ஒதுக்கி வைத்தல்- பங்கேற்றல்- கொண்டாடுதல்
எனது முகவரிக்கு மாதந்தோறும் வந்து சேரும் ஏழெட்டு இடைநிலைப் பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகளை முதல் புரட்டுதலில் வாசிப்பது வழக்கம். இலக்கியவாதிகளுக்கான அஞ்சலிக் குறிப்புகள், பெற்ற விருதுகள் பற்றிய குறிப்புகள், அந்தந்த பத்திரிகைகளின் உள்வட்டாரத்திற்குரிய இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள், பற்றிய பதிவுகள், இலக்கியக் கிசுகிசுக்கள், வம்பளப்புகள் போன்றன அந்த முதல் புரட்டுதலில் கவனம் பெற்று விடும். இந்த மாதம் –பிப்ரவரி- மிகுந்த கவனத்தோடு ஒரு பெயரையும் குறிப்பையும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, புத்தகம் பேசுது, உயிர் எழுத்து, தீராநதி, புதிய கோடாங்கி என என் வீட்டுக்கு வந்து சேரும் எல்லாப் பத்திரிகைகளிலும் தேடினேன். ஒரு பத்திரிகையிலும் அந்தக் குறிப்பு இல்லை.
தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் அதிக பட்சத் தொகை யான ரூபாய் ஒரு லட்சம் தொகைகொண்ட விருதுகளில் ஒன்றான திரு. வி.க. விருதை எழுத்தாளர் இமையம் பெற்றதைப் பாராட்டியும் வாழ்த்தியும் குறிப்புகள் இருக்கும் என எதிர்பார்த்தேன்.அதே விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருதை ஆழி பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டுள்ள அழகிய பெரியவனின் கவிதை நூல் பெற்றது என்ற குறிப்பும் இடம் பெறும் என்றும் எதிர்பார்த்தேன்.ஒரு பத்திரிகையிலும் இக்குறிப்புகள் இடம் பெறவில்லை. இப்படி எதிர்பார்த்தற்குக் காரணம் நான் தொடர்ந்து இமையத்தின் வாசகனாக இருந்திருக்கிறேன்; இருக்கிறேன். அவரது படைப்புகள் குறித்து இந்தப் பத்திரிகைகள் பலவற்றில் எழுதியிருக்கிறேன். அவ்வெழுத்துக்களை எந்தத் தடையும் சொல்லாமல் வெளியிட்டதன் மூலம் என்னை ஏற்றுக் கொண்டதோடு, அவரது படைப்புகளையும் தீவிரமான இலக்கியம் என்றே ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
நான் அவரைப் பற்றி எழுதியதால் ஏற்றுக் கொண்டன என்பதல்ல எனது வாதம். அவரையும் அவரது படைப்புகளையும் இந்த இதழ்கள் படைப்பின் தீவிரத்தன்மை சார்ந்து ஒதுக்கி வைத்தது கிடையாது என்பதுதான் நான் சொல்ல வருவது. இதுவரை அவர் வெளியிட்டுள்ள இரண்டு சிறுகதைத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை இந்த இதழ்களில் அச்சானவை தான். அந்தக் கதைகள் மூலம் மட்டுமல்ல;தனது காத்திரமான விமரிசனக் கட்டுரைகள், மதிப்புரைகள், விவாதக் குறிப்புகள், நேர்காணல்கள் வழியாகவும் இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களில் நிரம்பி வழிந்தவர் என்பதை இந்தப் பத்திரிகைகள் மறந்து விட முடியாது; மறுத்தும் விட முடியாது. அவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் பெற்ற கவனத்தின் மூலம் இந்த நூற்றாண்டின் எழுத்தாளர் என ஆங்கிலப் பத்திரிகையின் இலக்கியச் சிறப்பிதழில் பாராட்டப் பெற்ற இளம் தமிழ் எழுத்தாளர் அவர். அவரது மூன்று நாவல்களும் குறைந்தது ஓர் ஐரோப்பிய மொழியிலும், இன்னுமொரு இந்திய மொழியிலும் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட தீவிரமான ஒரு படைப்பாளியை- ஐம்பது வயதிற்குட்பட்ட ஒரு தமிழ்ப் படைப்பாளியைத் தமிழக அரசு இதுவரைக் கவனித்ததில்லை; விருதுகள் வழங்கியதில்லை. இமையத்தைக் கவனித்திருக்கிறது; விருது வழங்கியிருக்கிறது. ஆனால் அவர் விருது வாங்கியது ஒரு செய்தியாகக் கூட இந்தப் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. இமையம் பெற்ற விருதை மையப்படுத்தி இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களும், ஆசியர்களை இயக்கும் நண்பர் வட்டங்களும் வெளிப்படுத்தியுள்ள மனநிலைகள் எத்தகையன?
