திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போகாமல் தப்பிக்கும் ஆசை தான்..
செம்மொழித் தமிழ் மாநாட்டில் உங்கள் பங்கு என்ன?
இந்தக் கேள்வியைக் கடந்த ஆறு மாத காலத்தில் யாராவது ஒருவர் அவ்வப்போது கேட்டுக் கொண்டே தான் இருந்தார்கள். இன்று வரை குறைந்தது 50 விதமான பதில்களை நானும் சொல்லியிருப்பேன். எந்தப் பதில் யாருக்குத் திருப்தி அளித்தது என்று தெரியவில்லை. ஒரு பல்கலைக் கழகத்தின் தமிழியல் துறையில் தலைவராக இருக்கக் கூடிய ஒருவரிடம்- தொடர்ந்து தமிழின் நவீன இலக்கியங்கள், விமரிசனங்கள் குறித்து அக்கறை கொள்ளும் இலக்கிய மற்றும் தீவிரமான இதழ்களில் எழுதக் கூடிய என்னிடம் இந்தக் கேள்வி கேட்கப் படும் காரணம் ஒன்றும் புரியாத ஒன்றல்ல. ஆனால் அந்தக் கேள்விக்கு தீர்மானமான ஒரு பதிலை என்னால் சொல்ல முடியவில்லை என்பதுதான் அதில் இருந்த சோகம்.
ஜுன் 23 தொடங்கி 27 வரை நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என நான் எடுத்த முடிவின் பின்னணியைப் பதிவு செய்வது அவசியம் என்பதால் என்னிடம் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை எழுதிப் பார்க்கிறேன்.
இலங்கைத் தமிழர்கள் இவ்வளவு துயரமான அழிவைச் சந்தித்துப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான் என்று நம்புவதாலும், அதைப் புரிந்து கொண்டும் உலகத் தமிழர் நலன் காக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழின அழித்தொழிப்புக்குத் துணை போய்விட்டது என்று நினைப்பதாலும், இதையெல்லாம் மறக்கச் செய்யும் விதமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்னும் மகாநிகழ்வை நடத்தி உலகத்தமிழினத்தின் சோக நினைவுகளை- தமிழ்நாட்டு மக்களின் ஞாபகத்தில் படிந்துள்ள கோபப் படிவங்களை - அழித்து விடவே இந்த மாநாடு நடத்தப் படுகிறது என்று கருதுவதாலும் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கிறீர்களா?
இந்தக் கேள்விகள் முன் வைக்கும் காரணங்கள் எல்லாம் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வலுவான காரணங்கள் தான் என்பதை நான் மறுக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்த வரையில் “எப்போதும் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்” என்று நினைத்ததில்லை. அப்படிச் சொன்னவர்களோடு என்னை அடையாளப் படுத்திக் கொள்ளவும் விரும்பியதில்லை. புறக்கணிப்பு அரசியலின் காலம் முடிந்து விட்டது என நம்புகிறவன் நான். அத்தோடு வெகுமக்களுக்கான அரசியலாகப் பரப்பிய வாதத்தை மட்டுமே தங்கள் வழி முறையாகக் கொண்ட எந்த இயக்கமும், அவை உண்டாக்கும் அரசும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவே செய்யும்; அப்படிச் செய்வதுதான் அவ்வியக்கங்கள் உயிர்வாழ்தலுக்கான ஆதாரத்தை அளிக்கும்; இல்லையென்றால் அவ்வியக்கம் காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்தவன் நான். ஈழத் தமிழர்களுக்காக இந்திய நாட்டில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முத்துக்குமார்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். தங்கள் இருப்பை அழித்துக் கொள்ளத் தயாராகும் அரசியல் கட்சியை நாம் சுட்டிக் காட்ட முடியாது. இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதாகப் பாவனைகள் செய்து தங்கள் கட்சியை வளர்த்துக் கொள்ள முயன்றார்கள் என்பதைக் குற்றச் சாட்டாகச் சொல்லவில்லை. யதார்த்தம் அதுதான் எனச் சொல்கிறேன். இதைப் பற்றிக் காலச்சுவடுவுக்கு நான் எழுதிய விவாதக் குறிப்பில் விரிவாகவே நான் பேசியிருக்கிறேன். ( எனது வலைப் பூவிலும் அக்கட்டுரை இருக்கிறது)
ஒதுக்கி வைத்தல் மரபின் குறியீடு; ஒதுங்கிக் கொள்ளுதல் நவீனத்துவத்தின் நிலைபாடு; கலந்து விடுதல் பின் நவீனத்துவத்தின் சாதுர்யம். இம்மூன்றில் என்னவாக இருப்பது எனத் தீர்மானிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போதே மாநாடு என்னைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
செம்மொழித் தமிழ் மாநாட்டில் உங்கள் பங்கென்ன என்று கேட்டவர்கள் என்ன நினைத்துக் கேட்டிருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறதா? என்று சொன்னீர்களா? உங்கள் ஊகத்தைச் சொல்ல முடியுமா?
