சாதியெனும் பீனிக்ஸ் பறவை : சுப்ரபாரதி மணியனின் தீட்டு

இது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி.
இதுவும் அதுவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

நாணயம், கத்தி இரண்டு வார்த்தைகளையும் குறியீடாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர்களைப் பழமொழிகள் என்று சொல்ல முடியாது. மரபுத் தொடர்கள் எனக் கூறலாம்.

நேரடியாகத் தொடர்பில்லாத நாணயம், கத்தி என்ற இரண்டு சொற்களும் உலகின் பெரும்பாலான மொழிகளில் ஒரேவிதமான பயன்பாட்டில் இருக்கின்றன என்பது சுவாரசியமான குறிப்பு. ஒரேவிதமான பயன்பாடு என்பதற்காக ஒரே அர்த்தத்தில் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
பயன்படுத்தப்படும் நோக்கில் ஒற்றுமைகள் இருப்பது போலத் தோன்றினாலும், பயன்படும் நிலையில் இரண்டும் எதிரெதிர் அர்த்தங்களைக் கொண்டன. எந்தத்தேசத்து நாணயத்திற்கும் இரண்டு பக்கமும் முக்கியம் தானே. நாணயங்கள் – அவை உலோகத்தால் ஆனவையானாலும்சரி, தாளில் அச்சிடப்பட்டிருந்தாலும்சரி இரண்டு பக்கங்களிலும் சிதைவு இல்லாமல் இருந்தால் தானே அவை மதிப்புடையவை. ஆனால் கத்தி ஒரு பக்கம் கூராக்கப்பட்டிருந்தால் தான் அதன் பயன்பாடு பயன்படுத்துபவருக்கு நன்மையாக இருக்கும்.இரண்டு பக்கமும் கூராக்கப்பட்டிருந்தால், பயன்படுத்துபவருக்கே ஆபத்தை உண்டாக்கக் கூடும்.
நாணயம் அதன் மதிப்பு மற்றும் பயன்பாடு கருதி நேர்மறைப் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் கத்தி அதே காரணங்களுக்காக எதிர்மறைப் பொருளைக் கொண்டிருக்கிறது. பிரித்து விட முடியாத, பிரித்தால் அர்த்தமும் மதிப்பும் இழந்து போகக் கூடிய பலவற்றையும் குறிக்க அவற்றை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பலரும் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். அந்த அளவுக்கு கத்தி என்ற சொல்லைப் பயன்படுத்தி தொடர்களை உருவாக்கி விட முடியாது.
இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பையும், அதனைத் தீர்மானிக்கும் சொற்களையும் குறிக்கும் போது சிந்தனையாளர்களும் சமூகவியலாளர்களும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இந்தியச் சாதி இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி என்கின்றனர். சாதியைத் தக்கவைப்பதில் முக்கியப் பங்காற்றுபவை எவை? என்ற கேள்விக்குச் சமூகவியலாளர்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர்.
மனிதர்களை மேல்- கீழ் எனப் பிரித்துக் காட்டி, வரிசைப் படுத்தித் தந்துள்ள அடுக்கு முறையும், அதன் காரணமாகக் கிடைக்கும் மனரீதியான பெருமிதமும் குற்ற உணர்வும் தான் சாதி அமைப்பைத் தக்க வைக்கிறது என்பது ஒரு விளக்கம். இந்த விளக்கம் ஒருவிதமான கருத்தியல் விளக்கம் தான். கருத்தியல் விளக்கம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் நேரடியாகக் காண முடிகிறது. உணரத்தான் முடியும்.
கருத்தியல் நிலைக்கு மாறானது செயல்பாட்டு நிலை. பெருமிதத்தையும் குற்றவுணர்வையும் மனத்தில் உருவாக்கும் நிலைக்கு உருவம் கொடுப்பதாக இருக்கிறது இன்னொரு எதிர்வு. புனிதம்- தீட்டு என்ற எதிரெதிர்ச் சொற்கள் தான் அவை. இவ்வெதிர்நிலைச் சொற்களே சாதியின் இருப்புக்கு கண் கூடான- வெளிப்படையான உருவத்தைச் தருகின்றன.
