நம்பிக்கைகள் சிதையும் தருணங்கள்:எக்பர்ட் சச்சிதானந்தத்தின் தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..


ஒரு மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட நித்தியானந்தப் புயல், சாதாரண மக்களின் பொதுப்புத்தியிலிருந்து நகர்ந்து விட்டது. ஆனால் நமது ஊடகங்கள் அதன் மர்மமுடிச்சுகளை இன்னும் அவிழ்ப்பதாகப் பாவனை செய்து கொண்டே இருக்கின்றன.
தேர்ந்த மர்மத்திரைப்பட இயக்குநர் அடுத்தடுத்து ரகசியங்களை அவிழ்த்துப் பரவசப்படுத்துவதுபோல காட்சிகளை விரித்துக் கொண்டிருக்கின்றன தமிழகத்து ஊடகங்கள்

, சாமியார் நித்தியானந்தன் - நடிகை ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை விரித்தபோது வில்லனாகக் காட்சி தந்த சாமியார், நமது ஊடகங்கள் அடுக்கிக் காட்டிய காட்சிகளின் வழியே மெல்ல மெல்ல நாயகனாக ஆகிக் கொண்டிருக்கிறார்.

அவரது கூட்டாளியான இன்னொரு சாமியாரின் பழிவாங்கலின் விளைவே இந்த அம்பலம் என்று விவரிக்கப்படும் நிலையில் நித்தியானந்தன், நம்பிக்கைத் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவியாக பொதுமக்களின் மனத்திற்குள் உருமாற்றம் அடைந்து விடுவார் என்பதை நமது ஊடகங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அரசு அதிகாரத்தின் மறைமுகத் தூண்டுதலின் விளைவாக விரிக்கப்பட்ட ஊடக வலைப்பின்னலின் சதியாக மாறுகிற போது சாமியாரின் ஒளிவட்டம் இன்னும் கூடவே செய்யும். வெகுமக்கள் ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் கவனிக்க வேண்டிய அடிப்படையான விதி.

இந்த நித்தியானந்தனை அம்பலப்படுத்தியதில் மட்டுமல்ல; இதற்கு முன்பு பிரேமானந்தன்,  காஞ்சிபுரத்து சங்கரன் என அகில உலகமும் அறிந்த சாமியார்களின் குற்றச்செயல்களையும், கிராமக் கோயில் பூசாரிகள், சிறுநகரத்து மடாதிபதிகள் எனச் சமய நம்பிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களின் நோக்கம் வெற்றுப்பரபரப்புகளாக மட்டுமே இருக்கின்றன.

ஊடகங்களும் அதன் வியாபார வளர்ச்சிக்காக வேலை பார்க்கும் அதன் பணியாளர்களும் முன் எடுக்கும் இத்தகைய அம்பலப்படுத்துதல்களின் போது மக்கள் எத்தகைய எதிர்வினைகளை முன் வைக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டியது முக்கியம். சமய நம்பிக்கைகள் கொண்ட தனி மனிதனும், கூட்டு மனிதனும் தங்கள் நம்பிக்கைகள் பொய்த்துப் போய் விட்டன என்பதால் முதலில் அதிர்ச்சி அடையவே செய்கிறான் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. ஆனால் அதற்காக அவர்கள் நம்பிக்கையை விட்டு விலகிப் போய் விடுவதில்லை என்பதுதான் சுவாரசியமான உண்மை.

சமய நம்பிக்கையின் கூட்டுமனத்தைப் பயன்படுத்தித் தங்கள் சொந்த வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் போக்கு நிறுவனமயமாகும் எல்லாச்சமயங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். கடவுளை நினைத்தல்
, வழிபாடு நடத்துதல், ஆன்மாவின் கேள்விகளுக்கான பதில்களைத் தனக்குள்ளேயே தேடுதல் என்பதற்குப் பதிலாகக் கடவுளிடம் சொல்லி விடை கிடைப்பதாகப் பாவித்தல் என்ற தனி மனிதனின் நம்பிக்கைகள் பெரிய எதிர்பார்ப்புகள் கொண்டன அல்ல.