நவீன நாடகங்கள், ஊடகங்கள், வெகுமக்கள் பண்பாடு பற்றித் தீவிரமான கருத்துக்கள் கொண்ட விமரிசனக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிய எழுத்தாளர் என்ற வகையில் அல்லாமல் , திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேரா. சுந்தரம்பிள்ளையின் பெயரால் அமைந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் என்ற வகையில் பேரா அ.ராமசாமி, செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள், ஆய்வரங்குகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றிருக்கக் கூடும் என்று நினைப்பது பொதுவான ஓர் எதிர்பார்ப்பு தான். பொது மனிதர்கள் அப்படி நினைப்பதில் தவறொன்றும் இல்லை. ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் என்ற நிலையில் சில பொறுப்புகள் வரும் என நானும் எதிர்பார்க்கவே செய்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காமலேயே மாநாட்டின் நிகழ்வுகள் திட்டமிடப் பட்டன என்பதுதான் உண்மை. நான் அழைக்கப் படவில்லை என்பதற்காக வருத்தப் படவில்லை. இங்கிருக்கும் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர்கள் யாரும் ஆலோசனைக்காக அழைக்கப் படவில்லை என்பதுதான் வருத்தமான சங்கதி. தமிழ் நாட்டில் அரசால் நடத்தப் பட்ட மொழி, இலக்கியம் சார்ந்த சர்வதேச மாநாட்டின் திட்டமிடலுக்கு இங்கிருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பது ஆசை இல்லையே.
அழைக்கப் படாமல் விட்டதற்குக் காரணங்கள் என்னவாக இருக்கும்?
நமது அரசுகள் ஜனநாயகத்தன்மையோடு இயங்குவதை அதிகம் விரும்புவன அல்ல என்பதுதான் முதல் காரணம். அரசுக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பவர்கள் ஜனநாயக பூர்வமான ஆலோசனைக் குழுக்கள் அமைப்பது, எதிர்க் கருத்துக்களுக்கும் இடமளித்துக் கருத்துருவாக்கம் செய்வது, மாற்றுக் கருத்துக்களை விவாதிப்பது, செயல் முறைப்படுத்துவது, பங்கேற்கச் செய்வது போன்றவற்றில் நம்பிக்கை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அரசுக்கு வேண்டியவர்களும், பாராட்டுபவர்களும் மட்டுமே ஆலோசனை சொல்லும் உள்வட்டத்தில் இடம்பிடித்துக் கொள்கிறார்கள். செம்மொழி மாநாடு நடத்துவது என முடிவு எடுத்து நடத்தப் பட்ட முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த மூத்தவர்களான வா.செ.குழந்தை சாமி, சிலம்பொலி செல்லப்பன், ஒளவை து. நடராசன், க.ப. அறவாணன், , நன்னன், சாலமன் பாப்பையா, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் ஜனநாயக நடைமுறையை முன் மொழியக் கூடியவர்கள் என நாம் நினைக்க வேண்டியதில்லை. ஆனால் அக்குழுவில் இருந்த கவி. கனிமொழியும், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரனும், சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமாரும் இத்தகைய நடைமுறைகளை உருவாக்க முயல்வார்கள் என எதிர்பார்த்தது தவறான எதிர்பார்ப்பு அல்லவே. ஏனென்றால் இவர்கள் அனைவரும் மையப் படுத்தப் படுதலின் ஆபத்துக்களை விவாதித்த நவீன இலக்கியப் பரப்பிற் குள்ளிருந்து போனவர்கள் அல்லவா? ஆனால் அவர்களும் இத்தகைய நடைமுறைகளுக்கு மாற்றாக மையப்படுத்தப் பட்ட செயல் பாடுகளை முன்னின்று நடத்துபவர்களாக மாறிப் போனார்கள்; மாற்றப்பட்டார்கள் என்பது தான் கண்ட பலன். அரசு அதிகாரத்தின் வலிமையை உணர்த்துவதற்கு இவர்களும் காரணிகளாக ஆகியிருக்கிறார்கள்.
