மேடு நோக்கிப் பாயும் ஆறு: கிராஜநாராயணின் தாவைப்பார்த்து

எனக்கு நேர்கிற அனுபவம் மட்டும் அல்ல; என்னைப் போல நகரவாசியாக மாறிய பிறகு அவ்வப்போது சொந்தக் கிராமத்திற்குப் போய்வரக் கூடிய ஒவ்வொருவருக்கும் நேர்கிற அனுபவம் தான் இது. இந்த முறை ஊருக்குப் போன போது எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டிற்கு ஒரு டி.வி.பெட்டி- கிடைத்ததில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி அது.
தங்களைப் போன்ற அப்பாவிகளுக்கெல்லாம் அரசின் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பற்ற மனிதர்கள் அவர்கள். அரசின் அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி கண்ணில் படும் இடத்தில் ஜம்மென்று அந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து விட்டுப் போனார்கள் என்றால் மகிழ்ச்சி ஏற்படாமல் என்ன செய்யும் .

இதே மகிழ்ச்சியை ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு ஊர்ச்சாவடிக்கு வந்த சேர்ந்த வேட்டி சேலைக்குவியல் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல. அந்தக் கிராமத்திற்கு அப்படியான மகிழ்ச்சி வந்து சேர்ந்த தருணங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பிள்ளையும் காலில் செருப்புப் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்திற்குப் போனதையும், பின்னர் பெண் பிள்ளைகள் எல்லாம் சைக்கிளில் ஏறிப் பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குப் போனதையும் பார்த்துப் பெற்றவர்களின் மனம் மகிழவே செய்தது.

இந்த மகிழ்ச்சியையெல்லாம் விடக் கூடுதலான மகிழ்ச்சியை எனது கிராமம் அனுபவித்த நாளாக எங்கள் கிராமத்திற்கு ஓராசிரியர் பள்ளிக்கூடம் வந்ததைத் தான் சொல்ல வேண்டும். நானெல்லாம் எனது தொடக்கப் பள்ளியைப் பெறுவதற்காக ஒரு கிலோமீட்டரும், உயர்நிலைப் பள்ளிக்காக மூன்று கிலோ மீட்டரும் சென்று வந்தவன். நான் கல்லூரிக்கு வந்தபின் தான் எங்கள் கிராமத்திற்குப் பள்ளிக் கூடம் வந்தது. அதுவும் ஓராசிரியர் பள்ளி. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்வுக்கு எங்கள் கிராமத்திற்கு, பள்ளிக்கூடத்தைத் திறந்து வைக்கச் சட்டமன்ற உறுப்பினர் வந்தார். கிராமமே அவரை வரவேற்று மகிழ்ந்தது. வரவேற்று மகிழ்ந்த கிராமத்தினர் அவரிடம் தந்த கோரிக்கை மனுக்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

ஊருக்குப் பக்கத்தில் ஓடி வரும் ஓடையை மறித்து ஒரு சிறு கண்மாய் அமைக்க வேண்டும் என்ற முதல் கோரிக்கை ஏற்கப்படும் என்றார். ஆனால் கண்மாயும் வரவில்லை. ஏற்கெனவே இருந்த சின்னச் சின்னக் குளங்களும் மேடுகளாகிப் போய்விட்டன. வானம் பொய்த்துப் போனதில் ஓடையில் நீர் வரத்தும் இல்லாமல் போய்விட்டது. விவசாயம் படுத்துப் போனதில் பாதிப் பேர் அந்த ஊரை விட்டுவிட்டுப் பல ஊர்களுக்கும் போய் விட்டார்கள். திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் கோயம்புத்தூர் நகைக்கடைகளிலும் வேலை செய்து விட்டு ஆண்டுக்கொரு முறை ஊருக்கு வருகிறார்கள். கிராமத்து உழைப்பாளிகள் தான் நகரத்திற்குப் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது. கிராமங்களுக்கு வந்து சேர வேண்டிய அரசின் பங்குத் தொகையும் நகரங்களுக்கே போய்க் கொண்டே இருக்கின்றன.