சமய நடவடிக்கைகள் குடும்ப எல்லையைத் தாண்டி பொது இடங்களுக்குள் - கோயில்களுக்கு -நகரும் போது நிறுவனத்தன்மை உருவாகி விடுகிறது. அங்கே சடங்குகள் பொது நிகழ்வுகளாக ஆக்கப்படுகின்றன. அப்போது சடங்குகள், கூட்டத்திற்குக் களிப்பூட்டும் வடிவத்தை எடுக்கின்றன. அதனை ஏற்பாடு செய்யவும், நடத்திக்காட்டவும் சபைகள், அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதனை உருவாக்கி அளிக்கும் மனிதர்கள் கடவுளின் பிரதிநிதிகளாகவும்,பல நேரங்களில் கடவுள்களாகவும் வலம்வர முடிகிறது. தனிமனித மனநிலையில் இன்னொரு மனிதனைக் கடவுளாக ஏற்க மறுக்கும் மனம் கூட்டத்தின் பகுதியாக மாறும்போது ஏற்றுக் கொள்கிறது.

கடவுளின் பிரதிநிதிகள் அல்லது கடவுள்கள் மனிதனின் இயல்புகளிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்க வேண்டும் என மனித மனம் எப்போதும் எதிர்பார்க்கிறது. குறிப்பாகப் போதனைக்கும் நடைமுறைக்கும் வேறுபாடுகள் இல்லாமல் இருப்பது மனிதச் சாத்தியம் அல்ல; தெய்வங்களுக்கும், தெய்வாம்சம் மிக்க மனிதர்களுக்கும் சாத்தியம் என்றே நம்புகின்றனர். ஆனால் தெய்வாம்சம் பொருந்திய மனிதர்களும் சாதாரண மனிதர்களின் இயல்போடு இருப்பது வெளிப்படும் போது பொதுமனம் கோபம் கொள்கிறது. நித்தியானந்தன் போன்ற தனி நபர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக மதிக்கப்பட்டதையும், இப்போது சாதாரண மனிதனாகச் சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருப்பதையும் இப்படித்தான் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

எத்தகைய நெருக்கடியிலும் நம்பிக்கைகளோடு வாழும் மனிதர்கள் - அவர்கள் சாதாரணப் பொது மனிதனாக இருந்தாலும் சரி, படித்தவர்களாக இருக்கும் காட்டிக் கொள்ளும் நடுத்தர, உயர் வர்க்க மனிதர்களும்  நம்பிக்கைகளைக் கைவிடுவதில்லை; அதற்கு மாறாகப் புதிய ஒன்றில் நம்பிக்கையை வைக்கின்றனர், இந்த உண்மையைத் திரும்பத் திரும்பச் சொல்வனவாக கைதாகும் சாமியார்களும், திரும்பவும் வலம் வரும் ஆன்மீக நடவடிக்கைகளும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்தத்தன்மை இந்துசமயத்திற்கு மட்டும் உரியதல்ல; இந்தியாவில் எல்லாச் சமயங்களிலும் இது பொதுத்தன்மையாகவே இருக்கிறது.

நிறுவனச் சமயங்களின் மறுபக்கத்தில் நிகழும் ஒழுக்க மீறல்களையும், குற்ற நடவடிக்கைகளையும், நம்பிக்கைச் சிதைப்புகளையும் அம்பலப்படுத்தும் ஊடகங்களின் நோக்கம் பரபரப்பும், வியாபார உத்தியாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் நோக்கம் வெறும் பரபரப்பு அல்ல என்பதைப் பல படைப்பாளிகளின் எழுத்துக்கள் உறுதி செய்துள்ளன. கிறிஸ்தவர்கள் வாழும் கிராமங்களையும், நகரப் பகுதிகளையும், பள்ளிகளையும், தேவாலயம் சார்ந்த நடவடிக்கைகளையும் தொடர்ந்து தனது கதை வெளிகளாகவும், கதையின் கருவாகவும் எழுதி வரும் எக்பர்ட் சச்சிதானந்தம் தனது நுகம் கதைத் தொகுதி முழுவதும் கிறிஸ்தவப் பாத்திரங்களையே படைத்துக் காட்டியவர். வேறுபாடுகள் அற்ற தேவனின் சந்நிதியை முன் வைக்கும் கிறிஸ்தவ சமயம், பல்வேறு வகையான அமைப்புகளை உருவாக்கிக் கொண்டதன் மூலமாக மனிதர்களிடையே வேறுபாடுகளை, சமய நம்பிக்கைக்கு எதிரான வழிமுறைக்குத் திரும்பி விட்டது என்பதைத் தனது கதைகளின் கருவாகக் கொண்டு எழுதிக் காட்டி வருகிறார்.