ஜனநாயகத்தன்மை மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் காரணமா?
ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை இல்லாதது மட்டுமே காரணம் அல்ல. இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழி இலக்கியக் கோட்பாட்டோடு ஒத்துப் போகும் பேராசிரியர்கள் இப்போது தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் துறைத் தலைவர்களாக இல்லை என்பதும் முக்கியமான காரணம் என நினைக்கிறேன். தமிழின் பழைமை மீது அளவற்ற நம்பிக்கையும், தமிழ் தான் மூத்த மொழி; முதன்மை மொழி என்ற பிடிவாதமான அறிவியல் பூர்வமற்ற பார்வையும், சங்கப் பொற்காலம் பற்றிய மட்டுமீறிய பெருமிதமும், சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற பழைமையான பிரதிகள் மட்டுமே இலக்கியங்கள் என்ற நம்பிக்கையும்,சமய ஈடுபாட்டையும் கருத்துக்களையும் வலியுறுத்தும் பக்தி இலக்கியங்கள், கம்ப ராமாயணம் போன்றவை படிக்க வேண்டிய இலக்கியப் பிரதிகள் அல்ல என்று வெறுப்பில் உருவான கருத்தும் திராவிட இயக்கத்தின் அடிப்படையான இலக்கியப் பார்வை. இந்த இலக்கியப் பார்வையின் அடிப்படையில் தான் சமஸ்கிருத வெறுப்பும் இந்தி எதிர்ப்பும் இங்கே மைய நீரோட்டக் கருத்தியலாக ஆக்கப்பட்டன.
இந்தப் பார்வை கொண்ட தமிழாசிரியத் தலைமுறை இப்போது இல்லை. செவ்வியல் இலக்கியங்கள் என வரையறை செய்யப்பட்டுள்ள இலக்கியங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் அநேகமாகத் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் துறைத்தலைவர்களாகவும் பேராசிரியர்களாகவும் இல்லை என்பதே இப்போதைய நிலை. ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் அவர்கள் திராவிட இயக்கம் சார்ந்த அரசியல் உணர்வோடு பழந்தமிழ் இலக்கியத்தைப் படித்தவர்கள் எனச் சொல்ல முடியாது. அரசியலற்ற பார்வையோடு எல்லாவகை இலக்கியங்களையும் ஆய்வு செய்தவர்களே இன்று தமிழியல் துறைகளில் தலைவர்களாக உள்ளனர். அவர்களின் ஆலோசனைகள் இம்மாநாட்டிற்கு- குறிப்பாக இப்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசின் மைய நோக்கத்தோடு கூடிய மாநாட்டுக் கட்டமைப்புக்கு- உதவும் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இக்கால இலக்கியம், வாய்மொழி இலக்கியம், மொழியியல், விளிம்புநிலை ஆய்வுகள் என அண்மைக்காலப் போக்கோடு தங்களை இணைத்துக் கொண்டு ஆய்வுகளைச் செய்து முனைவர் பட்டங்களைப் பெற்ற இவர்கள் தங்களைத் தங்கள் புலம் சார்ந்த வல்லுநர்களாக நிறுவிக் கொள்ளும் நோக்கத்தைக் கைவிட்டவர்கள். இப்படியான கருத்தை ஆலோசனைக் குழுவின் உள்வட்டத்தினர் உருவாக்கியிருக்க வாய்ப்புண்டு. இங்கே ஒரு முரண்பாட்டையும் சொல்ல வேண்டும். இவர்கள் எல்லாம் தேர்தலில் வாக்கு அளிக்கும் போது திராவிட இயக்கத்தை- இன்னும் குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கக் கூடிய மனநிலை கொண்டவர்கள் என்பது தான் சுவாரசியமான அந்த முரண்பாடு. கடந்த இருபது ஆண்டுகளில் அரசியலற்ற பார்வையோடும், தரமான ஆய்வுகளை உருவாக்கும் பிடிமானத்தைக் கை கழுவியும் உருவாகியுள்ள இப்புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களைத் தமிழறிஞர்கள் என வகைப்படுத்திக் கொள்ள செம்மொழி மாநாட்டு உள்வட்டம் விரும்பவில்லை எனத் தெரிகிறது.