குறைந்த பட்சக் கல்வி அறிவு பெற்ற எவரும், இந்தியச் சாதி முறை குறித்து வெளிப்படையான ஆதரவுக் கருத்தை முன் வைப்பதில்லை. காரணம் நமது கல்வி. நமது பள்ளிக் கல்வியின் ஆரம்பமே சாதி வேறுபாடு காட்டுவதற்கு எதிராகவே தொடங்குகிறது. முதல் வகுப்புப் பாடப் புத்தகம் தொடங்கிப் பலநிலைகளில் தீண்டாமைக் கெதிரான வாசகங்கள் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
தீண்டாமை பாவம்; தீண்டாமை ஒரு கொடுஞ்செயல், தீண்டாமை குற்றம் என அந்த வரிகள் அதன் அர்த்த அடுக்குகளைப் புரிய வைக்கும் முயற்சியில் விரிக்கப் பட்டுள்ளன. ஆனாலும் நடைமுறையில் சாதி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதே உண்மை. இதன் காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும் என்பதைப் பற்றிக் கொள்கையாளர்களும் வழிகாட்டிகளும் சிந்திக்க வேண்டியுள்ளது. இத்தகைய சிந்தனைகளைச் சிந்தனையாளர்கள் உருவாக்கி, நடைமுறைப்படுத்திச் சாதி அமைப்பையும், நிலவும் வேறுபாடுகளையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபடும் அதே வேளையில் படைப்பாளிகள் தங்கள் போக்கில் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து படைப்பாக்கவே செய்கின்றனர், சுப்ரபாரதி மணியனின் தீட்டு என்ற கதை அத்தகைய முயற்சிகளில் ஒன்று.
சாதி அடுக்கில் கீழ் நிலையில் இருப்பதாக நம்பும் சாதிகளை ஒதுக்குவதற்கு மட்டுமே தீட்டு பயன்படுவதில்லை. மேல் நிலையில் இருப்பதாக நம்பும் ஒருவருக்கான பாதுகாப்பாகவும் அதே சொல்லே காரணமாக இருக்கிறது என்பதைப் பேசும் அக்கதை, கிராமீய வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் பயன்பாட்டில் இருக்கும் தீட்டு என்ற சொல்லை விவாதத்துக்குள்ளாக்குகிறது.
நமது அன்றாட வாழ்க்கையில் சாதாரணச் சொல்லாக இல்லாமல் அச்சமூட்டும் ஒரு நடைமுறையாக இருக்கிறது எனக் காட்ட விரும்பும் ஆசிரியர், வருடாந்திர நிகழ்வான புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்தைக் கதையின் காலமாக அமைத்துக் கொள்கிறார். குடும்பத்தில் ஒருவர் விரதம் இருந்து சடங்கை நிறைவேற்றுவதின் மூலம் தங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படுகிறது என நம்பும் எளிய குடும்பம் ஒன்று அச்சடங்கை நிறைவேற்றுவதன் மூலம் சாதியின் இருப்புக்குக் காரணமாவதைப் படம் பிடிக்கிறார்.
கிராமியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது என்பதையும், அவற்றால் அதிகம் பாதிக்கப்படும் மனிதர்கள் அச்சடங்குகளிலிருந்து மீளும் பொருட்டு நகரங்களை நோக்கி நகர ஆரம்பிக்கின்றனர் என்பதையும் கதையில் காட்டுகின்றார் சுப்ரபாரதி மணியன். தனது பெரும்பாலான சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் தனது சொந்த ஊரான திருப்பூரைக் கதைக்களனாக்கும் அவர் இந்தக் கதை அந்நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றில் நிகழ்வதாக எழுதியுள்ளார். தீண்டத் தகாத சாதியைச் சேராத ஒரு பள்ளிச் சிறுவனின் கூற்றாக விரியும் அக்கதை இப்படித் தொடங்குகிறது:
எனது தோற்றமே எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. வெறும் உடம்பு, பூஞ்சை வேறு. இடுப்பிற்குக் கீழே நிற்கும் எட்டு முழ வேட்டி.