ஒதுக்கி வைக்கும் மனநிலையா? ஒதுங்கிப் போகும் மனநிலையா?
ஒதுக்கி வைக்கும் மனநிலைதான் காரணம் என்றால் அவர் ஒரு தலித் எழுத்தாளர் என்பதைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒதுங்கிப் போகும் மனநிலைதான் காரணம் என்றால் அம்மனநிலையின் பின்னணியில் இருக்கும் காரணங்களை எல்லாப் படைப்பாளிகளுக்கும் நாம் பொருத்துவது இல்லையே? அது ஏன்?
இமையம் விருது வாங்கியதற்குச் சற்று முன்னும் பின்னுமாகச் சில படைப்பாளிகள் விருதுகள் பெற்றுள்ளதாக இதே பத்திரிகைகளின் பக்கங்களில் செய்திகள் வந்துள்ளன. ஞானக்கூத்தனுக்கு வழங்கப் பட்ட விருது விழாவை ஒரு பத்திரிகை படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஞானிக்கும் ஐராவதம் மகாதேவனுக்கும் இயல் விருது வழங்கப்பட்ட செய்தியும் குறிப்புகளாகச் சில பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன. விளக்கு விருது கவிஞர் விக்கிரமாதித்தியனுக்கு வழங்கப் பட்ட செய்தியை அநேகமாக எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டுத் தெரிவித்தும் வாழ்த்தியும் செய்திகளை வெளியிட்டன. உயிர் எழுத்தும் அம்ருதாவும் உச்சபட்சமாக அட்டைப் படம் போட்டும் நேர்காணல் செய்தும், சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டும் கொண்டாடிக் களித்துவிட்டன. ஒருபுறம் ஒரு கலைஞன் விருது வாங்கினால் கொண்டாடி மகிழ்கிறோம்; இன்னொரு கலைஞன் விருது வாங்கினால் கண்டு கொள்ளாமல் புறங்கையால் ஒதுக்கித் தள்ளுகிறோம். இந்த மனநிலைக்குப் பின்னால் கலைஞர்கள் அல்லது படைப்பாளிகள் குறித்த இலக்கியப் பார்வை இருக்கிறதா? கொடுக்கப்படும் விருதின் பண அளவு இருக்கிறதா? அல்லது கொடுக்கும் நிறுவனங்கள் பற்றிய பார்வை இருக் கிறதா? அல்லது அப்பட்டமான சாதியம் தான் செயல்படுகிறதா?
இமையம் விருது வாங்கியதில் படைப்பு சார்ந்த ஒரு புண்ணாக்கும் இல்லை; வெறும் அரசியல் மட்டுமே இருக்கிறது என நினைத்திருந்தால் கடும் விமரிசனத்தை நாம் வெளியிட்டிருக்க வேண்டும். அவ்விமரிசனக் கட்டுரையில் இந்த அரசு அண்மையில் அளித்த கௌரவங்களையும் சேர்த்தே விமரிசனம் செய்ய வேண்டும். இமையத்தோடு சேர்ந்து அதே ஒரு லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதற்காக மட்டுமல்ல;; தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஐராவதம் மகாதேவனையும், அவரோடு சேர்த்துக் கௌரவிக்கப் பட்ட ஜெயகாந்தனையும் விமரிசனம் செய்ய வேண்டும். அதே பல்கலைக் கழகமும், அதை நிர்வாகம் செய்யும் அதே அரசும் வழங்கிய அதிகாரத்துவம் கொண்ட உறுப்பினர் பதவிகளை ஏற்றுக் கொண்ட பேராசிரியர்களையும் அறிஞர்களையும் அவர்களின் நிலைபாட்டிற்காக விமரிசிக்க வேண்டும்.
