உலகமயமாதலுக்கு எதிராக ஒரு நாடகம் : முருகபூபதியின் மிருகவிதூஷகம்


பாண்டிச்சேரி நிகழ்கலைப்பள்ளியில் கற்றுத் தேர்ந்த பின் தங்களுக்கான தனித்தன்மைகளை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து நாடகக்காரர்களாகவே வலம் வரும் ஒரு சிலரில் முக்கியமானவர் முருகபூபதி என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நிகழ்கலைப் பள்ளியின் தேர்வுக்கான தயாரிப்புகளின் போதே உரையாடலை அதிகம் சார்ந்திருக்காமல் தனியுரையை அதிகம் சார்ந்த- மனவெளிக்குள் பயணம் செய்யும் நாடகப் பிரதிகளைத் தேர்வு செய்து மேடையேற்றியவர் அவர்.

நடிகர்களின் உடல்மொழியை அதிகபட்ச தொடர்புச் சாதனமாக ஆக்க வேண்டும் என்பதோடு, குறியீடுகளின் வழியாகவும், மேடைப்படிமங்களின் வழியாகவும் பார்வையாளர்களுக்கு உணர்த்த விரும்பும் கருத்தை, நாடகத்தின் மையச் செய்தியாக ஆக்கி வருவது அவரது தனித்தன்மை. இந்தக் கூறுகளை அவரது முந்திய நாடகங்களான வனத்தாதி, கூந்தல் நகரம், செம்மூதாய் போன்றவற்றிலும் பார்க்கலாம். இப்போதைய மேடையேற்றமான மிருக விதூஷகம் அவற்றை இன்னும் அழுத்தமான நம்பிக்கையோடு செய்து பார்த்துப் பார்வையாளர்கள் முன் வைத்துள்ளது.

காலனியத்துக்குப் பிந்திய இந்தியா, பின்காலனியத்துக்குள் நுழைந்து தொழில் மயமாதலையும் நகர்மயமாதலையும் தாண்டி, பன்னாட்டுக் குழுமங்களின் பிடிக்குள் தனது பொருளாதாரக் கட்டமைப்பையும், மனிதர்களின் தனிவாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்துச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதன் வெளிப்பாடுகள் நகரவாசிகளுக்கு நேர்மறை விளைவுகளையும், கிராமவாசிகளுக்கு எதிர்மறை விளைவு களையும் தந்துள்ளன என்பதை அடியோட்டமாகத் தொட்டுக் காட்டும் மிருகவிதூஷகம், அழிக்கப்படும் கிராமத்தின் – பழைய பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் விமரிசனங்களற்றுப் பாராட்டி அனைத்துக் கொள்ளும் ஆசையை முன் வைக்கிறது.

குற்றப் பரம்பரையினர் எனவும், மாறி வரும் நாகரிகத்திற்கு உகந்தவர்கள் அல்ல எனவும் முத்திரை குத்தப்பட்ட விளிம்புநிலை மனிதர்களான கழைக்கூத்தாடிகள், கோமாளிகள், குருவிக்காரர்கள், குறி சொல்லிகள், திருடர்கள், முதலான வாழ்க்கையை வாழும் நாடோடிகளின் வாழ்க்கைமுறை முற்ற முழுதாகக் காணாமல் போனதையும், அவர்களின் வாழ்வாதார வெளிகளான கிராமங்கள் சிதைக்கப்பட்டு விட்டதையும் சோகம் கப்பிய தொனியில் குறியீடுகளாகக் காட்டும் நாடகம், நகரவாசிகளின் –நடுத்தர வர்க்கத்தின்- தற்போதைய சுயநல வாழ்க்கை முறையை எள்ளல் தொனியுடன் பேசுகிறது.

நிகழ்த்தப் பட்ட நாடகத்தில் ஒருமணி நேரத்தைக் காணாமல் போய்க் கொண்டிருக்கும் கிராமிய அடையாளங்களுக்கும்- சோகத்தின் வலிக்கும், பிந்திய நாற்பது நிமிடங்களை நகரவாசிகளை விமரிசிக்கும் எள்ளல் தொனிக்கும் ஒதுக்கிக் கொண்ட நாடகம், பார்வையாளர்களோடு உறவு கொள்ள எழுத்து மொழியின் பயன்பாட்டை விடவும் நடிகர்களின் உடல் மொழியையும், மேடைப்பொருட்கள் தரும் குறியீட்டு மொழிகளையுமே அதிகம் சார்ந்திருந்தது. கிழிக்கப்பட்ட துணிகளால் உருவாக்கப்பட்ட பழுப்புநிறப் படுதாக்கள், கால்நடைகள் மற்றும் மனித முகமூடிகள், கிராமப்புறத் தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள்,மூங்கில் நார்களால் உருவாக்கப்பட்ட கோழிக்கூண்டுகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்திச் சொல்ல வந்த செய்திகளை ஊகித்துக் கொள்ளத் தூண்டின.

