பதாக நம்பப்பட்ட பிராமணர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளைச் சொந்தமாக்குவதன் மூலம் தங்களையும் பிராமணர்களாகக் கருதிக் கொள்ளும் மனநிலை வெளிப்பாடு என்பது அவரது கருத்து.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது இந்த அடுக்குநிலை ஆட்டம் கண்டது. பிரிட்டானிய ஆட்சியாளர்களும் ஆங்கிலேய அதிகாரிகளும் தான் சமூகத்தின் உச்சம்; அவர்களின் அன்றாட நடவடிக்கைகளே நாகரிகம்; அதனைப் பின்பற்றுவதே வாழ்க்கை முறை என இந்திய பிராமணர்களே நம்பத்தொடங்கினார்கள். அந்த நம்பிக்கையே அவர்களை ஆங்கில மொழியை வேகமாகக் கற்கின்றவர்களாகவும், ஆங்கிலேயர்களின் கலாரசனையை நாங்களும் பின்பற்றுகிறோம் எனக் காட்டுபவர்களாகவும் ஆக்கியது. இந்தியர்கள் சமஸ்கிருதமயமாதலைக் கைவிட்டு மேற்கத்திய மயத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

அதிகாரத்தை நெருங்கும் வழிமுறையை அதன் பண்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வழி கண்டடைய முடியும் என உணர்ந்த கூட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டைத் தங்களுக்குப் பிடித்த விளையாட்டாகக் காட்டிக் கொண்டது. இந்தியாவின் உயர் வகுப்பாராகவும், நடுத்தர வர்க்கமாகவும் நகரவாசிகளாகவும் மாறிய பிராமணர்கள் கிரிக்கெட்டை நாடிச் சென்ற கதை  இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் கதை. ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மொத்தக் கதையும் மாறிப் போய்விட்டது.
கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும் ஆடிய தெருக்களில் பிளாஸ்டிக் மட்டையை வைத்துக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெற்றி தோல்வியைத் தெரிந்து கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் வசதி கொண்ட  சடுகுடு விளையாட்டைக் கைவிட்ட கிராமத்து வாலிபர்கள், உள்ளூர் முதலாளிகளின் தயவில் உருவாக்கப்பட்ட டிராபிகளுக்காக ஒருநாள் ஆட்டங்களை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி படம் போட்ட உள்பனியன்களுக்குப் பதிலாக மட்டை சுழற்றும் டெண்டுல்கரும், கிளவுஸ் மாட்டிய தோனியின் சிரிப்பும், ஜாகீர்கானின் பந்து சுழற்சியும் காட்சிகளாகி விட்டன.
எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்கிறார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்க்கிறார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிகிறார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொள்கிறார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். தேசப்பற்றின் ஊற்றாகவும்,  வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகி விட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. 

ஓர் அணி விளையாட்டில் இருக்க வேண்டிய வேகமும் சுறுசுறுப்பும் வேகமும் இல்லாத கிரிக்கெட், தொடக்கத்தில் வானொலி வர்ணனை மூலமும், பின்னர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கான விளையாட் டாகவும் மாறியதன் பின்னணியில் வெறும் மேற்கத்திய மயமாதல் மட்டுமே இருப்பதாக ஒருவர் மதிப்பிட்டால் அது பெருந்தவறாக ஆகி விடும். ஏனென்றால் கிரிக்கெட்டைச் சுற்றிப் பல விளையாட்டுக்கள் நடக்கின்றன. அவை சிறு முதலாளிகளின் வியாபார வளர்ச்சி தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகளின் அசுர வளர்ச்சி வரை உதவும் காமதேனுவாக மாறி விட்டது. நேர்க்காட்சிக்காகச் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கூடும் 60 லட்சம் பேர்களோடு தொலைக் காட்சிகளின் வழியாக பல நூறு லட்சம் கண்களின் களிப்புக்கான காட்சிப் பொருளாகத் தன்னை ஊருமாற்றம் செய்து கொள்ள அனுமதித்தது தான் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றிக் கதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்