தமிழகத்துத் தமிழறிஞர்களுக்கு
முக்கியத்துவம் தரப்படவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
செம்மொழித் தமிழ் மாநாடு எனப் பெயரிட்டு இப்போது நடக்கும் மாநாட்டுக்கு முன்னால், ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடாக நடத்துவது என ஆலோசிக்கப் பட்ட நிலையிலேயே எத்தனை வெளிநாட்டு அறிஞர்கள அழைத்து வருவது என்பதில் தான் கவனம் செலுத்தப் பட்டது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் இந்தியவியல் துறைகள் எனக் கவனமாகக் கணக்கெடுத்து அறிஞர்கள் அழைக்கப் பட்டது போலத் தமிழ் நாட்டில் உள்ள வல்லுநர்கள் கவனப் படுத்தப் படவில்லை என்பதைத் தினசரிகளில் வந்த செய்திகளே உறுதி செய்கின்றன.
தமிழ்நாட்டில் பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கும் மூத்த தலைமுறைப் பேராசிரியர்களும் இளைய தலைமுறைப் பேராசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற அக்கறையை ஆய்வரங்குப் பொறுப்பாளர்கள் வெளிப்படுத்தவில்லை. அதே போல் நவீன இலக்கியத்தளத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகளோடு இயங்கும் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் போன்றவர்களை மாநாட்டில் பங்கு பெறச் செய்வதில் போதிய கவனம் செலுத்தவில்லை. தமிழின் அனைத்துவிதமான அடையாளங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கம் ஆய்வரங்கப் பொறுப்பாளர்களுக்கும் மாநாட்டுப் பொறுப்பாளர்களுக்கும் இருந்ததாகத் தடயங்கள் இல்லை.
தமிழ்நாட்டில் பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கும் மூத்த தலைமுறைப் பேராசிரியர்களும் இளைய தலைமுறைப் பேராசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற அக்கறையை ஆய்வரங்குப் பொறுப்பாளர்கள் வெளிப்படுத்தவில்லை. அதே போல் நவீன இலக்கியத்தளத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகளோடு இயங்கும் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் போன்றவர்களை மாநாட்டில் பங்கு பெறச் செய்வதில் போதிய கவனம் செலுத்தவில்லை. தமிழின் அனைத்துவிதமான அடையாளங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கம் ஆய்வரங்கப் பொறுப்பாளர்களுக்கும் மாநாட்டுப் பொறுப்பாளர்களுக்கும் இருந்ததாகத் தடயங்கள் இல்லை.
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற வகையில் ஆய்வரங்குகளில் கட்டுரை வாசிக்கும் படி கேட்டுக் கடிதம் வந்திருக்கும் அல்லவா?
அப்படியான கடிதங்கள் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் எல்லாப் பேராசிரியர்களுக்கும் வரவில்லை. தேர்வு செய்யப் பட்ட நபர்களுக்கு மட்டுமே கிடைத்தன. அதிலும் எங்கள் பல்கலைக்கழகம் ஏனோ விடுபட்டுப் போய்விட்டது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருக்கும் எங்கள் துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் ஒருவருக்கும் அத்தகைய கடிதங்கள் கிடைக்கப் பெறவில்லை. எங்கள் துணைவேந்தருக்கு வந்த கடிதத்தின் நகல்களை எங்களுக்குத் தந்தார். பதிவாளருக்கு அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பச் சொல்லிப் போட்ட கடிதத்தின் நகலையும் பதிவாளர் எங்களுக்குத் தந்தார். அவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பினார்கள்; சிலர் முழுக் கட்டுரையையும் அப்போதே அனுப்பி வைத்தார்கள். நானும் “ பெண்ணிய நோக்கில் சங்கப் பெண்கவிகளும் இக்காலப் பெண்கவிகளும் ” என்றொரு தலைப்பில் ஆய்வுக் கட்டுரைக்கான முன்வரைவை இணையம் வழியாக அனுப்பி வைத்தேன். கிடைக்கப் பெற்றோம் எனப் பதிலும் கிடைத்தது. கட்டுரைச் சுருக்கங்கள் அனுப்பக் கடைசி நாள் எனச் சொல்லப் பட்ட ஜனவரி 31-க்குப் பிறகு தேர்வு செய்யப் பட்ட விவரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
அப்புறமென்ன கட்டுரைச் சுருக்கத்தை நுண் ஆய்வுக் குழு தேர்வு செய்து கட்டுரை அனுப்பச் சொல்லி இருப்பார்கள் . தரமான ஆய்வுக் கட்டுரையை அனுப்பியிருந்தால் நிச்சயம் தேர்வு செய்திருப்பார்கள். ஆய்வரங்கில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்திருக்கலாம் தானே?.