ஒரு மணிநேரம் நாற்பது நிமிடங்கள் நிகழ்த்தப்பட்ட அந்த நிகழ்வை, சென்னை எலியட் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் நடனக் கலைஞர் சந்திரலேகாவின் பயிற்சி அரங்கத்தளத்தில் பார்த்தேன். நான் பார்த்த ஜூன் 15க்கு முன்னால் திருவண்ணாமலை(13), மதுரை (12) கோவில்பட்டி (11) எனத் தொடர்ச்சியாக நிகழ்த்தி விட்டுச் சென்னையில் நிகழ்த்தினர். எப்போதும் இது போன்ற தீவிரமான நாடக முயற்சிக்குப் பார்வையாளர்களாக இருக்கும் சென்னைவாசிகளில் 300 பேர் அன்றும் கூடியிருந்தார்கள். சென்னையில் பார்க்க வந்த இந்த 300 பேர்களும்,முந்திய நிகழ்வுகளைப் பார்க்க வந்த அனைவருக்கும் இந்த நாடகம் உணர்த்த விரும்பிய செய்திகள் முற்ற முழுதாகப் போய்ச் சேர்ந்திட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறான நோக்கம் சார்ந்த எதிர்பார்ப்பல்ல. ஆனால் அது கலையின் புதிர்த் தன்மையையும் அழகியல் கூறுகளையும் அழிக்கும் ஏற்பாடு என்பதையும் மறந்து விடக் கூடாது. அதனால் அதிக பட்சம் தொடர்பியல் மொழியைக் கொண்டதாகவும் குறைந்த பட்சம் புதிர்த்தளங்களை இழையோடுவதாகவும் நாடக மேடையேற்றம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன் நான். இந்த எதிர்பார்ப்பை முருகபூபதியின் முந்திய படைப்புகள் நிறைவேற்றிய அளவை விடக் கூடுதலாக மிருகவிதூஷகம் நிறைவேற்றியது என்பது ஆறுதலான ஒன்று.

இன்னொரு கதாபாத்திரத்தின் மறுமொழியை எதிர்பார்த்துச் சொல்லப்படும் உரையாடலை முற்றிலும் தவிர்த்து விட்டுப் பார்வையாளனை அரூபமான கவிதைப் படிமங்களுக்குள் அழைத்துச் சொல்லும் தனிமொழியை முன்பகுதி நாடகம் முழுமையாகக் கொண்டிருந்தது. அதன் வழி உருவாக்கப்பட்ட காட்சிரூபங்களும் பின்னணி இசையும் மட்டுமே பார்வையாளர்களுக்கு ஓரளவு குறியீட்டுச் செய்திகளைக் கோடிட்டுக் காட்டின. ஆனால் கல்வியைக் கற்று அச்செழுத்துக்களை விழுங்கி, அலைபேசிகளுக்கு வாயையும் செவிகளையும் கொடுத்து விட்டு, ஊடகங்களுக்குக் கண்களைக் கொடுத்து, மனத்தைச் சேவைப் பணிக்குரியதாக ஆக்கிக் கொண்டுள்ள இன்றைய நடுத்தரவர்க்கத்தின் –நிகழ்கால வாழ்க்கையைப் பேசும் போது அதே தனிமொழி கவிதைத் தன்மையைத் தள்ளி வைத்திருந்தது. அப்போதெல்லாம் தனியொரு கதாபாத்திரம் – கண் முன்னால் இல்லாத இன்னொரு கதாபாத்திரத்தோடு உரையாடுகிறது என்பதாக அத்தனிமொழி ரூபம் கொண்டது. அதனால் பார்வையாளர்களிடம் இருந்த இறுக்கம் தளர்ந்து மெல்லிய சிரிப்பொலிகளோடும் கைதட்டலோடும் மேடை நிகழ்வோடு இணைந்து கொண்டார்கள். என்பதை இயக்குநர் முருகபூபதி கவனிக்க வேண்டிய ஒன்று எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உடல்மொழியை உருவாக்கிட அதிகச் சிரமங்களை மேற்கொண்ட நடிகர்களின் உடல் அதிகப்படியான புரிதலைப் பார்வையாளர்களுக்குத் தந்தது என்ற இன்பத்தைத் தரும் பொறுப்பு நாடக இயக்குநருக்கே உரியது. அதில் இன்னும் முருகபூபதி செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. நவீன நாடகக்காரர்கள் சிலர் நடிகனின் சுதந்திரம் பற்றி அதிகம் சொல்லிக் கொண்டாலும் அவர்களை வெறும் கருவிகளாக- மேடைப்பொருட்களாக மட்டுமே கையாளுகிறார்கள் என்ற குற்றச் சாட்டும் உண்டு. அத்தகைய நோக்கத்தோடு தன்னை நோக்கி நீளும் கரங்களின் குறி வைப்பிலிருந்து பூபதி விலகிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது தவறல்லவே. அத்தோடு கிராமப்புறக் குடிபானமான கள்ளைத் தரும் பனைமரம், பனையேறுதல், பனங்காடுகள் முதலானவற்றைப் பற்றிப் பேசும் பகுதிகளின் வலிமையும் தீவிரத்தன்மையும் சேர்ந்து நாடகத்தின் ஒட்டு மொத்த நோக்கமும் டாஸ்மாக் பானங்களுக்கெதிராகக் கள்ளை முன் மொழியும் அடியோட்டம் கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவ்வாறான எண்ணம் தான் இயக்குநரின் விருப்பம் என்றால் அதை கேள்வி கேட்கும் உரிமை யாருக்குமில்லை என்று விட்டு விடுவதைத் தவற வேறு வழியில்லை.

