சாதிவாரிக் கணக்கெடுப்பு


இந்த முறையும் தவற விட்டுவிடும் வாய்ப்பு இருந்தது. நல்ல வேளையாக அது நடக்கவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி விட்டது என்ற அறிவிப்புக்குப் பின் பத்து நாட்கள் வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை. கட்டாயம் நாங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டும். அரை மனதோடு தான் சென்னைக்குச் சென்றோம். அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பக்கத்து வீட்டுக்காரரிடம் வீடு பத்திரமாக இருக்கிறதா? என்று கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் கணக்கெடுப்பாளர்கள் வந்தார்களா? என்றும் கேட்டு வைத்தோம். ‘ வரவில்லை’ என்று சொன்ன பின் தான் நிம்மதி.

இதற்கு முன் வாக்காளர் அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பு நடந்த போதும் வீட்டில் இருக்கவில்லை. குடிமைப் பொருள்கள் வழங்கும் பொருட்டு ரேசன் கார்டு தருவதற்காகத் தகவல் சேகரிக்கும் பணியாளர்கள் வந்த போதும் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது. நமது தகவல்களைச் சேகரித்து அரசின் ஆவணமாக ஆக்கும் அரசுப் பணியாளர்களின் முதல் வருகையின் போது வீட்டில் இல்லையென்றால் அவர்கள் எத்தகைய குறிப்புகளை எழுதுவார்கள் என்பதையும், திரும்பவும் அவற்றைச் சரி செய்ய அலைய வேண்டிய விவரங்களையும் எழுதிக் காட்டினால் புரியாது. நேரில் அனுபவித்தால் தான் புரியும்.

பத்து நாள் பயணம் முடிந்து வீடு திரும்பிய அடுத்த நாள் கணக்கெடுப்புப் பணியாளராக அந்தப் பெண் வீட்டிற்கு வந்தார். பள்ளியாசிரியரான அவரோடு அவரது கணவரும் துணைக்கு வந்திருந்தார். மனைவியின் பணிகளில் பலவிதத்திலும் உதவியாக இருந்தார். மனைவிமார்கள் ஈடுபடும் வெளி வேலைகளில், உதவுவது போலவே வீட்டிற்குள்ளேயும் கணவன்மார்கள் உதவி செய்து விட்டால் பெண்களின் சந்தோசம் மேன்மை அடையவே செய்யும்.

இரண்டு பகுதிகளாகத் தகவல்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். முதலில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மொத்தக் குடும்பத்தைப் பற்றிய புள்ளிவிவரங்கள். குறிப்பாக வீடு; வீட்டின் மீதான உரிமை; வீட்டிலுள்ளவர்கள், வீட்டிலுள்ள வசதிகள், கட்டுமான முறைகள் போன்றன கேட்கப்பட்டன. இரண்டாம் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குறிப்புகளைக் குறித்துக் கொண்டார். பென்சிலால் எழுதிக் கொண்டதைப் பின்னர் பேனாவால் எழுதிக் கொள்வேன் எனச் சொல்லி விட்டு வந்ததற்கான ரசீதையும் கொடுத்து விட்டுக் கையொப்பம் பெற்றுச் சென்றார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக இரண்டு விசயங்களைப் பதிவு செய்ய வேண்டும். இவ்விரண்டும் தீதா? நன்றா? என்று உறுதியாகக் கூற முடியவில்லை. இரண்டில் ஒன்று எளிதாகச் சரி செய்யக் கூடியது; இன்னொன்று அவ்வளவு எளிதாகச் சரி செய்ய முடியாதது என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

நமது பாராளுமன்றம் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்யாத போதே சாதியையும் மதத்தையும் குறித்துக் கொண்டு செல்வது ஏன்? என்பதுதான் முதலாவது விசயம்.
நமது வீடும், வீட்டின் உறுப்பினர்களும், அவர்களுக்கிடையே இருக்கும் உறவும் நிச்சயமான இருப்புகள்; யதார்த்தமான உண்மைகள். அவை போலவே இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் மதமும் சாதியும் நிச்சயமான இருப்புகள் தான்; யதார்த்தமான உண்மைகள் தான்? அவற்றைக் குறித்துக் கொள்வதிலும், கணக்கு வைத்துக் கொளவதிலும் என்ன தவறு இருக்க முடியும்? என்று கேட்டுக் கட்டாயம் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என வாதிடுகின்றனர். அத்தோடு இப்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் படி குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சாதிகளுக்கு அதிகமான சலுகைகள் கிடைக்கிறது; அவர்கள் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். அதனை மாற்ற வேண்டியது சமூகநீதியின் கடமை. ஒவ்வொரு சாதியும் அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டும்; அதற்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் எனத் தீவிரமாக வாதிடுகின்றனர்.

வாதத்திற்கு இவையெல்லாம் சரியானவை போலத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் அக்கணக்கெடுப்பு ஏற்படுத்தும் பின் விளைவுகள் எத்தகையன என்பதை யோசித்தால் அதன் ஆபத்துக்கள் புரிய வரலாம். அத்தகைய புரிதல் கிடைக்கும் போது இதனை ஏற்கக் கூடாது என்பதை நடுநிலையாளர்களும் நாகரிக சமுதாயத்தை விரும்புகிறவர்களும் உணரக்கூடும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என வாதிடுவது ஒருவகையில் பெரும்பான்மைவாதம் தான். இந்தியா முழுக்க சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் குரல் கொடுப்பவர்கள் யார் எனக் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையாக இருப்பதாக நம்பும் சாதியினரும், அச்சாதிகளைத் தங்கள் வாக்கு வங்கியாகப் பயன்படுத்தும் அரசியல் சக்திகளும் தான் என்பது புரிய வரலாம். இவர்கள் சரியான புள்ளிவிவரங்கள் இல்லாத போதே தங்கள் சாதியின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்திக் காட்டி அதற்கேற்ப அரசின் உயர் பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும் கோரி வருவது கண்கூடு. கல்வி, திறமை, சாதுரியம் போன்றவை தேவைப்படும் பதவிகளையும் அதிகார மையங்களையும் கூடச் சாதி அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோருவதையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இட ஒதுக்கீடு சார்ந்த மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கப் பட்ட பின்னணியைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பார்த்தால் அது, அடித்தளத்தில் இருக்கும் விளிம்புநிலை மனிதர்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கப் பட்ட தற்காலிக ஏற்பாடு. ஆனால் இன்று சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி அதிகாரத்தையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் என வாதிடுவோர் அதனை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு இட ஒதுக்கீட்டையும், அது தரும் அதிகாரத்துவத்தையும் நிரந்தரமாக்கும் நோக்கத்தோடு செயல்பட நினைக்கிறார்கள்.