நீங்கள் சொல்வது பொதுவாகச் சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளின் நடைமுறை. ஆனால் செம்மொழித் தமிழ் மாநாட்டில் இப்படியெல்லாம் நடந்ததாகத் தெரியவில்லை. அதற்கு நானே சாட்சி.
கட்டுரைச் சுருக்கங்கள் அனுப்பிய பிறகு செம்மொழி ஆய்வரங்கக் குழுவின் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரோடு சேர்ந்து ஆய்வரங்கப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவருமான முனைவர் கி.ரங்கன் கையொப்பமிட்டு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் நீங்கள்‘ ஊடகத்தமிழ்’ என்னும் பொருளில் கிடைக்கப் பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும் நுண்ணாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ளீர்கள். அக்குழுக்கூட்டம் நடைபெறும் நாளும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்; அப்போது அழைக்கப்படுவீர்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நானும் உடனடியாக ஒத்துக் கொண்டு கடிதம் எழுதினேன். ஆனால் அழைப்புக் கடிதம் வரவே இல்லை.
ஒரு காலைப் பொழுதில் தினமணி நாளிதழில், ‘செம்மொழி மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும் நுண்ணாய்வுக் குழுக்கூட்டங்கள் சென்னையில் நடந்து கொண்டிருக்கின்றன; நேற்று ஊடகத்தமிழ் போன்ற பொருண்மைகள் சார்ந்த கட்டுரைச் சுருக்கங்கள் தேர்வுகள் முடிந்து விட்டன; நாளை அனைத்து வகையான தேர்வுக்குழுக்களும் பணிகளை முடித்து விடும்’ எனச் செய்தி இருந்தது. வாசித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நமக்கு ஏன் அழைப்பு வரவில்லை எனக் குழம்பி நண்பர்கள் சில பேருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். கடிதம் கிடைத்த வர்களில் பல பேர் தொலைபேசியில் சென்னைக்கு வரும்படி அழைக்கப் பட்டிருந்தனர். சிலர் அழைக்கப் படவில்லை. நண்பர் முருகேசபாண்டியன் முதலில் கடிதம் கிடைக்கப் பெற்றிருந்தார்; ஆனால் சென்னைக்கு அழைப்பு கிடையாது. நண்பர் இமையம் தற்செயலாகச் சென்னைக்குப் போனவர் ஒரு தேர்வுக்குழு வல்லுநராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாராம். முழுமையாக மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழு என்ற நியதி கடைப்பிடிக்கப் படவில்லை. ஒருவர் மட்டுமே இருந்து விருப்பம் போலக் கட்டுரைகளைத் தேர்வு செய்தார்கள் என்பதும் தெரிய வந்தது. அவ்வத்துறை சார்ந்த வல்லுநர்கள் கொண்ட குழு என்பதற்கு மாறாக ’வந்தவர்கள், போனவர்கள், சென்னையிலேயே இருப்பவர்கள்’ எனப் பலரை அழைத்துக் கட்டுரைச் சுருக்கங்கள் தெரிவு செய்யப் பட்டதாகச் செவி வழிச் செய்திகள் தெரிவித்தன. சிலர் கட்டுரைகளைப் பார்க்காமலேயே தேர்வுப் பட்டியலில் கையெழுத்துப் போட்டு விட்டுப் படிகளைப் பெற்று கொண்டு திரும்பியிருக்கிறார்கள். துடைப்பம் கிடைக்காத போது கையில் கிடைத்ததைக் கொண்டு குப்பையைக் கூட்டுவது போல நடந்துள்ளது.
