பசுவய்யாவின் கவிதைகளுக்குள் உள்ளிருப்போரும் கேட்போரும்

மேற்கத்திய கவிதைகளில் மேற்கத்திய விமர்சகர்கள் கண்டு பிடித்த சிறப்புகளைத்தமிழ்க் கவிதையின் மீது யந்திரரீதியாகப் பிணைப்பது தமிழ்த் திறனாய்வு ஆகிவிடாது’ “நம் இலக்கியச் செல்வங்கள் நமக்குத் தரும் அனுபவங்களின் சாரங்களிலிருந்து நம் இலக்கியக் கோட்பாடுகள் உருவாகி வரவேண்டும்” (ப.22,25/ ந.பி. கலை: மரபும் மனிதநேயமும்.) இந்தக் குறிப்புகள் என்னுள் நிலைகொள்வதற்கு முன்பாகவே வேறு ஒரு கேள்வி அலையடித்துக்கொண்டே இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தக் கேள்வியை நான் எழுதும் இலக்கிய இதழ்கள் கட்டுரை எதிலும் எழுப்பவில்லை. கல்வியியல் புலம் சார்ந்த பேராசிரியர்கள் வாசிக்கக் கூடிய நூலொன்றிற்காக எழுதிய கட்டுரையில் எழுப்பியிருக்கிறேன்.