“ நாராயணாங்கற உன்னோட குரல் ஊர் பூராவும் கேக்கணும். செட்டியார் பெரிய தனம் வூட்டுப் பையன் கெளம்பறதுக்கு முன்னியெ நீ கிளம்பீர்ணும். கெளம்பு, அப்பா கால்லே விழுந்துட்டு கிளம்பு” அப்பா பந்தசேர்வை பக்கம் இருந்தார். அதை வலது கையில் பிடித்திருந்தார்.
“ நாராயணமூர்த்தி புறப்பட்டாச்சு” அம்மாவின் முகம் குதூகலமாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் என்னை நாராயணமூர்த்தியாக்கி விடுவதில் அம்மாவிற்கு இருக்கும் சந்தோஷத்தையும், திருப்தியையும் வேறு எதிலும் காண முடிவதில்லை.
“ அம்மா இந்த வருஷம் நாராயணமூர்த்தி ஆகணுமா..” அம்மா என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “ அப்பிடி சொல்லாதடா.. நம்ம குடும்பம் கஷ்டத்திலெ மூழ்கிப் போகாமெ இருக்கிறதெ நீ பண்ற இந்தப் புண்ணியத்தில்தா. வாழ்க்கை முச்சூடும் எவ்வளவு சிரமங்க. புரட்டாசி சனிக்கிழமைகள்ல நீ பண்ற சேவையில் இந்தக் குடும்பம் தப்பிச்சிட்டு இருக்குது. காரமடை ரங்கநாதர் தேர்ல உங்கப்பா எடுக்கிற பந்தச்சேர்வை இன்னமும் பலமா இருக்குது. என்ன நடந்தாலும் இதையெ கைவுடக்கூடாது. இதுதா நம்ம குடும்பத்தெக் காப்பாத்துது. அம்மாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“பள்ளிக்கூடத்திலெ பசங்களெல்லா கிண்டல் பண்றாங்கம்மா..”
நீ மாட்டீன்னா நா நாராயணமூர்த்தின்னு கெளம்பிர்வன். நாலு வூடு போய் அந்த பிரசாதமும், காணிக்கையும் வாங்கி கடைசி சனிக்கிழமையன்னிக்கி நாலு பேருக்கு அன்னதானம் பண்ணாட்டி மனது பதறும்..” “ வேண்டாம்மா.. நீ ஒண்ணும் போக வேண்டா. நானே போறேன்” “குடும்பத்தெ காப்பாத்தறவன் நீதா”
################
எந்தெந்த ஜாதிக்காரர்கள் வீட்டிற்குப் போவது என்பது எனக்குப் பாடமாகவே இருந்தது.கவுண்டர்கள் வீடுகள், கரண்ட் ஆபீஸ் அய்யர் வீடு, போர்மென் வீடு ஆகியவற்றுடன் எங்கள் ஜாதிக்காரர்கள் வீடுகள்
தேவனன் வீட்டு முன்னால் நான் போய் நிற்க வேண்டியதில்லை என்பது மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாகியிருந்தது.
தேவனன் வீட்டில் இருப்பவர்களும் எங்களைப் போல கன்னடம் பேசுபவர்கள்தான், சௌண்டியம்மனைக் கும்பிடுகிறவர்கள்தான், எல்லா விசேஷங்களுக்கும் கலந்து கொள்கிறவர்கள்தான்.” எல்லாத்திலியும் அவனுக வந்தாலும் சமமாயிருவாங்களா” என்பார் அப்பா. “ ஓரத்திலெதானே நிக்க வேண்டியிருக்கும்.”
எங்கள் ஜாதியில் இழவு விழுந்து விட்டால் முதலில் தேவனனைத்தான் தேடுவார்கள். ஊர் முழுக்கப் போய் இன்னார் வீட்டில் சாவு விழுந்து விட்டது என்று சொல்லுவான்.
