கலையும் ஒப்பனைகள்
[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ] காட்சி:1 [அவன் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறான்.உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில் இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம் குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது]. 'நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்.. காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ; ஒத்துக்க முடியாது நான் ஒத்துக்க முடியாது. எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம் எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம் எனது சமயம் ; எனது மக்கள்... அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது. உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை எல்லாவற்றையும் மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை' [வசனப் பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப்பதற்கேற்ப அந்த உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசடவென...