எட்டுத் திக்கும் மதயானை



போருக்குப் பல கட்டங்கள். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளோடு போராடும் போரை நான் சொல்லவில்லை. கண்ணுக்குத் தெரியாத பண்பாட்டு வெளிகளில் நடக்கும் போர்களின் கட்டங்களையே இங்கு குறிப்பிடுகிறேன்.
இன்றைய தேதியில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை எதிரி யாராக இருக்க முடியும்? தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம் பற்றியும் அறியாமல் தான் தோன்றித்தனமாக கருத்து சொல்லும் பெண்களாக இருக்கமுடியும். கருத்துச் சொல்பவர்கள் மட்டுமல்ல; நடந்துகொள்பவர்களும்கூட.  அப்படி நடந்துகொண்டவர் ஸ்ரேயா என்னும் நடிகை. 

சிவாஜிக்கு முன்னால் பல படங்களில் நாயகியாக நடித்திருந்த போதிலும் அவற்றின் வழியாகப் பெற்றிருந்த அறிமுகங்களைப் போல பல பத்து மடங்கு அறிமுகத்தை சிவாஜி படத்தின் நாயகியாக நடித்ததின் மூலம் பெற்றார். ஆனால் இனியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த - தமிழின் மெகா படங்களின் இயக்குநர் சங்கர் இயக்கிய - சிவாஜி படத்தின் நாயகி ஸ்ரேயா என அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இல்லை. சட்ட சபையில் சூடான விவாதத்தைக் கிளம்பிய குட்டைப் பாவாடை புகழ் நடிகை ஸ்ரேயா என்று சொன்னால் அநேகமாக எல்லாருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன். 

தமிழ்ப் பண்பாடு எது? எனவும், இந்துப் பண்பாட்டில் பெண்களின் உடையின் அளவு என்ன? என்பதை விரிவான தளத்தில் விவாதிக்கும் வகையில் அவரது அந்தக் குட்டைப் பாவாடை புழுதியைக் கிளம்பியிருக்கிறதல்லவா? ஆம் சிவாஜி படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்க வந்த போது அவர் அணிந்திருந்த குட்டைப் பாவாடை மூலம் பல நூறு மடங்கு அறிமுகத்தை அவர் பெற்று விட்டார் என்றே தோன்றுகிறது. 

சிவாஜி படத்தின் வெற்றி விழாவிற்காக மேடையில் அமர்ந்திருந்தவர்களும் சரி, பார்வை யாளர்களாக வந்திருந்தவர்களும் சரி சிவாஜி படத்தை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கலாம். படத்தில் தன்னைப் பார்த்து ரசித்த ரசிகர்களுக்குக் கூடுதல் இன்பத்தை அளிக்கலாம் எனக் கருதிக் குட்டைப் பாவாடை அணிந்து வந்த நடிகை ஸ்ரேயா அன்று எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனத்தை எதிர் கொண்டார். அதனால் இனி இப்படி தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக நடந்து கொள்ள மாட்டேன் என்று அறிக்கை விட்டு விட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தப் போய்விட்டார். என்றாலும் நடிகை ஸ்ரேயாவிற்குப் பல சந்தேகங்கள் தோன்றியிருக்கும் என்பது நிச்சயம். 

படத்தின் ஆடல் காட்சிகளில் தனது உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆடை அணிந்து ஆடிய போது பார்த்து ரசித்த ரசிகர்கள் நேரில் பார்க்கத் தயங்கியது ஏன் என்ற முதல் சந்தேகத்திற்கு இன்னும் விடை கிடைத்திருக்காது. ஒரு வேளை பரவசத்தில் விசில் அடித்து ஆரவாரமாக சந்தோசத்தை வெளிப்படுத்திய ரசிகர்களின் குரலைக் கண்டனம் என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமோ என்று கூட நினைத்திருக்கலாம். ரசிகர்கள் மேல் ஏற்பட்ட சந்தேகத்தை விடவும் கூடுதல் சந்தேகங்கள் இயக்குநர் சங்கர் மீது எழுந்திருக்க வேண்டும். வாஜி படத்தில் நடிக்கும் போது கவர்ச்சியான ஆடைகளைத் தந்து ஆடச் சொன்ன இயக்குநர், தான் அணிந்து வந்த குட்டைப் பாவாடை ஆபாசம் என அறிவுறுத்திச் சொல்லும் போது சந்தேகம் மட்டும் அல்ல; ஆச்சரியம் கூட ஏற்பட்டிருக்கலாம். 