பேச்சுமொழியான உரையாடல் மட்டுமே நாடக நிகழ்வு என்று நம்பிச் செயல்படும் சபா நாடகக்காரர்களிடம், அரங்கியல் நிகழ்வுகளில் அதிகச் சிரமங்கள் கொண்டது நாடகக் கலை என்று சொன்னால் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சென்னையின் நடுத்தரவர்க்கப் பார்வையாளர்களும் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கவே செய்வார்கள். ஏனென்றால் கடந்த அரை நூற்றாண்டுகளாக அவர்கள் பார்த்து வரும் சென்னையின் சபா நாடகங்களைத் தயாரிக்க அதன் இயக்குநர்/தயாரிப்பாளர்கள் அப்படியொன்றும் மெனக்கெடவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். சபா நாடகங்கள் அவர்களுக்குத் தருவதெல்லாம் அரங்கியல் கலைகளின் ஒரு பிரிவான நாடகக் கலையின் உரையாடல்களை மட்டும் தான். நாடகக் கலையின் அடிப்படை மொழி, நடிகர்கள் பாத்திரங்களாக மாறி தங்களுக்குள் செய்யும் பரிவர்த்தனையின் வடிவமான உரையாடல் மொழிதான் என்றாலும் அது ஒன்று மட்டுமே நாடகம் ஆகாது என்பதை சபா நாடகக்காரர்கள் அறிய வேண்டும்.

உரையாடல் மொழியல்லாமல், நடிகர்களின் உடலும், உடலினை அலங்கரிக்கும் ஒப்பனைகள், ஆடைகள் ஆகியனவற்றோடு கையாளும் பொருட்கள், நிகழ்த்தப்படும் மேடைத்தளம் உருவாக்கப்படும் விதம் என அனைத்துமே நாடகமொழி சார்ந்தவையே என்பதை அவர்கள் உணர்வார்களா என்று தெரியவில்லை. உணர்ந்தாலும் அதன் காத்திரமான நிலைப்பாடுகளைப் பயிற்சி செய்வார்கள் என்பது சந்தேகமே. ஏனென்றால் அவ்வகை நாடகங்களின் பார்வையாளர்களும் அத்தகைய முயற்சிகள் வேண்டும் என எதிர்பார்க்காத நுனிப்புல் மேய்ச்சல்காரர்கள் என்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. நுனிப்புல் மேயும் அவர்களுக்குத் தேவை வெகுமக்கள் ஊடகங்கள் வழியாகத் தங்கள் காதுகளுக்கும் கண்களுக்கும் எட்டிய நிகழ்வுகளின் இன்னொரு பரிமாணத்தை அல்லது மறைபொருளைச் சுட்டிக்காட்டி விமரிசிக்கும் தொனியில் உரையாடலை அமைத்துத் தங்களின் உடம்பை உரசிக் கொள்ளும் சொரிக்கற்கள். சொரிக்கற்களை நேசிக்கும் இவர்கள் எல்லாம் - சபாநாடகங்களின் தயாரிப்பாளர்களும் பார்வையாளர்களும், - முருகபூபதியும் அவரது குழுவினரும் மிருகவிதூஷகம் நாடகத்தைத் தயாரிக்கவும், கோவில்பட்டி, மதுரை, திருவண்ணாமலை, சென்னை என நான்கு இடங்களில் மேடையேற்றவும் எத்தகைய சவால்களைச் சந்தித்திருப்பார்கள் என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவாவது செய்யலாம்.
+++++++++

கருத்துகள்

manjoorraja இவ்வாறு கூறியுள்ளார்…
நாடகத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். பதிவுக்கு நன்றி.

பத்திகளுக்கிடையே இடைவெளி விடவும். படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
? இவ்வாறு கூறியுள்ளார்…
very poor critique

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்