தேவனனின் மகன் சண்முகம் என் வகுப்புத்தோழன். வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகிறபோது எனக்காகக் காத்திருந்து என்னுடன் சேர்ந்து கொண்டு வருவான்.
வீட்டிற்குப் பலமுறை வந்திருக்கிறான். ஆனால் வெளித்திண்ணையோடு நின்று விடுவான். அவனை உள்ளே அழைத்த ஓரிருமுறை பெரிய அண்ணன் சப்தம் போட்டிருக்கிறார். அம்மாதான் தனியாக அழைத்துப் போய் ஒரு நாள் சொன்னாள்.”அவங்கெல்லா கன்னடம் பேசறவங்களா இருந்தாலும் நம்ம சாமியைக் கும்புட்டாலும் நமக்குள்ள தாழ்ந்தவங்க, தீட்டுக்காரியம் பண்றதுக்கு, கோயில் காரியம் உபகாரத்துக்குன்னு இருப்பாங்க.. காரணமெல்லா கேக்கக்கூடாது.. பரம்பரை பழக்கம்.”
################
பெரிய கவுண்டர் வீட்டிலிருந்து இறங்கினபோது சண்முகம் தென்பட்டான். என்னைப் பார்த்ததும் பக்கம் வந்தான். “ ஹரி ஹரி கோபாலா.. நீ வரு கோபாலா “ பாடலை முணுமுணுத்தான். நான் திரும்பி உரக்கச் சொன்னேன்.
“ பஜனைக்குக்கூட வர்ரதில்லே. ஆனா , பஜனைப் பாட்டெல்லாம் நல்லாப் பாடறே..” “ கோயில் ஜன்னல் பக்கம் உக்காந்துக்குவேன். அது போதும்..”
“செரி, அய்யண்ணன் தோட்டம் போகலாமா?” “ எதுக்கு வெரட்டுவாங்களே எப்பவும்.”
“ நாராயணமூர்த்தின்னு போனா சாமி வந்திருச்சும்பாங்க. நெறைய கொய்யாப்பழம் கெடைக்கும்..”கொஞ்சம் பெரிய சொம்புதா.. ஆமா இன்னிக்கு பத்து சொம்பாச்சும் நொம்மி இருக்குமா..” “ இருக்கும்.. கரகாட்டச் சொம்பாட்டம் கொஞ்சம் பெரியசாத்தான் இருக்குது..” எடுத்துப் பாக்கலாமா..?.. தப்பில்லையே..”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லெ ..” சண்முகம் சொம்பைக் கையில் எடுத்தான். அதன் கனத்தை உணர்ந்தவன்போல் கீழே வைத்தான். “ நல்லா கனந்தா.. கரகாட்டம் பாத்திருக்கியா..”
சொம்பைத் தலையில் வைத்தான். சொல்லி வைத்தாற்போல் நின்றது. நிமிர்ந்தவன் தலையில் ஒருக்களித்து நின்ற சொம்பை விழி ஓரத்தில் பார்த்தான். கைகளை அகலமாய் வீசி நடந்தான். கைகளைக் கட்டிக் கொண்டு நடைபோட்டான். “ஒத்தை ரூபா தாரேன்…” முணுமுணுத்தபடி ஆட ஆரம்பித்தான். ஆச்சரியத்துடன் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
” நல்லா ஆடறே.. பள்ளிக்கூடத்து விழாவிலே கூட ஆடலாம்..” “ வூட்டுக்குள்ளாறெ ஆடற யாருக்கும் தெரியாது. எங்கம்மா தப்பித்தவறி வெளியே போயி ஆடிறாதெம்பாங்க..” “ ஏனாம்..” “ கரகாட்டமெல்லா கீழ் ஜாதிக்காரங்க ஆட்டமாமா. அப்புறம் சௌண்டியம்மனைக் கும்புடற நம்ம ஜாதியில நாங்க உங்களவுட தாழ்ந்தவுங்களாமா..” “ அதெல்லா சும்மாடா..” “சும்மான்னு எப்படிச் சொல்றே. சொல்றாங்களே..” அதற்கடுத்து மூன்று நாட்களும் அவன் பள்ளிக்கு வரவில்லை.