தொடர்ந்து தனது படங்களின் பாடல் காட்சிகளில் நாயகிகளின் உடல் அழகைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்குப் பல விதமான உத்திகளைப் பின்பற்றுபவர் இயக்குநர் சங்கர். குறிப்பாகப் பாடல் காட்சிகளில் நாயகியின் உடல் அழகை கவர்ச்சியாகக் காட்ட வேண்டும் என்பது அவரது முதன்மையான நோக்கமும் கூட. நடிகையின் தோலின் வண்ணத்திலேயே ஆடையின் நிறமும் இருக்கும் படி தெரிவு செய்து துணி மூடிய உடலைக் கூட ஆடையற்ற உடல் போலத் தனது படங்களில் காட்டி வசூல் வெற்றியைக் குறி வைப்பவர். நாயகிகளை மட்டும் காட்டினால் போதாது எனத் தனிப் பாடலுக்கென பிரபலமான நடிகைகளை ஒருபாட்டுக்கு ஆடும் போக்கைத் தொடங்கி வைத்தவரும் கூட அவர் தான். 
தொட்டுக் கொள்வதும் உரசிக் கொள்வதும் என மென்மையான தன்மைகளை கொண்டிருந்த தமிழ்ப் படங்களின் பாடற்காட்சிகளை மோதுதல், இறுகப் பற்றிப் புரளுதல், என்பதான வன்மையான காட்சிகள் கொண்டதாக மாற்றிய முன்னோடி இயக்குநர் சங்கர் தான். பெண் உடலின் மறைவுப் பகுதிகளான மார்பகங்கள், இடுப்பு, தொப்புள் போன்றவற்றை அண்மைக் காட்சிகளாகக் காட்டி ரசிக்கும் படி தூண்டும் விதமாக அவரது பல படங்களில் அமைத்துக் காட்டியவர் சங்கர். 
இந்த அம்சங்கள் அனைத்தும் அவரது முதல் படமான ஜெண்டில்மேனில் தொடங்கிக் கடைசியாக வந்த சிவாஜி வரை தொடர்ந்துள்ளது என்பதுதான் உண்மை. இவர் தான் குட்டைப் பாவாடை உடுத்தி வந்த ஸ்ரெயாவைக் கடிந்து கொண்டார் என்று பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இவரது அறிவுரையின் பேரில் தான் தனது மன்னிப்பு அறிக்கையைக் கூட வெளியிட்டார் என்றும் தெரிவித்துள்ளன.
இயக்குநர் சங்கர் மட்டும் அல்ல; நடிகர் ரஜினிகாந்தும் கூட ஸ்ரேயா அணிந்து வந்த குட்டைப் பாவாடையில் நௌ¤ந்து கொண்டுதான் மேடையில் அமர்ந்திருந்தார் என்பதை அந்தக் காட்சிகளைத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்திருக்கலாம். குட்டைப் பாவாடை தந்த அதிர்ச்சியில் நௌ¤ந்த ரஜினி காந்தின் முகத்தைத் தொலைக் காட்சிக் காமிரா பல தடவை அண்மைக் காட்சியாகக் காட்டியது.பொது மேடைகளில் பக்தி வழிப்பட்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள் வதோடு,எப்படியாவது முதல்வர் கலைஞர் கருணாநிதி யையும் பக்தி வழிக்கு- கடவுள் நம்பிக்கையின் பக்கம் திருப்பி விடும் முயற்சியைத் தொடர்ந்து செய்யும் நடிகர் ரஜினிகாந்த் அதே ஸ்ரேயாவை படத்தின் காட்சிகளில் இதைவிடக் குறைவான ஆடையில் மிக அண்மையில் பார்த்தபடி ஆடிப் பாடியவர். அப்பொழுது அவருக்கு அந்த ஆடைகள் ஆபாசமாகத் தோன்றவில்லை. 