சாகித்திய அகாடெமி விருது வழங்கப்படும் ஒவ்வொரு முறையும் தீவிரமாக எதிர்ப்புணர்வு அல்லது கண்டனத்தை வெளியிடும் நாம், தமிழக அரசுகள் -இன்றைய அரசும், இதற்கு முந்திய அரசும் விருதுகள் வழங்கிடும் போது மௌனமாக இருப்பது ஏன்? இந்த அரசுகள் தரும் விருதுகள் பற்றி மௌனம் சாதித்தல் அல்லது ஒதுங்கிப் போதல் என்ற உத்தியைக் கடைப்பிடிக்கும் தீவிர இடைநிலைப் பத்திரிகைகளும் அவை நடத்தும் பதிப்பகங்களும் அரசின் நூலக ஆணைக்குழுவிற்கு நூல்களை அனுப்பி வைக்கத் தானே செய்கின்றன? கணிசமான நூல்களை வாங்கிய இதே அரசையும் அதற்குக் காரணமான அமைச்சரையும் பாராட்டிக் கூடப் பேசியிருக்கிறோமே? அதே அரசு நம்மிலிருந்து ஒருவரை-அடையாளப்படுத்திய காரணம் வேறாக இருந்தாலும், அளிக்கப் பட்ட அங்கீகாரத்திற்கு அவர் பொருத்தமானவர் என்ற நிலையில் இமையத்தையும் அழகியபெரியவனையும் பாராட்டாமல் விட்டது எந்த வகையில் நியாயமானது? உண்மையான படைப்பாளி என்ற நிலையில் - இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களிலேயே தனது எழுத்தைக் கண்டு சந்தோசம் கொண்டவன் என்ற நிலையில் இமையத்தின் மனம் வேதனையடையாமல் இருந்திருக்குமா? அந்த வேதனையின்போது அவர் ஒதுக்கப்பட்டதாக நினைக்காமல் - சாதி காரணமாக ஒதுக்கப்பட்டதாக நினைக்காமல்- வேறு காரணத்தையா நினைத்திருப்பார்.?
நமது மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் குறித்துத் தொடர்ச்சியான விமரிசனங்களை வைக்காமல், நண்பர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறபோது பாராட்டிப் பேசுவதும், வேண்டாதவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்காக விமரிசனம் செய்வதும், இரண்டிற்கும் இடையில் இருப்பவர்கள் என்றால் மௌனம் காப்பதும் அறிவுசார்ந்த செயல்கள் தானா? மாநில அரசுகளின் இருப்பு சார்ந்து தமிழ் அறிவுஜீவிகள் வெளிப்படுத்துவது இயலாமையின் கவிதலையா? அச்சத்தின் முடக்கத்தையா? இப்படி நிறையக் கேள்விகளைக் கேட்கலாம்.