பைபிளின் புகழ் பெற்ற வாக்கியங்களுள் ஒன்றான ’ தேவனுக்குரியதைத் தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..’ என்பதைத் தலைப்பாகக் கொண்ட இந்தக் கதை தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் குடும்பச் சிக்கலைப் பேசுவது போலத் தோன்றினாலும், சமய நம்பிக்கையைப் பயன்படுத்திச் சுயநலத்தோடு இயங்கும் ஒரு கும்பலுக்கெதிராக இளைய சமுதாயம் கிளர்ந்தெழும் சித்திரத்தையே முன் வைக்கிறது.

பொதுச் சொத்தைத் தனது சொந்த நலனுக்குப் பயன்படுத்தும் அதிகாரம் மிக்கவர்கள், அதன் ஒரு பகுதியைக் கடவுளுக்குக் காணிக்கையாகவும்
, நன்கொடையாகவும் கொடுத்து விடுவதன் மூலம் குற்ற மற்றவர்களாக வலம் வருகிறார்கள் எனக் காட்டும் அந்தக் கதை இப்படித் தொடங்குகிறது.
மனாசே கொடுத்த பைபிளில் கலாத்தியர் 5:24 கோடிட்டிருந்தது. “ கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும், அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்!” மனாசே இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “இதுக்கு இன்னா சொல்ற?”. இவள் எதுவும் பேசவில்லை.

கிருபாகரன் ஐயா ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டிருந்தார். இவள் இடது காலைப் பார்த்துக் கொண்டாள்.
“ ஏங்கயா, அவுரு நியானு சிலுவையோ இன்னாவோ குட்துனு போறாருங்க. இதுக்குப் போயி இன்னாத்துக்கு சண்ட போட்டுக்குனுங்கயா..” ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு மனாசேயைப் பார்த்தார் கிருபாகரன் ஐயா.
“ நீ சும்மா கெட, எத்தியாவ்து சொல்லிக்னு அந்தாளு சர்ச்சிக்கி சிலுவ குடுக்கலனா என்னா அய்ஞ்சி போய்றோவ்மா? ஊருக்குள்ள காலு வெக்கறதுக்கே பொவிசுக்கிதா? பேமானி. சிலுவ குடுக்றாரா சிலுவ… ஐயா நீங்க கெளம்புங்கய்யா. நாளிக்கி சிலுவ கிலுவனு சொல்லிக்னு எவன் வரான்னு பாப்பம் ”.
இந்த உரையாடல் ஒரு மகனுக்கும் தாய்க்கும் நடக்கிறது. அந்த மகன் தன் தாயின் சொல்லை மீறி துண்டறிக்கையை விநியோகம் செய்கிறான். அதில்,
கர்த்தருக்குள் அருமையான திருச்சபை மக்களே! நமது சேகரத்தில் உள்ள காரை திருச்சபையைச் சேர்ந்த திரு. இராஜப்பன் பொன்னையா கிறிஸ்தவ மரபுகளுக்கும், திருச்சபை ஒழுங்கு முறைகளுக்கும் விரோதமாக பல காரியங்கள் செய்து வருகிறார் என விளித்துப் பின்வருவன பட்டியல் இடப்பட்டுள்ளன.

1) ஊழல்- ஊழலைத் தட்டிக் கேட்டவர்களை ஆள் வைத்து அடித்தல்
2) அரசுப் பணத்தைச் சொந்தக் காரியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுதல்
3) கணக்குக் காட்டுதலைத் தவிர்த்தவரைப் போதகரும் கண்டு கொள்ளவில்லை
4) மனைவி உயிரோடு இருக்கும் போதே இளம்பெண்ணுடன் இன்னொரு குடும்பம் நடத்துகின்றார்.