வளைந்து வளைந்து செல்லும் அடுக்குப் பாலங்களுக்கும், வழுக்கிச் செல்லும் நகரத்து வீதிகளுக்கும், அரசுத்துறைகளுக்கான அடுக்குமாடிக் கட்டடங்களுக்கும் என நமது அரசுகள் செலவழிக்கும் பணத்தில் அந்தக் கண்மாயை வெட்டியிருந்தால் விவசாயம் இவ்வளவு வேகமாகக் காணாமல் போயிருக்காது என்பது தான் உண்மை. கண்மாய்களும் குளங்களும் நிலத்தடி நீரைத் தக்க வைத்து மரங்களையும் செடிகளையும் காத்திருக்கும். மரங்களும் செடிகளும் மழையைக் கொண்டு வந்திருக்கும். அந்தச் சுழற்சியைக் கெடுக்கும் விதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய மோட்டார் பம்புகள் இப்போது விருதாவாய்க் கிடக்கின்றன. இந்தச் செப்டம்பர் மாதம் சித்திரை வைகாசியில் இருக்கும் முன்னேழு பின்னேழு நாட்களை – அக்கினி நட்சத்திர வெயிலை நினைவு படுத்தும் விதமாக வேர்த்துக் கொட்டுகிறது. கிராமத்து விவசாயம் – குறிப்பாகப் புஞ்சை வேளாண்மையைக் கவனிப்பின்றி விட்டுவிட்டதன் பலனை நமது கிராமவாசிகளும், நலத் திட்டங்களைப் போடும் அரசு அதிகாரி களும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நினைக்கும் போதெல்லாம் கரிசல் இலக்கியத்தின் முன்னோடிக் கதாசிரியரான கி.ராஜ நாராயணனின் பல கதைகள் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.

கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அரசும் , அதன் நிறுவனங்களும் தொடர்ந்து கிராமத்தைப் புறக்கணித்தன என்பதைத் தனது கதைகளில் பெருங்குற்றச்சாட்டாக வைத்துக் கதைகள் எழுதியவர் கி.ராஜ நாராயணன். கோயில்பட்டிக்கருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்து அறுபத்தைந்து வயது வரை நகரங்களைக் கிராமங்களின் எதிர்வாகப் பார்த்து வந்த கி.ரா. கடந்த 20 வருடங்களாகப் புதுச்சேரியில் வசித்து வருகிறார் என்பது ஒரு சுவாரசியமான முரண் தான். தனது முதல் நாவலான கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காகச் சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றவர். அவரது கோபல்ல கிராமத்தில் இடம் பெற்றுள்ள சில நிகழ்வுகளும், கிடை குறுநாவலும் பாரதிராஜாவின் புகழ்பெற்ற படமான முதல் மரியாதையின் கதைப் போக்கைத் தீர்மானித்துள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

புஞ்சை விவசாயிகளையும் விவசாயத்தையும் படம் பிடிக்கும் கதவு,மாய மான், கரண்டு, கறிவேப்பிலைகள், எங்கும் ஓர் நிறை, கொத்தைப் பருத்தி, அவுரி, நிலை நிறுத்தல், தாவைப் பார்த்து, கிடை, கரிசல் காட்டில் ஒரு சம்சாரி போன்ற கதைகளை வாசிக்கவே நகர வாசிகள் சிரமப் படுவார்கள். கிராமத்தில் பிறந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்களிடம் குற்ற உணர்வை உண்டாக்கும் இந்தக் கதைகள், நகரவாசிகளுக்கு முழுதும் புரியாத ஒரு பிரதேசத்தையும் மொழியையும் அறிமுகம் செய்வன. அந்தக் கதைகளின் மொழியின் சிக்கலற்ற எளிமைக்குள் தகிக்கும் வெப்பம் கரிசல் பூமியின் வெப்பம் மட்டுமல்ல; தமிழகக் கிராமங்கள் பலவற்றின் வெப்பமும் கூட. அவரது கதைகளைப் பல காரணங்களுக்காகப் பலதடவை வாசித்திருக்கிறேன் என்றாலும், தாவைப் பார்த்து என்னும் கதையைப் பல பேரிடம் படிக்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருக்கிறேன்.
சிறுகதையின் கட்டுப்பெட்டி அம்சங்களிலிருந்து விலகி நிற்பது போலத் தோன்றும் அக்கதையின் சுப்பாநாயுண்டுவின் ஆதங்கம் எடுத்துச் சொல்லப் பட வேண்டிய ஒன்று.தண்ணீர் தாவைப்பார்த்துப் பாயும் என்ற இயற்கைக் குணத்தை மாற்றிப் போட்டுப் பணம் மேட்டைப் பார்த்தே பயணம் செய்கிறது என்னும் இயங்கியல் பொருளாதார விதி ஒன்றைக் கதையாக்கிய அற்புதமான கதை அது.
ஒவ்வொருவரையும் தங்கள் நலனை முன்னிறுத்தியே செயல்படும்படி தூண்டும் பணம் சார்ந்த சமூகத்தின் நிலையைக் கிராம வாழ்க்கையின் ஊடாகப் பதிவு செய்யும் அக்கதையின் முக்கியப் பாத்திரம் சுப்பாநாயுண்டு என்னும் புஞ்சைக் காட்டு வியாபாரி. அவரது மனைவி அசோதெ. அவர்களின் சுயநலம் சார்ந்த ஒரு செயலை அறிமுகம் செய்யும் விதமாகத் தொடங்கும் கதை, அவரை ஏமாற்றிப் பணம் பெருக்கும் பருத்தியேவாரி செல்லையா வையும், மில் முதலாளியையும் அவர்களுக்கு மட்டுமே அனுகூலமாக இருக்கும் கடவுளையும் மனதிற்குள் திட்டிப் புழுங்கும் நினைவுகளோடு முடிகிறது.