எல்லா வகையான பெரும்பான்மை வாதங்களும் ஆபத்தானவையே. ஒரு மாநிலத்தில் நாங்கள் பெரும்பான்மை எனக் கணக்கிட்டுக் கண்டுபிடித்த பின் வெறும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளுக்காக மட்டுமே அது பயன்படும் என நினைப்பது தவறானது. எப்போதும் பெரும்பான்மை, சிறுபான்மையை மிரட்டுவதற்கே பயன்படுத்தி வருகிறது என்பது கடந்த கால உண்மைகள் மட்டும் அல்ல; நிகழ்கால நடப்புகளும் தான்.

உதாரணத்திற்குச் சில கிராமங்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு நடப்புகளைக் கவனித்துப் பார்த்தால் இந்தக் கூற்று புரிய வரலாம். நூறு வீடுகள் ஒரு சாதியினராக இருக்க, அங்கே பத்துவீடு, பதினைந்து வீடு எனச் சிறுபான்மை எண்ணிக்கையில் வேறு சாதியினர் இருக்கும் கிராமத்தில் சிறுபான்மையினரின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை நேரடியாகப் பார்க்க முடியும் . சமூகப் படிநிலைகளில் உயர்சாதிகளாக இருப்பதாக நம்புகிறவர்கள் கூடச் சிறுபான்மையாக இருந்தால் அந்த ஊரின் பொதுநிகழ்வுகளில் காணாமல் போனவர்களாகவும், கவனம் பெறாமல் ஒதுக்கப் படுகிறவர்களாகவே இருப்பர் என்பது யதார்த்தம்.

இந்தியாவின் நுண் அலகான கிராமங்களில் இருக்கும் இந்தப் பிரச்சினையை வட்ட, மாவட்ட மாநில அளவில் கொண்டு செல்லவே சாதிவாரிக் கணக்கெடுப்பு உதவும். இந்தப் பின்னணியில் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு தீதா? நன்றா? என்று சொல்ல முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. இதனைச் சரிசெய்யும் இடத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் இல்லை; கொள்கை வகுப்பாளர்கள் தான் அதனைச் சரி செய்ய முடியும்

இன்னொரு பிரச்சினை மிக எளியது. இதனைக் கணக்கெடுப்பாளர்களே சரி செய்ய முடியும். எல்லா விவரங்களையும் எழுதி முடித்த பின் அந்தப் பெண் எனக்குக் கொடுத்த ரசீதில் எனது பெயரை அ.ராமசாமி என்பதற்குப் பதிலாக A.ராமசாமி என எழுதிக் கொடுத்தார். அதே நேரத்தில் எனது தந்தையின் பெயரைத் தமிழில் தான் எழுதினார். தமிழில் அப்பா பெயரைச் சொன்ன பிறகு எனது முன்னெழுத்தைத் தமிழிலேயே போடாமல் ஆங்கில முன்னெழுத்தாகப் போடுவது ஏன் எனக் கேட்டேன். அதற்கான காரணத்தைச் சொல்ல அவருக்குத் தெரியவில்லை.
தமிழில் பெயரெழுதும், கையெழுத்திடும் பலரும் கூட முன்னெழுத்தை ஆங்கிலத்தில் எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். தன் நினைவின்றியே செய்யப்படும் இந்தச் சிறு பிழையைக் கணக்கெடுப்பாளரே சரி செய்துவிட முடியும் தானே அவர் செய்யவில்லை என்றால், கணினி அச்சில் ஏற்றும் நபர்களே கூடச் சரி செய்யலாம். அதற்குத் தமிழில் தான் முன்னொட்டுப் போட வேண்டும் என்ற தன்னுணர்வு தேவை. அவ்வளவுதான்.

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவின் நோக்கம் அருமை.

ஆனால் என்னை போலவே நீங்களும் குழம்பித்தான் உள்ளீர்கள்,
கணக்கெடுப்பில் ஜாதி, மதம் வேண்டுமா, வேண்டாமா என்பதில்.

உங்கள் பதிவும், தினமணி, ஹிந்து, கட்டுரைகள் போன்று குழப்புவதாகவே இருக்கிறதே தவிர twitter செய்தி மாதிரி தெளிவாக குறிப்பாகா இல்லை.

கணக்கு எடுக்கும் பொழுது குறித்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. நாளை வேண்டும் என்றால் ஜாதி, மத விபரங்களை மட்டும் மறைத்து விட்டு அரசு ஆணைகளில் வெளியிட உதவும்.

ஜாதி மத விபரங்களை கட்சிகளுக்கு மட்டும் கொடுத்து விடலாம்.

வாக்குகளை விலைக்கு வாங்கும் பொழுது பேரம் பேச எந்த ஜாதி சார்ந்த ஆளை போடலாம் என்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் அந்த விபரங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்