ஒரு பொது இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கூட்டத்தின் முன்னால் , அதுவும் தமிழக முதல்வர் அமர்ந்திருக்கும் மேடையில் குட்டைப் பாவாடையில் வருவது மட்டுமே ஆபாசமாகத் தோன்றுகிறது என்பது எவ்வளவு போலித்தனம். படத்தில் தந்த அனுபவத்தை நேரிலும் தரலாம் என்ற நினைப்பில் வந்த ஸ்ரேயா அன்று எதிர்கொண்டவை கண்டனங்கள் என்றாலும் அவரது மனத்தில் தமிழர்களின் போலித்தனம் பற்றிய எண்ணங்களும் அலையோடத்தான் செய்திருக்கும். நடிகர் ரஜினிகாந்துடன் தான் நடித்த பாடல்காட்சிகளில் தன்னைத் தினசரி பார்த்துக் கொண்டே இருக்கும் ஒரு ரசிகன் நேரில் அவ்வாறு பார்க்க விரும்பவில்லை என்பது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?
பெண்ணுடல், பெண் ஆடை, பெண்குரல், பெண் கூற்று , பெண் நடவடிக்கை எனப் பெண்களை மையப் படுத்திப் பண்பாட்டுக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் அமைப்புக்களும் தனிமனிதர் களும் கூட மரத்தை விட்டு விட்டு இலையைப் பிடித்து ஆட்டிப் பார்க்கும் வேலையைத்தான் செய்கிறார்கள். ஸ்ரேயா குட்டைப் பாவாடை உடுத்தி வந்ததைக் கண்டித்து நீதிமன்றம் செல்லும் பொது நல விரும்பிகள், அவரை இதைவிடக் குறைவான ஆடையில் காட்டிய திரைப்படத்திற்கெதிராக வழக்குத் தொடுக்காமல் தவிர்ப்பது எப்படிச் சரியாக இருக்கும் ?பொது மேடைகள் மட்டும் புனிதமானதாக இருந்தால் போதுமா? அதனால் மட்டுமே தனிமனிதனின் ஆன்ம வெளியின் புனிதம் காக்கப்படுதல் சாத்தியமா? 
நமது குடும்ப வெளிக்குள் நுழையும் தொலைக் காட்சிகளில் இடம் பெறும் ஆட்டம் பாட்டங்கள், திரைப்படக்காட்சிகள், போட்டி நடனங்கள் என அனைத்திலும் பெண்கள் என்னவாகக் காட்டப்படுகின்றனர். கவர்ச்சி ததும்பும் பலூன்களாகத் தானே! அதையெல்லாம் எதிர்க்காமல் முதல்வர் முன்னால் வந்த ஒன்றை மட்டும் விவாதித்துக் கொண்டிருப்பதும் கூட நமது போலித்தனங்களின் வெளிப்பாடுதான்.
தொலைக்காட்சிப் பெட்டிகளின் அலைவரிசைகளில் வேண்டாததை மாற்றிக் கொள்ளும் சாதனங்கள் கைகளில் இருந்தாலும் நாம் திசை தெரியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கும். மாற்றும் ஒவ்வொரு அலைவரிசையிலும் ஆட்டங்கள், பாட்டுக்கள், கண்ணீர்கள், பழிவாங்கல்கள் என்பனவே காட்டப்படும்போது தப்பிப்பது எப்படி?எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடனின் நாவல் தலைப்பு இது. இன்றைய ஊடகப் போட்டியையும் அவற்றில் வழியும் ஆபாசங்களையும் அபத்தங்களையும் கூட அதே தலைப்பால் சுட்டலாம் என்றே தோன்றுகிறது. 
ஜனவரி, 31/2008

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்