இந்தக் கேள்விகளின் தொடர்ச்சியாகவே மதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் விமரிசனத்தை எதிர்கொள்கிறேன் (அதிகாரத்தை நோக்கி வாளும் மயிலிறகும்).பாராளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்பதா? விலகி நிற்பதா? என்று கேள்வியை முன் வைத்து வாக்குச்சாவடி அரசியல் குறித்து நீண்ட விவாதங்களில் ஈடுபட்ட அனுபவங்கள் கொண்டவர் அவர். அதே தர்க்கங்களோடு, செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கிக் காட்டியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் மட்டும் அல்லாமல் அவர் எழுதும் கடிதங்கள், பரிந்துரை செய்யும் எழுத்துக்கள் எனப் பலவற்றிலும் இந்தப் பிரசாரம் இருக்கவே செய்கிறது. அப்படிச் செய்வதற்கு முழுமையான சுதந்திரம் அவருக்கு உண்டு. அவர் செய்யும் பிரசாரத்தை ஏற்பதற்கான காரணங்கள் பலருக்கும் இருப்பது போலவே நிராகரிப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதை நான் இன்னும் உறுதி செய்ய வில்லை என்றாலும் நிராகரிக்க வேண்டும் என்று சொல்லப் போவதில்லை. அதிலும் ஈழத்தில் நடந்த யுத்தத்தைக் காரணம் காட்டி இந்த மாநாட்டை நிராகரிக்க வேண்டும் என்று வாதிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றே தோன்றுகிறது. இப்படிச் சொல்வதால் ஈழத்தில் முள்வேலிக்குள் இருக்கும் மனிதர்களின் வேதனையை உணரும் பக்குவம் இல்லை என்று எடுத்துக் கொண்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை. ”சிறுபான்மை இன மக்களின் விடுதலைப் போராட்டமே இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்தது” என்ற நிலைபாட்டில் தமிழ் நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உடன்பாடான மனநிலையே இருந்தது என்பதை பா.செயப்பிரகாசம் உறுதி செய்வாரா? தொடர்ந்து தமிழ் நாட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுதலின் பகுதியாகவே அப்போராட்டம் வடிவமைக்கப்படவில்லையா? இப்போது ஆளுங்கட்சியும் அதனை எதிர்க்க நினைக்கும் கட்சிகளும் செம்மொழி மாநாட்டையும் இலங்கைத்தமிழர் பிரச்சினையையும் எதிரிணையாக வைப்பதிலும் அந்த நோக்கம் இருக்கத்தானே செய்கிறது?
நடக்கப் போகும் கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டினால் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கான அடித்தளங்கள் உருவாக்கப்படும் அறிகுறிகள் எதாவது தெரிகின்றதா? என்றால் அவையும் இல்லை என்றே தோன்றுகிறது. இப்படியான மாநாடுகளில் மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி என்பதான மையக் காரணங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பது கூடச் சரியில்லை என்றே தோன்றுகிறது. இதற்கு முன்பு நடந்த உலகத்தமிழ் மாநாடுகளின் விளைவுகள் என்னவாக இங்கே இருக்கின்றன.?
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நடக்கும் சென்னை சங்கமம் என்னும் பெருநிகழ்வு நாட்டார் கலைகளை வாழ வைக்குமா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் அந்நிகழ்வு திராவிட இயக்கம் சார்ந்த அரசியல்வாதிகளிடமும், படித்த வர்க்கத்திடமும் கிராமிய வாழ்வு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து இருந்த எதிர்மறை மனோபாவத்தை மாற்றியிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதே போல நவீன இலக்கியப் படைப்பாளிகளின் இருப்பும், படைப்பு வெளியும் வெகுமக்கள் தளத்திற்குள் உருட்டிவிடப்பட்டுள்ளதின் பின்னணியில் சென்னை சங்கமத்தின் துணை நிகழ்வான தமிழ்ச் சங்கமம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
கடந்த நான்காண்டுகளில் மூன்று முறை தமிழ்ச் சங்கமம் நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். கலந்து கொண்ட ஒவ்வொரு முறையும் நாடகம் என்ற எனது விருப்பத்துறை சார்ந்தே அழைக்கப்பட்டேன் என்பது முக்கியம். ஒரு நபர் எந்தத்துறை சார்ந்து இயங்குகிறார் என்பதைக் கண்டுபிடிக்கும் கருவி நமது அரசதிகாரத்தின் கைகளுக்கு வயப்பட்டிருக்கிறது என்ற வகையில் இதை நான் புரிந்துகொள்கிறேன். நான் இயங்கும் துறை சார்ந்து என்னை அழைக்கும் போது அந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்வதையும் எனது கருத்துக்களைச் சொல்வதையும் விரும்பவே செய்கிறேன்; மறுப்பதில்லை. ஒரு பேராசிரியனாக அது எனது கடமை என்று கூட நான் நினைக்கிறேன்.