இந்த நோட்டீஸால் தனது மகனுக்கு நேரக்கூடிய ஆபத்தை உணர்ந்த அந்தப் பாசமிக்க தாயின் செயலாக பின் வரும் உரையாடல் அமைகிறது:
“வாங்க தங்கதாய்மா. சௌக்யமா?” பின் தலைமுடியைத் தடவிக் கொண்டு சிரித்தார் தயா…னந்தம். காதுக்குக் கீழ் முடி தொங்கியது நீளமாக. “
என்னா இந்த நேரத்ல திடீர்னு? ஐயிர பாக்க வந்தியா? மிஷின் ஆஸ்பத்ரி போனாரு, என்னா விஷயம்? அட….” அழுகையைக் கட்டுப் படுத்த முடியவில்லை இவளால். “ தங்கதாயி.. ஏம்மா பாரு..” “ ஜார்ஜ், சர்ச்சிக்கு பின்னாடி போலாய்யா, கும்பல் கூடிற போவ்து.இவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆலயத்திற்குள் சென்றாள். மல்லிகைச் சரங்கள் மேலே தொங்கிக் கொண்டிருந்தன. ராஜாசிங் ஈஸ்டருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார் ஜெபக் குழுவினருடன். ஆல்டருக்கு முன் இவள் நின்றபடியே ஜெபம் செய்துவிட்டு,
வெஸ்ட்ரி வழியே சர்ச்சுக்குப் பின்னால் சென்றாள்.

“ இப்ப அழுவறாதால என்னா ப்ரோஜனம்? மனாசேக்கு முதல்ல கீழ்படிதல கத்துக்குடு. தகப்பன கனம் பண்ணத் தெரில, பெருசா மத்தவங்க குற்றங்கள பத்தி பேச வந்துட்டானா. இன்னிக்கு உங்க கிராமத்ல அழகான சர்ச் இருக்குனா அதுக்கு ஆர் காரணம்? ராவும் பகலுமா ஓ வூட்டுக்காரந்தா அத்த கட்டி முடிச்சான்? பாஸ்ட்ரேட் பணந்தான் குட்திச்சி. போனமாசம் பைனான்ஸ் கமிட்டில பிஷப் ஐயா சொன்னாராம், ஒவ்வோர் கிராமத்லேயும் ராஜப்பனாட்டம் சபையார் இருந்தா, எப்பமோ எல்லா கிராமத்லேயும் சர்ச் கட்டியிருக்கலாம்னு….

########################
“ நீங்கதாய்யா அவனுக்கு வழி காட்டனும். பானரு, ஸ்லைடுனு எய்தி வர அஞ்சு பத்துலதாங்க குடும்பம் ஓடிக்னுக்கிது”.. “ மனாசேக்கு அது தெரியக் காணோம்..” “கிருபாகரன், மோசே இவுங்களுக்லா மேல் மட்டத்ல அவுங்க ஜாதிலே பெரிய ஆட்கள்லாங்கறாங்க. நம்ம தலீத் மக்களுக்கு ஆர் இருக்கா? அவுங்க கூட போயி மனாசே சேரலாமா? காரியம் ஆகிறவரிக்குந்தா வெச்சினுருப்பாங்க இவன. அப்பால?”

பஸ் ஸ்டாண்ட் வந்தபோது
8 மணி சங்கு காதைப் பிளந்தது. பஸ் பிடித்து ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் இறங்கி, வீட்டிற்கு நடந்தாள். வாசலில் மனாசே, லூயிஸ் நின்றிருந்தனர்.
“எங்க போன?” “ டவுனுக்கு”
டவுனு சர்ச்சிக்கி என்னாத்க்கு போனே..? தெரியாதுனு நெனச்சிக்னியா?” இவள் வீட்டிற்குள் சென்றாள். மனாசே பின்னாலேயே வந்தான். லூயிஸ் வரவில்லை. “
டேவிட்டு ஸ்கூல்ல வேலை போட்டுத் தரேன்னு செக்ரட்ரியா சொன்னார்டா”
“ எங்கைல எப்பமோ சொன்னாங்க. கடவுள சாத்தான் ஏமாத்த நெனிக்கல, அதமாதிரி வேலையைக் காட்டி ஏமாத்தப் பாக்றாங்க, பொறம்போக்கு பசங்க. அதெல்லாம் எதுக்கு. ஓ வூட்டுக்காரர பாத்து சொல்வாங்களா, ஊர்மேயாம பொஞ்சாதியோட ஒயுங்கா குடும்பம் நடத்துனு. எவகூடவோ பூட்டாரே, என்னா ஆக்‌ஷன் எட்தாங்க? ஏசுகிறிஸ்து வேதபாரகரப் பார்த்து சொன்னார்ல, நீங்கள் வெந்தயத்திலும், சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி,
நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டு விட்டீர்கள். உங்களுக்கு ஐயோனு, நியோனு, சிலுவ குடுக்கப் போறவருக்கும், வேத பாரகருக்கும் என்ன வித்தியாசம்? சிலுவ செய்யப் பணம் எதுலேர்ந்து தெரிமா எட்தாங்க? ரூபிங் கராண்ட் ஒன்னு வந்திச்சி. அதுல செக்ரடரி,ஐயிரு,இந்தாளு எல்லாருமா பங்கு போட்டுக்னு மிச்சத்த சிலுவையா காணிக்க தர்றாங்க. எப்படிக்து?