” ஏண்டா ஸ்கூலுக்கு வர்ல.. தட்டுப் படவேயில்லை” “ஆமா ..உன்னோட நாராயணமூர்த்தி சொம்பை தொட்டதெ, தலையில வெச்சு ஆடுனதைப் பத்தி யாருகிட்டயாச்சும் சொன்னியா..”
“ சொல்லலாமான்னு இருந்துச்சு.. சொல்லலே..” “ நல்லதாப் போச்சு..”
“அதெல்லா தொடக் கூடாதாமா.. நாராயணமூர்த்தியா நீ இருக்கும்போது பேசக்கூடாதாமா.. உன்னெத் தொடக் கூடாதாமா.. அதுவும் சொம்பைத் தொட்டாத் தீட்டாமா.. வெளையாட்டா எங்கம்மா கிட்டச் சொல்லப் போக அழுதுட்டாங்க. தீட்டுடா அது. ஏதாச்சும் தீட்டு கொணம் நமக்கு வந்துரப் போகுதுன்னு அழுதாங்க.
################
அவன் சுழன்று சொம்புடன் ஆடின ஆட்டம் கண்களில் விரிந்தது. அந்தச் சுழற்சியும் வேகமும் காற்றில் தள்ளாடும் பனையோலைக் காற்றாடியை ஞாபகப் படுத்தியது. இடைவேளை முடிவின் அறிகுறியாய் மணி அடித்தது. விறுவிறுவெனப் பள்ளியை நோக்கி ஓட ஆரம்பித்தோம்
“ எங்க அண்ணனுக்குக் கூட இதெல்லாம் புடிக்காதாமா.. போன மாசம் எங்கப்பா ஒடம்பு நல்லா இல்லாமெ படுத்துட்டப்போ, ஏதோ நம்ம ஜாதி எழவு விஷயத்தெ ஊருக்குள்ள சொல்லச் சொன்னப்போ முடியாதுண்டார். ஜாதிக் கூட்டத்திலே பெரிய பிரச்சினையா வரும்ன்னாங்க, எங்கண்ணன் கூட டவுனுக்குப் பனியன் கம்பெனி வேலைக்குப் போறான்னு சொல்லிக் கிட்டிருந்தார். நானும் போயிருவேன். எங்கப்பா பண்ற பரம்பற ஜாதி வேலை எங்கண்ணனுக்குப் புடிக்கலே.. எங்கண்ணன் போயிட்டா என்னெ அந்த ஜாதி வேலையெல்லா செய்யச் சொல்லுவாங்ளோ என்னமோ..”
சட்டென நின்றேன். ஓட்டத்தில் மூச்சிரைத்தது. அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் தலையில் சுழன்றாடிய சொம்பும், வாயில் முணுமுணுக்கும் பாடலும், அநாதியாகி விடக் கூடாது என்ற கவலை மனசுக்குள் வந்தது.
################
தொடக்கக் கல்வி தொடங்கி, உயர்கல்வி வரை சாதி அமைப்பிற்கு எதிரான கருத்துக்களைக் கூறும் பாடப்புத்தகங்களை விடவும் வலுவான பிடிமானத்தைத் தருவனவாக இருக்கின்றன சடங்குகளும் நம்பிக்கைகளும். இந்த நிலையில் இந்திய சமூகம், கல்விக்கும் அக்கல்வி தரும் அறிவுக்கும் சிந்தனைக்கும் தரும் இடம் எத்தகையது? என்ற கேள்வியிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை முழுமையாக ஏற்றுச் செயல்படுகிற சமூகமாக இந்திய சமூகம் உள்ளது என்ற ஐயம் உறுதியாகிக் கொண்டே இருக்கிறது. சடங்குகள், நம்பிக்கைகள் என்னும் சாம்பலைத் தின்று உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கிறது சாதி எனும் பீனிக்ஸ் பறவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்