அற்றைத் திங்களில் சிறப்பு விருந்தினராகக் காலச்சுவடு என்னை அழைத்த போது, இந்துத்துவச் சதியுடன் இயங்கும் மேடை என எச்சரிக்கைப்பட்டேன். நான் கண்டுகொள்ளவில்லை. அதைப் போலவே தான் செம்மொழி மாநாடு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தின் பரிகாரத்திற்குச் செய்யப்படும் சடங்கு என்ற எச்சரிக்கையையும் பார்க்கிறேன். இரண்டிலும் உண்மைகள் இருக்கலாம். இரண்டிலும் கலந்து கொண்டு எனக்கு விருப்பமான நாடகங்கள் - ஊடகங்கள்- கவிதைகள் என்பதாகத் தானே பேசுவேன். நான் என்னை அழித்துக் கொள்ளக்கூடாது என்று தன்னுணர்வோடு இருக்கும்வரை பெரும்நிகழ்வோ சிறுநிகழ்வோ கலந்துகொள்வதே சரியாக இருக்கும்; இல்லையென்றால் நான் காணாமல் போவேன். நான் இருக்கிறேன் என வருகையைப் பட்டியலில் பதிவு செய்ய மறுத்தால் நிராகரித்தவன் என்ற அச்சமூட்டும் பட்டியலில் இடம் பெற நேரிடும் வாய்ப்புகளும் உண்டு தானே. நமது அரசுகள் இரண்டு பட்டியலையும் ஒரே நேரத்திலேயே தயாரிக்கும் என்பதும் உண்மை.
நவீன அரசுகள் சார்த்தர் போன்ற அறிவுஜீவிகளின் புறக்கணிப்பிற்குச் செவிசாய்க்கும்; கண்கொடுக்கும். ஆனால் நமது காலத்துப் பின் நவீன அரசுகள் ஒரு பா.செயப்பிரகாசத்திற்குப் பதிலாக- ஒரு அ.ராமசாமிக்குப் பதிலாக- ஒரு இன்குலாப்பிற்குப் பதிலாக அவர்களின் சாயல் கொண்ட ஆளுமைகளால் நிரம்பிக் கொள்ளும். உலகத்தமிழ் மாநாடு என்பதற்குப் பதிலாக உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என நிரப்பிக் கொள்ளவில்லையா? அதை எல்லாத் தமிழ் மனங்களும் ஏற்றுக் கொள்ளவில்லையா?
ஏப்ரல் ,2010
எதிர்வினைக்கு மறுவினை
இந்த ஏப்ரல் மாதக் காலச்சுவடில் நான் எழுதிய எதிர்வினைக்கு- கண்ணனின் மறுவினையை வாசித்தேன். மறுவினையாற்றிய கண்ணணோடு இரண்டு பொருள்கள் பற்றி உரையாடலைத் தொடரலாம் எனத் தோன்றுகிறது.
1) நடப்பில் இருக்கும் இந்திய/ தமிழக அரசுகள் எத்தகையன என்பது பற்றி.
2) இமையம் பாராட்டப்பட வேண்டிய படைப்பாளியா? இல்லையா? என்பது பற்றி அல்ல? பாராட்டப்படும் படைப்பாளிகளின் படைப்பு வெளிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமா ? வேண்டாமா ? என்பது பற்றி.
உரையாடலைத் தொடங்குவதற்கு முன்னால் கண்ணனுக்கு ஒரு பாராட்டு. எல்லாப் பத்திரிகைகளையும் நோக்கி வைக்கப்பட்ட கருத்துக்களைக் காலச்சுவடை நோக்கியதாகச் சுருக்கி, அந்தக் கூட்டத்தில் –இடைநிலை இதழ்கள் என்ற கூட்டத்திலிருந்து -காலச்சுவடை விலக்கி எடுத்துக் கொண்டு போய் ஒதுங்கி நின்று எட்டுத்திக்கும் வாள் சுழற்றி, யார் யாரையோ தாக்கியிருக்கிறார். அதற்கான தருணத்தை எனது எதிர்வினை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. சரியாகப் பயன்படுத்திக் கொண்ட புத்திசாலித் தனத்திற்காகக் கண்ணனைப் பாராட்டவில்லை என்றால், இமையத்தைப் பாராட்ட மனம் இல்லாத பத்திரிகைகளின் – பத்திரிகை ஆசிரியர்களின் பாவச் செயலோடு சேர்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதிலிருந்து தப்பிப்பதற்காகக் கண்ணனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
நான் அடிப்படையில் இலக்கியம் என்னும் மையத்திலிருந்து பிறதுறைகளுக்குள் நுழைபவன். எனவே இரண்டாவது பொருளைப் பற்றி முதலில் பேசலாம். இமையம் விருதை வாங்கிக் கொண்டு அதை வழங்கிய முதல்வரின் காலில் விழுந்து வணங்கினார் என்பது கண்ணனின் கண்டுபிடிப்பு. இதுதான் ஒரு நவீன படைப்பாளியின் அடையாளமா? என்பது அவரது வினா.