தினமணியில் வந்த செய்தியை வாசித்த போது தற்செயலாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்தேன். கையெழுத்து போட்டுக் கடிதம் அனுப்பிய பேராசிரியர் ரங்கனைத் தொடர்பு கொள்ளலாம் என்றால் அவரும் அங்கு இல்லை. துணைவேந்தரின் இணைய முகவரி கிடைத்தது. மூன்று வரிகள் எழுதி ஏன் அழைக்கப் படவில்லை எனக் கேட்டேன். எனது அலைபேசி என்னையும் எனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன் உடனே அவர் அலைபேசியில் வந்தார். தஞ்சையிலிருந்து சென்னைக்கு மாறியதில் சில குழப்பங்கள் நடந்து விட்டது; நீங்கள் உடனே கிளம்பி வாருங்கள்; மொழிசார் அரசியல் என்ற பொருளில் உள்ள கட்டுரைகளைத் தேர்வு செய்யலாம் என்றார். எனது விருப்பத்துறை சாராத பொருளை நான் தேர்வு செய்வது சரியல்ல என்று சொல்லி வர இயலாமையைத் தெரிவித்து விட்டேன்.
நுண்ணாய்வுக் குழுவிற்கு அழைக்கப்படவில்லை என்ற கோபத்தினால் தான் மாநாட்டிற்குப் போகாமல் ஒதுங்கிக் கொண்டீர்களா?
இல்லை. எனது ஆய்வுச் சுருக்கம் வாசிப்பதற்குரிய தகுதியுடன் இருக்கிறதா? இல்லையா? என்ற தகவல் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் கொஞ்சம் கலங்கித் தான் போனான். எங்கள் துறையில் எனக்கு மட்டும் வரவில்லை என்றால் தரமான கட்டுரைச் சுருக்கத்தை நாம் அனுப்பவில்லை எனக் கருதிச் சும்மா இருந்திருப்பேன். ஒரேயொரு ஆசிரியருக்கு மட்டும் கட்டுரை வாசிக்கத் தேர்வு செய்யப் பட்டிருப்பதாகக் கடிதம் வந்திருந்தது. அவர் கட்டுரைச் சுருக்கம் அனுப்புவதற்குப் பதிலாக முழுக் கட்டுரையையும் அனுப்பி வைத்தவர். ஆய்வுச் சுருக்கம் என்பதற்குப் பதிலாகக் கட்டுரையை அனுப்பியதற்காகக் கிடைத்த பரிசு என நினைத்துக் கொண்டோம்.
இப்போது துறையின் தலைவர் என்ற வகையில் எங்கள் துறையினருக்கு ஏன் வாய்ப்புகள் அளிக்கப் படவில்லை எனக் கேட்டுக் கடிதத்தை இணையம் வழியாகவே கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம.ராசேந்திரனுக்கு அனுப்பினேன். இம்முறையும் அலைபேசி வழியாகவே என்னை அழைத்தார். துறையின் ஆசிரியர்கள் மூவருக்கும் கட்டுரை வாசிப்பதற்கு அனுமதி அளிப்பதாகவும், அதற்கான கடிதங்களை உடனே அனுப்புவதாகவும் சொன்னார். அப்படியே கடிதங்களும் வந்தன. கடிதங்கள் கிடைக்கப் பெற்ற தேதி மார்ச் 15-க்குப் பிறகு. மற்றவர்கள் கட்டுரைகள் எழுதி வைத்திருந்ததால் உடனே அனுப்பி விட்டனர்.
தேர்வுக்குழு தேர்வு செய்து தராமலேயே ஒருங்கிணைப்பாளர் தன் விருப்பப்படிப் பங்கேற்பு வாய்ப்பை வழங்குகிறார் என்ற நிலையில் எனது மனம் கட்டுரையை எழுதுவதில் ஈடுபாடு காட்டவில்லை. ஒரு சர்வதேச ஆய்வு மாநாட்டில் கடைப்பிடிக்கப்படும் தரம் சார்ந்த நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுத் தனி நபர்கள் விருப்பப் படி வாய்ப்புகள் வழங்கப் படும் நிலை இருந்தால் அக்கருத்தரங்கம் எவ்வாறு நடக்கம் என்ற கேள்விக்குப் பின் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்தளிக்க வேண்டுமா? என்ற இறுதிக் கேள்வியையும் திரும்பத் திரும்ப மனம் எழுப்பிக் கொண்டே இருந்தது. அத்தோடு நாம் எதோ ஒரு காரணம் பற்றி ஒதுக்கப் படுகிறோம் என்ற உள்ளுணர்வும் தோன்றிய வண்ணம் இருந்தது. எனவே நிதானத்துக்கு வந்த பின் எழுதத் தொடங்கலாம் எனக் கருதினேன். தாமதமாகத் தேர்வு செய்யப் பட்டதால் மேலும் ஒரு 15 நாட்கள் கால நீட்டிப்புத் தேவை எனக் கேட்டு கடிதம் அனுப்பினேன். பதில் எதுவும் வரவில்லை. நான் அந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு பக்கம் திரும்பி விட்டேன்.