########################
சோறு வெக்கட்டா?” “ இவுங்க செய்ற பாவத்துக்கு காணிக்க போட்டா சரியாப்புடும்னு நெனிக்கிறாங்க.”
”ஏண்டா மத்யானங்கூடச் சாப்டல” “ சாப்டுற மாதிரியாக்து நெலம? வூடுவூடா ஆளவுட்டு நாளிக்கி ஆராதனைல கலாட்டா பண்ணா போலீசு அரெஸ்டு பண்ணும்னு பயமுறுத்றாரு ஐயிரு தெரிமா.”
“சர்ச்சிக்கி எதிரா போவ வாணாண்டா. நமக்கு ஏண்டா அதெல்லா. கெடிக்காம போய்டும்.”
” ஏம்மா தங்கதாயி
” லூயிஸ் சித்தி வேகமாக வந்தாள் இவளிடம். “லூய்சு.கருணா. நேசமணி எல்லாத்தியும் போலீசு புட்ச்க்னு பூட்சி.”
” ஐயோ இன்னாத்துக்குமா.” “ராவோட ராவா, ஐயிரு, தயானந்தம் ஐயா, ஓ வூட்டுக்காரரு எல்லாருமா சேர்ந்து சில்வ வெச்சாங்களாம். பசங்க போயி வெக்க கூடாதுனு தகராறு பண்ணாங்கன்றதுகோசரம் புட்சிக்னாங்க. மனாசே தப்சிக்னானாம். ரெண்டு மூனு நாளிக்கி மனாசே போலீசு கண்ல படவானாம்
.’’
########################

நாம் அனைவரும் கீர்த்தனை 85 சேர்ந்து பாடுவோம்.தோத்திரம் செய்வேனே,ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே முதல் இரண்டு சரணங்கள் மட்டும். போதகரைத் தொடர்ந்து மற்றவர்கள் பாடினார்கள்.
பாட்டு முடிந்ததும் சபையாரைப் போதகர் பார்த்தார். “ அருமையான திருச்சபையாரே, கர்த்தர் உயிர்த்தெழுந்த இந்நாளில் இந்த நியான் சிலுவையைப் பிரதிஷ்டை செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. மக்கதோனியா சபைகளைப் பார்த்து பவுலடியார் சொல்கிறார்: அவர்கள் மிகுந்த உபத்திரவத்தாலே சோதிக்கப் படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாக இருந்தும் மிகுந்த உதாரத்துவமாகக் கொடுத்தார்கள். திரு. ராஜப்பன் பொன்னையா அவர்களுக்கு இவ்வசனம் மிகவும் பொருந்தும். தனது கஷ்டங்களுக்கு மத்தியில்..”
படீர் என்று சப்தம் கேட்டது. கண்ணாடி சில்லுகள் நாலாபுறமும் சிதறி விழுந்தன. மறுபடியும் சப்தம். முகப்பின் உச்சியை இவள் நிமிர்ந்து பார்த்தாள். தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தது சிலுவை.
“ புடி.. புடிங்க.. புடிங்க.. ஓட்றாம்பாரு புடிங்கபா..”
வேலிக்காத்தானைத்தாண்டி ஆஸ்பத்திரி பக்கமாக ஓடிக் கொண்டிருந்தான் மனாசே.
########################

நம்பிக்கைகள் சிதைக்கப்படும் போது நியாயமான வழிமுறைகள் பலன் தராது என நம்பும் மனிதர்கள் வன்முறைக்குள் புகுந்து விடுவார்கள் என்பதைப் பேச்சு மொழியில் சொல்லும் எக்பர்ட் சச்சிதானந்தின் இந்தக் கதை நிகழ்காலச் சமூகத்தில் அதிகம் சொல்லப்பட வேண்டிய செய்தி ஒன்றைச் சொல்கிறது என்ற அளவில் மிக முக்கியமான கதை.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்