இந்த வினாவுக்கு இது நவீன படைப்பாளியின் அடையாளம் அல்ல; அது ஒரு மூடத்தனத்தின் வெளிப்பாடு என்றே பதில் சொல்வேன். ஆனால் தமிழின் நவீன படைப்பாளிகள் பலரும் – இதற்கு முன்பு விருதுகள் வாங்கிய – காலச்சுவடு பொருட்படுத்தும் இயல், விளக்கு போன்ற விருதுகளைப் பெற்ற படைப்பாளிகள் பலரும் இது போன்ற மூடத்தனங்களைச் செய்யாதவர்கள் அல்ல என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் அவர்களுக்கும் இமையத்திற்கும் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. இமையம் தெய்வம் என்று சொன்னது கருணாநிதி என்ற அரசியல்வாதியை; ஆனால் விளக்கு, இயல் போன்ற விருதுகளைப் பெற்ற – பெற இருக்கிற - படைப்பாளிகள் விழுந்து வணங்கும் கால்கள் ஆன்மீக உரைகளை அள்ளிவிடும் மடாதிபதிகளின் கால்கள்: சந்நியாசிகளின் பாதார விந்தங்கள்; வைத்தீஸ்வரன் கோயிலில் ஏடுகளைப் பாதுகாத்து வைத்து நீண்ட ஆயுளைத் தரும் சாமியார்களின் பாதங்கள்.
இமையம் விருதினைப் பெற்றுக் கொண்ட தருணத்திலேயே தொண்டனாக நின்று நன்றி செலுத்திவிட்டார். ஆனால் அவர்கள் எல்லாம் விருதுகளைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பக்தியுடன் போய் விழுந்து எழுவார்கள். பக்தி காரணமாக மனிதத் தெய்வங்களை வணங்கும் கவிஞர்கள், நவீனத் தமிழ் படைப்பாளிகளாக இருக்க முடியும் என்றால், தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைவனை- தனது சமூகமும், தனது குடும்பமும் சமூகத்தகுதி பெறுவதற்கும், பொருளாதார ரீதியாகக் கவனிக்கத் தக்கவர்களாக மாறியதற்கும் காரணமாக இந்தத் தலைவன் இருந்தான் என நம்பும் ஒரு தலைவனை- தெய்வமாக நினைக்கும் தொண்டன் நவீனத்தமிழ் புனைகதையாளனாக இருக்க முடியாதா? விடை தெரியவில்லை.
இரண்டும் நம்பிக்கை சார்ந்த சங்கதிகள். அந்த விதத்தில் இரண்டும் மூடத்தனங்கள் தான்.
இதுவும் மூடத்தனம்; அதுவும் மூடத்தனம் என்றால் இரண்டையும் கண்டிக்க வேண்டும். இரண்டுமே படைப்பு வெளிக்கு வெளியே இருக்கிறது, படைப்பு சார்ந்த விமரிசனத்தின் போது இவ்விரண்டையும் கண்டு கொள்ள வேண்டியதில்லை என்றால் இரண்டையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம்.