தங்கள் கிராமத்துச் சாவடியில் படுத்திருக்கும் அந்த இளைஞனை வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுத்து வேலைக்காரனாக ஆக்கியபின் , அவனது குலம் கோத்திரத்தை விசாரித்து முடித்துத் தனது மகளைக் கல்யாணம் செய்து வைத்து விடலாம் எனச் சுப்பாநாயுண்டு எடுக்கும் முடிவில் உள்ள சுயநலத்தை வெளிச்சம் போடும் கி.ரா., பருத்தியாவாரியிடம் அல்லல் படும் விதத்தைச் சின்னச் சின்ன உரையாடல்களின் வழி புலப்படுத்திக் காட்டுகின்றார். புஞ்சைக்காட்டில் சின்னப் பருத்தியை விளைவித்து வீட்டில் அடைந்து வைக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை; எங்கேயோ இருக்கும் மில்லுக்காரனிடம் அந்த உரிமை இருக்கும்படி வியாபார நியதிகள் இருப்பதைச் சொல்லும்,"பருத்தி வெலையை நாமளா வெக்கிறோம். அது மில்லுக்காரனில்லா வெக்கான்; வெலையெ ஏத்துறதும் எறக்கிறதும், அவம்பாடுதான்” என்ற இந்த வரிகள் இன்றும் தமிழக விவசாயிகளின் நிலை தான்.

விவசாயி கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்துக் கொண்டு போக அவனிடம் பருத்தியை வாங்கி மில் முதலாளிக்கு விற்கும் வியாபாரியும் மில் முதலாளியும் பெருத்துக் கொண்டே போகிறார்கள். போட்ட பருத்திக்குப் பணம் கேட்டுப் போகும் சுப்பாநாயுண்டுவிடம் பருத்தியேவாரி செல்லையா மில் மொதலாளி இன்னொரு மில் ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கான அழைப்பிதழ் இருப்பதாகவும் எடுத்துக் காட்டுகிறார். தான் விற்ற பருத்திக்கான விலையை உடனே தராமல் தள்ளிப் போடும் மில் முதலாளியும் வியாபாரியும் மேலும் மேலும் பணக்காரர்களாகத் தானும் தன்னையொத்த விவசாயிகளும் ஓட்டாண்டிகளாக ஆகிக் கொண்டிருப்பதை அவரது வார்த்தை களில் வெளிப்படும் கோபத்தின் வழியாகக் காட்டுகிறார். அந்தக் கோபம் மனிதர்களை விட்டு விட்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதோடு பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் கடவுளின் மீது மோதும் வார்த்தைகளாக வெளிப்படுகிறது. பணம் கேட்டுப் போய்ப் பாதிப் பணத்தோடு திரும்பும் வழியில் பருத்தி எடைபோட்டு எண்ணும் சத்தம் நீளமாகக் கேட்கிறது.
”வெங்கடாசலபதி முன்னிற்க.. லாபம்.
” வெங்கடாசலபதி முன்னிற்க..! என்பதில் விழுந்த அழுத்தம் நாயுண்டுவுக்கு ரொம்பத்தான் எரிச்சலைக் கிளப்பி விட்டுவிட்டது!”
“ முன்னிற்க, என்னத்தெ முன்னிற்க!”

வெங்கடாசலபதியும் வெங்கடாசலபதியின் மில்லுந்தான் முன்னிற்கி! தா அவனுக்கு மாசம் அம்பது லச்சம் அறுபது லட்சம் உண்டியல்லெ வந்து விழுது; இவனுகளுக்கு வருசம் அம்பது கோடி அறுபது கோடிண்ணு லாபம் வருது.
முன்னிற்கங்கிறது அவனுக்கு; லாபம்ங்கிறது இவனுக்கு!
முக்குத்திரும்பி ஐயி நாயக்கர் வீட்டுக்கு முன்னாலெ கூடி வந்தபோது, அங்கெ ஐயி நாயக்கர் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து கொண்டு எண்ணெய் படாத தலையை பறட் பறட் என்று சொறிந்து கொள்வதும் கோமணத்தை இழுத்து சரிசெய்து கொள்வதும் இவருடைய கண்ணில் பட்டது. ஒருவினாடி அதை நின்று பார்த்துக் கொண்டிருந்த நாயுண்டுவுக்கு பளிச்சென்று சில விஷயங்கள் புலப்பட்டதுபோல் தெரிந்தது எனக் கதை முடிகிறது.

புரிந்த விஷயம் என்பது வேறொன்றுமில்லை. மழை பெய்துபுரளும் தண்ணீர் தாவைப் பார்த்துப் போகும்; அது இயற்கை. ஆனால் பணம் என்பது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட செயற்கை. அதன் குணம் மேட்டை நோக்கிப் பாயும் என்பது தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்