உங்கள் பதில்களில் வெளிப்படும் தொனியைக் கவனித்தால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இருப்பது போலத் தெரிகிறதே?
அதிகம் வருத்தம் என்று சொல்ல முடியாது. அதெ நேரத்தில் வருத்தமே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. கல்வித்துறையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் என்ற நிலையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வரக்கூடிய தமிழ் ஆய்வாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இத்தகைய மாநாட்டில் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதற்கு மேல் இந்த மாநாட்டிலிருந்து வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன்பு தமிழ் நாட்டில் நடந்த ஐந்து மற்றும் எட்டாம் உலகத்தமிழ் மாநாடுகளும் தமிழ் ஆய்வு உலகத்திற்குக் காத்திரமாக எதையும் வாசிக்கக் கொடுக்கவில்லை என்பதை நானறிவேன். வருடம் தோறும் நடக்கும் அகில இந்திய தமிழாசிரியர் மன்ற மாநாட்டு நடவடிக்கைகளோடு போட்டியிடும் வகையில் செயல்பட்டுள்ள ஆய்வரங்கப் பொறுப்பாளர்கள் அதனையொத்த ஆய்வுக் கட்டுரைகளைத் தான் வாசிக்க அனுமதித்திருப்பார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. அந்தத் தமிழாசிரியர் மன்ற மாநாடு என்னும் திருவிழாவிலேயே கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. கட்டுரையை அச்சிடக் காசு வாங்கிக் கொண்டு இயங்கும் ஆய்வு அமைப்புகள் எதிலும் இதுவரை கட்டுரைகள் வாசித்தவனில்லை நான். காரணம் அங்கு வாசிக்கப்படுவன ஆய்வுக் கட்டுரைகளாக இருப்பது கிடையாது என்பதுதான். கருத்தரங்குகளின் பொது நியதிகளான கட்டுரை வாசித்தல், விவாதித்தல், ஏற்றல், மறுத்தல் போன்ற எதுவும் நடக்காமல் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா என இரண்டு விழாக்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் அவற்றின் அமைப்பாளர்கள் என்பது தமிழ் நாடறிந்த உண்மை. அத்தகைய விழாக்களுக்குச் சற்றும் குறையாமல் தான் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பதால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமோ வருத்தமோ அதிகம் இல்லை என்பதுதான் உண்மை. பெரும் திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போகும் ஆபத்திலிருந்து தப்பித்து விட்ட மன நிலை தான் இப்போது இருக்கிறது.
23-06-2010
கருத்துகள்
படித்த அறிஞர்களை இந்த மாதிரி நிகழ்வுகளில் பங்களிக்க செய்து அவர்களுக்கு பயணப் படி, செலவு படி கொடுத்து எந்த பயனும் ஆட்சிக்கோ, கட்சிக்கோ கிடைத்து இல்லை என்பது வரலாறு.
எனவே தான் ஒன்றிய செயலாளர்களும், கட்சி தாவிகளும் இந்த குழுக்களில் முன்னிறுத்த படுகிறார்கள்.
ஒன்டிர்யா செயலாலர்க்ள வாகுகளை கொண்டு வருவார்கள் வர இருக்கும் தேர்தல்களில், கட்சி தாவிகளை முன்னிலைப் படுத்துவதால் இன்னும் பலர் கட்சி தாவி வருவார்கள்.
இன்றைக்கு நாங்கள் வேண்டுவது அழகிரி, அனிதா ராதக்ரிஷ்ணன் போன்ற தேர்தல் முறை தெரிந்த நபர்களை.
தமிழருவி மணியன், சுப்பு, செழியன் போன்ற அண்ணா காலத்து மேடை சிங்கங்களின் காலம் முடிந்து பொய் விட்டது.
அவரின் வழித் தோன்றல்கள் கண்ணப்பான், செல்வ கணபதி, அழகு திருநாவுக்கரசு, தீப்பொறியார்