படைப்பாளியின் படைப்பை மட்டும் தான் பார்க்க வேண்டும்; படைப்புக்கு அப்பாற்பட்ட அவனது விருப்பங்கள், தொழில் ரகசியங்கள் போன்ற குடும்பம் சார்ந்த அந்தரங்க வெளிக்குள் நுழையக் கூடாது என்று வியாக்கியானங்கள் செய்திருப்பது நவீன இலக்கிய மரபு ? அந்தக் காரணங்களால் தானே வேலை வெட்டி எதுவும் செய்யாமல் ஊர் ஊராய் ஒட்டுண்ணிகளாய்த் திரியும் சோம்பேறித்தனத்தை - உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாத வாழ்க்கைத்தத்துவமாக முன் மொழியும் நிலையை- சிறந்த படைப்பாளிகளின் அடையாளமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
*****************
இனி முதலாவது பொருளுக்கு – பின் நவீனத்துவ அரசு என்பதற்கு வருவோம்:
வம்சாவளியாக அதிகாரத்தைக் கைமாற்றும்- நிலமானியக் குணங்கள் கொண்ட கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. தி.மு.க.வின் மைய அமைப்பு மட்டும் அல்ல;இந்தியாவின் பெரும்பாலான மாநிலக் கட்சிகளின் மைய அமைப்புகளுமே இது போலத்தான் இருக்கின்றன என்பதையும் மறுத்துவிட முடியாது. இன்னும் சரியாகச் சொல்வதானால் மைய அரசின் தனிப் பெருங் கட்சியான தேசியக் காங்கிரசின் செயல்பாடுகளே விலக்காக இல்லை என்பதுதான் உண்மை.
இந்தியாவெங்கும் கட்சியின் மைய அமைப்பில் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகார மையங்களாக விளங்குகிறார்கள் என்றால், மாவட்ட, வட்ட, உள்ளூர் அமைப்புகளும் கூட அவ்வாறே தான் இயங்குகின்றன. கட்சியின் அடிமட்டத்தொண்டன் மாவட்ட அமைப்பை நோக்கியோ, மாநில அமைப்பை நோக்கியோ தனது அரசியல் பயணத்தைச் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. அதற்கு மாறாகத் தனக்கு வழங்கப்பட்ட வட்டாரத்தின் தலைவனாக இருப்பதே போதும் என நினைக்கிறான். அதன் மூலமே மைய அமைப்பு உருவாக்கித் தரும் அதிகாரத்தையும், முறையற்ற வருவாயையும் பெற முடியும் என நம்புகிறான். இது ஒருவிதத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவுக்கு வந்த போது இருந்த ஜமீந்தாரி முறையையும், அதன் வழியே உருவாக்கப் பட்ட வட்டார தேசிய மனோபாவத்தையும் ஒத்தது என்றாலும், அவற்றிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால், ஜமீந்தார்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரம் இருந்தது. அவர்கள் செய்த வரியின் ஒரு பகுதியையே மைய அரசுக்கு வழங்கினார்கள். அதன் பலத்தின் மேலேயே மைய அரசு இயங்கியது. ஆனால் இப்போதைய நிலை அப்படிப்பட்டதல்ல. மொத்த அதிகாரமும் அரசிடம் இருக்கிறது. அரசு பாவனைகளை –தாராளமயம், உலகமயம், தனியார் மயம் முதலான பின் நவீனத்துவச் சொல்லாடல்களின் வழியே மக்கள் நலம், உற்பத்தி, வளர்ச்சி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு , தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம், பாலின வேறுபாடின்மையை உறுதி செய்தல், சமூக நீதிக்கு உத்தரவாதம் வழங்கல், தரமான கல்வி, முதலான வெளிகடக்கும் பாவனைகளை- உருவாக்கிக் கொண்டே தற்காலிக இலக்குகளுடன் அசைந்து கொண்டிருக்கின்றன. தற்காலிக இலக்குகள் பெரும்பான்மை மக்களுக்காகவும், நீண்ட கால இலக்குகள் அனுபவிக்கப் பிறந்தவர்களுக்காகவும் எனத் திட்டமிடப்படுகின்றன. தற்காலிகத்தின் முகம் வெளுக்கும் நிலையில் இன்னொரு தற்காலிகத்தால் அதை மறைக்கப் பார்க்கின்றன நமது அரசுகள். அதைக் கவனிக்கவிடாமல் கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் தரும் ஊடகங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
பின் நவீனத்துவத்தின் முக்கியக் கூறுகளான பாவனைகளையும், தற்காலிகத்தையும் லாவகமாகப் பயன்படுத்தும் நமது மைய/ மாநில அரசுகளைப் பின் நவீனத்துவ அரசுகள் என நான் குறிப்பிட்டது பாராட்டும் மனநிலையில் அல்ல என்பதை மட்டும் சொல்லி உரையாடலை நிறுத்திக் கொள்கிறேன்.
ஜூன்,2010
கருத்துகள்